இளைஞர் கழகங்கள்
iḷaiñar kaḻakaṅkaḷ
ஒன்றுபட்ட கருத்துகளைக் கொண்ட இளைஞர்கள் சமுதாயப் பணிகளுக்கும் கல்வி வளர்ச்சிக்கும் பொழுது போக்கிற்கும் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒன்று சேர்ந்து கழகங்களை அமைக்கும் வழக்கம் ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே ஏற்பட்டது.
ஒன்றுபட்ட கருத்துகளைக் கொண்ட இளைஞர்கள் சமுதாயப் பணிகளுக்கும் கல்வி வளர்ச்சிக்கும் பொழுது போக்கிற்கும் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒன்று சேர்ந்து கழகங்களை அமைக்கும் வழக்கம் ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே ஏற்பட்டது. முதன் முதலில் நிறுவப்பட்ட இளைஞர் கழகங்கள் (Youth Associations) சமயச் சார்புள்ளனவாகவே இருந்தன. இக்காலத்தே சமயச் சார்பற்ற பல்வேறு நோக்கங்களையும் செயல்முறைகளையும் கொண்ட இளைஞர் கழகங்கள் உலகெங்கும் உள்ளன.
அனைத்து நாட்டு இளைஞர் கழகங்களில் கிறித்தவ இளைஞர் கழகம் (Young Men's Christian Association), கிறித்தவ இளைய மகளிர் கழகம் (Young Women's Christian Association) ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கவை.
கிறித்தவ இளைஞர் கழகம் கி.பி. 1844–ஆம் ஆண்டு சார்சு வில்லியம் (George William) என்ற இளைஞரால் இலண்டன் நகரில் நிறுவப் பெற்றது. கிறித்தவச் சமயத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்ட இக்கழகம் உலகெங்கும் பரவியுள்ளது. இதில் எச்சமயத்தினரும் உறுப்பினர் ஆகலாம். சமயப் பணி, சமுதாய முன்னேற்றம், கல்வி வளர்ச்சி ஆகிய மூன்று துறைகளிலும் இளைஞர்களைப் பயிற்றுவித்து, அவர்களுடைய உடல், உள்ளம், ஆன்மா வளர்ச்சிகளுக்கு உதவுவதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது இக்கழகம். பெருநகர்களில் உள்ள இக்கழகத்தின் கிளைகளில் நூலகம், படிப்பகம், சொற்பொழிவு மன்றம், விளையாட்டு வசதிகள், உடற்பயிற்சிக் கூடம், உணவகம் ஆகியவை உள்ளன. சில இடங்களில் இளைஞர் விடுதிகளும் உண்டு. இக்கழகத்தின் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள செனிவா (Geneva) நகரில் உள்ளது.
கிறித்தவ இளைய மகளிர் கழகத்தின் நோக்கங்களும் கிறித்தவ இளைஞர் கழகத்தின் தன்மையைப் போன்றவையே. இக்கழகம் கி.பி. 1855–ஆம் ஆண்டு இலண்டனில் நிறுவப் பெற்றது. இது கிறித்தவ இளைஞர் கழகம் செய்யும் பணிகளுடன், மகளிர்களுக்கான போக்குவரத்து வசதிகளையும் செய்து தருகிறது.
இந்தியாவில் இந்து இளைஞர் கழகமும் (Young Men's Hindu Association), இந்திய இளைஞர் கழகமும் (Young Men's Indian Association) குறிப்பிடத்தக்கவை. இக்கழகங்களும் கிறித்தவ இளைஞர் கழகங்களைப் போலவே பணிகளைச் செய்து வருகின்றன.
பொழுது போக்குக் கழகங்கள் (Clubs) வாயிலாக இளைஞர்கள் ஒன்று கூடித் தமது ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் கழிக்க முற்படும் வழக்கம் எல்லா நாடுகளிலும் உள்ளது. தொழிற்சாலைகளில் உழைத்துக் களைத்த சிறுவர்களின் பொழுது போக்கிற்காக இவை முதலில் தொடங்கப்பட்டன. சிறுவரும் சிறுமியரும் வெவ்வேறு கழகங்களை அமைப்பதே பொதுவான வழக்கமாக இருந்து வந்தபோதிலும், இருபாலரும் ஒன்று கூடி ஓய்வு நேரத்தைக் கழிக்க ஏற்ற கழகங்களும் உள்ளன. அவை சமயச் சார்பும் அரசியல் தொடர்பும் அற்றவை. நாடு முழுவதும் உள்ள சிறு சிறு கழகங்கள் அனைத்தும் ஒன்று கூடித் தேசிய இளைஞர் கழகத்தை நிறுவும். இத்தேசிய இளைஞர் கழகம், கிளைக் கழகங்களின் பணியைக் கட்டுப்படுத்தி, அவற்றின் திட்டத்தை முடிவு செய்யும்.
சாரணர் இயக்கமும் அனைத்து நாடுகளின் அடிப்படையில் நிறுவப் பெற்ற இளைஞர் இயக்கம் ஆகும். செஞ்சிலுவைச் சங்கம், புனித யோவான் மருந்து வண்டி (St. John's Ambulance) ஆகிய இரண்டிலும் இளைஞர் பிரிவுகள் உண்டு. இம்மூன்று கழகங்களும் இளைஞர்களுக்குக் குறிப்பிட்ட வகையான பயிற்சியை அளிப்பதோடு சமுதாயப் பணியிலும் ஈடுபடுகின்றன. இவை இளைஞர்களின் பொழுது போக்கிற்கும் உடற்பயிற்சிக்கும் வசதி செய்து தந்துள்ளன. மற்றைய கழகங்களைப் போலவே விடுமுறைகளில் சுற்றுலாப் போகவும் இவை ஏற்பாடு செய்கின்றன.
குறிப்பிட்ட நோக்கங்களைக் கொண்ட இளைஞர் அமைப்புகளும் உண்டு. இளைஞர்களைக் கூட்டுறவு முறையில் பயிற்றுவித்து ஒன்றுபடுத்தும் கூட்டுறவு இளைஞர் கழகமும், இளம் உழவர் கழகமும், நாடகப் பயிற்சி அளிக்கும் இளைஞர் நாடகக் கழகமும் சில எடுத்துக் காட்டுகளாகும்.
அனைத்து நாட்டு இளைஞர்களையும் ஒன்று திரட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உதவியுடன் உலகக் குடிமைக் கல்விக்கழகம் (Council for Education in World Citizenship) நிறுவப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையே ஒற்றுமையை வளர்க்கும் இளைஞர் கழகங்களும் உண்டு. இதற்கு இந்தியச் சோவியத்து நட்புறவுக் கழகம் ஓர் எடுத்துக்காட்டாகும்.
உலக சனநாயக இளைஞர் பேரவை என்ற அமைப்பு 1945–ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற உலக இளைஞர் மாநாட்டிற்குப் பின் அமைக்கப்பட்டது. உலக ஒற்றுமையை ஓங்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஒருமைப்பாடு, சமாதானம், அமைதி, நட்புறவு ஆகிய கொள்கைகளை இளைஞர் சமுதாயத்திற்கு வலியுறுத்தவே உலக இளைஞர் பேரவை பாடுபடுகிறது. முதலாம் உலக இளைஞர் விழா 1947–ஆம் ஆண்டில் செக்கோசுலோவாகியாவின் தலைநகரான பிராகில் (Prague) நடைபெற்றது. ஏறத்தாழ 71 நாடுகளைச் சார்ந்த 17,000 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
சோவியத்து நாட்டின் தலைநகரான மாசுகோவில் 12–ஆம் உலக இளைஞர் விழா, 1985–ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 27 முதல் ஆகசுட்டுத் திங்கள் 3 வரை கொண்டாடப்பட்டது.
சோவியத்து நாட்டில் இசுபுட்னிக்கு (Sputnik} என்ற பெயரில் உலக இளைஞர் சுற்றுலாக் கழகம் இயங்கி வருகிறது. இக்கழகம் ஆண்டுதோறும் இளைஞர்களும் இளம்பெண்களுமாக ஏறத்தாழ 40 லட்சம் பேர் சோவியத்து நாடு முழுவதும் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்கிறது.
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்திலும் இளைஞர் கழகப் பிரிவுகள் உள்ளன. அவை அரசியல் நோக்கத்துடன் அமைக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் இளைஞர் பிரிவுகள் உள்ளன. சோவியத்து நாட்டிலுள்ள காம்சாமால் என்னும் இளைஞர் கழகம் மிகப் பெரியதாகவும் சக்திவாய்ந்ததாகவும் விளங்குகிறது.
இனைஞர்களுக்குச் சரியான பொழுதுபோக்கு வசதிகளையும் ஒன்றுகூடும் வாய்ப்பையும் அளிப்பதன் இன்றியமையாமையை உணர்ந்த இக்கால அரசுகள், திறமையாக நடத்தப் பெறும் கழகங்களுக்கு உதவி செய்து ஊக்குவிக்கின்றன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 491)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/md6n3fdp/
தமிழ்“இளைஞர் கழகங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/md6n3fdp/APA
Oliyon Research. (2026). இளைஞர் கழகங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/md6n3fdp/MLA
"இளைஞர் கழகங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/md6n3fdp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment