இளவேட்டனார்
iḷavēṭṭaṉār
மதுரையில் பிறந்த இவர் தமிழில் சிறந்த புலவர்.
மதுரையில் பிறந்த இவர் தமிழில் சிறந்த புலவர். இப்பெயரால் இவர் வணிகருள் இளவேட்ட மகரிசி கோத்திரத்தவர் என்று தெரிய வருகிறது. இவர் ஆடைவிற்கும் வணிகக் குலத்தவராயிருக்கலாம். இப்புலவரை மதுரை அறுவை வாணிகர் இளவேட்டனார் என்றும் சிலர் கூறுவர். இவர் பாலைத் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
குறுந்தொகையில் இவர் இயற்றியதாக ஒரு பாடல் உள்ளது. கீழ்காற்றால் உதிர்க்கப்பட்ட காந்தள்மலர் பாறையில் மேல் குவிந்து கிடப்பது பாம்பு படம் ஒடுங்கிக் கிடப்பது போல் உள்ளது என்ற அழகிய உவமையை, ‘பாம்பு பை யவிந்தது போலக் கூம்பிக், கொண்டலிற் றொலைந்த வொண் செங் காந்தள், கன்மிசைக் கவியும் நாடற்கு’ (குறுந். 185) என்னும் வரிகளின் சுவைபட விளக்குகிறார்.
இவர் பாடியுள்ள ஆறு பாடல்கள் அகநானூற்றில் இடம் பெறுகின்றன. செவிலியர் பாராட்டப் பொலஞ் செய் கிண்கிணி நலம்பெறு சேவடி மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாமல் விளையாடு ஆயத்துச் சிறாரைத் தலைவி காணுந்தொறும், தன்னை நினைந்து வருந்துவாள் என்று வினைமுற்றிய தலைவன் தேர்ப்பாகனுக்குக் கூறுவதாக அகநானூற்றுச் செய்யுளொன்றில் (254–ஆம் பாடல்) பாடியுள்ளார்.
நற்றிணையில் இவர் பாடிய பாடலொன்று காணப்படுகிறது. அதில் இவர் தலைவியின் மெய்ப்பாட்டுணர்வாகிய அழுகையை மிக உருக்கமாக விவரித்துள்ளார். வானிலவு ஒளி வீச, ஊரில் விழா அயர, காடுகளிலும் சோலைகளிலும் வண்டுகள் துணையொடு இன்புற்று வருகின்றன. தலைவியோ கண்ணுறக்கமின்றி அவல நெஞ்சத்துடன் இரவு முழுவதும் கழிக்க வேண்டியுள்ளது என்று ஏங்குகிறாள். ‘யானே புனைஇழை நெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு, கனையிருங் கங்குலுங் கண்படை இலனே, அதனால், என்னொடு பொருங்கொல் இவ்வுலகம், உலகமொடு பொருங்கொல் என் அவலமுறு நெஞ்சே’ (நற்–348) என்பன தலைவியின் ஏக்கத்தைப் புலப்படுத்தும் வரிகளாகும்.
திருவள்ளுவ மாலையில் இவர் பாடியுள்ள ஒரு பாடலில் திருக்குறளை ‘வள்ளுவர் வாயுறை வாழ்த்து’ என்று பாராட்டியுள்ளார். புறநானூற்றிலும் இவர் யாத்த பாடலொன்று இடம் பெற்றுள்ளது (329). ஈ.வே.மா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 490)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ndf2c3k9/
தமிழ்“இளவேட்டனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ndf2c3k9/APA
Oliyon Research. (2026). இளவேட்டனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ndf2c3k9/MLA
"இளவேட்டனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ndf2c3k9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment