சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி இயங்கும் சூரிய அடுப்பு, சூரிய உலை போன்றவை சூரியக் கருவிகள் (solar devices) ஆகும். பொறியடுப்பு. சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஆற்றலில் 35% நீர் கொதிப்பதற்கும், 20% சமையல் பண்டங்களை வேக வைப்பதற்கும், 45% வெப்பச் சலனத்தைக் கட்டுப் படுத்துவதற்கும் தேவைப்படும். ஒரு வகைப் பொறியடுப்பில் 12 செ.மீ விட்டமுள்ள வட்டமான பர வளைய எதிரொளிக்கும் ஆடி பொருத்தப்பட்டுள்ளது (படம் 1). ஏறக் குறைய 20 செ.மீ. விட்டமுள்ள கொதி கெண்டி (kettle) ஒன்றின் அடிப் பகுதியில் ஆடி, சூரிய வெப்பத்தைக் குவியச் செய்கிறது. இதனால் 500 வாட் மின்னாற்றலுக்குச் சமமான வெப்பம் உண்டாகிறது. இவ்வெப்பத்தால் 1 லி. நீரை 15 நிமிடங்களில் கொதிக்க வைக்கலாம். இவ்வகைப் பொறியடுப்பு தயாரிக்க ஒரு வகை அலுமினியமும், இரும்புச் சட்டமும் பயன்படுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூரிய உலை. சீனக் களி மண், மண் பாண்டங்களுக்குப் பயன்படும் கலவை ஆகியவற்றை உயர் வெப்ப நிலையில் உருகச் செய்து அவற்றின் தனித் தன்மைகள் பற்றி ஆராயச் சூரிய உலைகள் உதவுகின்றன. மிக உயர் வெப்ப நிலையில் உருகக் கூடிய உலோகங்களை உருக்கவும், காய்ச்சிப் பிணைக்கவும், தொழில் துறை ஆய்வுக்கும் சூரிய உலைகள் பயன் படுகின்றன. நீர் சூடாக்கி. இவற்றில் பலவகை உண்டு. அனைத்திலும் கறுப்பு நிறமுள்ள பெரும் பரப்பில் சூரிய வெப்பம் தாக்குவதால், நீர் சூடாகிறது. பெரும்பாலும் நீர் சூடாக்கி (water heater) கறுப்புச் சாயம் பூசிய தொட்டியாக இருக்கும் அல்லது ஒரு நீண்ட கம்பிச் சுருள் பொருத்திய குழாயாக இருக்கும். நீர் சூடாக்கிகளிலிருந்து, வெப்பம் வெளியேறாதபடி கண்ணாடி அல்லது நெகிழி (plastic) மூடி உண்டு (படம் 2). மூடியின் மேல் பகுதி வழியாக எளிதில் சூரியக் கதிர்கள் உள்ளே புக முடியும். ஆனால், உள்ளிருந்து வெப்பம் வெளியேறி விடாதபடி பாதுகாக்கப்படும். இதற்காகச் சூரிய வெப்பத்தை ஈர்க்கும் கருவி காப்பிடப்பட்ட பெட்டியொன்றில் வைக்கப் படும். மிகவும் எளிய முறையில் அமைந்த நீர் சூடாக்கி ஒன்றில், நீரைச் சூடாக்குவதற்கு வரிசையாக செம்பினாலான குழாய்கள் உண்டு (படம் 3). இவற்றின் இரு முனைகளும் பற்று வைக்கப்பட்டு, ஒன்றோடொன்று சேர்க்கப்படும். கீழுள்ள குழாய்கள் வழியாக நீர் வரும். மேலுள்ள குழாய்கள் நீரை எடுத்துச் செல்லும். சூரிய எக்கிகள். சூரிய வெப்பத்தை ஈர்க்க, கறுப்புச் சாயம் பூசிய உலோகத் தகடுகள் பயன்படுகின்றன. இத்தகடுகளை ஒட்டினாற் போல், அடியில் உலோகக் குழாய்கள் இருக்கும். சூரியனின் கதிர்கள் குழாய்களிலுள்ள நீரைச் சூடாக்கும். இதன் வெப்பம் 70°–80°C வரை உயரும். சூடேறிய நீர், நீர்ம வடிவிலுள்ள எரி வளிமத்தை விரிவடையச் செய்கிறது. இதனால், எரி வளிமத்தின் அழுத்தம் அதிகரித்துப் பொறி இயங்குகிறது. எக்கியும் வேலை செய்யத் தொடங்குகிறது. வளிமம், சுருக்கி (condenser) வழியாகச் செல்லும் போது, குளிர்ச்சியடைந்து நீர்மமாகிறது. இவ்வாறு, மீண்டும், மீண்டும் இந்த எரி வளிமம் பயன்படுகிறது. இவ்வகை எக்கிகள் பிரான்சில் தயாரிக்கப்படுகின்றன. காண்க: சூரியச் சூடாக்கம். நூலோதி. எஸ்.எஸ். இராமசாமி, சூரிய ஒளி மூலம் சக்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், நியூ செஞ்சுரி பிரிண்டர்ஸ், சென்னை, 1982.