வாழ்க்கையைப் படித்த கலைஞனின் அனுபவ வெளிப்பாடு இலக்கியம். இலக்கியத்தைப் படித்த திறனாய்வாளனின் அனுபவ வெளிப்பாடு திறனாய்வு. நுண் கலைகளுள் இறப்பு மிக்கது இலக்கியம். அது படிக்குந்தோறும் இன்ப நுகர்ச்சியைப் படிப்பவரிடம் ஏற்படுத்துவது; சிந்தனையைத் தூண்டுவிடுவது; உணர்வுக்கு இடமாவது; வழிவழியாக விளங்கி நிலைத்த பயன் தருவது. இன்புறுத்தலும் அறிவுறுத்தலும் இலக்கிய நோக்கம், இதனைக் கண்டறிவதே ஆய்வின் நோக்கம். இலக்கியம் பிறந்த போதே திறனாய்வும் பிறந்து விட்டது. இப்படிச் சொல்லியிருப்பதைவிட இப்படிச் சொல்லியிருக்சுலாம் என்ற எண்ணம் ஏற்பட்ட போதே திறனாய்வு தோன்றிவிட்டது என்பர். திறனாய்வு சொல் விளக்கம் திறனாய்வு என்பதற்குரிய ஆங்கலச் சொல்லான ‘Criticism’ என்பது ‘Kritiks’ என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் ஒரு படைப்பைப் பகுத்துப் பார்த்து அது பற்றித் தீர்ப்புச் சொல்வது ஆகும். திறனாய்வு, விமரிசனம் என்பன ஒரு பொருட் சொற்கள். பின்னது வடமொழியினின்றும் பெறப்பட்டது. பழந்தமிழ் நூல்களில் விமரிசனம், விமரிசம் என்னும் சொற்களைக் காண முடிகிறது. விமரிசனம் என்னும் சொல் பிரித்தல் எனப் பொருள்படும். திறனறிதல் என்ற சொல்லாட்சியும் உண்டு, ‘திறனறிந்து சொல்லுக’, ‘திறனறிந்தான் தேர்ச்சித் துணை’ (குறள் 644, 635) ‘திறவோர் காட்சியில் தெளிந்தனம்’ (புறம். 102) போன்ற வழக்காறுகள் தமிழில் இருப்பினும், திறனாய்வு என்னும் சொல் புதிய வழக்கேயாகும். இலக்கிய வரலாறு, இலக்கியக் கொள்கை, இலக்கியத் திறனாய்வு இவை மூன்றும் ஒன்றையொன்று தழுவி அமைந்தவை. ஒன்றை அறிய மற்று இரண்டின் துணை இன்றியமையாததாகும். இலக்கியப் படைப்புகளை அவை தோன்றிய கால வரிசையில் கூறிச் செல்வது இலக்கிய வரலாறு. ஒரு கால நிலையில் தோன்றிய படைப்புகளை ஆராய்ந்து, சில போது விதிகளை வகுப்பது இலக்கியக் கொள்கை. தொல்காப்பியர் ஓர் இலக்கியக் கொள்கையர் ஆவார். அகப்பாடல்களில் தலைவன் தலைவியரின் இயற்பெயர் சுட்டிக் கூறக் கூடாது என்பது அவர் கண்ட இலக்கியக் கொள்கைகளுள் ஒன்று. ஓரிலக்கியத்தின் தனித் தன்மைகளை (Individualities) ஆராய்ந்து மதிப்பிட்டு முடிவு கூறுவது இலக்கியத் திறனாய்வு. மேல்நாட்டுத் திறனாய்வாளர் ஆபர் குரோம்பி இலக்கியத் திறனாய்வைப் பொதுவாக இலக்கியங்களைப் பற்றியது (Theory of Literature), குறிப்பிட்ட இலக்கியத்தைப் பற்றியது (Criticism Proper) என இரண்டாகப் பிரித்துக் காட்டிப் பின்னதே சிறப்புடையது என்பர். திறனாய்வின் பணிகள் திறனாய்வு என்பது ஒன்றன் திறத்தை (நிறை குறைகள்) அறிவது எனப் பொருள்படும். இலக்கியப் படைப்பின் நோக்கங்கள் பலவாகும். படைப்பாளி ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற கருத்திலோ வாழ்க்கைக்கு உதவுங் கருத்திலோ இலக்கியத்தினைப் படைக்கலாம். எனவே, எடுத்துக் கொண்ட இலக்கியப் படைப்பை அணுகுவதற்கான நெறிகளை வகுப்பதே திறனாய்வின் தொடக்கப் பணியாகும். திறனாய்வு படைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்தும்; படைப்பாளியின் தனித்தன்மைகளைச் சான்றுகளுடன் எடுத்துக்காட்டும்; படைப்பாளிகளின் விருப்பத்- திற்கேற்பவும் அவனை மீறியும் நூலிற் காணும் கருத்துகளை, சிறப்புகளை, குறைபாடுகளை நுணுகி ஆராய்ந்து புலப்படுத்தும். மேலும் அது இலக்கியம் தன்னுடைய குறிக்கோளை உணர்த்துவதில் வெற்றி பெற்றிருக்கிறதா என்பதனையும் எந்த அளவுவெற்றி பெற்றுள்ளது என்பதையும் மதிப்பிடும்; இலக்கிய அழகையும், அதன் அடிப்படையினையும் சுட்டிக்காட்டி இலக்கிய நுகர்ச்சியை மேம்படுத்தும்; படிப்பவனைச் சுவைஞன் ஆக்கும். ஓர் இலக்கியப் படைப்பின் மையமான கருத்து அல்லது வாழ்க்கை நோக்கம், பல்வகைச் சுவைகள், ஆகியவற்றை அந்தப் படைப்பு வெளிப்படுத்தும்; உத்திச் சிறப்பு, மொழித்திறன், நூலின் தனித்தன்மை, தற்காலிகத் தன்மை, காலத்தால் அழியாத கூறுகள், நூல் இலக்கிய உலகில் பெறும் இடம் ஆகிய அனைத்தையும் திறனாய்வு வெளிப்படுத்தும். எனவே, திறனாய்வு என்பதனைக் கலைப் படைப்புகளை முழுமையாக விளக்கித் தெளிவாக்கி அழகுணர்வுகளைச் செம்மைப்படுத்தும் சிறந்த பணி எனலாம். சுருங்கச் சொன்னால் ஓர் இலக்கியத்தைப் பகுத்தல் (Analysis), விளக்குதல் (Interpretation), நலம் பாராட்டுதல் (Appriciation), மதிப்பிடுதல் (Evaluation), முடிவு கூறுதல் ஆகியன திறனாய்வாகும். எனவே, ஒரு படைப்பை நடுநிலை நின்று, அறிவு நிலையில் மதிப்பிட்டு எவை எவை சிறப்புக் கூறுகள், எவை எவை வீழ்ச்சிக் கூறுகள் எனக் கண்டறிந்து, காரணங்களுடன் அப்படைப்பின் மதிப்பையும் (Value) அது பெறும் இடத்தையும் (Rank) எடுத்துக் கூறுவது திறனாய்வின் முடிந்த பணியாகும். திறனாய்வும் திறனாய்வாளரும் இலக்கியம் மகிழ்ச்சி தரும் பொழுது போக்குச் சாதனம் மட்டும் அன்று; வாழ்க்கை வழிகாட்டியுமாகும். எனவே, இன்றைய வாழ்க்கைக்குரிய அறிவியற் சாதனங்கள், அவற்றின் இயக்கம் ஆகியவற்றைப் பற்றிய அறிவு திறனாய்வாளருக்கு இன்றியமையாத் தேவையாகும். சான்றாக, கணிப் பொறியை மையமாக வைத்துப் புனைகதைகள் எழும் காலத்தில் கணிப்பொறி பற்றிய அறிவு ஆய்வாளனுக்கு அமைதல் வேண்டும். இலக்கிய மரபுகள், கொள்கைகள் ஆகியவை நாட்டுக்கு நாடு மொழிக்கு மொழி மாறுபடும், திறனாய்வாளர் இம்மரபுகளை நன்கு உணர்ந்தவராக இருக்க வேண்டும். உண்மை, தன்மை, நன்மை, அழகு என்பன தமிழ் இலக்கிய மரபு என்பதை உணர்ந்து இலக்கிய மதிப்பீடு செய்ய வேண்டும். அளவுகோல் தவறானால் முடிவுகள் பிழையாகும். ஒரு நூலினை அந்த நூல் அளவில் நின்று ஆராய்வது சிறப்பான திறனாய்வாகாது. ஒப்பீடு செய்யும் போதுதான் உண்மை முழுமை பெறும்; வலிமையுறும். எனவே, ஆய்வாளர் நிரம்பிய இலக்கியப் பயிற்சி உள்ளவராக விளங்க வேண்டும். மேலும் வரலாறு, பொருளாதாரம், சமூகவியல், மானிடவியல், அரசியல், உளவியல், அழகியல் போன்ற பல்துறை அறிவும் ஓரளவு உடையவராக இருந்தால் ஆய்வு மிகுதியும் பாராட்டப் பெறும். திறனாய்வாளன் தெளிந்த சிந்தனையாளனாக இருந்தால் இலக்கியத்தைப் பலநிலைகளில் ஊடுருவி அணுகலாம். அதனால், ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காணமுடியும். படைப்பின் முதன்மைத் தன்மைகளைப் பிரித்து விளக்க இயலும், நிலையான கூறுகள் இவை, நிலையற்ற கூறுகள் இவை என வகுத்துக் காட்டலாம். மறைந்துள்ள உண்மையை வெளிப்படுத்திக் குறிப்பாக உள்ளதை விளக்கப்படுத்த முடியும். படைப்பின் நீதிகளைத் தெளிவுபடுத்தலாம்; நூலின் பல விரிவுகளிடையே ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பினையும் விளக்கலாம். திறனாய்வாளன் பன்னூற் புலமையும் பன்மொழி அறிவும் உடையவுனாக இருத்தல் சிறப்பு; ஒப்பிட்டு மதிப்பிட முன்னது உதவும்; ஒரே காலத்தில் வெவ்வேறு மொழி இலக்கியப் படைப்பாளரிடம் ஒத்த கருத்தோட்டம் இருந்ததை அறியப் பின்னது பயன்படும். தன் கருத்திற்குச் சான்று தேடுபவனாக ஆய்வாளன் இருத்தல் கூடாது. காலச் சூழலோடு இலக்கியப் படைப்பை ஆராய்வது உண்மை காண உதவும். குறை மட்டுமே காணும் குறுகிய நோக்கம் இருத்தல் கூடாது. இலக்கியத்தின் சிக்கலான பகுதிகளை எளிமைப்படுத்தி விளக்கம் தருவது வரவேற்கப்படும். படைப்பாளனின் வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் உள்ள உறவைச் சான்றுகளுடன் நிறுவுவது ஏற்கப் பெறும். சுருங்கச் சொன்னால் விழிப்புள்ளவனாக, நுண்ணிய நோக்குடன் உள்ளுணர்வுகளை விரைவில் உணர்ந்து தெளியும் ஆற்றல் உடையவனாக, சொல்லப்பட்ட உட்கருத்துக்களைச் சொல்லப்பட்ட விதத்திலேயே புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவனாகத் திறனாய்வாளன் விளங்கினால் அவன் திறனாய்வு எல்லாத் தரப்பினராலும் மதிக்கப்பெறும். இலக்கியக் கொள்கையும் இலக்கியத் திறனாய்வும் இலக்கியத் திறனாய்வு சிறக்க இலக்கியக் கொள்கைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தி உரைப்பதனை டாக்டர் கைலாசபதி ‘இலக்கியமும் திறனாய்வும்’ என்ற நூலில் சுட்டிக் காட்டுகிறார். அவை 1. அவயவிக் கொள்கை. 2. அறவியற் கொள்கை 3. உணர்ச்சிக் கொள்கை 4. அழகியற் கொள்கை 5. சமுதாயக் கொள்கை என்பனவாகும். அவயவிக் கொள்கை: இலக்கியத்தைப் பொருள், வடிவம் என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. இரண்டும் இசைவுபட்டே இலக்கியம் பிறக்கிறது. (எ–டு) சங்க இலக்கியங்கள். அறவியற் கொள்கை: இலக்கியப் பொருளை முதன்மைப்படுத்துவது இக்கொள்கை. புலமையும் ஒழுக்கமும் உடையவரே இலக்கியம் படைக்க முடியும் என்பது இக்கொள்கையாளர் கருத்து. (எ–டு) கீழ்க்கணக்கு நூல்கள். உணர்ச்சிக் கொள்கை: இது அறவியற் கொள்கைக்கு எதிர் விளைவாகத் தோன்றியது. படைப்பாளி தனக்கு ஏற்பட்ட உணர்ச்சியை அதே அளவு படிப்பவனுக்கும் புலப்படுத்தியிருக்கிறானா என்று ஆராய்வது. (எ–டு) பக்தி இலக்கியங்கள். புலப்படுத்தும் உணர்ச்சியில் தூய்மை, ஒழுங்கு, இசைவு, இன்பம் இருக்க வேண்டும் என்ற நியதி இவர்களுக்கு இல்லை. அழகியற் கொள்கை: இன்று மிகுதியும் செல்வாக்குப் பெற்றுள்ள கொள்கை. அழகு என்பது காண்டலும், கற்பனை அனுபவமுமே என்பது இவர் கருத்து. இலக்கியத்தில் தூய்மை, ஒழுங்கு, இசைவு, இன்பம் ஆகியன இருக்க வேண்டியது இன்றியமையாததாகும் என்பர் இவர். (எ–டு ) கலிங்கத்துப் பரணி போன்ற சிற்றிலக்கியங்கள். உணர்ச்சிக் கொள்கைக்கும் இதற்கும் ஓரளவு ஒத்த தன்மைகள் உண்டு. சமுதாயக் கொள்கை: இன்று செல்வாக்குப் பெற்ற கொள்கை. சமுதாயத்தை மீண்டும் இலக்கியப் பொருளாக்கி இழந்த மெய்ம்மையைத் திரும்பவும் அடைவதே இக்கொள்கையின் குறிக்கோள். எளிமையும் தெளிவும் இசை இன்பமும் உடைய மொழியால் உயர்ந்த கருத்துகளைச் சொல்வது பண்டைத்தமிழ் இலக்கியக் கொள்கையாகும். ‘இழுமென் மொழியால் விழுமியது நுவலல்’ எனத் தொல்காப்பியமும், ‘சுருங்கக் சொல்லல்’ முதலான பத்து அழகுகளாக நன்னூலும், ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே’ எனத் தண்டியலங்காரமும் இதனைக் குறிப்பிடுகின்றன. திறனாய்வு வகைகள் திறனாய்வின் வகைகள் பல. படைப்பிற்கேற்பவும் ஆய்வாளருக்கு ஏற்பவும் இவை மாறுபடும். 1. படைப்புவழித் திறனாய்வு ஓர் இலக்கியத்தை அந்த இலக்கியத்தின் அடிப்படை அமைப்புகளைக் கொண்டே ஆராய்வது. காட்டாக, கம்பராமாயணத்தை ஆராய்பவர், அந்நூலின் அமைப்பிலும் நோக்கிலும் உள்ள அடிப்படைத் தன்மைகளை முதலில் அறிந்து பின் மதிப்பிடுவது. படைப்புக்கு முதன்மை தருவது இவ்வாய்வு முறை. அந்த நூலினைப் பலமுறை படித்துத் தரமான புலமை பெற்றவராலேயே இவ்வகையில் சிறக்க முடியும். (எ–டு) டாக்டர் மு. வரதராசனாரின் மாதவி, டாக்டர் வ.சுப. மாணிக்கத்தின் வள்ளுவம். 2. மரபுவழித் திறனாய்வு, முன்னோர்களால் வகுக்கப்பட்ட இலக்கண இலக்கிய மரபுகளை அடிப்படையாகக் கொண்டு படைப்புகளை ஆராய்வது; சங்க இலக்கியத்தைத் தொல்காப்பிய இலக்கணம் கொண்டும், காப்பியங்களைத் தண்டி இலக்கணம் கொண்டும் மதிப்பிடுவது. பழமைக்குப் பாராட்டும் புதுமைக்குப் புறக்கணிப்பும் இதன் பண்புகள். பாரதிதாசன் பாடல்களைத் தொல்காப்பிய நெறி நின்றும், இராவண காவியத்தைத் தண்டி இலக்கணம் கொண்டும் ஆராய்வது பொருந்தா அளவுகோல் அல்லவா? 3. வரலாற்று முறைத் திறனாய்வு: நாட்டு வரலாற்றினை அறிதல் இலக்கியம் எழுந்த காலத்தைக் கவனத்திற் கொண்டு படைப்பினை ஆராய்தல்–படைப்பாளியின் காலச் சமூக, அரசியல், பொருளாதாரத் தாக்கம் படைப்பில் காணப்படும். (எ–டு) பாரதியின் ‘பாஞ்சாலி சபதத்தை’ விடுதலைக் காலப் பின்னணியோடு ஆராய்ந்தால் உண்மை புலனாகும். காலத்துக்குக் காலம் சமூகக் கொள்கைகள் மாறி வருவதை இவ்வகை ஆய்வால் உணரலாம். ஆசிரியர் வரலாற்றினை அறிதல் படைப்பாளனின் வாழ்க்கை வரலாற்றின் வழிப் படைப்பினை அணுகுதல். இலக்கிய மதிப்பீட்டுக்கு இது ஓரளவே உதவும். (எ.டு.) செயகாந்தன், தி. சானகிராமன், போன்ற புனைகதை ஆசிரியர்களின் படைப்புகளை ஆராய்பவர் அவர்தம் வாழ்க்கைக்கும் படைப்புக்கும் உள்ள தொடர்பினைச் சுட்டிக்காட்டுவர். 4. முருகியல் முறைத் திறனாய்வு இது நேரடித் திறனாய்வு எனவும் கொள்கையியல் திறனாய்வு எனவும் சொல்லப்பெறும், இதில் படைப்பின் சொற்சுவை, பொருட்சுவை, உணர்ச்சி, கற்பனை, வடிவம் முதலிய அழகு அமைப்புகள் ஆராயப்படும். (எ–டு) இரசிகமணி டி.கே. சிதம்பரநாதனின் ஆராய்ச்சி 5. விதிமுறைத் திறனாய்வு இலக்கியம் எங்ஙனம் அமைதல் வேண்டும் என இலக்கணம் வகுக்கும் நெறிமுறைகளை அளவுகோலாகக் கொண்டு அமைவது. இன்ன வகையான கலை நுணுக்கம், இன்ன வகையான நடை படைப்பில் அமையவேண்டும் எனப் படைப்பாளனைக் கட்டுப்படுத்துவது. மொழியின் ஒழுங்கமைப்பைப் பாதுகாக்க இது உதவும். ஆனால், காலத்திற்குக் காலம் மாறிவரும் இலக்கியத்தை, மாறாத விதிகள் கொண்டு ஆராய்வது பிழையானதாகும். 6. பகுப்பு முறைத் திறனாய்வு இலக்கியம் பொருளுக்கேற்பவும், பொருள் தொடர்ச்சிக்கேற்பவும் பல பிரிவுகளாகப் பகுத்து அமைக்கப்படுவது. எனவே, ஒவ்வொரு பிரிவையும் ஆராய்ந்து பிரிவுகள் ஒன்றோடொன்று பொருந்தும் வகையினைக் காண்பது. 7. விளக்கமுறைத் திறனாய்வு படைப்பின் பல்வகைக் கூறுகளையும் விளக்கமான முறையில் ஆராய்வது. இன்று பலராலும் பின்பற்றப்படுவது; தமிழ்த் துறை ஆய்வுகள் பல இவ்வகையினவே. 8. ஒப்பீட்டு முறைத் திறனாய்வு ஓரளவு பொதுத்தன்மை உள்ள படைப்புகளை எடுத்துக் கொண்டு ஒப்பிட்டு முடிவுகூறுவது. இதற்குப் பன்மொழி அறிவு இன்றியமையாதது. (எ–டு) இரகுநாதனின் ‘பாரதியும் செல்லியும்’, எசு. இராமகிருட்டிணனின் ‘கம்பனும் மில்டனும்’. ஒப்பீடு பலவகைகளில் அமையலாம். 1. ஒரே மொழியில் ஒரே காலத்தில் எழுந்த ஒற்றுமையுடைய இரு படைப்புகளை ஒப்பிடலாம். 2. ஒரு காலத்தின் இலக்கியப் போக்கினை மற்றொரு காலத்தின் இலக்கியப் போக்குடன் ஒப்பிடலாம். 3. ஒரு நாட்டின் குறிப்பிட்ட இலக்கிய வகையை மற்றொரு நாட்டின் அதே இலக்கிய வகையோடு ஒப்பிடலாம். 4. வழி நூல் அல்லது மொழி பெயர்ப்பு நூலினை மூல நூலுடன் ஒப்பிடலாம். எவ்வாறாயினும், ஒப்பிடுவதற்கும் ஒப்பிடப்படுவதற்கும் ஒருவகைப் பொதுத்தன்மை இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். 9. மதிப்பீட்டு முறைத் திறனாய்வு குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தின் தன்மையினையும் தகுதியினையும் மதிப்பீடு செய்வது. இது விளக்கமுறைத் திறனாய்வினின்றும் சிறிதளவே வேறுபட்டது. இவ்வகை ஆய்வாளர்க்கு ஒப்பியல் நோக்கும் வரலாற்று நோக்கும் இன்றியமையாதன. 10. மூலபாடத் திறனாய்வு பல்வேறு காரணங்களால் பாடவேறுபாடுகள் மிகுந்து கருத்துச் சிக்கல் ஏற்படும் நிலையில், இன்ன பாடந்தான் படைப்பாளனால் பயன்படுத்தப்பட்டது எனக் கண்டறிந்து, காரணம் காட்டி மூலநூலின் அமைப்பினை முடிவு செய்வது. 11. பாராட்டு முறைத் திறனாய்வு இலக்கியத்திற் காணப்படும் சிறந்த கூறுகளை ஆழ்ந்து சிந்தித்து வெளிப்படுத்துவது. (எ–டு) உரையாசிரியர்களின் திறனாய்வு. திறனாய்வு அணுகுமுறைகள் இலக்கியத்தின் பொருள், வடிவம், வெளியீட்டு முறை போன்றவை காலத்திற்குக் காலம், படைப்பிற்குப் படைப்பு மாறுபடுகின்றன. எனவே இலக்கியத்திற்கேற்ப அணுகு முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அணுகு முறைகள் அறிவியல் பார்வையுடன் இருப்பின் போற்றப்படும். அறிவியல் துறை அணுகுமுறை இலக்கியத் துறைக்கு முற்றிலும் ஒத்துவராது. அறிவியல் ஆராய்ச்சியில் துணைக் கருவிகள் பல உண்டு. எனவே, ஆய்வு முடிவுகள் ஒத்துச் செல்லும். ஆனால், திறனாய்வில் மனம் என்ற கருவியையும் அறிவு என்ற நடுநிலையையுமே நம்பிச் செயற்பட வேண்டியுள்ளது. எனவே ஆய்வு முடிவுகள் ஒத்திருக்கும் என உறுதி கூற முடியாது. அளவை முறைகள், புள்ளி விவரம் (Statistics), விளக்க அட்டவணை (Chart), வரைபடம் (Graph) போன்றவை ஓரளவு பயன்தரும். இலக்கிய ஆய்வாளர் அணுகு முறைகளை ஐந்தாகப் பகுத்துள்ளனர். 1. அறவியல் அணுகுமுறை கிரேக்க நாட்டு அரிசுடாட்டில், பிளேட்டோ, உரோமானிய ஆரசு ஆகியோர் இக்கொள்கையினர். இலக்கியத்தின் தலையாய கடமை அறிவுறுத்தல் என்னும் அடிப்படையில் இலக்கியங்களை ஆராய்வது. பண்டைத் தமிழ் ஆசிரியர்களும் அறத்தின் மாட்சி கூறுவர். அறநெறி கூறுதல் சில வேளைகளில் சமயச் சார்பாகவும் சில வேளைகளில் தத்துவச் சார்பாகவும் அமையும். கலை கலைக்காகவே என்ற கொள்கையாளர் இதனை மறுப்பர். ஏனெனில் அறவியல் அணுகுமுறையினர் (Ethical or Moral Approach) கலை நுணுக்கத்தைப் பொருட்படுத்துவதில்லை. 2. உளவியல் அனுணுகு முறை இலக்கியம் உளவியலோடு நெருங்கிய தொடர்புடையது. பிராய்டு என்பவரின் கருத்துகளே இவ்வணுகுமுறைக்கு அடிப்படையாக அமைந்தவை. இக்கொள்கை படைப்பில் அடங்கியிருக்கும் குறியீடுகள் பற்றி நுட்பமாக ஆராய்ந்து, புதிய செய்திகளைப் புரிந்து கொள்ளப் பயன்படுகிறது. மனிதனின் பெரும்பாலான நடவடிக்கைகள் அவனது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட மன ஆற்றல்களால் இயக்கப்படுவன என்றார் பிராய்டு. இன்றைய புதின இலக்கியங்களில் கையாளப்படும் ‘நனவோடை உத்தி’யினைப் பிராய்டு வழிச் சிந்தனை மலர்ச்சி என்பர். படைப்பாளன் உளவியல், படைப்பாக்க உளவியல் என்றெல்லாம் பிரித்துக் காட்டுவர். இந்த அணுகு முறையாளர் இலக்கியக் கருப்பொருளையும் முருகியல் அனுபவத்தையும் புறக்கணித்து விடுவர். தாமறிந்த உளவியல் அறிவை இலக்கியங்களில் பொருத்திப் பார்க்க விரும்புகின்றனர்; உளவியல் அரை குறையாய்த் தெரிந்தவர்களுள் சிலர் தவறான முடிவுக்கு வருகின்றனர். எனவே, தமிழில் இம்முறை சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனலாம். சமூகவியல் அணுகுமுறை இலக்கியம் தனிமனிதனின் சிந்தனையில் தான் பிறக்கிறது. ஆனால் அவன் மனத்தை இயக்கும் ஆற்றல் சமுதாயச் சூழ்நிலையிலிருந்தே உருவாகிறது. எனவே, இலக்கியத்தை அது தோன்றிய சமுதாயச் சூழல், பொருளாதார நிலை, அரசியற் பின்னணி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் புதிய விவரம் கிடைக்க வாய்ப்புண்டு. இம்முறை ஆய்வாளனை இலக்கியச் சமூகவியலாளன் (Literary Sociologist) என்பர். சமூகக் கூட்டமைப்பால் தனி மனிதன் தாக்கப்படுவதை, படிப்படியாகவோ திடீரென்றோ சமூக மாற்றம் ஏற்படுவதை இலக்கியங்கள் வழிக் கண்டறிவது இவ்வணுகு முறையின் இயல்பு. இவ்வணுகுமுறையைப் பின்வருமாறு பிரித்துக் காட்டுவர்: 1. இலக்கியத்தை அவ்விலக்கியம் எழுந்த சமுதாயச் சூழல், அது காட்டும் சமூக அமைப்பு, சமூக உறவு எனப் பகுத்தாராய்வது. 2. படைப்பாளியின் சமுதாயச் சூழல் எவ்வாறு படைப்பைப் பாதித்தது எனக் கண்டறிவது. 3. குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் குறிப்பிட்ட இலக்கியப் படைப்பு குறிப்பிட்ட சமுதாயப் பிரிவினரால் எப்படி வரவேற்கப்பட்டது என ஆராய்வது. பிரெஞ்சு ஆய்வாளர் தாயின் (Taine) சமூகவியல் அணுகுமுறை பொழுது (Moment), இனம் (Race), சூழல் (Milien) ஆகிய மூன்று கூறுகளின் சேர்க்கை அடிப்படையில் ஆராயப்படும் ஒன்று என்பர். இன்று உலக நாடுகளில் பெருகி வரும் மார்க்சியக் கண்ணோட்டம் இவ்வணுகு முறையின் சிறப்பான பிரிவாகும். இது படைப்புமுறை என்ற நான்காம் கூற்றையும் உள்ளடக்கியது. தமிழ்த் திறனாய்வுலகின் இப்பிரிவில் பேராசிரியர் நா. வானமாலை, டாக்டர் கைலாசபதி, டாக்டர் சிவத்தம்பி, எசு. இராமகிருட்டிணன், கேசவன், தமிழவன் போன்றோர் குறிப்பிடத்தக்க நூல்களைப் படைத்துள்ளனர். 4. வடிவவியல் அணுகுமுறை இம்முறை உலக நாடுகள் அனைத்திலும் பரவலான வளர்ச்சி பெற்ற அணுகு முறையாகும். இலக்கியத் திறனாய்வை இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட செய்திகளைக் கொண்டு நிகழ்த்துவது பொருந்தாது என நம்பினர் இக்கொள்கையாளர். இலக்கியம் கொண்டே இலக்கியத் திறனாய்வை நிகழ்த்த வேண்டும். படைப்பாளன்மீது, அவன் சார்பின் மீது, அவன் காலத்தின் மீது சிந்தனை செலுத்தாமல் படைப்புக் கூறுகளின் மீதே கவனம் செலுத்த வேண்டும் என்றனர். இம்முறையின் வாயிலாக இலக்கியப் பொருளையும் கட்டமைப்பையும் விளக்கினர். அமெரிக்காவில் இதனைப் புதிய திறனாய்வு (New Criticism) என்றனர். படைப்பின் வடிவம் என்ன? அதன் பயன் என்ன? எனக் காண்பதே இவர்கள் கொள்கை. சொற்கள், தொடர்கள், பத்திகள், பகுதிகள் கொண்டு சுவைநலம் தேர்வர். சொற்களின் நேர் பொருளையும் குறிப்புப் பொருளையும் சுட்டிக் காட்டுவர். வடிவமும் பொருளும் பிரிக்க முடியாதவாறு ஒருமையுடையது என உணர்ந்து ஆய்வு நிகழ்த்தினர். எனவே, குறிப்பிட்ட உள்ளடக்கத்தை நேர்த்தியான கலை நுட்பத்துடன் அமைத்தலே வடிவம் எனப்படும். அதனைப் பாங்குடன் கண்டறிவதே இவ்வணுகு முறையின் நோக்கமாகும். தமிழில் கலை கலைக்காகவே என்ற கோட்பாடுடைய க.நா. சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா போன்றோர் இவ்வகை அணுகுமுறையினர் எனலாம். 5. தொன்மவியல் அணுகுமுறை தொன்மம் என்னும் சொல் சமயம், நாட்டுப்பாடல், மானிட இயல், சமூக இயல், உளவியல், கலை ஆகியவற்றோடு தொடர்பு கொண்ட பொருள் பொதிந்த சொல்லாகும். புராணங்கள் போன்ற சமய இலக்கியங்களில் காணப்படும் கதைகள் சில பொதுத் தன்மைகளைக் குறித்துக் காட்டும் வகையில் அமைந்தவை என்ற நோக்கத்தோடு, இலக்கியத்தை அணுகும் முறையைத் ‘தொன்ம இயல் வழி அணுகுமுறை’ என்பர். இவ்வுலகின் படைப்பு, படைப்பிலே உள்ள உயிர்கள், அவற்றின் பண்புகள், பண்புகளுக்கிடையேயுள்ள ஒற்றுமைகள், இவ்வொற்றுமையை எதிரொலித்துக் காட்டும் மூல உருக்கள் (Archytypes) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இலக்கியத்தை ஆராய்வதும் தொன்ம இயல் அணுகுமுறை எனப்படும். கலைஞனைத் தொன்மப் படைப்பாளியாகக் கண்டு படைப்பில் வெளிப்படையாகத் தெரியும் பொருள், தெரியும் மொழி ஆகியவற்றிற்கு அப்பால் உள்ள ஆழமான மறை பொருள்களை இறுதி எல்லை வரை சென்று கண்டறிவது இவ்வணுகு முறையின் நோக்கமாகும். இம்முறை வரன்முறையான அளவிற்கு எதிரானது; உள்ளுணர்வால் (Intuition) உருவாவது; குழப்பமும் சிக்கலும் மிருந்தது. தமிழ்த் திறனாய்வுத் துறையில் மேற்கொள்ளப்படாத முறை இம்முறையே. திறனாய்வின் பயன்கள் படிப்பவனின் அறிவாற்றலைவிடப் படைப்பவனின் அறிவாற்றல் மிகுதி. இவர்களுக்கிடையே இணைப்புப் பாலமாகத் திகழ்வது திறனாய்வு. எப்படி இலக்கியத்தைச் சுவைப்பது என்பதைப் படிப்பவர்க்கும், எப்படி இலக்கியத்தை மேன்மேலும் செம்மைப்படுத்தி மெருகூட்டலாம் என்பதைப் படைப்பாளிக்கும் எடுத்துக்கூறி, இருசாரார்க்கும் பயன்தருவது திறனாய்வு. இது குறுகிய காலத்- தில் சிறந்த நூல்களைப் பற்றிய நுணுக்கமான விவரங்களைத் தருகிறது; நொடிக்கு தொடி அச்சாகும் பல நூறு படைப்புகளில் சிறந்ததைக் கண்டு காட்டுகிறது. மேலும், தாய்மொழி இலக்கியங்களை மட்டுமன்றிப் பிறமொழி இலக்கியங்களையும் அறிய வாய்ப்பாக இருக்கிறது. அடிப்படை நூல்களை முறையாகப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. திறனாய்வின் வளர்ச்சி இலக்கியக் கொள்கை வகுக்கும் தொல்காப்பிய நூற்பாக்களில் திறனாய்வுக் கூறுகள் உண்டு. இலக்கிய நோக்கங்களையும் மரபுகளையும் அணிநலன்களையும் வெளிப்படுத்திய உரையாசிரியர்களிடம் நிறைகளை மட்டுமே காணும் ‘பகுதித் திறனாய்வு’ உண்டு. ஆனால், இன்று தனித் துறையாகக் கருதப்படும் திறனாய்வு 20–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் உருவானது எனலாம். ஆங்கிலக் கல்வியால் வெளியுலகத் தொடர்பால் தமிழுக்குக் கிடைத்த புதுவரவே திறனாய்வு. புத்திலக்கியப் பெருக்கத்தின் மற்றொரு விளைவே திறனாய்வு. தமிழில் திறனாய்வு இன்றுவரை இரண்டு போக்குகளில் செயற்பட்டு வந்திருக்கிறது. மிகுதியான பழமை விருப்பும், மிகுதியான புதுமை விருப்பும் தமிழ்த் திறனாய்வாளர்களின் தன்மையாக இருந்து வருவதைக் காண முடிகிறது. தி. செல்வக் கேசவராய முதலியார் கி.பி. 1897–ஆம் ஆண்டில் சங்க இலக்கியம் குறித்தும் கம்பராமாயணம் பற்றியும் ஆங்கிலத்தில் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தமிழ்த் திறனாய்வு வளர்ச்சி வரலாற்றில் முதலிடம் பெறுபவராகப் பலராலும் சுட்டப் பெறுபவர் வ.வே.சு. ஐயர் ஆவார். இவர் தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்னும் சிறப்பினையும் பெற்றுள்ளார். இவர் 1920–ஆம் ஆண்டளவில் வெளியிட்ட ‘கம்பராமாயணரசனை’ என்னும் நெடிய கட்டுரையும், ‘கவிதை’ என்னும் கட்டுரையும் குறிப்பிடத்தக்கன. உலகக் காப்பியங்களை நன்கு கற்ற இவர், அவற்றோடும் வான்மீகி இராமாயணத்தோடும் ஒருங்கு வைத்து ஆராய்ந்து, கம்பராமாயணமே தலையான உலகக் காப்பியம் என முடிவு கூறியுள்ளார். அழகியல் நோக்கில் சுவை நிறைந்த திறனாய்வு செய்த இவரைத் ‘தமிழில் இலக்கியத் தரமான விமரிசனத்திற்கு வழி வகுத்தவர்’ எனப் பாராட்டுவர் சி.சு. செல்லப்பா, பாரதியும் சில ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பேராசிரியர் எசு. வையாபுரிப்பிள்ளை வ.வே.சு. ஐயர் வழியில் நின்று, சுவை நுகர்ச்சிக்கு முதலிடம் தந்து, நிறைகளை மட்டும் எடுத்துக் காட்டியவர்; இலக்கியத்தில் கலையழகு, குறிப்பாற்றல், நிலையான தன்மை, உலகப்பொதுமை ஆகியவற்றைக் காண வேண்டும் என்றவர்; உண்மை இயல்பை அறிதலைவிட இன்புறுதலையே முதன்மையாகக் கருதியவர். இரசிகமணி டி.கே. சிதம்பரநாதன் கருத்தைவிடச் சொல்லும் முறைக்கே முதன்மை அளித்தவர், உணர்ச்சி, பாவம் இரண்டையும் அளவுகோலாகக் கொண்டவர். இவருடைய ‘வட்டத்தொட்டி’ பல இலக்கிய ஆய்வாளர்களின் கூட்டுக் களிக் கூடமாக விளங்கியது. நீதிபதி மகாராசன், சோமு போன்ற சொல்லும் முறைக்கே முதலிடம் தந்த திறனாய்வாளர்களின் எண்ணிக்கை பெருக இவரே காணமாக அமைந்தார். சிறுகதையாசிரியர்கள் புதுமைப்பித்தன், கு.ப.ரா. ஆகிய இருவரும் திறனாய்வில் ஓரளவு கவனம் செலுத்தியர்கள். பின்னவரின் பங்கு கூடுதலானது. இவர்கள் காலம் வரை திறனாய்வு கவிதைத் துறையில் மட்டுமே பேரளவில் நிகழ்ந்து வந்தது. தனி நூல்களைப் பற்றியோ தனி ஆசிரியரைக் குறித்தோ ஆய்வு நூல்கள் வரவில்லை. திறனாய்வு வளர்ச்சியில் இரண்டாம் நிலையினைத் தொடங்கி வைத்தவர் க.நா. சுப்பிரமணியம் எனலாம். இவர் சிறுகதை, புதினப் படைப்பாளர்; பிற மொழி இலக்கிய அறிவு ஓரளவு உடையவர். பழங்கால இடைக்காலத் தமிழ் இலக்கியங்களில் பயிற்சி இல்லாதவர். இவரது வீச்சு 1950-60 என்ற கால எல்லையில் மிகுந்திருந்தது. உலக இலக்கிய அளவுகோல் கொண்டு தமிழில் இலக்கியத் திறனாய்வு செய்ய முயன்றவர். ஆனால், அடிமனத்தில் எண்ணம் மேனாட்டு இலக்கியமே சிறந்தது என்ற உடையவர். சொந்த விருப்பு வெறுப்பிற்கிணங்க இலக்கியத்தைச் சுவைத்தவர். உருவ வாதமே இவரின் அடிப்படையான கொள்கை எனலாம். ஒரு தலையான முடிவுகளைக் கூறிவந்தவர். விரும்பும் எழுத்தாளர்களைப் பட்டியலிடுவதும், பட்டியல்களை அடிக்கடி மாற்றிக் கொள்வதும் இவர் இயல்பு. புதிய சுவை முறையாளர் என்று அடையாளம் காட்டுவர் டாக்டர். கைலாசபதி. ‘விமரிசனக்கலை’, ‘இலக்கிய விசாரம்’ என்னும் பெயரில் 1959–ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்களும், 1963 முதல் சில ஆண்டுகள் இவர் நடத்திய இலக்கிய வட்டம் என்ற சிற்றிதழும், ‘விமரிசன நோக்கு’, ‘விமரிசனத்தின் எல்லை’ ஆகிய கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கன. தத்துவ அடிப்படையான அறிவியல் பாங்கில் திறனாய்வு முறையைப் பயன்படுத்தியவர் சிதம்பர ரகுநாதன். ‘உள்ளடக்கத்தைவிட உருவமே சிறந்தது’, ‘இலக்கியத்தில் நேரடி விளம்பரம் கூடாது’, ‘எளிமை வேறு, தெளிவு வேறு’ என்பன இவர் தம் திறனாய்வுக் கொள்கைகள். இவரது ‘இலக்கிய விமரிசனம்’ (1948) என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. சி.சு. செல்லப்பாவும் சுவை மனப்பான்மை கொண்ட ஆய்வாளர் ஆவார். இலக்கியத்தின் நோக்கம் இன்பப் பரிமாற்றம் என்பது இவர் கொள்கை, படைப்புக்- கேற்பப் பார்வை வேறுபட வேண்டும் என்றும், ‘கலைப்படைப்பின் முழுமையை, கலைஞனின் வெற்றியை மதிப்பிட்டு எடுத்துக்காட்ட வேண்டும்’ என்றும் இவர் கூறியுள்ளார். இவர் கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டின் வழி வந்தவர். தனித் திறனாய்வு நூலில் வரலாற்றுமுறை, மனப்பதிவு முறை, நெறிமுறை, ஆய்வு முறை ஆகியவை பற்றி விளக்கம் அளித்துள்ளார். ‘தமிழில் இலக்கிய விமர்சனம்’ (1974) என்னும் இவரது நூல் குறிப்பிடத்தக்கது. வெங்கட்சாமிநாதன் இன்று கவனத்திற்குரிய புதிய திறனாய்வாளர்; இலக்கியத்தை ஓவியம், திரைப்படம், இசை போன்ற கலைகள் உள்ளிட்ட பிற துறைகள் வழியாக அணுகி ஆராய்பவர்; க.நா. சுப்பிரமணியத்தின் மரபில் வந்தவர்; கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டினர்; உருவத்தைப் பெரிதும் பாராட்டுபவர்; உள்வெளி வட்டப் பார்வை உடையவர்; இலக்கிய விமரிசனத்திற்கு வேதாந்தத்தை அடிப்படையாகக் கொள்பவர். இவர்தம் ‘பாலையும் வாழையும்’, ‘கலை வாழ்க்கை அனுபவம்’, ‘வெளியீடு’, ‘ஓர் எதிர்ப்புக் குரல்’ ஆகிய நூல்கள் தனித் தன்மை உடையவை. திறனாய்வு வளர்ச்சியின் மூன்றாம் நிலையினைத் தொடங்கி வைத்தவராகப் பேராசிரியர் நா. வானமாமலையைக் குறிப்பிடலாம். இவர் சமூகவியல் அணுகு முறையில் இலக்கியப் படைப்புகளை ஆராய்ந்தார். பொருள் முதற்கொள்கைத் திறனாய்வு நோக்குடைய இவரது வழியில், முற்போக்கு உணர்வுடன் சமூகவியல் நோக்குடைய திறனாய்வாளர்களாக டாக்டர் கைலாசபதி, டாக்டர் சிவத்தம்பி, சீவானந்தம், தி.க. சிவசங்கரன், ஞானி, கேசவன், செந்தில்நாதன், தி.சு. நடராசன், தோத்தாத்திரி, தமிழவன் போன்றோரைக் குறிப்பிடலாம். தமிழ்த்துறைப் பேராசிரியர் சிலர் திறனாய்வு குறி்த்துத் தனி நூல் எழுதியுள்ளனர். இந்நூல்களில் மேனாட்டுத் திறனாய்வுக் கருத்துகள் நிரல்படக் கூறப்பட்டுத் தமிழ் இலக்கியச் சான்றுகள் பொருத்திக் காட்டப்பட்டுள்ளன. டாக்டர் மு.வ.வின் ‘இலக்கியத் திறன்’ அ.ச. ஞானசம்பந்தனின் ‘இலக்கியக்கலை’, சி.இ. மறைமலையின் ‘இலக்கியத் திறனாய்வு’, டாக்டர் பாலசந்திரனின் ‘இலக்கியத் திறனாய்வு’, டாக்டர் ஞானமூர்த்தியின் ‘இலக்கியத் திறனாய்வியல்’ ஆகிய நூல்கள் இவ்வகையின. மேலும், டாக்டர் முத்துச் சண்முகத்தின் ‘இலக்கியக் கோட்பாடுகள்’, டாக்டர் கைலாசபதியின் ‘இலக்கியமும் திறனாய்வும்’, ‘ஒப்பியல் இலக்கியம்’; டாக்டர் தமிழண்ணலின் ‘ஆய்வியல் அறிமுகம்’, ‘ஒப்பிலக்கிய அறிமுகம்’; டாக்டர் சான் சாமுவேலின் ‘இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள்’, டாக்டர் பிச்சமுத்தின் ‘இலக்கிய இயக்கங்கள்’, பேராசிரியர் கேசவனின் இலக்கிய விமர்சனம் – ‘ஒரு மார்க்சியப் பார்வை’, ‘இயக்கமும் இலக்கியப் போக்குகளும்’ என்பனவும் கவனத்திற்குரியன. தனித்தனித்துறைகளில் வந்துள்ள திறனாய்வு நூல்களைக் கருதும்போது சங்க இலக்கியம் குறித்து டாக்டர் வ.சுப. மாணிக்கத்தின் ‘தமிழ்க்காதல்’; காப்பியம் குறித்து வ.வே.சு. ஐயரின் ‘கம்பராமாயணரசனை’; அ.ச. ஞானசம்பந்தனின் ‘கம்பன் – புதிய பார்வை’; புதினம் குறித்துக் கைலாசபதியின் ‘தமிழ் நாவல் இலக்கியம்’; டாக்டர் இரா. தண்டாயுதத்தின் ‘சமூக நாவல்கள்’; சிறுகதை குறித்து டாக்டர் சிவத்தம்பியின் ‘தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’; வேதசகாயகுமாரின் ‘தமிழ்ச் சிறுகதை வரலாறு’; கவிதை குறித்து டாக்டர் சு.ப. அறவாணனின் ‘கவிதையின் உயிர் உள்ளம் உடல்’; புதுக்கவிதை குறித்துப் பாலாவின் ‘புதுக்கவிதை – ஒரு புதுப்பார்வை’; நாடகம் குறித்து டாக்டர் ஏ.என். பெருமாளின் ‘தமிழ் நாடகம் ஓர் ஆய்வு’; ஒப்பிலக்கியம் குறித்துக் கைலாசபதியின் ‘ஒப்பிலக்கியக் கோட்பாடுகள்’; டாக்டர் இராமகிருட்டிணனின் ‘கம்பனும் மில்டனும்’; தமிழண்ணலின் ‘ஒப்பிலக்கிய அறிமுகம்’ போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன. காப்பியம் நாடகம் பற்றிய துறைகளில் ஓரளவிலும் கவிதை, சிறுகதை, புதினம் ஆகிய துறைகளில் பேரளவிலும் திறனாய்வு நூல்கள் தோன்றியுள்ளன. நூல்கள் குறித்தும் ஆசிரியர்கள் குறித்தும் தனித் தனித் திறனாய்வு நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பாரதி பற்றிய திறனாய்வு நூல்கள் நூற்றுக்கும் மிகுதியாக எழுதப்பட்டிருத்தல் குறிப்பிடத்தக்கது. திறனாய்வின் இன்றைய நிலை பரந்த உலகத் தொடர்பும், புதிய சமுதாயத்தை விரும்பும் மக்களின் மன நிலையும், சமூகச் சூழல்களும் திறனாய்வுப் பார்வையை இன்று கூர்மையடையச் செய்துள்ளன. திறனாய்வுத் தளம் பெருகி வருகிறது. சிறு இதழ்களான ‘படிகள்’, ‘யாத்ரா’, ‘கொல்லிப்பாவை’, ‘தாமரை’, ‘செம்மலர்’, ‘கணையாழி’ போன்றவற்றில் தனிநூல் குறித்துத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டு வருகின்றன. படிப்போர் கடிதங்களிலும் திறனாய்வுப் பார்வை ஆளப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறைகளில் மிகப்பலச் புதிய இலக்கியங்கள் குறித்துத் தனித்தும் ஒப்பிட்டும் ஆய்வு நூல்கள் எழுதி வருகின்றனர். வளர்ந்துள்ள திறனாய்வு முறைகளும், தத்துவங்களும், மொழியியல், சமூகவியல், மானிடவியல், நாட்டுப்புறவியல் போன்ற சமூக அறிவியல் துறைகளும் இன்றைய கலை இலக்கியத் திறனாய்வுக்கு உறுதுணையாக உள்ளன. புதிய துறை பற்றிய (‘எக்ஸிஸ்டென்சியலிசம்’, ‘சர்ரியலிசம்’) அறிமுக நூல்களும் எழுதப்பட்டு வருகின்றன. திறனாய்வாளர் பலநோக்கும் போக்கும் உடையவர்களாக – பல்துறை அறிவுடையவர்களாக விளங்கி ஆய்வை ஆழப்படுத்தி வருகின்றனர். சுருங்கச் சொன்னால், மிகுதியான பழமைப் பிடிப்புடன் இலக்கிய நயம் மட்டுமே காணும் பழைமையானமரபு குறைந்து வருகிறது. அழகியற் பார்வையில் இலக்கியங்களை அணுகும் முருகியல் திறனாய்வாளர்களின் தொகையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது. ஆகவே, எதிர்காலத்தில் தமிழ்த் திறனாய்வுலகில் திறனாய்வுப் புலமை (Critical Scholarship) ஏற்பட்டு, அதன் காரணமாக இலக்கியத்தின் வளத்தையும், வரலாற்றையும், குறையையும் நிறையையும் கணக்கெடுக்கும் திறனாய்வுக் கோட்பாடு வளரும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. பழ.மு. துணை நூல்கள் வரதராசன், மு., இலக்கியத் திறன், தாயக வெளியீடு, சென்னை, 1965. ஞானசம்பந்தம் அ.ச. இலக்கியக்கலை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், இரண்டாம் பதிப்பு, 1964. பாலசந்திரன் சு., இலக்கியத் திறனாய்வு, அணியகம், சென்னை, 1978. கைலாசபதி, சி., இலக்கியமும் திறனாய்வும், பாட்டாளிகள் வெளியீடு, சென்னை, 1976. கைலாசபதி, சி., திறனாய்வுப் பிரச்சினைகள், புக் கவுசு, சென்னை, 1980.