சிறப்பு வகைத் துகிலிழைகள்
ciṟappu vakait tukiliḻaikaḷ
பருத்தி, சணல், லினன், கம்பளி, பட்டுப் போன்ற இயற்கை வழி இழைகளையும், நைலான், பாலி எஸ்டர், அக்ரிலிக், ரேயான் போன்ற தொகுப்பு இழைகளையும் தவிர, பிற இழைகளே சிறப்பு வகைத் துகிலிழைகள் (special textile fibre) ஆகும்.
பருத்தி, சணல், லினன், கம்பளி, பட்டுப் போன்ற இயற்கை வழி இழைகளையும், நைலான், பாலி எஸ்டர், அக்ரிலிக், ரேயான் போன்ற தொகுப்பு இழைகளையும் தவிர, பிற இழைகளே சிறப்பு வகைத் துகிலிழைகள் (special textile fibre) ஆகும். இவற்றை இயற்கை வகை இழைகள், தொகுப்பு வகை இழைகள், கலப்பு வகை இழைகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
இயற்கை இழைகளுள் பட்டுப் பருத்தி (silk cotton) அல்லது கபோக் (kapok) முதன்மையானது. இது இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் பயிராகும் ஒரு மரத்தில் விளையும் மயிரிழையாகும். பருத்தியைப் போன்ற தோற்றமும், பட்டின் பளபளப்பும் ஒருங்கே பெற்றது. நுண்ணோக்கியில் பார்க்கும் போது, கபோக், பருத்தியிலிருந்து வேறுபடுவது தெரிய வரும். கபோக் மெல்லிய சுவரையும், உள்ளீடற்ற குழாய்களையும், நிறைய மடிப்புகளையும் கொண்ட முறுக்கேறாத இழையாகும். தொடர் யாப்புடையதாதலாலும், வலிமை குறைவானதாதலாலும் நூற்புக்கு இது ஏற்றதன்று. ஆனால், மெத்தை, திண்டு, அறை கலன் உறை, உயிர் காக்கும் அமைப்பு ஆகியவற்றில் திணிப்புப் பொருளாகப் பயன்படுகிறது. மிதவைத் திறம் (buoyancy) மிக்கதாயினும், தொடர்ந்து பயன்படுத்தும் போது. இறுதியில் கட்டியாகிவிடும். கபோக் திணிக்கப்பட்ட மெத்தைகளை வெயிலில் அடிக்கடி உலர்த்தி, இக்குறையைப் போக்கலாம். எளிதில் உலரும் இழைகளுள் ஒன்றான கபோக், தொல்லைப் பூச்சிகளால் (vermin) பாதிக்கப்படுவதில்லை. ஒலித் தடுப்புக்கும், வெப்பக் காப்பீட்டுக்கும் இவ்விழைகளைக் கொத்தாகப் பயன்படுத்தலாம்.
மர இழை வகையைச் சார்ந்ததும், சணலை ஒத்ததுமான இயற்கை இழை ராமி (ramie) எனப் படும். சைனாப் புல் என்று குறிப்பிடப்படும் இவ்விழை சீனாவிலும், ஜப்பானிலும், உயரமான புதர்ச் செடியாகப் பயிர் செய்யப்படுகிறது. விறைப்பாக உள்ள ராமி சணல் நாரிழையான லினனை விட எளிதில் அறுந்து விடக் கூடியது. பளிச்சிடும் வெண்மைக்கு வெளுப்பூட்டத் தக்கது. பிற துகிலிழைகளைப் போன்றே நூற்பதற்கு ஏற்றதெனினும், ஊற வைத்தல் முறை கடினமானதால், இவ்விழையைப் பயன்படுத்துதல் செலவு மிக்கதாகிறது. சீப்புகளால் நன்கு வாரப் பட்ட (combed) நிலையில், ராமியின் எடை லினனில் பாதியேயாகும். எனினும், லினனை விட வலிமை மிக்கதாகவும், மோட்டாவாகவும், ஈரம் உறிஞ்சுவதாகவும் உள்ளது. ஈரத்தால் பாதிப்புறாத ராமி நல்ல சாய நாட்டம் கொண்டது; சணல் நார்களுக்குப் பதிலீடாகவும், பட்டு கம்பளி இழைகளுடன் கலப் பதற்கு ஏற்றதாகவும் விளங்குகிறது. கயிறு, வலை, முறுக்கு நூல்களை (twine) ராமி இழை கொண்டு தயாரிக்கலாம்.
மற்றொரு மர இழை இனமான சணல் நார் (hemp) முப்பதுக்கும் மேற்பட்ட வகைகளில் உலதெங்கும் கிடைக்கிறது. லினனைப் போன்ற தோற்றமளிக்கும் இந்தத் துணி கடினமும், விறைப்பும் கூடியது; வெளுக்கப்படும் போது, பாதிக்கப்படுகிறது; நீட்சியும், வளையும் இயல்பும் அற்றதாகையால், சன்னத் துணியாக நெய்தல் எளிதன்று. திடமிக்கதாகையால், தரை விரிப்புகளாகப் பயன்படுகிறது. பிற சணல் நார்களைப் போன்றே நீரில் ஊற வைத்துப் பதப்படுத்த வேண்டிய இவ்விழை நீரினால் கெடுவதில்லையாதலால், கப்பல்களில் கட்டுவதற்குப் பயனாகும் வடங்களைத் தயாரிக்கச் சிறந்தது. எபாகா எனும் தாவரத்தின் இலையிலிருந்து பிரிக்கப்படும் இழையான மணிலா சணல் நார் வலிமையும், நுண்மையும், வெண்மையும், பளபளப்பும் மிக்கது. எளிதில் அறுபடக் கூடியதாயினும், மோட்டா வகைத் துணிகளை நெய்வதற்கு ஏற்றது.
சிசல். இது கள்ளி இனத்தைச் சேர்ந்த ஹெனிகுவான் எனும் தாவரத்தின் இலையிலிருந்து பெறப்படும் நார்ப் பொருளாகும். வளையாத, வழுவழுப்பான வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட இழையான சிசாலைக் கொண்டு கயிறு, முறுக்கு நூல், தூரிகைகளுக்கு (brush) நார் ஆகியன தயாரிக்கலாம். அறை கலன் உறைகளில் குதிரை முடிக்குப் பதிலீடாக ஈடுபடுத்தலாம். உப்பு நீரில் சிதைவுறுவதால், சிசால் கப்பலில் கட்டும் வடங்களாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றதன்று. சணல் நாருடன் கலப்பின இழை தயாரிக்க ஏற்றதாகும்.
தேங்காய் நார். தேங்காய் ஓட்டிலிருந்து பெறப்படும் இந்நார் விறைப்பும், நீட்சியும், ஒருங்கே அமையப் பெற்றது. அறைகலன் உறைத் திணிப்பு, கப்பலில் கட்டுவதற்குப் பயன்படும் வடம், மோட்டா பாய் விரிப்புகள் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கு ஏற்ற இழையாகும்.
பைனா. அன்னாசிச் செடியின் பெரிய இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த வெண்மையான இழை மென்மையும், பளபளப்பும் கொண்டது. ஃபிலிப்பைன்சில் இது பைனா துணியாக நெய்யப்பட்டுப் பாய், பை, உடை எனப் பல பயன்களைக் கொண்டுள்ளது.
கல்நார். இது இத்தாலி, தென் அமெரிக்கா, கனடா ஆகிய பகுதிகளில் கனிமப் பொருளாகக் கிடைக்கும் இயற்கை இழையாகும். மக்னீசியம் சிலிக்கேட்டையும், கால்சியம் சிலிக்கேட்டையும் முதன்மைக் கூறுகளாகவும், இரும்பு, அலுமினியம் ஆகியவற்றின் உப்புகளை துணைக் கூறுகளாகவும் கொண்ட மென்மையான, நீண்ட, பளபளக்கும் வெண்மையான இழைகளான கல்நாரை அழுத்தத்தால் தகடுகளாகவும், ஓடுகளாகவும் மாற்றலாம் அல்லது நூல் நூற்கலாம். கல்நார் வகைகளுள் கிரிசோடைல் என்பது வலிமை மிக்கதாகும். கல்நார் நூல்கள் எப்போதுமே ஒட்டு அல்லது அடுக்கு நூல்களாக (ply yarns) உருவாக்கப்படுகின்றன. கல்நார் எரிவதில்லை; ஆனால், உயர் வெப்ப நிலைகளில் உருகக் கூடும். அமிலத்தால் பாதிக்கபடாததுடன், துருப் பிடிப்பதில்லை. தீயணைப்புத் துறையினர் அணியும் உடைகளை இவ்விழையில் தயாரிப்பதுடன், திரைச்சீலை, ஓடு, தானியங்கி ஓட்டத் தடைப் பட்டை (brake lining), கூரை வேய உதவும் செவ்வகப் பலகை (shingle), உயர் அழுத்த நீராவிப் பொறிகளின் குழாய்களுக்கு வெப்பக் காப்பீடு, ஒலி தடுப்பி ஆகியனவும் கல்நார் துணியால் உருவாக்கப்படுகின்றன. கல்நார் தூசு, மூச்சுக் குழல் வழியே நுரையீரலை அடைந்து, ஆஸ்பெஸ்டோசிஸ் எனும் நோயைத் தோற்றுவிக்கக் கூடியதாலும், புற்று நோய் தோற்றியாக இருப்பதாலும், கல்நார் இழைப் பொருள்களைப் பயன்படுத்துகையில் மிகுந்த கவனம் தேவை.
செயற்கை இழைகள்
வின்யான். பிரெஞ்சு வேதியியலார் ஹென்றி ரேனால்ட்டால் 1838இல் கண்டு பிடிக்கப்பட்ட பாலிவினைல் குளோரைடு (PVC) 1913 இல் முதல் முதலாக இழை வடிவில் உருவாகியது. முழுதும் PVC, ஏனைய வகையுடன் PVC இணைப்பல்லுறுப்பி வேதி மாற்றம் புகுத்தப்பட்ட PVC என மூன்று வகைகள் உள்ளன. அடிப்படை PVC பொருள் குறைவான இளகு வெப்ப நிலை (softening point) -70°C கொண்டது.
பாலிவினைல் குளோரைடு 85% உம் பாலிவினைல் அசெட்டேட் 15% உம் கலந்த இழை அசெட்டோனில் கரைக்கப்பட்டுக் காற்று அகற்றப்பட்டு, வெப்பத் தொட்டிகளில் பாகுத் தன்மை மிக்க கரைசலாகச் சேமித்து வைக்கப்படுகிறது. பின்பு, இப்பாகு துளை முகப்பு வழியே காற்றோட்டத்தில் பீச்சப்பட்டு இழுக்கப்படுகிறது. அசெட்டோன் ஆவியாக வெளியேறுவதால், நீளிழை நார் வடிவில் (tow) உருவாகிறது. வின்யான் ஒரு வலிமை குறைந்த இழையானாலும், எளிதில் இழுபடுகிறது. 0.1% ஈரத்தை மட்டுமே உறிஞ்ச வல்லதாகையால், நீரை விலக்க வேண்டிய சூழ்நிலைகளுக்கு இது ஏற்றது. அமில, காரங்களை எதிர்க்க வல்ல இவ்விழை பெட்ரோல், ஆல்கஹால் ஆகியவற்றில் கரைகின்றது. சாயத்தை எளிதில் ஏற்பதில்லையாதலால், வண்ணமேற்றுவதற்குச் சிறப்பு உத்திகளைக் கையாள வேண்டும். சூரிய ஒளியும், வியர்வையும் இழையைப் பாதிப்பதில்லை. நச்சுத் தன்மையற்ற இவ்விழை நுண்ணுயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதில்லையாதலால், பூசணப் படலம் தோன்ற வாய்ப்பு இல்லை. 52°Cஇல் மென்மையாகி, பாய்ம நிலை அடைகிறது: 60°Cஇல் சுருங்குகிறது; 85°Cஇல் பிசுபிசுப்பை அடைகிறது; 135°Cஇல் உருகுகிறது.
நெய்யாத் துணிகளுக்கு இடையேயான பிணைப்பு இழையாகப் பயன்படுகிறது. சூடேற்றி இறுக மூடச் செய்வதற்கான தாள், நிரப்பப்பட்ட பின்னல் கம்பளி (feit) ஆகியன இவ்விழையால் தயாரிக்கப்படுகின்றன. குறைவான வலிமை, எளிதில் நீட்சி, மின்னேற்றத்தைத் தோற்றுவிக்கும் இயல்பு ஆகியவற்றின் பாதிப்பால், வின்யான் இழை நூற்பதற்கு இயலாததாகிறது. எனினும், 25—50% வரை பருத்தி அல்லது ரேயானைக் கலத்தல் இயலும்.
சரன். 1838இல் முதன்முதலாகத் தயாரிக்கப்பட்ட பாலிவினைலிடீன் குளோரைடு பல்லுறுப்பி 1940இல் டெள நிறுவனத்தாரால் இழை வடிவில் சரன் என்ற பெயரில் சிறிதளவு வினைல் குளோரைடுடன் சக பல்லுறுப்பியாக விற்பனைக்கு வந்தது. இயல்பான நிறத்தில், இது தங்கத்தையும், வைக்கோலையும் ஒத்தது. குறுக்கு வெட்டுத் தோற்றம் உருண்டையாகவோ, தட்டையாகவோ, நீள் வட்ட வடிவாகவோ இருக்கும். டைட்டேனியம் டைஆக்சைடு (TiO₂) போன்ற சில வேதிப் பொருள்களைச் சேர்த்துப் பளபளப்பு நீக்கம் செய்யலாம். ஒளி புக விடாத் தன்மை அல்லது ஒளி கசியுந் (translucence) தன்மையைப் புகுத்துவதும் இதனால் இயலும்.
கம்பளி தவிர, பிற இயற்கை இழைகளை விடச் சரன் வலிமை குறைந்தது; எனினும், ரேயான் இழை வகைகள் அனைத்தையும் விட வலிமை மிக்கது. சரன் துணிகள் தேய்மானமுறுவதில்லை. விறைப்பு இழையான சரன், வின்யானைப் போன்றே நீர்மம் உறிஞ்சு தன்மையற்றது. ஈரத் துணியால் துடைத்தோ, வெதுவெதுப்பான நீரில் கையால் கழுவியோ, எளிதில் கறையகற்றம் செய்வதற்கு ஏற்ற இழைகளுள் இதுவும் ஒன்றாகும். உறிஞ்சும் தன்மை குறைவாக அமையப் பெற்றிருப்பதால், சாயம் ஏற்பது எளிதன்று. நச்சுத் தன்மை குறைவாக அமையப் பெற்றது; வியர்வையால் பாதிப்புறுவதில்லை. நுண்ணுயிர்கள், பூச்சிகள், பூசணங்கள் சரன் துணியை அழிக்க மாட்டா. நீரின் கொதி நிலையில் சரன் துணி மூன்றில் ஒரு பங்கு வலிமையை இழக்கிறது; 115°Cஇல் நெகிழ்வுற்று, 171°Cஇல் உருகுகிறது. சரன் எரிவதுமில்லை; எரிதலை ஊக்குவிப்பதுமில்லை. மகிழுந்தின் (car) இருக்கை உறைகள், வடிகட்டித் துணி, அறைகலன் உறை, கயிறு ஆகியவற்றின் தயாரிப்பில் சரன் பயன்படுகிறது.
கைனால் அல்லது நோவோலாய்டு எனும் இழை 1974இல் கார்போரண்டம் நிறுவனத்தால் புகுத்தப் பட்டது. இதில் 85% வரை நோவோலாக் (ஃபீனால்-ஃபார்மால்டிஹைடு பிசின்) அடங்கியுள்ளது. நூற்ற நூலாகவும், நெய்யாத் துணியாகவும் கைனால் பயன்படுகிறது. அசெட்டேட் இழையை விட வலிமை கூடுதலான கைனால் தேய்மான எதிர்ப்பு மிக்கது. அசெட்டேட்டை விட மீள் தன்மையும், உறிஞ்சு தன்மையும் குறைவாக அமையப் பெற்றது. கைனாலின் இயல்பான நிறம் தங்கமாகும்; எனினும், இதை வெளுத்துத் தூய வெண்மையாக்கவும் இயலும். பூசணம், சூரிய ஒளி ஆகியவற்றால் பாதிப்புறுவது இல்லை. கரிமக் கரைப்பான்களாலும், ஆக்சிஜனேற்ற இயல்பற்ற அமிலங்களாலும் பாதிக்கப் படுவதில்லை; நீர்த்த, ஆக்சிஜனேற்றம் புரியக் கூடிய அமிலங்களால் ஓரளவும், அடர் நிலையில் அதே அமிலங்களால் பெரிதும் நிலையிறக்கம் பெறுகிறது.
நீர்த்த காரங்களை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அடர் காரங்களால் சிதைவுறுகிறது. கைனாலின் தனிப் பெரும் பண்பு அதன் தீ எதிர்ப்புத் திறனாகும். வெப்பக் கேடயமாகப் பயன்படுத்த வல்ல இத்துணி 2370°C வரை தீக்கனலால் பாதிப்புறுவதில்லை. உருகுவதில்லையாயினும், கருகக் கூடியது. அந்நிலையிலும், நச்சு வளிமங்களை உமிழ்வதில்லை. தீ எதிர்ப்பு வகைத் துகில்களாகப் பயன்படுத்த கைனால் சிறப்பானது; உருகிய உலோகம், வேதிப் பொருள் மற்றும் கரைப்பான் துணிகள் தெறித்தலால் சிதைவுறுவதில்லை. போர்வையாகவும் பயன்படக் கூடிய இத்துணி, அரமிட் இழையுடன் இனக் கலப்புச் செய்யப்பட்ட நிலையில் வலிமையும், தேய்மான எதிர்ப்பும் கூடுதலாகப் பெற்றுள்ளது. கார்போனிக் அமிலத்தின் தொடர்புடைய பாலி எஸ்டர்களான பாலிகார்பனேட்டுகள் கார்போனைல் குளோரைடையும், ஓர் அரோமாட்டிக் டைஹைட்ராக்சி சேர்மத்தையும் குறுக்க வினைக்குட்படுத்தி இது தயாரிக்கப்படுகிறது.
1981 இல் கொலம்பியா என்ற விண்வெளிக் கலத்தில் முதன்முறையாகப் பயணம் செய்த விண்வெளி வீரர்கள் தீயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்துடன் பாலிபென்சிமிடசோல் (PBI) இழையாலான உடை அணிந்து கொண்டனர். டெட்ரா அமினோஃபீனாலையும், டைஃபீனைல் ஐசோதாலேட்டையும் சக குறுக்க வினைப் பல்லுறுப்பாக்கம் செய்து, இதில் விளையும் நுரைப் பொருளை நொறுக்கி, உயர் வெப்ப நிலையில் மந்த வளிமச் சூழ்நிலையில் நிறுத்தினால், படிகத் தன்மையற்ற தூள் கிட்டும். இதனை டைமெத்தில் அசெட்டமைடில் கரைத்து, உலர் நூற்புச் செய்தால் தங்க நிறம் கொண்ட நீளிழைகள் உருவாகும். மிகு வலிமையும், அறுபடுவதற்கு முன்பு 30% நீட்சியும், தேய்மான எதிர்ப்பும், ஏனைய செயற்கை இழைகளை விடக் கூடுதலான உறிஞ்சு தன்மையும், கனிம அமிலங்கள், எரிகாரங்கள், கரிமக் கரைப்பான்கள் ஆகியவற்றால் பாதிப்புறாமையும், சூரிய ஒளித் தாக்கத்திற்கு ஈடு கொடுத்தலும், வியர்வையால் கரையாமையும் PBI இழையின் சிறப்பியல்புகளாகும். வெப்பம், தீச்சுடர் இவற்றால் பாதிப்புறுவதில்லையாதலால், கல்நாருக்குப் பதிலீடாகப் பயன்படுத்த ஏற்றது. 560°C வரை புகை கக்காத இத்துணி இவ்வெப்ப நிலைக்கு மேலும் நச்சு வளிமங்களை உமிழ்வதில்லை.
சாதாரண கடற்பாசியிலிருந்து ஆல்ஜினேட் இழைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. கடற்பாசி உலர்த்தப்பட்டு, தூளாக்கப்பட்டுச் சோடியம் கார்பனேட்—சோடியம் ஹைட்ராக்சைடு கலவைக் கரைசலில் கரைக்கப்படுகிறது. இந்நிலையில், சோடியம் ஆல்ஜினேட் உருவாகியிருக்கும். கடற்பாசியின் (காரத்தில்) கரையாத கூறுகள் வடிகட்டப்படுகின்றன. கரைசலைச் சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசலுடன் நிற நீக்கம் செய்வதால், பாக்ட்டீரியத் தாக்குதலையும் தடுக்கலாம். HCl சேர்த்து ஆல்ஜினிக் அமிலத்தை வீழ்படியச் செய்து, தூய்மையாக்கி உலர்த்தி, மீண்டும் சோடியம் கார்பனேட் கரைசலால் நடுநிலையாக்கி, சோடியம் ஆல்ஜினேட் கரைசலைத் தூய நிலையில் பெறலாம். இக்கரைசலைத் துளை முகப்பு வழியே பீச்சி CaCl₂, HCl மற்றும் ஒரு மேற்பரப்புச் செயலி (சோப்பு) கொண்ட கரைசலில் இட வேண்டும். விளைவாகும் கால்சியம் ஆல்ஜினேட் இழை விஸ்கோஸ் இழையையொத்த வலிவுடையது. ஈரத்தில் வலிமை குறைவதுடன், காரம் கலந்த சோப்பு நீரில் கரையவும் கூடும். கரிமக் கரைப்பான்கள் இவ்விழையைக் கரைப்பதில்லை; எரிவதில்லையாயினும், தீக்கனலில் சாம்பலாகி விடும், காரத்தாலும், சோப்பாலும் பாதிக்கப்படுவதால் ஏனைய இழைகளுக்குச் சாரமாக (scaffolding) அமைந்து, பின்பு சோப்பால் இவ்விழைகளை மட்டும் சிதைத்து, பட்டு வலையைப் போன்ற (gossamer) கோலங்களைத் தோற்றுவிக்கலாம். மருத்துவத் துறையில் குருதி உறைதலை ஊக்குவித்து, புண்களை விரைவில் ஆற வைக்கும் செயலுக்குக் கட்டு வைப்பாக (dressing) இத்துணி பயனாகிறது. திரையரங்குகளில் திரைச் சீலையாகவும் பயன்படுத்தலாம்.
டெட்ராஃபுளூரோ எத்திலீன் வளிமத்தை அழுத்தத்தில் பல்லுறுப்பாக்கி, கரையாத, உருகாத வெண்ணிறத் தூளைப் பெறலாம். டெஃப்ளான் எனும் இப்படிவை இழை வடிவில் டூஃபாண்ட் நிறுவனம் 1954இல் முதன்முதலாகத் தயாரித்தது. ஏனைய பொருள்களுடன் சகபல்லுறுப்பாக்கம் மூலம் டெஃப்ளானைச் சற்றே மாற்றி அமைக்கலாம். ஃபுளூரினே ற்றப்பட்ட எத்திலீன் புரோபிலீன் (FEP) எனும் இவ்விழையும் பயன் மிக்கதாகும். CaF₂ஐ H₂SO₄ உடன் வினைப்படுத்தி HF தயாரிக்கப்படுகிறது. HF குளோரோஃபார்முடன் வினைப்படுத்தி (ஃபிரியான்) தயாரிக்கப்படுகிறது. இதனை ஒரு வினையூக்கியுடன் சூடேற்றி, டெஃப்ளான் பெறப்படுகிறது. சிறப்பான உத்தி வாயிலாக, இத்தூளைப் பாகுத் தன்மை மிக்க கரைசலாக மாற்றி, துளை முகப்பிலிட்டு HCl கரைசலில் நீளிழைகளைப் பெறுவர். உடனே இழைகள் மிக உயர் நிலைக்குச் சூடேற்றப்பட்டு, திடீரெனக் குளிர்விக்கப்படும். அறை வெப்ப நிலையில் இயல்பான நீளத்தைப் போன்று மூன்று அல்லது நான்கு மடங்கு இழுக்கப்படுகிறது.
மெழுகைப் போன்று வழுக்கும் பரப்புடையதாதலால், நூற்றல் கடினமாகிறது. சிறிதளவு ரேயான் இழையுடன் கலப்பினமாக்குதல் தேவையாகிறது. தேய்மான எதிர்ப்பு மிக்க இவ்விழை ஈரத்தை உறிஞ்சு- வதோ, ஒட்ட விடுவதோ இல்லை.சாயந் தோய்ப்பதற்குத் தகுதியற்ற டெஃப்ளான், வேதிச் சிதைவுறுவதில்லை. ஒளியாலும், நுண்ணுயிரிகளாலும் பாதிப்புறுவதில்லை. சிறந்த மின் காப்பீட்டுப் பொருள்களான இவ்விழைகள் வேறெந்தப் பொருளுடனும் ஒட்டுவதில்லையாதலால், உடலுள் பொருத்தப்படும் செயற்கை உறுப்புகளுக்குத் தகுந்த உறையாகப் பயனாகும். 204°C வரை சிதைவுறாது, இவ்வெப்ப நிலையில் சிதைவுற்று, நச்சு வளிமங்களை உமிழ்கிறது; 288°C இல் உருகும்.
தயிர், கடைந்த பால் ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கேசீன் எனும் புரதத்தை அக்ரிலோ நைட்ரைலுடன் சக பல்லுறுப்பாக்கம் செய்து, சீனான் II எனும் 70% பாலிஅக்ரிலோநைட்ரைல், 30% கேசீனுடன் ஒட்டப்பட்ட பல்லுறுப்பி உருவாக்கப்படுகிறது. பட்டை ஒத்த இதன் இழை, பட்டை விடச் சற்றே வலிமை கூடுதலானது. இழுக்கும் போது, பட்டை விடக் குறைவாகவே இழுபடுகிறது என்றாலும், பட்டைப் போன்று நீர்மத்தை உறிஞ்சுவதில்லை; சுடுநீருக்கும் சோப்புக்கும் ஈடு கொடுக்க முடியாதது; கொதி நீரில் 4.5% சுருங்கும். பட்டின் பயன்கள் யாவும் சீனானுக்கு உண்டு.
தள இழை (matrix fibre) எனும் மூவிழை ஜப்பானில் தயாரிக்கப்படுகிறது. கார்டிலான் என்ற வணிகப் பெயர் கொண்ட இக்கலப்பில் பாலிவினைல் குளோரைடு, பாலிவினைல் ஆல்கஹால் மற்றும் அதன் அசெட்டால் அடங்கியுள்ளன. PVCஐயும் PVAஐயும் கலப்பினப் பல்லுறுப்பாக்கம் செய்து கிளாபரின் உப்புக் (Na₂SO₄.10H₂O) கரைசலில், துளை முகப்பு வழியே செலுத்தி, இழையாக்க வேண்டும். இந்நீளிழைகளைச் சூடு படுத்தி, இழையிலுள்ள துகள்களை நீட்ட வேண்டும். பின்னர், அசெட்டாலேற்றம் செய்து கழுவி, அலைவு புகுத்தி, சிறு வெட்டிழைகளாக நறுக்கி, நூற்றல் வேண்டும்.
அக்ரிலிக் இழையை ஒத்த வலிமை கொண்ட கார்டிலான் இழை தேய்மான எதிர்ப்பு மிக்கது; நீட்சியும், ஈர உறிஞ்லும் மோடக்ரிலிக் இழையின் அளவுக்கு இருக்கும். துணி துவைக்கும் எந்திரத்தில் கழுவுவதற்கு இவ்விழை ஏற்றது, வலிமை குறைந்த அமில—காரங்களாலும், கரிமக் கரைப்பான்களாலும் பாதிப்புறாத இவ்விழை பல வகைச் சாயங்களையும் ஏற்க வல்லது. பூசணத்தாலும், சூரிய ஒளியாலும் எளிதில் பாதிப்புறுவதில்லை. கார்டிலானின் சிறப்பியல்பு அதன் தீக்கனல் தாங்கு தன்மையாகும்; உருகாதெனினும், 170°Cக்கு மேல் சூடேற்றப்படுகையில் சுருங்குகின்றது. தீச்சுடரில் தானே அணைவதோடு மட்டுமின்றி, நச்சு வளிமங்களை உமிழ்வதுமில்லை.
கனிம இழைகள். இவ்வகையில் உலோகம், நெகிழிப் பூச்சு அளிக்கப்பட்ட உலோகம், உலோகப் பூச்சு அளிக்கப்பட்ட நெகிழி, பீங்கான் வகைக் (ceramic) கார்பன் ஆகியன அடங்கும். நீட்சி (ductility) கொண்ட தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்களையும், அவற்றின் உலோகக் கலவைகளையும் மெல்லிய நீளிழைகளாக்கலாம். உடைகளை அழகுபடுத்தவும், ஜரிகைத் தயாரிக்கவும் இவ்வகை இழைகள் சிறந்தவை. உலோக நூல்களை உருண்டையாகவோ, நாடா போன்று தட்டையாகவோ செய்து, எந்த நெசவு இழையுடனும் முறுக்கலாம். தயாரிப்புச் செலவைக் குறைப்பதற்குத் தாமிரம் போன்ற ஓரளவு மலிவான கம்பியிழையின் மீது வெள்ளி, தங்கம் ஆகியவற்றின் பூச்சைத் தரலாம். கறைபடா எஃகு—நைலான் கலப்பின இழைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நுண்ணிழை வடிவில் இவ்வுலோகங்கள் நெய்யப்பட்ட சித்திரத் தையல்களிலும், அலங்காரத் தொங்கு சீலைகளிலும் (tapestries), ஜரிகைப் பட்டாடை (brocade), அறைகலன் உறைகள் (upholstery) ஆகியவற்றிலும் பயன்படும். கைப்பைகள், பகட்டாடை, மதகுருமார்களும், பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்போரும் அணியும் அங்கிகள் ஆகியவற்றின் தயாரிப்பில் உலோக நீளிழைகள் முதன்மை பெறுகின்றன.
உலோகங்கள் கனமானவையாதலால், உலோக இழையடங்கிய துணிகள் விறைப்பாக, துவள் தன்மை குறைந்து, உடலோடு ஒட்டாமல் நிற்கக் கூடும்; வெள்ளி நூல் கருமையடையும்; உலோக நூல் புகுத்தப்பட்ட துணிகள் யாவுமே அடிக்கடி கழுவ வேண்டிய கட்டாயத்தைக் கொண்டவை. இக்குறைகளைப் போக்கும் நோக்கத்துடன் ஓர் உத்தி கையாளப்படுகிறது. மெல்லிய அலுமினியத் தகடு அல்லது இழையை மைலார் எனும் ஒளி புக விடும் பாலிஎஸ்ட்டர் துணியால் இரு புறமும் மூடி (sandwiched) ஒட்ட வேண்டும். வெள்ளியைப் போன்ற பளபளப்புத் தேவைப்பட்டால், பாலி எஸ்ட்டரையும் அலுமினியத்தையும் இணைக்கும் ஒட்டுவிப்பி (adhesive) ஒளி புக விடும் இயல்புடையதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தங்க நிறம் விரும்பப்பட்டால், தக்க நிறமிகளை ஒட்டுவிப்பியுடன் சேர்க்க வேண்டும் அல்லது படலத்தின் மீது அச்சிடல் வேண்டும். மற்றோர் உத்தியில் மைலார் பாலிஎஸ்ட்டர் ஒட்டின் மீது அலுமினிய ஆவியைப் (வெற்றிடத்தில்) பரப்ப வேண்டும். சில உலோக நூல்களைச் (அலுமினிய நூல்கள்) செல்லுலோஸ் அசெட்டேட் பியூட்ரேட் தகட்டால் மூடுவதும் உண்டு.
செரமிக் இழைகள் பொதுவாக அலுமினியம் சிலிக்கேட்டால் ஆனவை. ஓர் உலையிலிருந்து அலுமினியம் சிலிகேட் கலவையை, அழுத்தப்பட்ட காற்று அல்லது நீராலி வழியே செலுத்தி, சிறு துண்டுகளாக உடைக்கலாம். இவ்விழை 1275°C வரை வெப்பம் தாங்க வல்லது. வெப்ப, மின் மற்றும் ஒலிக் காப்பீட்டு அமைப்புகளில் மிகவும் பயன்படுகிறது.
கார்பன் இழைகள் லேசாகவும், வலிமை மிக்கனவாகவும், நீள்மை, நெகிழ்வு, வேதித் தடுப்பு மிக்கனவாகவும் இருப்பதால், தொழிலகங்களில் தீவிர சூழ்நிலைகளில் பயனாகின்றன. இவ்விழையின் தயாரிப்பில் ரேயான், பாலி அக்ரிலோ நைட்ரைல் ஆகியவற்றைக் கரியாக்குதல் (carbonisation) முதன்மைக் கட்டமாகும்.
பாலியூரித்தேனை அடிப்டையாகக் கொண்ட, நீட்சி மிக்க (elasticity) இழையான ஸ்பான்டெக்ஸ், அக்ரிலிக், இழைகளில் திருத்தம் செய்து பெறப்படும் மோடக்ரிலிக், கண்ணாடி இழை ஆகியனவும் சிறப்பு வகைகளாகக் கருதப்படலாம் என்றாலும், தயாரிப்பு அளவைப் பொறுத்த வரை சாதாரண இழைகளைப் போலவே கருதப்படுகின்றன. —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B. P. Corbman, Textiles—Fibre to Fabric, Sixth Edition, McGraw-Hill Book Company, Singapore, 1985.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 322)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m5rqqrsj/
தமிழ்“சிறப்பு வகைத் துகிலிழைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m5rqqrsj/APA
Oliyon Research. (2026). சிறப்பு வகைத் துகிலிழைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m5rqqrsj/MLA
"சிறப்பு வகைத் துகிலிழைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m5rqqrsj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment