சியோலைட்டுகள்
ciyōlaiṭṭukaḷ
இது பல கனிமங்களைக் கொண்ட ஒரு குழுவின் பெயராகும்.
இது பல கனிமங்களைக் கொண்ட ஒரு குழுவின் பெயராகும். சியோலைட் (zeolite) குழுவைச் சேர்ந்த கனிமங்கள் சோடியம், கால்சியம் ஆகியவற்றின் நீர் கலந்த அலுமினியம் சிலிக்கேட்டுகள் ஆகும். இவற்றிலுள்ள அலுமினியம், சிலிக்கான் இரண்டும் ஆக்ஸிஜனுக்குப் பாதியளவு என்ற விகிதத்தில் [(Al+Si):O₃=1:2] இருக்கக் காணலாம். இது போலவே, அலுமினியம் ஆக்சைடும், கால்சியம் ஆக்சைடு, சோடியம் ஆக்சைடு ஆகிய இரண்டும் சம விகிதத்தில் (Al₂O₃:(CaO+NaO)=1:1] இருக்கின்றன.
சியோலைட்டுகளில் உள்ள நீர் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் வெளிப்படுவது (நீங்குவது) இல்லை. சூடாக்கப்படும் போது, அதிலுள்ள நீர் எளிதாகத் தொடர்ந்து வெளியேறுகின்றது. இவ்வாறு, சியோலைட்டிலுள்ள நீர் வெளியேறுவதால், அதன் அணு அமைப்பில் சிதைவோ, மாற்றமோ ஏற்படுவதில்லை. இதனால், சியோலைட்டுகளிலுள்ள நீர், அவற்றின் அணு அமைப்பின் முக்கியமான இடத்தில் அமையவில்லை என்பதை உணர முடிகின்றது. அதிலிருந்து நீரின் ஒரு பகுதி வெளியேறிய நிலையில், சியோலைட்டுகள் அமோனியா, ஆல்கஹால், ஹைட்ரஜன் சல்ஃபைடு, அயோடின் முதலானவற்றை உறிஞ்சி அவ்விடத்தை நிரப்பிக் கொள்கின்றன.
சியோலைட்டுகள் வேதிச் சேர்க்கையைக் கொண்டு நோக்கும் போது, ஃபெல்ஸ்பார் கனிமங்களை ஒத்திருக்கின்றன. ஃபெல்ஸ்பார்களைப் போலவே, சியோலைட்டுகளும் வெவ்வேறு படிகத் தொகுதிகளைச் சேர்ந்தனவாக இருப்பதையும் காணலாம். சியோலைட்டுக் குழுவில் 33 கனிமங்கள் உள்ளன. அவை அனால்சிம், புரூவ்ஸ்டிரைட், சாபசைட், கிளைனேப்டிலோலைட், டாச்சிஆர்டைட், எடிங்டோனைட், எபிஸ்டில்பைட், எரியோனைட், ஃபாஜசைட், ஃபெர்ரிரைட், கர்ரோநைட், கிஸ்மான்டைட், கிமெலினைட், கோன்னார்டைட், ஹார்மோடோம், ஹெர்ஷிலைட், ஹீலான்டைட், லாமோன்டைட், லெவினைட், மிசோலைட், மோர்டினைட், நேட்ரோலைட், அஃபிரிடைட், பாலிங்கைட், ஃபிலிப்சைட், பொல்யூசைட், ஸ்கோலிசைட், ஸ்டில்பைட், தாம்சோனைட், விசெய்ட், வைரக்கைட், வெல்சைட், யுகாவரலைட்.
சியோலைட் கனிமங்களின் ஒப்படர்த்தி 1.9—2.4. இவற்றின் ஒளி விலகல் எண்கள் 1.47—1.54. சியோலைட்டுகள் பசால்ட், டயாபேஸ் முதலான எரிமலைப் பாறைகளிலுள்ள குடைவுகளில் காணப்படும். குறைந்த ஆழத்தில் உருவாகிய நுழைவு அனற்பாறைகளின் எஞ்சிய நீரிலிருந்தும், பாறைக் குழம்பின் ஆவியிலிருந்தும் உண்டாகின்றன. குறைந்த நிலையில் உருமாற்றமடைந்த படிவுகளிலிருந்தும் சியோலைட்டுகள் கிடைக்கின்றன.
சியோலைட்டுகள் அப்போஃபிலைட், டேட்டோலைட், பிரிஷ்நைட், பெக்டோலைட், கால்சைட், பளிங்கு (குவார்ட்ஸ்) ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து கிடைக்கின்றன. இவை இந்தியாவிலுள்ள டெக்கான் எரிமலைப் பாறைகளில், குறிப்பாக பூனா, லோனாவ்லா முதலான இடங்களில் இரண்டாம் தரக் கனிமங்களாகக் கிடைக்கின்றன. சியோலைட் என்னும் பெயர், கொதிக்கின்ற என்னும் பொருளுடைய கிரேக்கச் சொல்லிலிருந்து வழங்கப்படுகின்றது. —இல. வைத்திலிங்கம் நூலோதி. W.E. Ford, Dana's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Ltd, London, 1985.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 252)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mph5p333/
தமிழ்“சியோலைட்டுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mph5p333/APA
Oliyon Research. (2026). சியோலைட்டுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mph5p333/MLA
"சியோலைட்டுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mph5p333/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment