அரசிதழ்
aracitaḻ
அரசாங்கத்தின் ஆணைகளையும் அறிக்கைகளையும் அரசு அலுவலகங்களுக்கும் பொது மக்களுக்கும் வாரந்தோறும் அறிவிக்கும் பருவ ஏடே அரசிதழ் எனப்படும்.
அரசாங்கத்தின் ஆணைகளையும் அறிக்கைகளையும் அரசு அலுவலகங்களுக்கும் பொது மக்களுக்கும் வாரந்தோறும் அறிவிக்கும் பருவ ஏடே அரசிதழ் எனப்படும்.
இது ஆங்கிலத்தில் ‘கெசட்’ (Gazette) எனப்படும். ‘கெசட்’ என்பது இத்தாலி நாட்டு வெனிசு நகரத்தில் 16–ஆம் நூற்றாண்டில் வழங்கி வந்த ஒரு செப்பு நாணயம். வெனிசு நகரத்தில் முதன் முதல் வெளியான செய்தித் தாள் ‘கெசட்’ என்ற காசுக்கு விற்கப்பட்டதால், இது ‘கெசட்’ என்ற பெயரைப் பெற்றிருந்தது. நாட்டு நடப்புப் பற்றிய செய்திகளே இதில் இடம் பெற்றிருந்தன. இதை அரசே வெளியிட்டது.
முதலாம் எலிசபெத்து அரசியார் ஆட்சிக்கு வந்த பிறகு, ‘கெசட்’ வேகமான வளர்ச்சியைப் பெற்றது. பலரும் விரும்பிப் படிக்கும் நிலைமையும் ஏற்பட்டது. வெட்டிப் பேச்சுச் செய்திகளும், அடிப்படை இல்லாத அரசியல் துணுக்குகளும், நாடு கண்டுபிடிப்பு, பரபரப்பூட்டும் கொலைக் குற்றங்கள், ஆவலைத் தூண்டும் மாய மந்திரங்கள் ஆகியவை பற்றிய செய்திகளும் இதில் இடம்பெற்றன.
இக்காலச் செய்தித் தாள்களின் முன்னோடியாக விளங்கும் அரசிதழ், அமெரிக்காவில் குடியேற்ற நாடுகள் உருவானபோது அங்கும் செல்வாக்கடைந்தது. அமெரிக்கா விடுதலை பெறும் முன்பு, பெரும்பாலும் ஒவ்வொரு மாநிலமும் ஓர் அரசிதழை வெளியிட்டது. சிந்தனையாளரும் சிறந்த அரசியல் வல்லுநருமான பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franclin) ‘பென்சில்வேனியா’ என்ற அரசிதழை நடத்திவந்தார். தாமசு செபர்சன் (Thomas Jefferson) என்ற அரசியல் அறிஞர், ‘தேசிய அரசிதழ்’ என்ற செய்தித் தாளைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்தார். பின்னர்ச் சில நகரங்கள் தம் பெயரோடு அரசிதழ் என்ற சொல்லைச் சேர்த்துச் செய்தித்தாள்களை வெளியிட்டு வந்திருக்கின்றன.
அரசிதழை வெளியிட்ட முறை மேலை நாடுகளுக்கு மட்டுமே சொந்தமன்று, சீனாவிலும் கி.பி. 6–ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த ஆன் மன்னர் பரம்பரை ஆட்சியில், அரசு ஆணைகள் செய்தி மடலாக மாநில ஆட்சியாளர்களுக்கு அனுப்பப்பட்டன. இது ‘தி பா’ (Ti Pao) என்று கூறப்பட்டது. அடுத்து வந்த நான்கு மன்னர் பரம்பரை ஆட்சியில் ஏறக்குறைய 300 ஆண்டுகள்வரை இது ‘சா பா’ (Tsa Pao) என்னும் பெயரில் வழங்கப் பெற்றது. பின்னால் வந்த மன்னர்கள் காலத்தில், பல வகைப்பட்ட அரசிதழ்களும் அறிக்கைகளும் வெளியிடப்பட்டன.
பழந்தமிழ்நாட்டில், அரசிதழ் என்ற ஒன்று தனியாக வெளியிடப்படவில்லை. ஆனால், அரசாணைகளை மக்களுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கும் பழக்கம் இருந்தது. சிலப்பதிகாரம் கூறும் எண்பேராயத்தின் ஒரு பிரிவினரான கருமகாரர் இப்பணியைச் செய்து வந்தனர்.
பிற்காலச் சோழ, பாண்டிய வேந்தர்கள் காலத்தில், அரசன் வாயிலிருந்து வரும் ஆணைகளை, ஓலையில் எழுதுவதற்கென்றே தனியாக அலுவலர்கள் இருந்தார்கள். அவர்கள் ‘திருமந்திரஓலை’ என்று அழைக்கப்பட்டனர். அவர்களின் தலைவர், ‘திருமந்திர ஓலைநாயகம்’ எனப்பட்டார். அவர் திருமந்திரஓலை சொன்னதையும் எழுதியிருப்பதையும் ஒப்புநோக்கி அரசாணை ஓலையில் கையொப்பம் இடுவார். அவற்றைப் பணியாளர் மூலம் உரியவர்களுக்குச் சேர்த்து, அது பற்றி அரசன் கேட்கும் கேள்விகளுக்கு மாற்றம் தெரிவிப்பது ‘விடையிலதிகாரி’ என்பவரின் கடமை. அரசன் ஆணைப்படி, ஆங்காங்கே சென்று ஆராயும் முறையைக் கொண்டிருந்த அதிகாரிகளும் உண்டு. அவர்களுக்குக் கருமத் தலைவர் என்பது பெயர்.
தமிழகத்தில் ‘மதராசு–கெசட்’ (Madras Gazette) என்ற வார ஏடு கி.பி. 1795 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதனை வில்லியம்சு என்பவர் தொடங்கி நடத்தினார். இதற்குக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசு பணஉதவி அளித்தது. இதில் தமிழுக்கும் இடம் ஒதுக்கும்படி அரசு ஆணையிட்டது. அதனால், இதில் தமிழ் விளம்பரங்களும் வெளியிடப்பட்டன.
அந்த ஏட்டிற்கு, கி.பி. 1799–ஆம் ஆண்டில் அஞ்சல் கட்டண விதிவிலக்கு வழங்கப்பட்டது. ஆகையால், அரசு அனுமதியின்படி அந்த வார ஏட்டைப் படிக்க விரும்புவோரிடமிருந்து. அஞ்சல் செலவுக்கான தொகை பெற்றுக் கொள்ளும் முறை வழக்கத்திற்கு வந்தது. அரசாங்கத்தின் தணிக்கை முறையும் அப்போது வழக்கில் இருந்தது.
தனியாரால் நடத்தப்பட்ட அரசிதழ், சென்னைக் கோட்டையில் அரசு சொந்தமாக அச்சகத்தைத் தொடங்கியதும் அரசாலேயே வெளியிடப்பட்டது. முதல் இதழ், 1832–ஆம் ஆண்டில் வாரத்திற்கு இரண்டு முறை வெளிவந்தது. 6 முதல் 10 பக்கங்கள் கொண்ட இதில் பகுதிகளோ பிரிவுகளோ இல்லை. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆரிய மொழிகள் இதில் இடம் பெற்றிருந்தன. வேலை நியமனங்கள், சட்டங்கள், நீதித் துறை, போர்த் துறை, அஞ்சல் துறை ஆகிய பல துறைச் செய்திகள், கப்பல்களின் வருகையும் புறப்பாடும், அவற்றில் வந்தோரும் சென்றோருமாகிய உயர் அலுவலர்களின் பெயர்ப் பட்டியல், விளம்பரங்கள் முதலியன இதில் வந்தன. இதழின் முகப்பில் இரட்டைச் சிங்கம், அரசின் கொடிகள், ஈட்டிகள் ஆகியவை அடங்கிய இலச்சினை காட்சி அளித்தது.
இப்பொழுது அரசிதழ்களை மத்திய அரசும் மாநில அரசுகளும் வெளியிடுகின்றன. மாவட்ட அரசிதழ்களும் சிறிய அளவில் வெளிவருகின்றன.
மத்திய அரசினுடைய அரசிதழ் நான்கு பகுதிகளாக வெளியாகிறது. இறுதிப் பகுதியினைத் தவிர மற்றவற்றிற்கு உட்பிரிவுகள் உண்டு. இந்த அரசிதழில் பின்வருபவை அறிவிக்கப்படுகின்றன.
முதல் பகுதி: பாதுகாப்பு அமைச்சகம், மற்ற அமைச்சகங்கள் ஆகியவற்றின் அலுவலர் பணி அமர்த்தம், பணி உயர்வு, விடுமுறை பற்றிய அறிவிக்கைகள். இவற்றின் கட்டளைகள் முதலியவை.
இரண்டாம் பகுதி: அமைச்சகங்கள், மத்திய அரசின் நேர்முக ஆளுகைக்குரிய நிலப் பகுதிகள் ஆகியவற்றின் சட்டங்கள், சட்டமுறை விதிகள், கட்டளைகள் முதலியனவும், இவற்றின் இந்தி மொழிபெயர்ப்பும்.
மூன்றாம் பகுதி: உயர்நீதி மன்றம், தணிக்கைத் துறைத் தலைமை, இருப்புப் பாதை, போக்குவரத்துத் துறை, சட்டப்படி அமைந்த அமைப்புகள் ஆகியவற்றின் அறிக்கைகள், அறிவிப்புகள் முதலியன.
நான்காம் பகுதி: தனிப்பட்டவராலும் தனியார் அமைப்புகளாலும் வெளியிடப்படும் விளம்பரங்களும் அறிவிப்புகளும், இவற்றின் இணைப்புகளும் தனிச் சிறப்புப் பகுதிகளும் தேவையானபோது வெளிவரும்.
தமிழ்நாடு அரசு வெளியிடும் அரசிதழில் ஆறு பகுதிகள் உள்ளன. அவற்றில் கீழ்க்கண்ட செய்திகள் வெளியிடப்படுகின்றன:–
முதல் பகுதி: முதல் வேலை நியமனம், ஓய்வு பெறுதல், குற்றவியல் நடுவரைப் பதவியில் அமர்த்துதல் ஆகியவற்றைப் பற்றித் தமிழக அரசின் தலைமைச் செயலகத் துறைகள் வெளியிடும் அறிக்கைகளும் கட்டளைகளும்.
இரண்டாம் பகுதி, முதற் பிரிவு: தலைமைச் செயலகத்தின் துறைகள், பொது மக்களுக்கு அறிவிக்கும் சிறப்பியல்பான அல்லது குறிப்பிடத்தக்க அறிக்கைகளும் கட்டளைகளும் இப்பிரிவில் இணைப்புகளும் தனிச்சிறப்புப் பகுதிகளும் தேவையான போது வெளிவரும்.
இரண்டாம் பிரிவு: தலைமைச் செயலகத்தின் துறைகள், பொதுமக்களின் ஒரு பிரிவினருக்கு வெளியிடும் அறிக்கைகளும் கட்டளைகளும் (சட்டங்களிலிருந்து விதி விலக்குப் போன்றவை). இப்பிரிவில் அவ்வப்போது இணைப்புகள் வெளியாகும்.
மூன்றாம் பகுதி, முதல் பிரிவு (அ): தலைமைச் செயலகத்தின் துறைகள் பொதுவாக வெளிவிடும் சட்ட முறையான விதிகள், அறிக்கைகள், கட்டளைகள், ஒழுங்கு முறை விதிகள் முதலியன. இதன் இணைப்பில், அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழி பெயர்ப்புகள் இடம் பெறும்.
முதல் பிரிவு (ஆ): தலைமைச் செயலகத்தின் துறைகள், வெளியிடும் பணிமுறை விதிகள் (இதில் ஒரு வேலைக்கென்றே அமைந்த விதிகளும் ஒழுங்கு முறை விதிகளும் திருத்தங்களும் அடங்கும்).
இரண்டாம் பிரிவு: துறைத் தலைமையகங்கள் வெளியிடும் சட்டமுறையான விதிகளும் கட்டளைகளும்.
நான்காம் பகுதி, முதல் பிரிவு: தமிழக அரசின் சட்ட முன் வரைவுகள்.
இரண்டாம் பிரிவு: தமிழக அரசின் சட்டங்களும் நெருக்கடி நிலைச் சட்டங்களும்.
மூன்றாம் பிரிவு: மைய அரசின் சட்ட முன் வரைவுகள்.
நான்காம் பிரிவு: மைய அரசின் சட்டங்களும் நெருக்கடி நிலைச் சட்டங்களும்.
ஐந்தாம் பகுதி, முதல் பிரிவு: பொதுத் (தேர்தல்) துறை பற்றிய அரசாங்க அறிவிக்கைகள்.
இரண்டாம் பிரிவு: மாவட்ட ஆட்சியாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மற்றத்துறைத் தலைவர்கள், தேர்தல் தீர்ப்பாயங்கள் ஆகியோர் வெளியிடும் வேட்பாளர் பட்டியல் தொடர்பான அறிக்கைகள்.
மூன்றாம் பிரிவு: சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கச் சிக்கல்களைப் பற்றித் தமிழ்நாட்டு ஆளுநர் எடுக்கும் முடிவுகள்.
நான்காம் பிரிவு: இந்திய அரசின் ஆணையாளரிடமிருந்து வரும் அறிக்கைகள்.
ஆறாம் பகுதி, முதல் பிரிவு: பொதுமக்களுக்குத் துறைத் தலைவர்களால் வெளியிடப்படும் அறிக்கைகள். இதிலும் இணைப்புகள் வரும்.
இரண்டாம் பிரிவு: பொதுமக்களில் ஒரு பிரிவினருக்குத் துறைத் தலைவர்களிடமிருந்து வரும் அறிக்கைகள். இதிலும் இணைப்புகள் வரும்.
மூன்றாம் பிரிவு (அ): மத்திய மாநில அரசுகளின் பண மீட்பு நிறுவனங்களைப்பற்றி வழங்கப்படும் அறிக்கைகள்
மூன்றாம் பிரிவு (ஆ): அரசு போன்ற அமைப்புகளும் பொதுத் துறையாக மேற்கொண்ட நிலையங்களும் வெளியீடும் அறிக்கைகள்.
நான்காம் பிரிவு: தனிப்பட்டவர்களும் தனியார் நிறுவனங்களும் அறிவிக்கும் விளம்பரங்கள். செய்தித்தாள் என்று பொது நிலையில் இருந்த அரசிதழ், அரசே வெளியிடும் அரசிதழாக மாறிவிட்டது. இது வாரந்தோறும் வெளிவருகிறது. இதன் ஒவ்வொரு பிரிவிலும் மாநில அரசின் இலச்சினை, குறிக்கோளுரை ஆகிய இரண்டும் இருக்கும். தமிழக அரசிதழில், “வாய்மையே வெல்லும்” என்னும் குறிக்கோளுரையும் இருக்கிறது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் பக்கத்தில், பிரிவின் எண், தலைநகரின் பெயர், கிழமை, ஆங்கில நாள் மாதம், ஆண்டு, தமிழ்நாள் மாதம், இந்துமத ஆண்டு, திருவள்ளுவராண்டு ஆகியவை குறிக்கப்படுகின்றன. இதன் கீழ் பகுதி எண்ணும் பிரிவு எண்ணும் வரும். இதையடுத்து, பகுதியோ பிரிவோ தெரிவிக்கும் ஆணை, அறிக்கை பற்றிய தலைப்பு ஆகியவை அச்சாகியிருக்கும். மேலும் அப்பகுதியிலேயே பதிவெண்ணும் தமிழ்நாட்டரசின் காப்புரிமையும் காணப்படும்.
ஒவ்வொரு பிரிவிற்கும் தனியாக விலை உண்டு. தனிப்பட்ட பக்க எண் உண்டு. இந்த எண், வாரந்தோறும் முறையாகத் தொடர்ந்து வரும்.
அரசிதழில் அறிவிப்புப் பெறாத அரசு அலுவலர்கள், அரசிதழ் பதிவு பெறாத அலுவலர்கள் எனப்படுவார்கள்
அரசிதழ்கள் ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்படுகின்றன. ஆகவே, அவை ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. அவை அங்கு 1832–ஆம் ஆண்டிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
அரசிதழின் சிறப்பு வெளியீடு
அரசிதழின் ஒரு பகுதியாகச் சிறப்பு வெளியீடு அமைத்திருக்கிறது. இது குறிப்பிட்ட நாளில் வெளிவருவதில்லை. இன்றியமையாமை கருதி, அடுத்தடுத்த நாளிலும் இது வெளியிடப்படலாம். அரசிதழின் பல்வேறு பாகங்களின் சார்பாகவும் அரசுத்துறை பலவற்றின் காரணமாகவும் இது வெளிவருகிறது. இதன் பக்கங்கள் தொடர்ச்சியாக இருப்பதில்லை. ஆனால், வெளியீட்டு எண் வரிசையாக வரும், ஏறத்தாழ 400 வெளியீடுகள் ஓர் ஆண்டில் வரலாம். இது ஒரு பக்க வெளியீடாகவும் வரக்கூடும். 30 பக்கத்திற்கு மேற்பட்ட பகுதியாகவும் வெளிவரலாம். பக்கத்தின் அளவைப் பொறுத்து இதன் விலை மாறுபடுகிறது.
இதில், பொது நன்மை கருதி நிலத்தைக் கைப்பற்றுதல், நிலத்தைக் குறிப்பிட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்தல், விலை அறுதியிடல் அறிவிப்பு, இடைக்காலத் தேர்தல் அறிவிப்பு, அதன் முடிவு, சட்டமன்ற அவைகளின் தொடக்கம் பற்றிய ஆளுநரின் ஆணைச் சட்டமுன்வடிவு (Bill), சட்டங்களின் திருத்தம், நெருக்கடி நிலைச் சட்டம், குறிப்பிடத்தக்சுவரின் மரணச் செய்தி முதலியன இடம் பெறும்.நா.இரா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 671)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m6bj7nkw/
தமிழ்“அரசிதழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m6bj7nkw/APA
Oliyon Research. (2026). அரசிதழ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m6bj7nkw/MLA
"அரசிதழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m6bj7nkw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment