இலியாது
iliyātu
ஓமர் என்னும் கிரேக்கக் கவிஞரால் எழுதப்பட்ட மிகச் சிறந்த வீரகாவியம் (Epic) ஆகும்.
ஓமர் என்னும் கிரேக்கக் கவிஞரால் எழுதப்பட்ட மிகச் சிறந்த வீரகாவியம் (Epic) ஆகும். இருபத்து நான்கு பகுதிகளைக் (Books) கொண்ட இக்காவியம், கி.மு. 8–ஆம் நூற்றாண்டில் கிரேக்கர்களுக்கும் (Greeks) திரோசன்களுக்கும் (Trojans) இடையே நடைபெற்ற நெடும் போரைப் பற்றிக் கூறுகிறது. இப்போர் திராய் (Troy) என்னும் நகரத்தில் நடைபெற்றமையால் திரோசன் போர் (Trojan War) என்று குறிப்பிடப்பட்டது. திராய் நகருக்கு இலியம் (Iliam) என்ற வேறொரு பெயரும் உண்டு அதனால், இலியம் நகரில் நடைபெற்ற போரைக் கருப்பொருளாகக் கொண்ட இந்நூல் இலியாது (Iliad) என்னும் பெயர் பெற்றது. அந்நகரம் ஆசியாக் கண்டத்தினைச் சார்ந்த துருக்கி நாட்டின் இசார்லிக்கு (Hissarlik) என்னும் பகுதியில் நிலத்திற்குள் புதையுண்டு கிடப்பதாக அகழாராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
திராய் போருக்குப் பின்னணியாக அமைந்த கதை பின்வருமாறு கூறப்படும். திராய் நாட்டு மன்னன் பிரையம் (Priam) என்பானின் மகன் பாரிசு (Paris) என்பான் கிரேக்கத்தைச் சார்ந்த இசுபார்ட்டா (Sparta) என்னும் நாட்டுக்கு விருந்தினனாகச் சென்று, சிறிது காலம் தங்கித் திரும்புங்கால், அந்நாட்டு அரசன் மெனிலாசு (Menelaus) என்பவனின் மனைவியாகிய பேரழகி எலன் (Helen) என்பவளைத் தன் நாட்டிற்குக் கவர்ந்து வந்தான். அதனையறிந்த கிரேக்கர்கள் தங்கள் அரசியை மீட்கும் பொருட்டு ஆயிரம் கப்பல்களிற் புறப்பட்டுச் சென்று திராய் நகரை முற்றுகையிட்டார்கள். பத்தாண்டுகள் நீடித்த இம்முற்றுகையில் பெரும் போர்கள் நிகழ்த்தன. இறுதியில் கிரேக்கர்கள் வெற்றி பெற்றுத் தங்கள் அரசி எலனை மீட்டுத் திரும்பினார்கள்.
நெடுங்காலமாக இக்கதை நாட்டுப் பாடல் வடிவில் கிரேக்க மக்களிடையே வாய்மொழியாக நிலவி வந்தது. ஓமர் அதனைக் காவியமாக இயற்றினார். இக்காவியம் கி.மு. 8–ஆம் நூற்றாண்டில் கிரேக்க மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, சமய வாழ்க்கையினையும் குறிப்பாக அவர்களின் போர்முறைகளையும் படம்பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாகக் கருதப்படுகிறது. எளிய சுட்டுக் கோப்பில் (Simple structure) அமைந்துள்ள இக்காவியம் போரினால் விளையும் துன்பங்களை விரித்துரைக்கிறது. இக்காவியத்தை ‘ஒரு துன்பத்தின் கதை’ (A story of suffering) என்று கூறுவர். ஒரு வீர காவியத்தின் விழுமிய பண்புகளாகிய உயர்ந்த கருத்து (Lotfy thought), சிறந்த சொல்லாட்சி (Good diction) ஆகியவற்றைக் கொண்டு அமைந்த இந்நூல் உலகின் முதற் பெரும் வீரகாவியாசகத் திகழ்கிறது.
திராய் போர் ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் நடைபெற்றாலும், இக்காவியம் அப்போரின் பிற்பகுதியில் சற்றேறக்குறைய ஐம்பது நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையே கருப்பொருளாகக் கொண்டுள்ளது. போரின் ஒரு குறிப்பிட்ட நிலையில் கிரேக்க வீரன் அகிலீசு (Achilles) என்பான் கொண்ட சினத்தையும் அதன் விளைவுகளையும் மையமாக வைத்து இக்காவியம் புனையப்பட்டுள்ளது.
காவியத்தின் அத்தியாயப் பகுப்புப் பின்வருமாறு; திராய் முற்றுகையில் ஈடுபட்டிருந்த மைசினே (Mycene) நாட்டு மன்னன் ஆகமெனான் (Agamenon) என்பானுக்கும் மற்றொரு கிரேக்க வீரன் அகிலீசு என்பானுக்கும் பிரிசெய்சு (Briseis) என்னும் பெண் போர்க் கைதியை நடத்துவது பற்றிப் பிணக்கு மூண்டது. ஆகமெனானின் ஆணவத்தைக் கண்டு சினமுற்ற அகிலீசு போர்க்களத்தினின்று நீங்கித் தன் பாசறைக்குச் சென்றுவிட்டான். இதனையறிந்த கடல் தெய்வமாகிய (Sea Goddess) அவன் தாய் தெட்டிசு (Thetis) என்பாள், சீயசு (Zeus) என்னும் முதன்மைத் தெய்வத்தை (Chief of Gods) அணுகி, தன் மகன் அகிலீசின் பெருமையையும் இன்றியமையாமையினையும் அவன் இனத்தவராகிய கிரேக்கர்களுக்கு உணர்த்தும் பொருட்டுப் போரில் அவர்களுக்குப் பெரும் இழப்புகளை உண்டாக்குமாறு வேண்டினாள். அங்ஙனமே சீயசின் தலையீட்டால் கிரேக்கர் பக்கத்தில் தோல்விகள் பல உண்டாயின. அகிலீசு போர்க்களத்திலிருந்து நீங்கிச் சென்றதாலேயே அவ்விழப்புகள் ஏற்பட்டன எனவுணர்ந்த கிரேக்கப் படைத்தலைவன் அகிலீசுக்குத் தூது போக்கி, அவனைப் போரில் ஈடுபடுமாறு வேண்டினான். அகிலீசு மனம் நெகிழ்ந்தாலும், போருக்குச் செல்லாமல் உறுதியுடன் விலகியிருந்தான். கிரேக்கப் படைகளுக்கு மேலும் தோல்விகள் தொடர்ந்தன. இவ்வீழ்ச்சியினைக் காவியத்தின் முதல் ஒன்பது பகுதிகள் விவரிக்கின்றன. 10-ஆம் பகுதி ஒடீசியசு (Odysseus), தயமீடு (Diamed) ஆகிய கிரேக்க வீரர்கள் பங்கேற்ற போர்களைக் குறிக்கிறது. 11 முதல் 17 வரையுள்ள பகுதிகள், கிரேக்கர்கள் மேலும் அடைந்த தோல்விகளையும், அகிலீசின் நண்பன் பாட்ரோகிலசு (Patroclus) என்பான் போரில் பங்கு பெற்றமையினையும் விரிவாக எடுத்துரைக்கின்றன. சிறந்த வீரனாகிய அவன் அகிலீசின் இசைவுடன் அவனது கவசத்தை அணிந்து கொண்டு களம் சென்று, வீரத்துடன் போரிட்டு, இறுதியில் எக்டர் (Hector) என்னும் திராய் வீரனாற் கொல்லப்பட்டான். அகிலீசின் அன்னை தெட்டிசு அவனது கூடாரத்துக்குச் சென்று சோர்வுற்றுக் கிடக்கும் தன் மகனைத் தேற்றுவதனை 18–ஆம் பகுதி விளக்குகிறது. அகிலீசு தன் தாயின் சொற்கேட்டுப் புத்துணர்வு பெற்றுப் போருக்குச் செல்ல முடிவெடுத்தான். எபேசுடசு (Aephastus) என்னும் கொல்லன் அகிலீசுக்குப் புதிய கவசம் செய்து கொடுத்தான். அகிலீசு ஆற்றிய வீரப்போரினை 19 முதல் 24 முடிய உள்ள பகுதிகள் விதந்தோதுகின்றன. தன் நண்பன் பாட்ரோகிலசைக் கொன்றமைக்காக எக்டரைப் பழி தீர்க்கும் பொருட்டுக் களத்தில் புகுந்து போரிட்டு இறுதியில் அவனைக் கொன்றான். மாண்ட பாட்ரோகிலசின் நினைவாக வீர விளையாட்டுகள் நடைபெற்றன. அவற்றில் கிரேக்க வீரர்கள் பங்கு பெற்றார்கள். அதன்பின் பாட்ரோகிலசின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அகிலீசு எக்டரின் உடலைச் சிதைத்து அதனை அவனுக்குத் தந்தையும் திராய் மன்னனுமாகிய பிரையத்திடம் ஒப்படைத்தான்.
காவிய ஆசிரியர் பத்தாண்டுகள் நடைபெற்ற போரின் கடைசி ஐம்பது நாட்களில் மட்டும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை எடுத்தாண்டதன் வாயிலாகத் தம் காப்பியக் கருப்பொருளுக்குச் சிறந்ததொரு கட்டுக்கோப்பினைச் சேர்த்துள்ளார். பல்வேறு காலங்களில் பலர் எழுதியவற்றின் தொகுப்பே இக்காவியம் என்பாரும் உளர். ஆனால், காவியத்தில் அமைந்துள்ள நிகழ்வு ஒருமைப்பாடும் (Unity of action) கட்டுப்கோப்பும் (Structue) இக்கூற்றைப் பொய்ப்பித்துக் காவியம் முழுவதனையும் ஓமர் ஒருவரே எழுதினார் என்பதனை நிறுவுகின்றன. எனினும், காவியத்தினை இருபத்து நான்கு பகுதிகளாகப் பகுத்தமை பிற்காலத்தில் செய்யப்பட்டதாகும் காவிய ஆசிரியர் இலக்கிய நோக்கம் கருதிக் காவியத்தின் கதை நிகழ்ச்சிகளைச் சுருக்கியும் பெருக்கியும் மாற்றங்கள் செய்துள்ளார். எடுத்துக்காட்டாக, ஒன்பது நாட்கள் நடைபெற்ற ஒரு போர் முப்பது வரிகளில் கூறப்பட்டிருப்பதனையும், ஒரு நாளின் நிகழ்ச்சி நூற்றுக் கணக்கான வரிகளில் விவரிக்கப்பட்டிருப்பதனையும் குறிப்பிடலாம்.
கதை மாந்தர்கள்
ஓமரின் மற்றொரு வீரகாவியமாகிய ஒடிசு (Odyssey) பாத்திரப் படைப்பில் விஞ்சி நிற்பினும், இலியாது என்னும் காவியமும் சிறந்த கதை மாந்தர்களைப் பெற்று விளங்குகிறது. சினமும் செருக்கும் வீரமும் சான்ற அகிலீசு, செருக்கும் கொடுமையும் நிறைந்த ஆகமெனான், அறிவும் ஆற்றலும் மிக்க முதியவர் நெசுதர் (Nestor), முரட்டுத்தனம் நிறைந்த ஏசாக்சு (Ajax), அடக்கமும் அறிவுக் கூர்மையும் மிக்க ஓடிசியசு, துன்பத்தைக் கண்டு துவளாத தயமீடு, நட்புக்கினிய பாட்ரோகிலசு, முதுமை நிறைந்த போனிக்சு (Phoenix) ஆகியோர் கிரேக்கரிடையே சிறந்து விளங்குகின்றனர். அங்ஙனமே திரோசன்களிடையே முதிய வீரரனான பிரையம், மாவீரன் எக்டர், அவன் தாய் எக்யுபா, நம்பிக்கைக்குரிய ஆண்டிரமாக்கசு (Andromachus), எழிலரசி எலன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாகத் திகழ்கின்றனர்.
இக்காவியத்தில் அகிலீசும் எக்டரும் எதிரிகளாயினும் துன்பியல் மாந்தர்களாகவே (Tragic heroes) படைக்கப்பட்டுள்ளனர். எக்டர் ஒரு பெருவீரனாயினும் ஒரு சராசரி மனிதனுக்குரிய பண்பியல்புகள் படைத்தவனாகவே திகழுகிறான். மனைவி மக்களாலும் உற்றார் பெற்றோர்களாலும் சூழப்பட்டுள்ள அவன் போரில் தோல்வி கிடைக்குமென்று தெரிந்திருந்தும் முன்னரே நிச்சயிக்கப்பட்ட தன் முடிவை (Toredoomes end) நோக்கிச் செல்கிறான் அகிலீசின் துன்பம் எக்டரின் துன்பத்திலும் ஆழமானது. அவன் அன்புக்கு வயப்படுபவனாகவும், பிறர் துன்பம் கண்டு இரங்குபவனாகவும் காணப்படுகிறான். இருப்பினும், அவனும் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி இறப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற௱ன்.
இந்நூல் போர்க்களத்தின் வெறிச் செயல்களைப் படம் பிடித்துக் காட்டும் வீரகாவியமாக மட்டும் அமையாமல், மானுடத்தின் வாழ்வியற் கண்ணோட்டத்தை வடித்துக் கொடுக்கும் உயர்பெருங்காப்பியமாகவும் திகழுகிறது. ஓமருக்கு விதியின் (Fate) வவிமை பற்றித் திட்ட வட்டமான கருத்து இல்லையெனினும், மனிதனுடைய இருப்பின் தவிர்க்க முடியாமையை இக்காவியத்தில் அவர் வலியுறுத்துவதை உணரலாம். இதன் ஆறாம் பகுதியில் ‘இப்பூவுலகில் வாழும் உயிர்களுள் மிகவும் இரக்கத்திற்குரியது மனிதனைவிட வேறொன்றுமில்லை’ என்கிறார். மனிதன் அவ்வப்போது இன்பங்களைத் துய்த்தாலும், பொதுவாக அவன் வாழ்வு துன்பமயமானது என்பது ஓமரின் கருத்தாகும். இம்மாபெரும் காவியத்தின் கடை வரியினைக் ‘குதிரைகளினும் குன்றியவனாக எக்டரை அவர்கள் புதைத்தனர்’ என்று சோகத்தில் தோய்ந்து எழுதியிருப்பது நோக்கற்பாலது, இக்காவியத்தின்கண் ஆங்காங்கே ஏறத்தாழ இருநாறு இடங்களில் இன்பக் காட்சிகள் இடை வைத்துப் பின்னப்பட்டிருப்பினும், அவை துன்பியலை மிகுக்கவும் ஆழப்படுத்தவுமே பயன்படுகின்றன என்பர். கடவுளர்களின் களிமிக்க செயல்கள் அனைத்தும் மனிதர்களின் துன்பங்களுக்குப் பின்னணியாக அமைந்து, அவற்றை மேலும் மிகுவிப்பதனைக் காணலாம். மனிதனுக்குச் சாவு வந்தே தீருமெனினும் அவன் அச்சாவினைத் துணிவுடன் சந்திக்கும்போது அதனை வெற்றி கொள்கிறான். போர் என்பது மன்பதையால் தடுக்க முடியாதது; கொடுமைகளையும் பேரழிவுகளையும் விளைவிப்பது. எனினும், ஓமரின் கண்ணோட்டத்தில் அது மனிதனை உயர்த்தி அவனிடம் உள்ள வருத்தத்திலும் செம்மையுணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. திராய் போரின் முடிவில், வெற்றி வீரனான அகிலீசும் தோல்வி கண்ட பிரையமும் தங்கள் பகைமையினைக் கடந்தவர்களாகவும், துன்பத்தில் உழன்றவர்களாகவும், அதே போழ்து துன்பத்தை வென்று செம்மாந்து நிற்பவர்களாகவும் காட்டப் பெற்றுள்ளனர். இத்தகைய செம்மாப்பு சாவினையறியாத கடவுளர்க்குக் கிட்டுவதில்லை என்பது உணர்தற்பாலதாகும். கடவுளரும் மனிதர்களுக்குச் சார்பாகப் போரிடுதலை இக்காவியத்தில் காணலாம். ஆனால், அக்கடவுளராலும் மனிதனின் துன்பங்களைத் துடைத்திட முடிவதில்லை. அக்கடவுளரை ஓமர் மானிட இயல்பினராக ஆக்கிக் காவியத்தில் இடங்கொடுத்தமை. கிரேக்க மக்களின் மானுட உணர்வுக்கும் (Humanism) நாட்டுணர்வுக்கும் (Nationalism) அவர் கொடுத்த உயர்வினுக்குச் சான்று பகர்கிறது. வீ.இரா.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 419)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ncjnktng/
தமிழ்“இலியாது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ncjnktng/APA
Oliyon Research. (2026). இலியாது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ncjnktng/MLA
"இலியாது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ncjnktng/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment