சிறுநீரகச் செயல் முறை
ciṟunīrakac ceyal muṟai
சிறுநீரகங்களின் முக்கிய பணி சிறுநீர் உருவாக்கமாகும், குருதியிலிருந்து கழிவுப் பொருள்களை வடிகட்டியெடுத்துச் சிறுநீராக்கும் செயல், சிறுநீரகத்தில் நிகழ்கிறது.
சிறுநீரகங்களின் முக்கிய பணி சிறுநீர் உருவாக்கமாகும், குருதியிலிருந்து கழிவுப் பொருள்களை வடிகட்டியெடுத்துச் சிறுநீராக்கும் செயல், சிறுநீரகத்தில் நிகழ்கிறது. சிறுநீரகத்தின் நுண்ணமைப்பு இப்பணிக்குப் பெரிதும் உதவுகிறது.
சிறுநீரக இயக்கத்திற்கு உதவும் அமைப்புகள். சிறுநீரகக் குறுந்தமனிகள் தந்துகிகளாகப் பிரிந்து திரணை வடிவை உருவாக்குவது, திரணைத் தந்துகிகளுக்குக் குருதியைக் கொண்டு வரும் அகமுகக் குறுந்தமனியைவிடப் புறமுகக் குறுந்தமனி விட்டம் குறுகியிருப்பது, ஹென்லி வளைவிற்கு ஏற்ப, புறமுகக் குறுந்தமனியினின்று நீள் நாளங்கள் அகணி நோக்கி ஓடுவது, நீரூற்றுக் குழலின் பற்பல பகுதிகளும் தத்தம் உருவமைப்பிலும்,செயல்பாட்டிலும் இயல்புகளிலும் மாறுபட்டிருப்பது, பிட்யூட்டரி அண்ணீரகம் போன்ற உட்சுரப்பிகளின் கட்டுப்பாடுகள் உடல் நிலைக்குத் தக்கவாறு, சிறுநீரக இயக்கங்களை வேறுபடுத்துவது ஆகிய உடல் முழுமையும் தழுவிய சீரியக்கங்களிலேயே சிறுநீரகம் செவ்வனே செயல்பட முடியும்.
சிறுநீர் உருவாக்க நிலைகள். சிறுநீர் உருவாக்கம் படிப்படியாக மூன்று நிலைகளில் நிகழ்கிறது. அவை திரணை வடிகால் (glomerular filtration), குழல் மீவுறிஞ்சல் (tubular resorption), குழல் சுரப்பு (tubular secretion) என்பன.
திரணை வடிகால். சிறுநீரகத் திரணை ஒரு நுண் வடிகலமாக (ultra filter) வேலை செய்கிறது. அகமுகக் குறுந்தமனி வாயிலாகத் திரணையின் தந்துகி முடிச்சை அடையும் குருதியிலிருந்து, நீரும் கரை பொருளும் வடிகாலிடப் பெற்று, பௌமன் உறையை அடைகின்றன. குருதிச் செவ்வணுக்கள், கொழுமங்கள், ஊனீர்ப் புரதங்கள் ஆகியவை குருதியிலேயே தங்கி விடுகின்றன. சோடியம், பொட்டாசியம், யூரியா, யூரிக் அமிலம், குளூக்கோஸ் ஆகியவை திரணையில் வடிகாலிடப்படுகின்றன.
உடலின் பிற பகுதிகளில் உள்ள தந்துகிகளில், நிண நீர் உருவாக்கம் பற்றி நிகழும் வடிகாலை விட, திரணை வடிகால் விரைவாகவும், விறுவிறுப்பாகவும் நிகழ்கிறது. இதற்குத் திரணை நுண்ணமைப்பிலுள்ள இரண்டு கூறுகளே காரணமாகும். முதலாவதாக, திரணையின் குறுக்குப் படலம் மிகு நுண் துளைகளைக் கொண்டது. இரண்டாவதாக, திரணையின் அகமுகக் குறுந்தமனியை விடப் புறமுகக் குறுந்தமனி சிறிய விட்டத்தாலானது. எனவே, குறிப்பிட்ட அளவு குருதி அகமுகக் குறுந்தமனியின் வாயிலாகத் தந்துகி முடிச்சை அடைந்து, பின் புறமுகக் குறுந்தமனிக்குள் பாயும் போது, அதற்கு எதிர்ப்பு மிகுதியாகும். எனவே, தந்துகி முடிச்சில் குருதி அழுத்தமும் மிகையாகும். மிகையழுத்தங் காரணமாக வடிகால் விரைவாக்கப்படுகிறது. பிற தந்துகி நீர்ம நிலை அழுத்தம் 30 மி.மீ. பாதரசம் என்றால், திரணை நீர்ம நிலை அழுத்தமோ 70 மி.மீ. பாதரசம் என்ற அளவில் இருக்கும்.
வடிகால் அழுத்தம். வடிகாலுக்கான ஆற்றல், திரணைத் தந்துகி நீர்ம நிலை அழுத்தத்தால் (glomerular capillary hydrostatic pressure) தரப்படுகிறது. இதை உறை நீர்ம நிலை அழுத்தமும் (capsular hydrostatic pressure), குருதி சவ்வூடு அழுத்தமும் (blood osmotic pressure) எதிர்க்கின்றன. இம்மூன்றின் மொத்த விகிதங்களும் சேர்ந்தே, பயனுறு வடிகால் அழுத்தத்தை (effective filtration pressure) அறுதியிடுகின்றன. உறை நீர்ம நிலையழுத்தம் என்னும் உள்ளுறை அழுத்தம் பௌமன் உறையில் உள்ள நீரால் ஏற்படுகிறது.
பொதுவாக, உள்ளுறை அழுத்தம் 15 மி.மீ. பாதரசம் ஆகவும், குருதி சவ்வூடு அழுத்தம் 30 மி.மீ. பாதரசம் ஆகவும் இருப்பதால், இவை இரண்டும் சேர்ந்து, திரணைத் தந்துகியழுத்தத்தை எதிர்ப்பினும், 70-(15+30)-25 மி.மீ. பாதரச அழுத்தம் பயனுறு வடிகால் அழுத்தமாகிறது.
நோய்த் தறுவாய்களில், உறைச் சவ்வூடு அழுத்தம் என்பதும் செயல்படக் கூடும். நோயால் திரணைப் படலம் பழுது பட்டு, அதன் ஊடியல்பு அதிகரிக்கையில், குருதியிலிருந்து புரத மூலக் கூறுகளும் வடிகாலிடப்பட்டுப் பௌமன் உறைக்குள் வந்து விடுகின்றன. இப்புரதங்களினால், உறை சவ்வூடு அழுத்தம் மிகுந்து குருதியிலிருந்து மேலும் நீரை உறைக்குள் இழுக்க முற்படுகிறது. அப்போது, திரணை நீர்ம நிலை அழுத்தத்திற்குத் துணையாக, உறை சவ்வூடு அழுத்தமும் இணைந்து பயனுறு வடிகால் அழுத்தத்தை உயர்த்துகிறது.
திரணை வடிகால் விகிதம். பயனுறு வடிகால் அழுத்தத்தின் விளைவாக ஏற்படுவது திரணை வடிகால் ஆகும். இவ்வடிகாலின் அளவு, திரணை வடிகால் விகிதம் என்று கணிக்கப்படுகிறது. ஒரு மணித் துளியில், திரணைத் தந்துகிகளில் வடிகாலிடப்படும் ஊனீரின் அளவையே, திரணை வடிகால் விகிதம் எனலாம். மொத்த இதய வெளியீட்டில் 1/5 பங்கு சிறுநீரகங்களுக்குப் பாய்கிறது. ஒரு மணித் துளியில், இதயம் 6 லி. குருதியை உந்துகிறது என்று கொண்டால், நிமிடத்திற்குச் சிறுநீரகக் குருதிப் பாய்வு (renal blood flow) ஏறத்தாழ 1200 மி.லி. ஆகும். குருதியில் ஊனீர் 55% என்றால், ஒரு நிமிடத்தில் சிறுநீரகத்தில் பாயும் ஊனீரின் அளவு 660 மி.லிட்டராகும். இதனால், திரணை வடிகால் வீதம் நிமிடத்திற்கு 125 மி. லிட்டர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
திரணை வடிகால் வீதம் வயது, பால், உடலின் தோல் பரப்பளவு ஆகியவற்றிற்கேற்ப வேறுபடும். பொதுவாக, ஆடவருக்கு 125 மி.மி./ நிமிடம் என்றும், பெண்களுக்கு 110 மி.மி./நிமிடம் என்றும் அது அமையும். குருதியழுத்த அளவுகளும் (blood pressure levels), உடலின் பரிவியல் உந்தல்களும் (sympathetic impulses) திரணை வடிகால் வீதத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய காரணிகள் ஆகும். பரிவியல் உந்தல்கள் புறமுகக் குறுந்தமனியை விட, அகமுகக் குறுந்தமனியைப் பெரிதும் குறுக்குகின்றன. எனவே சிறுநீரகக் குருதியோட்டம் குறைய, வடிகாலும் குறைகிறது. சிறுநீரகக் கதவடைப்பு (renal shut down) எனப்படும் சில உடல் மற்றும் மனச் சுமைகளில், பரிவியல் உந்தல்கள் மிகுதியாகிச் சிறுநீரகத்தைச் செயலிழக்கச் செய்து விடலாம். உடலின் குருதியழுத்தம் மிகுந்தால், திரணை வடிகாலும் உயரும்.
குருதியின் சவ்வூடு அழுத்தமும், புரதச் செறிவும் திரணை வடிகால் வீதத்தை மாற்ற முடியும், குருதிப் புரத அளவு குறையக் குறைய, குருதிச் சவ்வூடு அழுத்தமும் குறைகிறது. இதன் விளைவாக எதிர்ப்பும் குறைய, திரணை வடிகால் அதிகரிக்கிறது.
திரணை வடிநீர், புரதங்களைத் தவிர ஊனீரையொத்தே உள்ளது. நீர், உணவுச் சத்துப் பொருள், கழிவுப் பொருள், உப்பு, நொதி, உயிர்ச் சத்து, ஹார்மோன், மிகச் சிறிய அளவான புரதம் ஆகியவை வடிநீரில் பொதுவாகக் காணப்படுகின்றன. இதில் நீர், சோடியம் மற்றும் குளோரைடு அயனிகளில் ஏறக்குறைய குளூக்கோஸ், புரதம் ஆகியவை நூறு சதவிகிதமும் மீவுறிஞ்சப்பட்டு விடும். நீர், உப்பு ஆகியன உடலில் அளவுக்கதிகமாக இருக்கும் போது, அவற்றில் தேவைக்கு மேற்பட்ட அளவு வடிகாலிடப்படும். உடலுக்கு அயல் பொருள்களும், ஒவ்வாப் பொருள்களும் வடிகாலிடப்படுகின்றன. ஆக்கச் சிதை கழிவுப் பொருள்களான யூரியா, யூரிக் அமிலம் போன்றவையும் வடிகாலிடப்பட்டுக் குருதியினின்று நீக்கப்படுகின்றன.
குழல் மீவுறிஞ்சல். திரணையில் வடிகாலிடப்பட்டு உருவாகும் வடிநீர், பௌமன் உறையினின்று நுண்குழல்கள் மூலம் பாய்கிறது. அவ்வாறு பாய்கையில், குழல் மீவுறிஞ்சலாலும், குழல் சுரப்பாலும் அதன் தன்மை மாறுபடுகிறது. வடிகாலிடப்பட்ட, உடலுக்குத் தேவையான பொருள்கள் வடிநீரினின்று, குழல் சுவர்களின் வழியாக மீண்டும் உடலுக்குள் இழுக்கப்படுவதே மீவுறிஞ்சலாகும்.
வளை குழல்கள் ஹென்லி சேகரிப்புக் குழாய்கள் ஆகியவற்றின் சுவர்களிலுள்ள அணுக்களின் செயல்பாடே மீவுறிஞ்சலாகும். இதைச் செயல்படுத்துகையில் இவ்வணுக்கள் பொருள்களைத் தெரிவு செய்வதிலும், பகுத்தாய்வதிலும் வியத்தகு திறனை வெளிக்காட்டுகின்றன. உடலுக்கு முக்கிய தேவைகளான சோடியம், குளோரைடு அயனிகள், நீர், குளூக்கோஸ் போன்றவற்றை மிகு திறனோடு மீவுறிஞ்சுகின்றன.
மீவுறிஞ்சல், சமன் ஈலப்பு ஊடு பரவல் போன்ற இயக்கங்களால் மட்டுமே நிகழ்வதன்று. ஆற்றல் சார் இயக்கப் போக்குவரவு இயக்கங்கள் இதில் ஈடுபடுத்தப்படுகின்றன. குளூக்கோஸ், அமினோ அமிலங்கள், சில மின்பகுளிகள் (electrolytes) போன்றவை இயக்கப் போக்குவரவால் உறிஞ்சப்படுகின்றன. அண்மை வளை குழலின் அணுக்கள் இதில் பங்கு கொள்கின்றன. திரணையில் வடிகாலிடப்பட்டு வரும் வடிநீர், அண்மை வளை குழலை அடைந்தவுடன், இப்பொருள்கள் யாவும் அணுக்களால் ஈர்க்கப்பட்டுக் குழல் சூழ் நீருக்குள் தள்ளப்படுகின்றன.
குளூக்கோஸ் மீவுறிஞ்சல். குளூக்கோஸ் முழுக்க முழுக்கப் போக்குவரவால் மீவுறிஞ்சப்படுகிறது. குளூக்கோஸ் மீவுறிஞ்சல் மிகச் சிறப்பாகச் செயல் படுகிறது. சாதாரணமாக, சிறுநீரகம் நன்கு செயல் படுவோரில் எவ்வளவு குளூக்கோஸ் உணவில் உட்கொள்ளப் படினும், அது சிறுநீரில் காணப்படுவதில்லை. ஆயின், குருதிக் குளூக்கோஸ் அளவு மிக, மிக அதிகமாகும் போது, அது மீவுறிஞ்சல் எல்லைக்கும் மேலாகி, குளூக்கோஸ் சிறுநீரில் சேர்ந்து விட வாய்ப்புண்டு. நீரிழிவு நோய் கண்டோரில் குருதிக் குளூக்கோஸ் அளவு எல்லை மீறுவதாலேயே, குளூக்கோஸ் ஏற்படுகின்றது. அண்மை வளை குழலின் அணுக்கள் பாதிக்கப்படும் போது, குருதிக் குளூக்கோஸ், எல்லைக்கு உட்பட்டு இருப்பினும் (பொதுவாக 100 மி.லி. குருதியில் 150 மி.கி.) குளூக்கோஸ் தோற்றுவிக்கப்படலாம். இதுவே சிறுநீரக நீரிழிவு எனப்படும்.
மின் பகுளி மீவுறிஞ்சல். மின் பகுளிகள் பலவும் இயக்கப் போக்குவரவு வாயிலாகவும், சமன் கலப்பு வாயிலாகவும் மீவுறிஞ்சப்படுகின்றன.
சோடிய மீவுறிஞ்சல். சோடியம் அயனிகள், நீர் நுண் குழலின் அனைத்துப் பகுதிகளினின்றும் மீவுறிஞ்சப்படும். சோடியம் மீவுறிஞ்சல் லேறு சில அயனிகள் மற்றும் நீர் மீவுறிஞ்சல்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வயனிகள் நேர் மின்னாற்றல் கொண்- டவை. அவை வடிநீரினின்று இயக்கப் போக்குவரவு மூலமாகக் குழல் சூழ் நீரையும், குழல் சூழ் குருதியையும் அடையும் போது, நேர் மின்னாற்றல் கூடி விடும். இவற்றுக்கிடையேயுள்ள சமன்பாட்டை நிகர்க்க, வடிநீரினின்று எதிர் மின்னாற்றல் கொண்ட அயனிகள் (எ. டு: குளோரைட் அயனிகள்) வளை குழலை விட்டு வெளியேறி, குழல் சூழ் நீரை அடைகின்றன. இந்த எதிரயனிச் சமன் கலப்பிற்குக் காரணம், சோடிய அயனிகளின் மீவுறிஞ்சலே ஆகும். இதன் இன்னொரு விளைவு, நீர் மீவுறிஞ்சலாகும்.
சோடியம் அயனிகள், குழல் சூழ் நீரை அடைந்த வுடன், வடிநீருக்கும் குழல் சூழ்நீருக்கும் உள்ள சவ்வூடு சமன்பாடு மாறுபாடடைகிறது. குழல் சூழ் நீரின் சவ்வூடு அழுத்தம், வடி நீரின் சவ்வூடு அழுத்தத்தை விட அதிகரிக்கிறது. உடனே வடி நீரில் உள்ள நீர், சவ்வூடு விதிக்கொப்பக் குழலை விட்டகன்று குழல் சூழ்வெளிக்குச் செல்கின்றது. சோடியம் அயனிகளின் இயக்கப் போக்குவரவின் பின் விளைவாக உண்டாகும் நீர் ஊடு பரவல் அண்மை வளை குழலில் நிகழ்வது கடப்பாட்டு நீர் மீவுறிஞ்சல் (obligatory water resorption) எனப்படும்.
எதிரோட்டச் செயல்பாட்டு முறைமை. சிறுநீர் உருவாக்கத்தில் நடைபெறும் ஒரு மிக முக்கிய செயல்பாடு, எதிரோட்ட முறைமையாகும். இது ஹென்லி வளைவில் நடைபெறுகிறது. இவ் வளைவு இறங்கு காம்பு, ஏறு காம்பு என்னும் இரு பகுதிகளைக் கொண்டது. அண்மை வளை குழலில் தொடங்கும் இறங்கு காம்பு சிறுநீரக அகணியை நோக்கி ஓடி, பின் வளைந்து, மீண்டும் எதிர்த் திசையில் ஏறு காம்பாகி, சேய்மை வளை குழலை அடைகிறது.
அண்மை வளை குழலுக்குள் வரும் உறை வடி நீர், குழல் சூழ் நீருடன் ஒப்பிடுகையில், நிகரடர்த்தி கொண்டதாகவுள்ளது. இறங்கு காம்பில் இறங்கத் தொடங்கியவுடன், அந்நீரினின்று சோடியம் அயனிகள், குழல் சூழ் நீரினின்று இயல்பு சமன் கலப்பு மூலமாக, இறங்கு காம்பிற்குள் நுழைகின்றன. இதனால், வடி நீர் மெதுவாக வளை பகுதியை நெருங்குகையில் நிறையடர்த்தி பெற்று மாறும். இந்நீர், மீண்டும் ஏறு காம்பில் பாயும் போது, சோடியம் அயனிகள் இயக்கப் போக்குவரவு மூலமாகக் குழல் சூழ் நீருக்குள் தள்ளப்படுகின்றன. எனவே, நிறையடர்த்தி கொண்டிருந்த நீர் ஏறு காம்பில் குறையடர்த்தியுடையதாகும்.
குறையடர்த்தியான ஏறு காம்பு வடிநீர், சேய்மை வளை குழலை அடைகிறது. அங்கு நீரெதிர் ஹார்மோனால் (anti diuretic hormone) நீர் மீவுறிஞ்சல் நடைபெற்று, மீண்டும் நிறையடர்த்தி நீர் உருவாகிறது. சேகரிப்பு நாளங்களிலும் சிறிதளவு நீர் மீவுறிஞ்சல் நடப்பதால், இறுதியில் நிறையடர்த்திச் சிறுநீர் உண்டாகி, வெளியேற்றப்படுகிறது.
குழல் சுரப்பு. சிறுநீர் உருவாக்கத்தில் மூன்றாம் நிலையாக நிகழ்வது குழல் சுரப்பு ஆகும். இது சேய்மை வளை குழல்களிலும், சில சமயங்களில் சேகரிப்புக் குழாய்களிலும் நடைபெறுகிறது. குழல் சுரப்பு, குழல் கழிவு என்றும் வழங்கப்படும். குழல் சூழ் குருதியும், குழல் சூழ் நீரிலிருந்து கரிமப் பொருள்களும், பிறவும் குழல் வடி நீருக்குள் நகர்வதைக் குறிக்கும். பொட்டாசியம் மற்றும் நீரக அயனிகள் சேய்மை வளை குழல் அணுக்களால் சுரக்கப்படுகின்றன. இவ்வயனிகளின் சுரப்பு, இயக்கப் போக்குவரவாக நிகழ்கிறது. குருதியில் சுற்றி வரும் மருந்துகளும் இவ்வாறே வெளித் தள்ளப்படுகின்றன. புரத ஆக்கச் சிதைவின் விளைவாக, உடலில் உருவாகும் அம்மோனியா சேய்மை வளை குழலில் சமன் கலப்பு மூலமாகச் சுரக்கப்படுகிறது.
குழல் மீவுறிஞ்சலைப் போலவே குழல் சுரப்பிலும், இயக்க மற்றும் இயல்பு போக்குவரவு இயக்கங்கள் பங்கு கொள்கின்றன. பொட்டாசிய, நீரக அயனிகளும், மருந்துகளும் இயக்கப் போக்குவரவு வாயிலாகச் சுரக்கப்படும்.
நீர் மீவுறிஞ்சல்—நீரெதிர் ஹார்மோன். சேய்மை வளை குழலிலும், இயக்கப் போக்குவரவாகச்சோடியம் அயனிகள் மீவுறிஞ்சப் பெறுகின்றன. முன்னர் விளக்கப்பட்ட எதிரோட்ட முறைமையின் காரணமாகச் சேய்மை வளை குழலில் பாயும் வடி நீர், குறை சவ்வூடாக இருக்கும். இந்நிலையில், நீரெதிர் ஹார்மோனின் செயல்பாடு மூலமாகச் சேய்மைக் குழலினின்று நீர் உறிஞ்சப்பட்டுக் குழல் நீர் உயர் பரப்பூடாக்கப்படுகிறது. இதன் மூலம் சிறுநீர் வழி உடலுக்கு ஏற்படக் கூடிய நீர் இழப்புக் குறைக்கப்பட்டுத் தேவையான நீர் சேகரிக்கப்படுகிறது.
சேய்மை வளை குழலில் நிகழும் இந்நீர் மீவுறிஞ்சலைத் தகவிய நீர் மீவுறிஞ்சல் (facultative water resorption) எனலாம். நீரெதிர் ஹார்மோன் சேய்மை வளை குழலின் நீர் புகு திறனை (permeability) மிகுதிப்படுத்துகிறது. இதனால், தேவைக்கேற்றவாறு உடலின் நீர்ச் சமன்பாட்டு இயக்கங்கள் ஹார்மோனின் அளவையும், சேய்மை வளை குழலின் நீர் புகு திறனையும் வேறுபடுத்தி, நீர் மீவுறிஞ்சலையும் வேறுபடுத்தும். மீவுறிஞ்சப்படும் நீரின் அளவை மாற்றிக் கொள்ளக் கூடிய வசதிகள் உள்ளமையால், இது தகவிய நீர் மீவுறிஞ்சல் எனப்படும்.
சிறுநீர் அளவைக் கட்டுப்படுத்தும் காரணிகள். இயல்பான நேரத்தில், ஒருவரின் உடலினின்று வெளியாகும் சிறுநீரின் அளவை, நீரெதிர் ஹார்மோனும், அல்டோஸ்டீரோனும் கட்டுப்படுத்துகின்றன. நீரெதிர் ஹார்மோன் பிட்யூட்டரியால் சுரக்கப்படுகிறது. இது சேய்மை வளை குழல்களின் நீர் புகு திறனை மாறுபாடடையச் செய்து, சிறுநீர் உயர்வடர்த்தியாகவோ, குறைவடர்த்தியாகவோ இருக்குமாறு செய்கிறது. சிறுநீர் அளவையும் குறைத்து, அடர்த்தி மிக்கதாக்கி, இரு வழிகளில் செயல்படுகிறது.
உடலின் மொத்த அணு வெளிநீரின் அளவிற்கேற்ப, நீரெதிர் ஹார்மோனின் சுரப்பு வீதமும் வேறுபடுகிறது. அணு வெளி நீர் அதிகரிப்பின், குருதிச் சோடியம் அடர்த்தி குறைகிறது. குறைந்த குருதிச் சோடியம் அடர்த்தி ஹார்மோனின் அளவையும் குறைத்துச் சிறுநீர் வெளியேற்றத்தை உயர்த்தும். அணு வெளி நீர் குறைந்து விட்டால், இதற்கு எதிரான செயல்கள் நடக்கும்.
அண்ணீரகப் புறணியில் சுரக்கப்படும் தாதுப் புறணியங்கள் சோடியம் அயனி மற்றும் நீர்ச் சமன்பாட்டில் முக்கிய பணி புரிகின்றன. எனவே, அவையும் சிறுநீர் வெளிப்பாட்டில் தம் பங்கைக் காட்டுகின்றன. தாதுப் புறணியங்களில் மிக முக்கியமானதும், ஆற்றல் மிக்கதும் அல்டோஸ்டீரோனே ஆகும்.
சிறுநீரகங்களால் வடிகாலிடப்பட்டு, வெளியேற்றப்படும் மொத்த கரை பொருள்களின் அளவைப் பொறுத்துச் சிறுநீர் அளவு வேறுபடும். அதிகமான கரை பொருள்களென்றால், அதற்கேற்பச் சிறுநீரின் அளவும் கூடும். நீரிழிவு நோயில், வடிநீரில் குளூக்கோஸ் மிகுதியாகச் சேர்ந்து மீவுறிஞ்சப்படாமல் பாயும் போது, அது கரை பொருள்களின் அளவைக் கூட்டி, அதிக அளவு சிறுநீர் வெளியேற வழி செய்கிறது. மேலும், நோய் நிலையில் சிறுநீரகக் குருதி அளவு, சிறுநீரக வடிகால் விகிதம் போன்றவை சிறுநீர் அளவைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்றலாம். —சுதா சேஷய்யன் நூலோதி. Jay H. Stein, Internal Medicine, First Edition, Little Brown and Co., Boston, 1983.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 362)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mkbekjax/
தமிழ்“சிறுநீரகச் செயல் முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mkbekjax/APA
Oliyon Research. (2026). சிறுநீரகச் செயல் முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mkbekjax/MLA
"சிறுநீரகச் செயல் முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mkbekjax/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment