தொல்காப்பியத்திற்குப் பின்னரும் தமிழ்த் தண்டியலங்காரத்திற்கு முன்னருமாகிய காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் அணியியல் என்னும் அணி இலக்கண நூலாசிரியராவார். இவரது இயற்பெயர் தெரியவில்லை, யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர், நேமிநாத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் ஆகியோர், தாம் எழுதிய உரைகளில் அணியியல் என்னும் இலக்கண நூலிலிருந்து சில நூற்பாக்களை எடுத்துக் காட்டியுள்ளனர். அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டியுள்ள அணியியல் நூற்பாக்கள் தண்டியலங்காரத்தைச் சார்ந்தனவாக உள்ளன. இதனால் தண்டியலங்காரம் என்னும் நூல், அணியியல் என்றும் வழங்கி வந்தமையினை உணரக்கூடும். யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரும் நேமிநாத உரையாசிரியரும் எடுத்துக்காட்டும் அணியியல் நூற்பாக்கள் தண்டியலங்காரத்தில் இல்லை. ஆகவே என்னும் தண்டியலங்காரத்திற்குமுன் அணியியல் இலக்கண நூல் ஒன்று இருந்திருக்கலாம் என்பது தெரிகிறது. யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் காலம் கி.பி. 10–ஆம் நூற்றாண்டாகும். இவரால் மேற்கோளாகக் காட்டப்பட்ட அணியியல் என்னும் நூல், கி.பி. 10–ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருத்தல் வேன்டும். அணியியலின் பெயரை நோக்கும் போது இந்நூல் அணியிலக்கணம் கூறும் நூல் என்பது விளங்கும். யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரும், நேமிநாத உரையாசிரியரும் இந்நூலிலிருந்து எடுத்தாண்டுள்ள நூற்பாக்களைக் காணும்பொழுது இந்நூல் செய்யுட்களின் வகை, சொற் பொருளணிகள், சித்திரகவிகள், நூல்வகை முதலியன பற்றிய இலக்கணங்களைச் சொல்லுவதாகும் என்பது விளங்கும். ஆனால் இந்த அணியியல் நூலுக்கு ஒரு பழைய உரை உண்டு. அதனையும் யாப்பருங்கல உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ‘வைகலும் வைகல் வரக் கண்டும் அஃதுணரார்’ எனத் தொடங்கும் வெண்பாவினை அகவல் வெண்பா என்று அணியியலுடையார் காட்டியுள்ளார்.