அத்ரன்சிகேரா
atraṉcikērā
உத்தரப் பிரதேசம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள தொன்மையான ஊர்.
உத்தரப் பிரதேசம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள தொன்மையான ஊர். அலிகார் முசுலிம் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையைச் சார்ந்தவர்கள் இவ்வூரில் அகழாய்வை 1962–63–ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டார்கள். அகழாய்வுக் குழிகளின் அடிமட்டத்தில், வெளிறிய பழுப்பு மஞ்சள் நிற மட்கலன்கள் கிடைத்தன. இந்த மட்கலன்களுடன் வெளிறிய பழுப்பு மஞ்சல் நிறச் செங்கற்கட்டிகளும் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாம் பண்பாட்டுப் பகுதியில் கறுப்புநிற மட்கலன்களும் நுண்கருவிகளும் சில செம்புப் பொருள்களும் கிடைத்தன. வடஇந்தியாவில் அகழாய்வு செய்யப்பட்ட ஏனயை இடங்களில் கிடைத்த கறுப்பு சிவப்பு மட்கலன்களைப் போல் அல்லாமல், இங்குக் கிடைத்த கறுப்பு சிவப்பு மட்கலன்களின் வடிவங்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றன. இந்த மட்கலன்களில் வண்ணங்கள் தீட்டப்பெறவில்லை, மற்றும் இப்பண்பாட்டு மண்ணடுக்கில் செப்புப் பொருள்களும், எலும்பால் செய்யப்பட்ட சீப்பும், சிவப்பு நிற மணிவகைக் கற்களும் கிடைத்தன. மூன்றாவது பண்பாட்டு மண் அடுக்குகளில் வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்கலன்கள், சாதாரண சாம்பல் நிற மட்பாண்டங்களுடன் கிடைத்தன. இவற்றுடன் உடைந்த கறுப்பு–சிவப்பு நிற மட்கலன்கள், சுடுமண் பொம்மைகள் ஆகியவையும் கிடைத்தன. வீடுகள் இக்காலத்தில் களிமண்ணால் கட்டப்பட்டவையாக இருந்தன என்பதை அகழாய்வின் மூலம் அறிகிறோம். நான்காவது பண்பாட்டுக் காலம் கி.மு. 600 முதல் கி.மு. 200 வரை ஆகும். இப்பண்பாட்டுக்கால மண்ணடுக்குகளில் வடஇந்தியப் பளபளப்பான கறுப்பு மட்கலன்கள் கிடைத்தன. இரும்புப் பொருள்கள், உழவுக் கருவிகள் ஆகியவையும் கிடைத்தன. இக்காலத்திய வீடுகள், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை என்பது அகழாய்வின் மூலம் புலப்படுகிறது. வடஇந்தியப் பளபளப்பான கறுப்பு மட்கலன்கள் ‘மௌரியர் கால மட்கலன்கள்’ எனக் குறிக்கப்பெறுகின்றன. இக்காலப் பண்பாட்டு மண்ணடுக்குகள், மௌரியப் பேரரசின் காலத்தனவாகக் கருதப்படுகின்றன. ஐந்தாவது பண்பாட்டுக் காலம் கி.மு. 200 முதல் கி.பி. 300 வரையாகும். இப்பண்பாட்டு மண்ணடுக்குகளில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடு, மணிவகைகள், சுடுமண் பொம்மைகள் ஆகியவை கிடைத்துள்ளன. ஆறாவது பண்பாட்டின் காலம் கி.பி. 600 முதல் கி.பி. 1200 வரை எனவும், ஏழாவது பண்பாட்டின் காலம் கி.பி. 1200 முதல் 1500 வரை எனவும் தொல்லியல் அறிஞர்களால் இங்கு நடந்த அகழாய்வின் மூலம் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. இப்பண்பாட்டுக்கால மண்ணடுக்குகளில் கண்ணாடி போன்று மெருகிடப்பட்ட மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 327)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mw2yu8y2/
தமிழ்“அத்ரன்சிகேரா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mw2yu8y2/APA
Oliyon Research. (2026). அத்ரன்சிகேரா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mw2yu8y2/MLA
"அத்ரன்சிகேரா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mw2yu8y2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment