ஐரோப்பாக் கண்டத்தில் பாயும் புகழ்பெற்ற ஆறுகளுள் ஒன்றாகும். இந்த ஆற்றின் நீளம் 1335 கி.மீ. இரைன் ஆறு (Rhine River) சுவிட்சர்லாந்து, செருமனி ஆகிய நாடுகளின் வழியாகப் பாய்ந்து வடகடலில் கலக்கிறது. இரைன் ஆறு சுவிட்சர்லாந்து ஆல்பிசு மலையின் மையப்பகுதியில் தோன்றுகிறது. இந்த ஆறு வோர்டர் இரைன் (Vorder Rhine), இண்டர்ரைன் (Hinter Rhine) என்னும் இரு பெரும் நீரோடைகளாகப் பாய்ந்து. சுவிட்சர்லாந்தின் சூர் (Chur) நகரில் ஒன்றாக இணைகிறது. பல்வேறு மூலங்களில் தோன்றும் ஆல்பிசு இரைன் எறத்தாழ 2300 மீட்டர் ஆழமான பள்ளத்தின் வழியாகப் பாய்ந்து. சுவிட்சர்லாந்தும் இலிச்சிடென் இசுடீனும் சந்திக்கும் இடத்தில் உள்ள பள்ளத்தாக்கில் ஓடுகிறது. இங்கிருந்து வடக்காகத் திரும்பிச் சுவிட்சர்லாந்துக்கும் ஆசுதிரியாவுக்கும் எல்லையாக அமைந்து. கான்சுடான்சு ஏரியில் (Constance Lake} நுழைகிறது. இந்த ஏரியின் மேற்கு முனையிலிருந்து விடுபட்டு இரைன் பாய்ந்து ஓடும்போது, பல நீர்வீழ்ச்சிகள் ஏற்படுகின்றன. அவற்றுள் ஒன்றான இரைன் நீர் வீழ்ச்சி (Rhine Falls) இரைன் ஆறு நிகாசன் (Neuhausen) என்னுமிடத்தில் உள்ளது. இதன் தென்கரைத் துணையாறான ஆர் (Aarc) ஆறு இதனுடன் இணைகிறது. இந்தத் துணையாறு சுவிட்சர்லாந்து, செருமானிய நாடுகளில் எல்லையாகப் பேசல் (Basel) நகர் வரை பாய்கிறது. பேசல் நகரில் இரைன் ஆறு நேர் வடக்காகத் திரும்பிப் பிளவுப் பள்ளத்தாக்கு ஒன்றின் வழியாகப் பாய்ந்து செல்கிறது. வோசுகாசு மலைகள் (Vosges Mountains) மேற்கிலும், கருங்காடுகள் (Black Forest) கிழக்கிலும் இந்த ஆற்றுக்கு எல்லையாக உள்ளன. இரைன் ஆறு வடக்காக 320 கி.மீ. பாய்ந்து மெயின்சு (Mainz) நகரைத் தொடுகிறது. மேற்கூறிய 320 கி.மீ. தொலைவில் இதன் பாதித் தொலைவு செருமனி, பிரான்சு ஆகிய நாடுகளின் எல்லையாகவும் மற்றைப்பாதித் தொலைவு செருமானிய ஆறாகவும் மாறிவிடுகிறது. பிரான்சுப் பகுதியிலிருந்து வரும் இல் (III) ஆறும், செருமனி நாட்டுப் பகுதியிலிருந்து வரும் நெக்கர் (Neckar), மெயின் (Main) ஆறுகளும் இரைனின் துணையாறுகளாக இணைகின்றன. மெயின் ஆறு இரைனுடன் கலக்கும் இடத்திலிருந்து இரைன் மேற்காகத் திரும்புகிறது. அங்குள்ள மலைத்தொடர்கள் இதன் முன்னேற்றத்தைத் தடை செய்கின்றன. பின்சென் (Bingen) என்னும் நகரில் மலைகளை அறுத்துக் கொண்டு இரைன் பாய்ந்து செல்கிறது. இப்பிரிவைத்தான் இரைன் கெவிப்பள்ளம் (Rhine Gorge) என்பர். இக்கெவிப்பள்ளம் 160 கி.மீ. நீளம் கொண்டது. இம்மலையின் செங்குத்தான மலைச்சரிவுகளில் திராட்சைத் தோட்டங்களையும் பல கோட்டைகளையும் கண்டுகளிக்கலாம். கோபலன்சு (Coblenz) நகருக்கருகில் இரைனின் பெரும் துணையாறுகளான மோசல் (Moselle) மேற்கிலிருந்தும், இலான் (Lahn) கிழக்கிலிருந்தும் பாய்ந்து வந்து இதனுடன் இணைகின்றன. இரைன் ஆறு பான் (Bonn) நகருக்குத் தெற்கிலுள்ள குன்றுகளிலிருந்து வெளிப்பட்டுப் பாய்ந்து வருகிறது. இங்கிருந்து செருமானிய, தச்சு (Dutch) எல்லை வரை இரைன் ஆறு தாழ்நில ஆறாகிச் சுழன்றும் வளைந்தும் பல்வேறு மாநகரங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றின் இடையில் பாய்ந்தோடுகிறது. எல்லையைத் தொடுவதற்கு முன்னர் உரூர் (Ruhr), இலிப்பி (Lippe) என்னும் இரு துணையாறுகள் இரைனுடன் சேர்கின்றன. இந்த ஆற்றின் இறுதிக்கட்ட நீளமான 120 கி.மீ. இதன் கழிமுகமாக மாறுகிறது. தி ஏக்கு (The Hague) நகருக்கு அண்மையில் இரைன் ஒருகாலத்தில் கடலில் கலந்ததாகக் கூறுவர். இந்நகருக்கு அருகிலுள்ள நீர்வழி யொன்றைப் பழைய இரைன் (Old Rhine) என்று இன்றும் குறிப்பிடுகின்றனர். இவ்வாற்றின் போக்கும் இப்போது தெற்காக மாறியுள்ளது. இக்காலத்தில் செருமானிய, தச்சு எல்லைக்கருகில் இரைன், இரண்டு கிளையாறுகளாகப் பிரிகிறது. வடக்குக் கிளையாற்றை இலேக்கு (Lek) என்று கூறுவர். இக்கிளையாறு ஆன்கெம் (Arnhem) இராட்டர்டாம் (Rotterdam) நகரங்களின் வழியாகப் பாய்ந்து வடகடலில் கலக்கிறது. தென் பாகக் கிளையாற்றை வால் (Waal) என்பர். இது மிகப் பெரியது. இக்கிளையாறு நிசுமேகன் (Nijmegen) நகர் வழியாக ஓடி, மாசு (Maas) ஆற்றுடன் இணைந்துவிடுகிறது. இந்த ஆற்றையும் இராட்டர்டாம் நகரையும் இணைக்கும் கால்வாய்கள் உள்ளன. இரைன் ஆறு ஆண்டு முழுதும் நீர் உடையது. கோடைக் காலத்தில் பனி உருகி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுண்டு. இதன் துணையாறுகளும் பெருமளவு நீரைக் கொண்டுவருவதால், ஆற்றில் எப்போதும் நீர் ஓடிக் கொண்டிருக்கும். பனிக்கட்டியால் சில நாள்கள் கப்பற்போக்குவரத்திற்குத் தொல்லைகள் ஏற்படுவதுமுண்டு. இந்த ஆறு கப்பற்போக்குவரத்திற்கு நன்கு பயன்படுகிறது. வெள்ளம், நீர்வீழ்ச்சி, கடினமான வழி போன்றவற்றைக் கட்டுப்படுத்திச் செப்பனிட்டுப் போக்குவரத்துக்குப் பெரிதும் பயன்படும் ஆறாக இதனை அண்மைக் காலத்தில் மாற்றிவிட்டார்கள் நெக்கர் துணையாற்றில் பேசல் நகரிலிருந்து இசுடாரசுபர்க்கு வரையிலும் அமைக்கப்பட்டுள்ள கால்வாய்கள் போக்குவரத்துக்கு நன்கு பயன்படுகின்றன. இக்காலத்தில் ஈரோப்பா (Europa) என்னும் கால்வாய் மூலமும் மெயின் ஆறு மூலமும் இரைனையும் தான்யூப்பு ஆற்றையும் இணைத்துள்ளார்கள். இரைன் ஆற்றுப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தவை பாறைகளும் நீர்வீழ்ச்சிகளும் மட்டுமல்ல. உரோமானியரின் காலம் முதல் இவ்வாற்றைக் கடப்பவர்கள் சுங்கம் செலுத்த வேண்டியவராயினர். கி.பி. 14–ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதி வரை 60க்கும் மேற்பட்ட வரிகளைத் தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் வாங்கின. இன்று இவ்வாற்றின் கரையில் காணப்படும் கோட்டைகள் சுங்கச் சாவடிகளாக இருந்தவையே. வரிகள் காலப் போக்கில் குறையலாயின. வியன்னா மாநாடு (1815) இந்த ஆற்றில் அனைத்து நாடுகளுக்கும் வரியின்றிச் செல்லும் சுதந்திரத்தை வழங்கியது. படிப்படியாக இவ்வுரிமை இவ்வாற்றின் பல பாகங்களுக்கும் கொடுக்கப்பெற்று, இன்று சுதந்திர ஆறாக இது விளங்குகிறது. இரைன் ஆற்றின் மூலம் போக்குவரத்து மிகுதியாக நடைபெறுகிறது. இரும்புத்தாதுக்கள், நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்கள் போன்றவை இவ்வாற்றின் மூலம் ஐரோப்பாவின் பல பாகங்களுக்கும் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இந்த ஆற்றின் கழிமுகத்தில் உள்ள இராட்டர் டாம்–ஈரோபுரூட்டுத் (Rotterdam–Europroot) துறைமுகம் சிறப்பானது. உள்நாட்டுத் துறைமுகங்களுள் துயிசுபர்கும் (Duisburg) உரூரும் (Ruhr) முதன்மையானவை. இந்த ஆறு ஐரோப்பாவின் பண்பாடு, பொருளாதாரவளம் ஆகியவற்றிற்குப் பெரிதும் உதவுகிறது. இருப்பினும் இது பாயுமிடங்கள் ஒரு குடையின்கீழ் என்றும் இருந்தது இல்லை. இந்த ஆறு சுவிட்சர்லாந்தில் தொடங்கி ஆலந்தில் முடிவுறுகிறது. எனினும் இதைக் குறித்துப் பிரான்சும் செருமனியும் மோதிக் கொண்டுள்ளன. இப்பகுதியில் வரும் அல்சேசு–உலொராயின் பகுதிக்காகப் பிரான்சும் செருமனியும் போர் புரிந்தன. இந்த ஆறு சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரிதும் உதவுகிறது. இதன் கரையிலுள்ள பல நகரங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.