இராமன்
irāmaṉ
கம்பர் இயற்றிய இராமாயணக் காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன்.
கம்பர் இயற்றிய இராமாயணக் காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன். அயோத்தி வேந்தன் தசரதற்கு அவன் மனைவியர் மூவருள் கோசலையின் மகனாய்ப் பிறந்தவன். இளமைக் காலத்தில் வசிட்ட முனிவரிடம் கல்வி பயின்று முனிவர் முதலிய எல்லாரும் போற்றுமாறு விளங்கினான். தன் பெயருக்கேற்பப் பேரழகனாக, ஓவியத்து எழுத வொண்ணா உருவத்தானாகத் திகழ்ந்தான்.
இராமன்
கம்பர் இராமனைச் சுட்டுவதற்கு அண்ணல், அமலன், ஆண்டகை, ஆரியன், ஆழியான், இறைவன், ஐயன், கண்ணன், கொற்றவன், கோன், வரதன், வள்ளல், நம்பி, நாயகன் எனப் பல சொற்களைப் பயன்படுத்தினாலும் இராமன் என்னும் பெயரையே பெரும்பாலான இடங்களில் ஆளக் காணலாம். இப்பெயர் இராம காதையில் 279 இடங்களில் ஆட்சி பெற்றுள்ளது அறியத்தக்கது.
காப்பியத்தில் இராமன் இருவேறு நிலைகளில் குறிக்கப்படுகிறான். கதைமாந்தர் பலர் அவனைப் பரம்பொருளாகவே எண்ணுகின்றனர். முழுமுதற் கடவுள், மூவர்க்கும் முதல்வன் என்றெல்லாம் பலர் பாராட்டுகின்றனர். ஆனால், இராமனோ சொல்லாலும் செயலாலும் ஒருபோதும் தன்னை இறைவனாகவே காட்டிக் கொள்ளவில்லை. மாறாக, நடைமுறை வாழ்வில் அவன் ஏனைய உலக மாந்தர் போலவே எளிய மனிதனாகக் காட்சி தருகிறான். தன் இயல்பான செயற்பாட்டு நிலையில் எளிய மனிதனாகவும், பிற காப்பிய மாந்தரின் நோக்கு நிலையில் இறைமைக் குணங்கள் சான்ற பரம்பொருளாகவும் விளங்கி. இருவேறு அடுக்கு நிலையில் தன் ஆளுமையை இராமன் வெளிப்படுத்துகிறான். ஒரே பாத்திரத்தை இவ்வாறாக இருநிலைகளில் காட்டுவது எக்கவிஞர்க்கும் அரிய செயலேயாம். அவ்வாறு காட்டினும் ஒன்றற்கொன்று விட்டிசைக்காமல் இணக்கமாய்க் காட்டுவது அரிதினும் அரிது. கம்பநாடரோ இதனை மிக எளிமையாகச் செய்து முடித்துவிடுகிறார்.
இராமனின் பெருவாழ்வு உலக மாந்தர்க்கு எடுத்துக்கட்டாய் இலங்கும் உயர்வாழ்வு. தந்தையின் சொல்போற்றும் தனயனாய், மனைவியுடன் உளம் ஒன்றிய காதலனாய், உடன்பிறந்தார் மாட்டு உழுவலன்பு காட்டும் உண்மைச் சகோதரனாய், அன்பினால் தன்னை நயக்கும் அயலாரிடத்துத் தன்னையே அடிமை தரும் நண்பனாய், பகைவரிடத்தும் இரக்கம் காட்டும் பண்புசால் மறவனாய், தீமையை ஒறுத்து நன்மையைத் திருவோலக்கம் ஏற்றும் இலட்சிய வீரனாய். மெய்த்திருப்பதம் மேவு எனினும் இத்திருத் துறந்து ஏகு எனினும் ஒத்திருக்கும் உள்ளம் கொண்ட உயர் மனிதனாய் வாழும் இராமனின் நிலையைப் பார்க்கும்போது, அவன் மனிதக்குலமே வியந்து போற்றும் ஒப்பற்ற மாமனிதன் (Super man) ஆகத் திகழ்கிறான்.
இராமனின் ‘அவதார நோக்கம்’ நல்லோரைக் காத்தலும் அல்லோரை அழித்தலும் ஆம். இராவணவதம் இராமனின் செயல்வாழ்வில் உச்ச நிலையாகத் திகழ்வது. அதற்குமுன் அவன் நிகழ்த்திய அருஞ் செயல்கள் மிகப்பல. அவற்றுள் அவன்றன் தறுகண்மையை எடுத்துக்காட்டும் செயல்களும் உண்டு; கருணை மறத்தைக் காட்டும் செயல்களும் உண்டு. தாடகையோடு நிகழ்த்தும் போரே இராமனின் கன்னிப் போராகும். விசுவாமித்திரரின் தவவேள்விக்கு இடையூறு விளைத்த தாடகையின் மக்கள் இருவருள் ஒருவனைக் கொன்று, மற்றொருவனைக் கடலுள் வீழ்த்துகிறான் இராமன். கார்த்தவீரியன் என்பானைத் தன் கோடரிப் படையால் கணநேரத்தில் வெற்றி கொண்டவனும், தனக்கு யாரும் யாரும் இணையில்லை எனத் தருக்கித் திரிந்தவனுமான பரசுராமனை வலிமைகெட அழிக்கிறான். மான் வடிவில் வந்த மாரீசனை அம்பு தொடுத்து அடியோடு வீழ்த்துகிறான். கரன் முதலாய வீரர் தம் கடலனைய தானையொடு பொர முற்பட்டபோதுதன் வில்லாண்மையால் அவரை வேரறக் கல்லுகிறான். இவையனைத்தும் இராமனின் தோளாற்றலைத் துலக்கும் வீரச்செயல்கள்.
இராமன்பால் வீரம் மட்டுமன்று; ஈரமும் உண்டு கௌதம முனிவரின் சாபத்தால் கல்லுருப் பெற்ற அகலிகை இராமனின் அடித்துகள் பட்டதும் பழைய வடிவை அடைகிறாள். அவள் நெஞ்சினால் பிழைப்பிலாதாள் என்னும் உண்மையைக் கௌதமர்க்கு உணர்த்தி, அவரொடு அவளைச் சேர்ப்பிக்கிறான் இராமன். கவந்தனோடு பொருவதன் மூலம் தன் திருமேனித் தொடர்பைக் கொடுத்து, அவன் சாப நீக்கம் பெற உதவுகிறான். தந்தையொடு கேண்மை கொண்டவன் என்பதால், கழுகின் வேந்தனாகிய சடாயுவையும் தன் தந்தையாகவே கருதி, அவன் இறந்த பிறகு இலக்குவனொடு ஈமக் கடன்கள் ஆற்றுகிறான். வீடணனை ஏற்றுக்கொள்வது விவேகமற்ற செயல் எனப் பலர் தடுத்தும், ‘பூரியரேனும் தம்மைப் புகல்புகுந்தோர்க்குப் பொன்றா ஆருயிர் கொடுத்துக் காத்தல்’ கடன் எனக் கூறி, அவனுக்கு அடைக்கலம் தருகிறான். வேடர் குலத்துக் குகனையும் விரும்பி ஏற்றுத் தன் குடும்பத்துள் ஒருவனாக ஆக்கிக் கொள்கிறான். இலக்குவன் தோழன் என்றும், சீதை கொழுந்தி என்றும் குகனுக்கு முறை கற்பிக்கிறான். இவையெல்லாம் இராமனின் அருள்பழுத்த பெருநெஞ்சத்தைப் புலப்படுத்தும் ஒப்பற்ற செயல்கள் ஆம்.
இராமனின் உள்ளம் உயர்திணை மக்களை மட்டுமன்றி, அஃறிணை உயிர்களையும் தம்முயிர் போல் எண்ணி ஒத்துரிமை தருகிற ஆன்மநேய நிலையமாய்த் திகழ்கிறது. அவன் அன்புலகில் மனிதர், அரக்கர், குரங்கு, கழுகு, கரடி எல்லாம் ஒருபடித்தாகவே இடம் பெறுகின்றனர். அந்த உலகத்தில் அன்பே, அருளே அரசோச்சுகிறது; அங்கே வேறுபாடு இல்லை; பிணக்கு இல்லை. ஓடிவரும் நதிகளையெல்லாம் வாரி அடக்கிக் கொள்ளும் கடல் போன்ற பரந்த உள்ளமே இராமனின் உள்ளம் எனலாம்.
வைணவ உலகில் ‘பிரபத்தி நெறி’ என்று போற்றப்படும் சரணாகதித் தத்துவம் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருப்பது. இராமாயணத்தைச் சரணாகதி சாத்திரம் என்றே வைணவர் போற்றுவர் தஞ்சம் வேண்டித் தன்னை அண்டுவோர் யாவரே யாயினும் அவரை ஏற்றுக்கொண்டு, அடைக்கலம் காத்தலே இராமனின் ஆளுமையில் காணலுறும் தனிப்பெரும் தலைமைக்கூறு எனலாம். இளவலொடும் சீதையொடும் இராமன் தண்டக வனத்துக்கு வந்த போது, அங்கிருந்த தவமுனிவோர் அவனை நெருங்கிக் குறையிரந்து நிற்கின்றனர். ‘இரக்கமெனும் பொருளிலா அரக்கர் எம்மை வருத்தலாயினர்; அல்லும் பகலும் யாம் அல்லலுக்கு இலக்கானோம்; ஆதலின் ஓதல், ஓதுவித்தல் போன்ற அறவோர் தொழிலை அடியோடு மறந்தோம்; எம்மை நீயே காத்தருளல் வேண்டும்; யாம் நினக்குத் தஞ்சம்’ என்று வேண்டுகின்றனர். செவிமடுத்த இராமன் அவ்வறவோரை நோக்கிப், ‘பிறர்க்கென முயல்வதே பெருவாழ்வு; கவலற்க; தொல்லைதரும் தீயோரைத் தொலைப்பேன்; முருகனும் மாலும் திரிபுரம் எரித்ததேவும் அவர்களுக்குத் துணையாகவே வந்தாலும் நான் அவரை வேரொடு துணிப்பேன்; அஞ்சாதீர்’ என்று தஞ்சம் அளிக்கிறான். அருள்கனிந்த இப்பெருமனமே வீடணனையும் ஆட்கொள்ளுகிறது. வீடணனை ஏற்பது குறித்து இராமன் தக்காரோடு கலந்தாலோசித்தபோது, சுக்கிரீவன், சாம்பன், தானைநாயகன், நீலன், மந்திரக் கிழவர் அனைவரும் ‘அவனைச் சேர்த்துக் கொள்வது அடாது’ என்றே எடுத்துரைக்கின்றனர். மாருதி ஒருவனே ஏற்கலாம் என்று இசைவு தெரிவிக்கிறான். அப்போது இராமன், ‘வெற்றி பெறுக, தோற்க, வீக, வீயாது வாழ்க, பற்றுதல் அன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின்றானை’ என்று தெளிவாகப் பேசுகிறான். அடைக்கலம் போற்றல் என்னும் இப்பண்புக் கூறே இராமனின் ஆளுமையில் சிகரமாய்ப் பொலிகிறது.
இராமனிடம் இயல்பாகப் பொருந்தியுள்ள ஏனைய பண்புக்கூறுகள் அவனை, எல்லோரையும் போன்ற எளிய மனிதனாகவே யார்க்கும் காட்டி நிற்கின்றன. தசரதனின் இறப்புச் செய்தியைக் கேட்ட போது, ‘மாண்டு முடிவதல்லால் மாயா உடம்பிது கொண்டு ஆண்டு வருவது இனி யார் முகத்தே நோக்கவோ’ என்று வாய்விட்டுப் புலம்புகிறான். தந்தையின் மீது இராமன் கொண்டிருந்த பாசம் அது; அவன் தன் இளவலிடத்தும் உள்ளம் கலந்த நேயம் கொண்டு ஒழுகினான்.
சடாயு உயிர் நீத்த பிறகு இராமனும் இலக்குவனும் சீதையைத் தேடிக்கொண்டு செல்கின்றனர். அப்போது இராமனை ஓரிடத்தே அமரச் செய்துவிட்டு நீர் கொணரச் சென்ற இலக்குவனை அயோமுகி என்னும் அரக்கி காம நோக்கால் உந்தப்பட்டுக் கவர்ந்து செல்கிறாள். நீண்ட நேரமாகியும் இளவல் திரும்பாமை கண்ட இராமன் உடம்பெல்லாம் வாயாக ஓவென்று அரற்றுகிறான். மற்றொரு சமயம், இலக்குவன் நாகபாசத்தால் கட்டுண்டு கிடந்த காட்சியைக் காண நேர்ந்தபோதும், இந்திரசித்தன் விடுத்த பிரம்மாத்திரத்தால் அவன் இறுகப் பிணிக்கப்பட்ட போதும் இராமன் அளவிலா அதிர்ச்சி அடைந்து கவலையின் ஆழத்திற்கே சென்று விடுகிறான். ‘இனி வாழேன்,’ என்றும் பேசுகிறான்.
கணவன் என்னும் நிலையில் சீதையொடு அவன் கொண்டிருந்த காதல் நேயம் மலையினும் பெரிது; வானினும் உயர்ந்தது. கானகத்தே அவன் சீதையைப் பிரிய நேர்ந்தபோது, ஆற்றாமை மீதூர அவளுக்காக உருகுகிறான்; உள்ளம் துடிக்கிறான். அவனுக்குக் கானகம் முழுவதும் கண்ணின் நோக்குங்கால் சானகி உருவாகவே பொலிந்து தோன்றுகிறது. சானகியின் உருவெளித் தோற்றங் கண்டு உள்ளம் நெகிழ்ந்த நிலையில் அவன் பேச்செல்லாம் காமம் மிக்க கழிபடர் கிளவியாகவே பொங்கிப் பெருகுகிறது. கவர்ந்து செல்லப்பட்ட நிலையில் சீதை கழற்றி எறிந்த அணிமணிகளைச் சுக்கிரீவன் முதலியோர் கண்டெடுத்து வந்து இராமனிடம் காட்டிய போது, ‘தன் கணவன் உயிருடன் இருக்கவும் அணிமணிகளைக் களைந்தெறிந்த பெண் வேறெங்கும் இருக்க முடியுமா?’ என்று கேட்டு, ‘அத்தகு தீவினைக்கு நான் காரணம் ஆகிவிட்டேனே’ என்று கதறுகிறான். மாயாசீதையைக் கொன்றுவிட்டு, அயோத்தி நோக்கிப் போவதுபோல் இந்திரசித்தன் போக்குக் காட்டியபோதும், இராமன் நடந்த நாடகத்தை அறியாதவனாய், அனைத்தையும் உண்மையென்றே நம்பி அரற்றுகிறான். இந்நிகழ்ச்சிகளெல்லாம் உணர்ச்சியலைகளால் அலைக்கழிக்கப்படும் ஓர் எளிய மனிதனே இராமன் என்னும் உண்மையைக் கற்போரிடத்தே நிறுவி நிற்கின்றன.
இராமன் தன்னைத் தானே வெறுத்துப் பேசிக் கொள்ளும் இடமும் உண்டு. தன்னையே வெறுக்கும் கழிவிரக்கம் கோழையாரிடத்தே மிருதியாக இருக்கும். ஆற்றல் மிக்க அடலேறாம் இராமனிடத்தும் இக்கோழைமைத்தனத்தின் கூறுகள் அங்கங்கே மின்னலிட்டு மறைகின்றன. கவந்தனின் பேருருவைக் கண்டு கலக்கமுற்ற போது, பழிக்கு ஆளாகி இருக்கும் நான் அது நீக்குமாறு கவந்தனிடம் பட்டு விளிதலே நன்று என்று வேதனையோடு பேசுகிறான். ‘சனகனிடம் உம்மால் திருமணம் செய்து கொடுக்கப்பெற்ற நும்மகளாகிய சீதைஅரக்கர் மனையிடத்தே உள்ளாள் என்று சொல்லிக்கொண்டு என் வில்லையும் தூணியை- யும் சுமந்துகொண்டு எம்படிப் போய் அவர்முன் நிற்பேன்’ என்று அவலிக்கிறான்.
இராமனின் ஆளுமையில் சிறப்பாகத் திகழ்ந்தொளிரும் மற்றொரு கூறு அவனது போரற ஒழுக்கமே எனலாம். முதல்நாட் போரில் வீரமும் களத்தே போரிட்டு வெறுங்கையோடு நின்ற இராவணனை நோக்கி, ‘இன்று போய் நாளை வா!’ என இயம்புகிறான் இராமன். பகைவனுக்கும் அருளும் இப்பண்பினை எவ்வாறு பாராட்டுவது? மனையாளைக் கவர்ந்துபோன மாற்றான் ஒருவனிடத்தும் இவ்வாறு கருணையோடு பேசுகிற பண்புடைமை வேறு யார்க்கே வாய்க்கும்? மேலும், மற்றோரிடத்தே மயக்கமுற்றுக் கிடக்கும் இராவணனைத் தேர்வலவன் மாதலி தேடிச்சென்று சுட்டிக்காட்டி, ‘இவனை இப்போதே கொல்க: மயக்கம் தெளிந்து எழுந்தால் அது முடித்தல் அருமை’ என்று கூறியபோது, ‘அவ்வாறு செய்யேன்; அது போர்முறைக்கு முரணானது; இப்போது என் மனம் போர் செய்வதையே முற்றும் விட்டிட்டுள்ளது’ என்று இராமன் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் மறுமொழி உரைக்கிறான். இறந்து கிடந்த இராவணனின் முதுகில் புண் இருந்தமையைத் தற்செயலாகப் புரட்டிக் கண்ட இராமன், ‘புறமுதுகு காட்டி ஓடிய ஒருவனோடு போர் செய்ய நேர்ந்ததே’ என்று நாணம் கொள்கிறான். இராவணன் முதுகில் எப்படி அப்புண் உண்டாயிற்று என்று வீடணன் விளக்கிய பின்னரே இராமன் நாணம் தவிர்க்கிறான். இராமனின் போரற ஒழுக்கத்தைப் புலப்படுத்த இதனினும் பிறிதொரு சான்று வேண்டுமா?
இன்பத்தையும் துன்பத்தையும் ஒருபடித்தாக ஏற்கிற உள்ளம், ஓடும் பொன்னும் ஒக்கவே நோக்குகிற உள்ளம் ஒருவற்கு எளிதாக அமைவதன்று. ஒரு வேளை அது வாய்க்கப் பெற்றாலும் தமக்குத் தீமை செய்தோரை ஒறுக்காமல் விரும்பி ஏற்றுக் கொள்ளும் அருள் உள்ளம் பலருக்கு இருக்காது. அது ஒரு சிலர்க்கே உண்டு. காப்பியத்தின் இறுதியில் தயரதன் வானுலகிலிருந்து திரும்பிவந்து இராமனை நோக்கி, ‘நினக்கு வேண்டும் வரத்தைக் கேள்’ என்று கூறியபோது, ‘தீயள் என்று நீதுறந்த என் தெய்வமும் மகனும், தாயும் தம்பியும் ஆம் வரம் தருக’ என்றே கேட்கிறான். எந்தக் கைகேயியின் தீத்திறத்தால் இராமன் அரசு துறந்து வனம் புகுந்தானோ, அந்தக் கைகேயியைத் தன் மனைவியல்லள் எனத் தசரதன் துறந்திருந்ததை மாற்ற வரம் கேட்டதோடு, அவளை ‘என் தெய்வம்’ என்று ஏற்றிப் போற்றவும் செய்கிறான் இராமன். எத்துணைப் பெரும்பண்பு அது!
இராமாயணத்தில் இராமன் மனிதனாகவே விவரிக்கப்பட்டாலும், கம்பர் பல இடங்களில் தம் கூற்றாகவும் கதைமாந்தர் கூற்றாகவும் அவனைப் பரம்பொருள் என்றே சுட்டிச் செல்கிறார் என்பது முன்னரும் குறிக்கப்பட்டது. சடாயு, ‘முத்தேவரின் மூல முதற்பொருள்’ என்றும், கவந்தன், ‘மூன்று கவடாய் முனைத்தெழுந்த மூலமோ?’ என்றும், சுக்கிரீவன், ‘ஆழிமேல்ஆழிவாழ் கையன் நீ’ என்றும், வாலி, ‘மூவர் நீ! முதல்வன் நீ!’ என்றும் பிறாண்டும் வியந்து கூறியிருப்பவை ஈண்டு நினைவு கூறத்தக்கவை. இராமனால் கொல்லப்பட்ட வாலியே சுக்கிரீவனிடம், ‘மறைகளும் முனிவர் யாரும், மலர் மிசை அயனும் மற்றைத், துறைகளின் முடிவும் சொல்லும் துணிபொருள் துணிவில் தூக்கி, அறை கழல் இராமன் ஆகிவந்தது’ என்று உணர்த்துகிறான். இதேபோல் சொல்லின் செல்வனாகிய அனுமன் இராமனைப் பற்றி இராவணனிடம் கூறும் போதும் இக்கருத்தையே, ‘மூலமும் நடுவும் ஈறும்’ எனத் தொடங்கும் பாடலில் வலியுறுத்தியுள்ளான்.
கம்பராமாயணப் பெருங்காப்பியத்தில் இராமன் அடிமுதல் முடிஈறாகப் பேருருவம் (விசுவரூபம்) எடுத்து நிற்கும் ஓர் அற்புதப் பாத்திரம் ஆகும். அப்பாத்திரப் படைப்பில் அதன் நீள அகல உயர கனபரிமாணத்தில் கம்பன் காட்டியிருக்கும் திறமே திறம்! புடை ஓவியம் போல் உயிர்க்களையோடு பொலியும் அப்பாத்திரப் படைப்புக் கம்பனின் இலக்கிய மேதைமையைக் காலமெல்லாம் காட்ட வல்லது. மா.இரா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 137)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mnkrwe8h/
தமிழ்“இராமன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mnkrwe8h/APA
Oliyon Research. (2026). இராமன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mnkrwe8h/MLA
"இராமன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mnkrwe8h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment