சிப்ரினிபார்மிஸ்
cipriṉipārmis
எலும்பு மீன் வகைப்பாட்டில் டிலியாஸ்டியை (teleostei) என்னும் பெரு வரிசையில் மென்மைத் துடுப்பாரை மீன் வரிசையைச் (soft rayed order) சேர்ந்தது சிப்ரினிபார்மிஸ் ஆகும்.
எலும்பு மீன் வகைப்பாட்டில் டிலியாஸ்டியை (teleostei) என்னும் பெரு வரிசையில் மென்மைத் துடுப்பாரை மீன் வரிசையைச் (soft rayed order) சேர்ந்தது சிப்ரினிபார்மிஸ் ஆகும். இவ்வகை மீன் பல விதமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. குட்ரிச், ரீகன், விண்பெர்க், பெளலிங்கர், ரோமர் முதலியோர் தத்தம் ஆய்வு முறைப்படி சிப்ரினிபார்மிஸ் இனத்தை வகைப்படுத்தியுள்ளனர்.
பெரும்பாலும் நன்னீரில் வாழக் கூடிய சிப்ரினிபார்மிஸ் மீன்கள் பலவகையிலும் தொன்மையானவையாக விளங்குகின்றன. இவை, நீரில் அடிமட்ட மணற் பரப்பில் வாழ்பவை. மீன்களுக்குரிய இயல்புகள் அனைத்தும் பெற்றவை. இம்மீன்களின் முதல் நான்கு முள்ளெலும்புகளும், வெபேரியன் நுண் எலும்புகளாக (weberian ossicles) மாறி அமைந்துள்ளன. இவ்வெலும்புகள் காற்றுப் பையையும், உட்செவியையும் இணைக்கின்றன. காற்றுப் பை சிறியதாக இருப்பினும், அனைத்து சிப்ரினிபார்மிஸ் மீன்களிலும் இது காணப்படுகிறது. இடுப்புத் துடுப்புகள் (pelvic fins) வயிற்றுப் பகுதியில் அமைந்த இவ்வகை மீன்களைப் பின்வரும் நான்கு குடும்பங்களாகப் பிரித்துள்ளனர்.
கேராசினிடே குடும்பம். இக்குடும்பத்திலுள்ள மீன்கள் நன்னீரில் வாழ்கின்றன. உடல் முழுதும் செதில்களைக் கொண்டுள்ளன. ஆனால், தலையில் செதில்களும், தொட்டுணரிழைகளும் (barbels) இல்லை. இரண்டு தாடைகளிலும் பற்கள் உள்ளன. முதல் முதுகுப்புறத் துடுப்புக்குப் (first dorsal) பின்புறம் ஒரு சிறிய கொழுப்புத் துடுப்புக் (adipose fin) காணப்படுகிறது. காற்றுப் பை இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. இக்குடும்பத்திற்கு எரித்ரினஸ், சாக்கோடான், கைரோடான் போன்ற மீன்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஜிம்நோட்டிடே குடும்பம். விலாங்கு மீன்களைப் போன்ற தோற்றமுடைய, நன்னீரில் வாழும் மீன்கள் இக்குடும்பத்தைச் சார்ந்தவை. காரசினிடே மீன்களைப் போன்று இம்மீன்களின் தலையில் செதில்களும், தொட்டுணரிழைகளும் இல்லை. உடல் நீண்டும், உருண்டும் இருக்கிறது. செதில்கள் சிறியனவாக உள்ளன. சிலவற்றில் செதில்களே இல்லை. இவற்றில் முதுகுப்புறத் துடுப்பு இல்லாமல் இருக்கும் அல்லது சிறிய கொழுப்புத் துடுப்பாகக் குறுகியிருக்கும்; தோள் துடுப்புகளும், வால் துடுப்பும் இல்லை. மலவாய்த் துடுப்பு மிகவும் நீண்டிருக்கும். மலவாய், தொண்டைக்கருகில் அமைந்திருக்கும். இரண்டு காற்றுப் பைகள் காணப்படுகின்றன. செவுள் துளைகள் மிகவும் குறுகிக் காணப்படும். சான்றாக, மின் விலாங்கு மீனின் இரு பக்கங்களிலும், மின் உறுப்புகள் அமைந்துள்ளன.
சிப்ரினிடே குடும்பம். மிகவும் முக்கியமான உணவாகப் பயன்படும் கெண்டை மீனகள் இக்குடும்பத்தைச் சார்ந்தவை. இவை நன்னீர், கடல், கழிமுகங்கள் ஆகிய இடங்களில் வசிக்கின்றன. இவற்றின் தலையில் செதில்களில்லை என்றாலும், உடல் முழுதும் பெரிய செதில்கள் உள்ளன. ஒரேயொரு முதுகுப்புறத் துடுப்பு மட்டும் இருக்கும். கொழுப்புத் துடுப்பு இன்றியே வாய் நீண்டிருக்கும். பற்கள் இன்றியும் வாழும். கீழ்த் தாடையின் நடுவில் ஓர் உருண்டையான எலும்புப் புடைப்பு இருப்பது இவ்வகை மீன்களின் சிறப்புப் பண்பாகும். வயிற்றுப் பகுதி உருண்டையாக இருக்கிறது. காற்றுப் பை மிகவும் பெரியதாகவும், இரண்டு அறைகளைக் கொண்டும் உள்ளது. சேல் கெண்டை, பொம்மீன், தோப்பா மீன், வெண் கெண்டை, கண்ணாடிக் கெண்டை போன்ற மீன்கள் இக்குடும்பத்தைச் சேர்ந்தவை.
சைலூராய்டியா குடும்பம். இக்குடும்ப மீன்கள் மித வெப்ப, வெப்பப் பகுதிகளில் நன்னீரின் செதில்களற்ற கெழுத்தி அல்லது பூனை மீன்களாகும். உருவில் பெரிய கெழுத்தி மீன்கள் சிந்து, யமுனை, கங்கை, பர்மியன் ஆறுகளில் காணப்படுகின்றன. இந்தியாவில் இம்மீன்கள் நன்னீர், கடல், கழிமுகங்களில் வாழ்கின்றன. வாயில் இரு பக்கங்களிலும் தொட்டுணரிழைகளைப் பெற்றுள்ள இவற்றிற்குப் பூனை மீன்கள் என்று பெயர். இவை, தங்கள் கண்களைப் பயன்படுத்துவதை விட, இத்தொட்டுணரிழைகளையே சலனத்திற்குப் பயன்படுத்துகின்றன. துடுப்பாரைகளைக் கொண்ட முதுகுப் புறத் துடுப்புடன் கொழுப்பு முதுகுப் புறத் துடுப்பும் காணப்படுகிறது. வாய்ப் பகுதி குறுகியும், தாடைகள் பற்களைக் கொண்டும் உள்ளன. கடல் வாழ் கெழுத்தி மீன்களின் காற்றுப் பை கெட்டியாகவும், எலும்பினால் மூடப்பட்டுமுள்ளது. ஆனால், நன்னீர் மீன்களில், காற்றுப் பை எலும்பால் மூடப்படாமலிருக்கும்.
கிளாரியஸ், சாக்கோபிராஸ்கஸ் போன்ற பூனை மீன்கள் நீரிலும், நிலத்திலும் வாழும் தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. துணைச் சுவாச உறுப்புகள் உண்டு. சில பூனை மீன்களில், கூடு அமைத்து முட்டைகளையும், குஞ்சுகளையும் பேணும் பெற்றோர் அரவணைப்பு முறை காணப்படுகிறது. ஆண் ஏரியஸ் மீன், பெண் இடும் முட்டைகளை அவை பொரியும் வரை தன் வாயில் வைத்திருந்து, உணவு உண்ணாமல் பேணும். பெண் அமியுரஸ் மீன் மண்ணில் குழி தோண்டி இடும் முட்டைகளை, ஆண் மீன் பேணிக் காக்கும். டோரஸ் காளக்தியஸ் போன்றவை, நீர்ச் செடிகளில் கூடு அமைத்து முட்டையிட்டு, ஆண் மீனும், பெண் மீனும் சேர்ந்து முட்டைகளைப் பாதுகாக்கின்றன.
சைலூராய்டியா மீன்கள் மக்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. சாக்கோபிராங்கஸ், கிளாரியஸ் போன்ற பூனை மீன்கள், நோயுற்றவர்களுக்கு ஏற்ற சத்துணவாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இம்மீன்களின் காற்றுப் பைகளிலிருந்து தயாரிக்கப்படும் மீன் பைக்கூழ், திராட்சைச் சாறு தூய்மை செய்யவும் மிட்டாய்த் தொழிற்சாலைகளிலும் பயன்படுகின்றது. —ம. அ. சுப்பிரமணியன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 238)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m55c9d5x/
தமிழ்“சிப்ரினிபார்மிஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m55c9d5x/APA
Oliyon Research. (2026). சிப்ரினிபார்மிஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m55c9d5x/MLA
"சிப்ரினிபார்மிஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m55c9d5x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment