இது திசையைத் தீர்மானிக்க உதவும் எந்திரவியல் கருவியாகும். சுழல் திசை காட்டி (gyro compass), காந்தத் திசை காட்டியை விட நம்பகத் தன்மை வாய்ந்ததும், மிகவும் துல்லியமானதும் ஆகையால், எல்லா வகைக் கப்பல்களிலும், சில முதன்மை வகை வானூர்தி, ஏவுகனை ஆகியவற்றிலும், சில நில ஊர்திகளிலும் பெரிதும் பயன்படுகின்றது. சுழல் திசை காட்டி, புவியின் உண்மையான வட திசையைக் காட்டுகிறது. அடிப்படைச் செயல் முறை. சுழல் திசை காட்டி, ஊசல், சுழல் அளவி ஆகிய இரண்டு கருவிகளின் செயல் முறைகளைக் கொண்டது. சுழல் அளவி திசையைக் காட்டுவதற்கு உதவுகிறது. சுழல் திசை காட்டியிலுள்ள சுழல் அளவியின் சுழற்சி அச்சு, தானாகவே புவியின் அச்சிற்கு இணையாகத் திரும்பக் கூடியது. இத்தத்துவம் படம் 1இல் விளக்கப்பட்டுள்ளது. இம்மாதிரிப் புவியின் நில நடுக் கோட்டில் வைக்கப்படுகிறது (படம் 2). புவி சுற்றும் போது. எந்திரக் குழையச்சு அமைவும், அதனுடன் சேர்ந்து சுற்றுகிறது. சுழலியின் சுழற்சி அச்சு, புவியின் அச்சுடன் இணைந்திருக்கும் வரை, புவியின் சுழற்சியால் சுழல் அளவிக்கு எவ்விதமான திருக்கமும் ஏற்படுவதில்லை. இரண்டு அச்சுகளும் ஒன்றாக இல்லாத போது, தொடர்ச்சியான மீண்டும் பெறக் கூடிய திருக்கங்கள் உருவாகின்றன. புவி சுற்றும் போது, சுழல் அளவிச் சுழலியின் வட முனை மேல் நோக்கித் திரும்புகிறது. இதனால், ஏற்படும் ஊசல் திருக்கம், சுழலி அச்சின் தென் முனையில் கீழாகவும், வடமுனையில் மேல் நோக்கியும் செயல் படும். இத்திருக்கத்தினால் சுழல் அச்சின் வடமுனை மேற்குத் திசை நோக்கி, முந்துகை அடைகிறது. சுழல் அச்சு, வட—தென் வான் கோள வரை வட்டத்தின் வழியாகச் செல்லும் போது, சுழலியின் வட முனை கீழ் நோக்கித் திரும்புகிறது. ஊசல் திருக்கத்தால், சுழல் கிழக்குத் திசை நோக்கி, முந்துகை அடைகிறது. இவ்வாறு, சுழற்சி அச்சு படம் 3 (அ) இல் உள்ளவாறு நீள் வட்டப் பாதையில் செல்கிறது, செயல்பாட்டில் உள்ள கருவிகளில் ஒடுக்கமும் சேர்க்கப்பட்டு, சுழற்சி அச்சின் பாதை, சுருள் அசைவின் உண்மையான வட இசையில் செல்கிறது. படம் 3 (ஆ). புவி சுற்றும் போது, சுழல் அளவி மெதுவாகத் திரும்புகிறது. இதுவே முந்துகை எனப்படும். இது சுழற்சி அச்சின் திசையை மாற்றுகிறது. இம்முந்துகையால் ஏற்படும் சிறு பிழைகள், சுழல் திசை காட்டியின் உள்ளே இணைக்கப்பட்டுள்ள எடைகளால் நீக்கப்படுகின்றன. குறுக்கையளவில் ஏற்படும் மாற்றங்களும், ஊர்தியின் வேக மாற்றங்களும் சுழற்சி அச்சை மாற்றக் கூடியன. எனவே, மாலுமி இத்தகைய மாற்றங்கள் ஏற்படும் போது, திசை காட்டி அமைப்பை அதற்கேற்ப சரி செய்து கொள்ள வேண்டும். சில சுழல் திசை காட்டிகளில், கணிப் பொறி இத்திருத்தங்களை மேற்கொள்கிறது. சுழல் திசை காட்டியின் சுழலி, ஒரு மின்னோடியால் திறனூட்டப்பட்டு, ஓர் உறைக்குள் வைக்கப் பட்டுள்ளது. இவ்வுறை ஊசல் போன்று தொங்கக் கூடியது. கலம் செல்லும் திசையைப் பற்றிய குறிப்புகள், சுழல் திசை காட்டியின் காட்டியில் தெரிகின்றன. சுழல் திசை காட்டியின் வடிவமைப்பு படம் 4இல் காட்டப்பட்டுள்ளது. படம் 1 இல் உள்ள சுழலி மற்றும் உறையமைப்பைச் சுழல் திசை காட்டியிலும் காணலாம். இணைக்கும் ஊசியைச் சிறிதளவு பிறழ் மையமாக அமைப்பதன் மூலம் சுழல் அளவியின் ஒடுக்கம் பெறப் படுகிறது. சுழல் அமைப்பு, உள்ளீடற்ற உறுப்பினால், ஒரு திருக்கக் கம்பியின் மூலம் தாங்கப்படுகிறது. இது உராய்வற்ற தாங்கு அமைப்பாகும். கம்பியில் ஏதேனும் முறுக்கம் ஏற்பட்டால், உள்ளீடற்ற உறுப்பை இயக்க, கப்பலைப் பின்னோக்கி இயக்க உதவும் துணைப் பொறி பயன்படுகிறது. எனவே, இவ்வுள்ளீடற்ற அமைப்பு, சுழல் அளவியுடன் எப்போதும் இணைந்தே இருக்கும். உள்ளீடற்ற உறுப்புடன், திசைகளைப் பற்றிய குறிப்புகளைக் காட்டும் காட்டி இணைந்துள்ளது. சுழல் திசை காட்டிகள், அதிர்வுகளிலிருந்தும், திடீர் விசைகளிலிருந்தும் காக்கப் பட வேண்டும். அவற்றிடையே ஏற்படும் மோதலைத் தடுப்பதற்காக, எண்ணெய் நிரம்பிய கொள் கலனுக்குள் சில உறுப்புகள் மிதக்க விடப்படுகின்றன. பெரும்பாலான கப்பல்களில், மேல் தளத்திற்குக் கீழே உள்ள அறையிலேயே சுழல் திசை காட்டி வைக்கப்படும். திசை காட்டியிலிருந்து அறியப்படும் தகவல்கள், கப்பல் தலைவர் நிற்பதற்கான மேடை, பிற பகுதிகள் ஆகியவற்றிற்குக் கடத்தப்படுகிறது. எடுத்துக் காட்டாக, போர்க் கப்பல்களில் உள்ள சுழல் திசை காட்டிகள், குறி பார்க்கும் துப்பாக்கிக் கருவிகள், ஏவுகணைகளை வழிப்படுத்தும் கருவிகள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். வானூர்திகளில் சுழல் திசை காட்டியின் பயன்பாடு. வானூர்திகளின் உயர் வேகம், அதன் பறப்பு உயரத்தில் ஏற்படும் பெரிய திடீர் மாற்றம். போன்ற காரணங்களால் பல காலம் சுழல் திசைகாட்டிகள் வானூர்திகளில் பயன்படுத்தப் படாமல் இருந்தன. இவ்வானூர்தி வேகங்களின் வட—தென் கூறுபாடுகள், பிழைகளைத் தோற்றுவித்தன. இப்பிழைகள், விரைவுப் பருமையைப் பொறுத்தவை. இப்பிழையைத் தவிர்ப்பதற்கு, வானூர்தியின் உண்மையான நில வேகம் அறியப் பட வேண்டும். இவ்வானூர்தி செல்லும் திசைக்கு எதிர்த் திசையில் சுழல் அளவியை முந்துகை அடையச் செய்கிறது. மேலும், இதனால், அவ்விடத்தின் செங்குத்துத் திசையும் துல்லியமாக அறியப் படுகிறது. மேற்கூறிய வசதிகள் அனைத்தும், புதிய படைப் பிரிவு வானூர்திகளில் காணப்படுகின்றன. இவ்வகை வானூர்திகளில் முடுக்க அளவிகளுடன், சுழல் அளவிகளும் நிலையான தள மேடை பெறும் பொருட்டு இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், டாப்ளர் திசை காட்டும் ராடாரும் இணைக்கப் பட்டுள்ளது. இந்த ராடார் புவிப் பரப்பிற்கு மேலுள்ள உண்மையான வேகத்தை அளக்க உதவுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> நிலையான சடத்துவ தள மேடை, ராடார் ஆகிய இரண்டும் இணைந்த அமைப்பின் உதவியால், அவ்விடத்தின் செங்குத்துத் திசையையும், வானூர்தியின் வேகத்தையும் துல்லியமாக அளக்க முடிகிறது. இவ்வாறு அளக்கப்பட்ட குறிப்புகள், தள மேடையின் முகட்டு வட்டையில் உள்ள சுழல் கண்ணியுள் செலுத்தப்படுகின்றன. இதனால், வானூர்தி பறக்கும் போதும், திசை காட்டும் அமைப்பு சரியாகச் செயல் படுகிறது. டாப்ளர் ராடார், மிகத் துல்லியமாக அளக்கக் கூடியது. 0.1° வரை துல்லியமாக அளப்பதற்கு, வானூர்தியின் வேகம், 45° குறுக்கையளவில், 0.5மீ. நொடி வரை தீர்மானிக்கப் பட வேண்டும். வானூர்தி மேலெழுவதற்கு முன், நிலத்தில் சுழல் திசை காட்டுதலில், சடத்துவ தள மேடை மட்டும் பயன்படுகிறது. இத்தள மேடை, வட திசையை நினைவில் வைத்துக் கொள்கிறது. இத்தொழில் நுட்பம் வானூர்தி பறக்கும் காலம், சுழல் அளவியின் சாய்வு விகிதத்தை விடக் குறைவாக இருக்கும் போது, மிக ஏற்றதாக உள்ளது. இதற்கு ஏவுகணை சிறந்த எடுத்துக் காட்டாகும். சுழல் திசை காட்டி, திசைகளைப் பற்றி அறியும் சுழற்சியிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. திசைகளைப் பற்றி அறியும் சுழல் இயக்கம் காந்தத் திசை காட்டியின் செயல்பாட்டிற்கேற்ப அமைகிறது. இது தானாக வட திசையைக் காட்டுவதில்லை. பெரும்பாலும், வழக்கத்திலுள்ள வானூர்திகளில் திசைகளைப் பற்றி அறியும் சுழல் பயன்படுகிறது . சுழல் திசை காட்டி, 1908ஆம் ஆண்டில் ஹெர்மான் அன்ஸ்சுட்ஸ் காம்ஃபே என்னும் ஜெர்மானிய பேரறிஞரால் கண்டு பிடிக்கப்பட்டது. கப்பல் தளத்தில் நிறுவுதல். இந்த அமைப்பு முழுதும், கடலில் திசை காட்டி முதலிய கருவிகளைக் கிடை மட்டாக வைத்திருப்பதற்கான, எந்திரக் குழையச்சு அமைவுடன் (gimbal) அமைக்கப்பட்டிருக்கும். உருளக் கூடிய பகுதியிலிருந்து கப்பலின் உந்தத்திலிருந்தும் (pitching) ஆழ்திற அகல் அங்காப்பு (yawing motion) அசைவிலிருந்தும் பிரித்துச் செயல்படுவதற்கு ஏற்றவாறு அமைக்கப்படும்., வேகத்தையும் (speed), முறுக்கு விசை (torque), உராய்வு (friction) போன்றவற்றைச் சீரமைப்பதற்கும், ஊசலில் (pendulum) ஏற்படும் தவறுகளைக் குறைப்பதற்கும் இவ்வாறு அமைக்கப்படும். கப்பல் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணம்செய்யும் போது, புவியில் ஏற்படும் திசை வேகம் ‘V’ எனப்படும். இதனால், ஏற்படும் விகிதத்தை Ω என்ற எழுத்தின் மூலம் குறிப்பிடுவர். ஆகவே, இவற்றின் சமன்பாடு Ω = V/R. இங்கு, R என்பது புவி ஆரத்தைக் குறிக்கும், —கே. ஆர். கோவிந்தன் —வா. அனுசுயா நூலோதி. P.L, Ballaney, Theory of Machines, Fifteenth Edition, Khanna Publishers,New Delhi, 1987.