செங்கல்
ceṅkal
இது களிமண்ணால் செய்யப் படும் ஒரு கட்டடப் பொருளாகும்.
இது களிமண்ணால் செய்யப் படும் ஒரு கட்டடப் பொருளாகும். செங்கல் (brick) செவ்வக வடிவில் வார்க்கப்பட்டு, சூளை அல்லது காளவாயில் சூடு படுத்தப்பட்டு வேக வைக்கப் படுகிறது. இதில் காணப்படும் சிவப்பு நிறம், இரும்பு ஆக்சைடுகளால் ஏற்படுகிறது. சீராகத் தோற்றமளிக்கும் செங்கல், முகப்புக் கல்லாகப் (face stone) பயன்படுகிறது. ஏனையவை, சாதாரண சுவர்க் கட்டுமானங்களுக்கும், பிற தேவைகளுக்கும் பயன்படுகின்றன.
செங்கற்கள் ஏனைய பொருள்களாலும் செய்யப் படலாம். களிமண்ணுடன், மணல் அல்லது சுண்ணாம்புக் கலக்கப்பட்டு, அழுத்தப்பட்டு, நீராவியில் வேக வைக்கப்பட்டுச் சில செங்கற்கள் செய்யப் படுகின்றன. மின் காப்புப் பொருளாகவும், வெப்பந் தாங்கு பொருளான தீச்செங்கல்லாகவும், கட்டகப் பொருளாகவும் இது பயன்படுகிறது, மண் அல்லது களிமண்ணுடன் வைக்கோலைக் கலந்து வார்க்கப் பட்டுச் சூரிய ஒளியால் காய வைக்கப்படும் செங்கல், சுடப்படாத செங்கல் (adobe brick) எனப்படும். இச்செங்கல்லை முற்காலத்தில் பயன் படுத்தினர். தற்போது, உலர் தட்ப வெப்ப நிலைகளில் பெரிதும் பயன்படுகிறது.
செங்கல் மிகப் பழமையான. மலிவான கட்டகப் பொருளாகும்.இது நீண்ட காலம் உழைக்கும் தன்மையும், எளிதாக வேலை செய்வதற்கு ஏற்ற தன்மையும் பெற்றுக் காணப் படுகிறது. சாதாரண செங்கற்கள் தீயினால் சிறிதளவு பாதிப்படைகின்றன. ஆனால், தீச்செங்கல் 4000°F வரை வெப்பத்தைத் தாங்கும் வலிமை பெற்றுள்ளது. களிமண்ணாலான செங்கல் அமில எதிர்ப்புத் தன்மை மிக்கது.
செங்கல் பல அளவுகளிலும், வடிவங்களிலும் செய்யப்படுகின்றது. வேக வைக்கப்படும் போது, சிறிதளவு சுருங்கும். வெண்மை, சிவப்பு, மஞ்சள் கலந்த பழுப்பு, சிவப்பு கலந்த பழுப்பு, நீலம், கரு நீலம் முதலிய நிறங்களில் இது செய்யப்படுகிறது. களிமண்ணில் காணப்படும் இரும்பு ஆக்சைடு, மாசு, வேக வைக்கப்படும் முறை ஆகியவற்றைப் பொறுத்து, இதன் நிறம் அமைகிறது. வேக வைக்கும் வெப்ப நிலை மிகுதியானால், செங்கல்லின் நிறமும் அடர்ந்து இருக்கும். மட்பாண்டங்களைப் போலச் செங்கல்லும், பல நிறங்களில் பளப்பளப்பூட்டப்படுகிறது. செங்கல்
உயர் அழுக்கு வலிமை (high compressive strength) பெற்றுள்ளது. ஆனால் இழு வலிமையைக் குறைவாகவே பெற்றுள்ளது.
செங்கல் செய்யும் முறை. அனைத்துச் செங்கற்களும் களிமண்ணால் செய்யப்படுகின்றன. ஈரமாக இருக்கும் போது, களிமண் வழவழப்புத் தன்மையும், நெகிழ் தன்மையும் பெற்றுள்ளது. உலர்ந்த பின், இறுக்கமாகவும், கல் போன்றும் கெட்டிக்கிறது. ஆனால், உயர் வெப்ப நிலைக்குச் சூடு படுத்திய பின், வேதி மாற்றம் ஏற்பட்டு, ஈரமானாலும் நெகிழ் தன்மையை அடைவதில்லை. செங்கற்கள் 1600–2200°F வரை சூடேற்றப்படுகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை செங்கல் கைகளாலேயே செய்யப்பட்டது. நிலத்திலிருந்து களிமண் எடுக்கப்பட்டு, முதலில் காய வைக்கப் படுகிறது. பின்னர், சிறிது நீர் விட்டுக் கலந்து பசை போல் பிசையப் படுகிறது. இப்பசை மர வார்ப்புகளில் இடப்பட்டுச் சூரிய ஒளியில் காய வைக்கப் படுகிறது.
மழைக் காலங்களில், சூரிய ஒளி முறையால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டதால், அடுப்பு, காளவாய், சூளை ஆகியவற்றால் வேக வைக்கும் முறை கண்டுபிடிக்கப் பட்டது; தற்போது பலவகைச் சூளைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. செங்கல் தொடர் சூளை அல்லது காளவாய்களால் செய்யப்படுகின்றது. கடின–மண் முறை, மென்–மண் முறை, உலர் முறை எனச் செங்கல் தயாரிப்பு மூன்று வகைப்படும்.
கடின–மண் முறை. இம்முறையில், களிமண் நீருடன் கலக்கப்பட்டு, இறுக்கமான பசை போல் செய்யப் படுகிறது. இப்பசை துளைகள் வழியே அழுத்தத்துடன் செலுத்தப் படுகிறது. வெளி வரும் பசை, கத்தி அல்லது கம்பிகளால் தேவையான அளவுகளுக்கு வெட்டப்பட்டு, உலர்த்தப்பட்டுச் சூளைகளில் வேக வைக்கப் படுகிறது.
மென்–மண் முறை. இது கை அல்லது கருவியால் செய்யப்படும் பழமையான முறையாகும். இதில் களிமண்ணும், நீரும் மென் பசையாகக் கலக்கப் பட்டு, வார்ப்புகளில் இடப் பட்டு, வேக வைக்கப் படும்.
உலர் முறை. இதில் களிமண் பசையாக்கப்படும் அளவிற்கு மிகச் சிறிதளவு நீர் சேர்த்துப் பிசையப் பட்டு, நீரியல் அமுக்கிகள் (hydraulic presses) மூலம் செங்கல் வடிவமைப்புக் கொடுக்கப் படுகிறது. நீர் குறைந்தளவே இருப்பதால், உலர்த்தப் படாமல், நேரடியாக வேக வைக்கப் படுகிறது. அதனால், தயாரிப்பு நேரமும் குறைவேயாகும்.
கட்டடங்களில் பயன்படுத்தப்படும் முகப்புச் செங்கற்கள் உலர்வதற்கு முன் மீண்டும் ஒரு முறை அழுத்தம் கொடுக்கப் படுகிறது. இதனால், விளிம்புகள் சீராகவும், மேற்பரப்பு வழவழப்புத் தன்மை பெற்றும் காணப்படும். ஓவிய அலங்காரமுடைய (tapestry brick) செங்கற்கள் தயாரிப்பில், அதன் வார்ப்பிலேயே ஓவிய வடிவமைப்பு பதிக்கப்படுகிறது. தீச்செங்கல்லில், உருகாப் பொருள்கள் சிறிதளவு கலக்கப்படுகின்றன. உயர் வெப்பந் தாங்கும் செங்கற்களில் சிர்கோனியா, மக்னிஷியா, குரோமைட் முதலிய கனிமங்கள் உள்ளன. உயர் அலுமினா செங்கல், டயாஸ்போர் அல்லது அலுமினாவிலிருந்து தயாரிக்கப் படுகிறது.
முகப்புச் செங்கற்கள் உட்புற மற்றும் வெளிப்புற அலங்கரிப்புகளுக்குப் பயன் படுகின்றன. கனிமப் பூச்சு பெற்ற முகப்புச் செங்கற்கள் பெரிதும் சமையலறையில் பயன் படுகின்றன. மேலும், நடைபாதை, தோட்டச் சுவர்கள், புகை போக்கி, தடுப்புச் சுவர் முதலிய இடங்களிலும் பயன் படுகின்றன. பளபளப்பாக்கப் பட்ட செங்கற்கள், கழிவறைச் சுவர்கள், கூரை, தளம் முதலிய இடங்களில் பயன் படுகின்றன. வளரும் தொழில் நுட்பவியலில் செங்கற்களின் பயன் இன்றியமையாததாகும்.
—இரா. சரசவாணி நூலோதி. Clois E Kicklighter, Modern Masonry, The Goodheart-Willcox Company, Inc., Illinois, 1980.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 720)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m4grbf3y/
தமிழ்“செங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m4grbf3y/APA
Oliyon Research. (2026). செங்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m4grbf3y/MLA
"செங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m4grbf3y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment