முதுகு முள்ளெலும்பின் பக்க வளைவுக்கு (scoliosis) மருத்துவம் தேவையில்லை. மார்பு முள்ளெலும்பு எப்போதும் பின்னோக்கிக் கூனலுடன் வளைந்தும், கீழ் முதுகு முள்ளெலும்பு -முன்னோக்கி வளைந்தும் இருக்கும். இளம் வயதினரிடம் இது முதலில் தோன்றினாலும், நாளடைவில் சீராகி விடும். பக்க வளைவும், பின் நோக்கிய வளைவும் மிகையாக இருந்தால், அறுவை செய்ய வேண்டி வரும். பக்க வளைவு பெரிதும் பெண்களையே பிறவி ஊனமாகப் பாதிக்கிறது. குடும்பத்தில் பலருக்கு இந்நோய் காணலாம். நடக்கும் பாங்கு, குட்டையான கால், தசை இறுக்கம், இசிவு நோய் இவை காரணங்களாக அமையலாம். பின்னோக்கிய வளைவு. கூனல், பிறவி ஊனமாக இருக்கலாம் அல்லது இடையில் ஏற்பட்டதாக இருக்கலாம். பிறவிக் கூனலில் 1—2 முள்ளெலும்புகள் வளர்ச்சியடையாமல இருக்கலாம். முன்புறமாக முள்ளெலும்பு உடலிகள் பிளவுபடாமல் இருக்கலாம். இதை அறுவை மூலம் சீர் செய்யாவிடில், நாளடைலில் இரு கால் வாதம் (paraplegia) உண்டாகலாம். இடையில் ஏற்பட்ட கூனலுக்குக் காரணம் தெரியவில்லை. இதில் வலி காணப்படும். ஈடு செய்யும் முறையில், கீழ் முதுகு முள்ளெலும்பு முன்னோக்கி வளைந்திருக்கும். இளமையிலேயே கவனியாமல் விட்டு விட்டால், வயதடைந்தவுடன் எலும்பு நசிவு ஏற்படும். இந்தக் கூனலை 40° ஆகக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமாகும். முள்ளெலும்பு முழு வளர்ச்சி அடையாவிடில், துணிக் கட்டு (brace) உதவி புரியும். கூனல் 60° க்கு மேல் இருந்து அல்லது முள்ளெலும்பின் வளர்ச்சி நின்று விட்டால் இணைப்பு அறுவை தேவைப்படும். முன்ளெலும்பியம் (spondylosis). இதற்கும் காரணம் தெரியவில்லை. முள்ளெலும்பின் மேல், கீழ்ப்புறப் பரப்பு மூட்டுகளில் இடைவெளி காணப்படும். இந்த இடைவெளியால் மேலே உள்ள முள்ளெலும்பின் உடலி, கீழேயுள்ள முள்ளெலும்பை விட்டு நழுவும். இது பெரும்பாலும் கீழ் முதுகு முள்ளெலும்பு ஐந்துக்கும், திரிகத்திற்கும் (sacrum) இடையே காணப்படும். முள்ளெலும்பு 4, 5க்கும் இது ஏற்படலாம். பிறவி முள்ளெலும்பியத்தில் முள்ளெலும்பின் பரப்பு குறையாகக் காணப்படும். காயங்களும், மிகையான நீட்சியும் எலும்பு முறிவு ஏற்பட ஏதுவாகும். மரபு நுட்ப அணுக்கள் முக்கிய பங்கு பெறுகின்றன. முள்ளெலும்பு நழுவல் (spondilolisthesis). இதில் கீழ் முதுகு வலி காணப்படும். மேலேயுள்ள முள்ளெலும்பு கீழேயுள்ள முள்ளெலும்பில் நழுவுகிறது. முன்னோக்கி நழுவினால், முள்ளெலும்பு உடலி கீழேயுள்ளதன் மீது விழுந்து விடலாம். கீழ் முதுகு முள்ளெலும்பு 5, திரிகத்தின் 1 நரம்புக் கிளைகள் ஆகியன உறுத்தக் கூடும்; தசைகள் இறுக்கமடையும். கீழ் முதுகு—திரிக முள்ளெலும்பின் பக்கவாட்டுப் படத்தின் மூலம் நோயை உறுதி செய்யலாம். வலியை நீக்குவதும், முள்ளெலும்பு நழுவலைத் தவிர்ப்பதும், மருத்துவ நோக்கமாகும். கீழ் முதுகு முள்ளெலும்பின் பின் நோக்கிய வளைவு மிகுதியாக இருந்தால், உடற்பயிற்சி செய்து வலியைக் குறைக்கலாம். மிகையான முள்ளெலும்பு நீட்சியைத் தவிர்க்க வேண்டும். துணிக் கட்டுகள், அறுவை முறை ஆகியன உதவி செய்யும். முதுகு முள்ளெலும்பைக் காச நோயும் பாதிக்கலாம். ஓரிரு முள்ளெலும்புகள் பாதிக்கப்படுவதுடன், எலும்பும் சிதைவடைந்து இணைப்புத் திசுக்களுக்கு நோய் பரவும். கூனலுடன், பக்க வளைவும் ஏற்படலாம். மார்பு முள்ளெலும்பு, கீழ் முதுகு, கழுத்து முள்ளெலும்புகள் மிகுதியாகப் பாதிக்கப்படுன்றன. நோய் முற்றினால், இரு கால் வாதம் உண்டாகலாம். பாதிக்கப்பட்ட முள்ளெலும்பிலிருந்து குளிர் சீழ்க் கட்டி தோன்றி, நரம்புகளை அழுத்தி, இரு கால் வாதத்தை உண்டாக்கும். இதற்கு அறுவையும், காச நோய் எதிர் மருந்துகளும் பயனளிக்கும். நீரிழிவு நோய் கண்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் திரிகமே உருவாவதில்லை. அ. கதிரேசன்