அங்கதர் என்பவர் குருநானக்கைத் தொடர்ந்து வந்த சீக்கியர்களின் இரண்டாம் குரு. இவரது இயற்பெயர் இலானா. இவர் கி.பி. 1504-இல் பியாசு ஆற்றங்கரைக்கு அருகில் கடூர் என்ற சிற்றூரில் பிறந்தார். சீக்கியக் குருக்கள் வழிவழியாக அமர்த்தப்பட்டவர்கள் அல்லர். சீக்கியர் மக்களாட்சிக் கொள்கையின் அடிப்படையில் குருக்களை அமர்த்தினர். குருநானக்குக்கு இரு புதல்வர் இருந்த போதிலும், அவர் தம் வாரிசாகக் குரு அங்கதர் என்பாரையே அமர்த்தினார். அங்கதர் நேர்மை மிக்கவர்; கடமை தவறாதவர். நிறைந்த இறை ஈடுபாடு கொண்டவர். இவர் தம் தொடக்க நாள்களில் சுவாலமுகியில் உள்ள தேவியின் பக்தராக விளங்கினார். அதற்காகப் பன்முறை பயணங்களை மேற்கொண்டார். குருநானக் தம் வாழ்நாள் முழுதும் மக்களுக்குத் தன்னலமற்ற சேவை செய்தவர். இவரைப் பின்பற்றி மக்களுக்கு நீதி நெறிகளைப் போதித்தவர் அங்கதர். இவர் கி.பி. 1539—52–இல் குருவாக விளங்கினார். இவர் பஞ்சாபி மொழியின் எழுத்து வடிவத்தை வழக்கத்திற்குக் கொண்டு வந்தார். இதுவே காலப் போக்கில் துதிப்பாடல்களுக்குப் புனிதவடிவெழுத்துக்களாக உருப்பெற்றது. அங்கதர் குருநானக்கின் வரலாற்றைத் தொகுத்துள்ளார்; அவர்தம் துதிப்பாடல்கள் அனைத்தையும் திரட்டியுள்ளார். குருநானக்கின் வரவாற்றுத் தொகுப்பில் அவரைப் பற்றிய சீரிய உண்மை நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. அவர் காசுக்கு உணவு விற்கப்படாதவாறு பொது உணவுக் கூடத்தை ஏற்படுத்தினார். இக்கூடம் சீக்கிய சமயத்தினரின் பெருமைக்குச் சான்றாகும். இக்கூடத்திற்கு விருந்தினராகப் பலர் அழைக்கப்பட்டனர். எச்சமயத்தினராயினும், எத்தொழிலைப் புரிபவராயினும், எவ்வினத்தவராயினும், ஏழையாயினும், பணக்காரராயினும், எப்பாலாராயினும் அவர்கள் சீக்கிய குருவுடனும் சீடர்களுடனும் சேர்ந்து உணவருந்த அழைக்கப்பெற்றனர். இக்கூடம் ‘லங்கார்’ நிலையம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. உமாயூன் 1540-இல் செர்சாவால் முறியடிக்கப்பட்டு இலாகூர் நோக்கிச் செல்லும்போது, அங்கதரைப் பற்றிக் கேள்வியுற்றார். மொகலாயப் பேரரசு தமக்குக்கிடைக்க உதவிடுமாறு அங்கதரிடம் வேண்ட உமாயூன் கடூர் சென்றார். அப்போது அங்கதர் வழிபாட்டில் ஆழ்ந்திருந்தார். அவர் சீடர்கள் துதிப் பாடல்களை இசைத்தபடி அமர்ந்திருந்தார்கள். அதனால் உமாயூன் நெடுநேரம் காத்திருக்க நேர்ந்தது. உமாயூன் பொறுமை இழந்து சினமுற்றுக் குரு அங்கதரைக் கொல்ல நினைத்துக் கத்தியை ஓங்கினார். அப்போது அங்கதர் உமாயூனை நோக்கி ‘நீ செர்சாவை நோக்கிக் கத்தியை வீசாமல் கோழையாக ஓடிவந்து, இப்போது வீரனைப் போன்று இறையீடுபாட்டில் இருக்கும் குற்றமற்றவர்கள் மீது கத்தியினை வீசுகிறாய்’ என்று கூறினார். அதனைக் கேட்- டவுடன் உமாயூன் மன்னிப்புக் கேட்டார். பின்னர்ச் சிந்து ஆற்றைக் கடந்து ஈரான் நாடு சென்றடைந்தார். இந்நிகழ்ச்சியினை ஆதாரமற்றதெனச் சில வரலாற்று ஆசிரியர்கள் மறுத்துரைக்கிறார்கள். இருப்பினும், அனைத்துச் சீக்கிய வரலாறுகளும் இந்நிகழ்ச்சியினைக் கூறுகின்றன. உமாயூன் அங்கதரைச் சந்தித்து நல்வாழ்த்துப் பெற்றவர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தாமியற்றிய துதிப்பாடல்களை அங்கதர், ஆதிகிரந்தத்தில் இணைத்துள்ளார். இவருக்கு இரண்டு புதல்வர் இருந்தனர். இருவரும் பெரிய அறிவாளிகளாகத் திகழ்ந்தனர். எனினும், அவர்களை விடுத்து அமர்தாசர் என்பாரையே அங்கதர் மூன்றாம் சீக்கிய குருவாக அமர்த்தினார். தி.வீ.