பசு
pacu
கால்நடைகள் மனிதர்களுக்குப் பல வகையில் பயனாகின்றன.
கால்நடைகள் மனிதர்களுக்குப் பல வகையில் பயனாகின்றன. குறிப்பாக, பால் தரும் பசு மாடுகள் மிக இன்றியமையாதவையாக விளங்குகின்றன. தென்னாட்டுப் பசு அமிர்த மகால் பசு. இது கொல்லர், ஹல்லிக்காரா என்னும் வடநாட்டு மலையினத்தவரால், முதலில் மைசூருக்குக் கொண்டு வரப் பட்டுச் சிதல்துர்க்கம். தும்கூர் பகுதிகளில் பரவியது. தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள பரந்த மலைப் பகுதிகளிலும், காடுகளிலும் இப்பசு வளர்க்கப் படுகிறது.
அமிர்த மகால் பசு சாம்பல் நிறம் கொண்டது. தலையும், திமிலும் கறுப்பாக இருக்கும். விலா எலும்பு நன்றாக வளைந்தும், வயிறும், மார்பும், உருளை போன்றும் தோற்றமளிக்கும். குறுகிய முகமும், நெற்றியில் இரண்டு பெரிய கண்களுக்கும் இடையில், பள்ளமும் இருக்கும். கொம்புகள் மிக நீளமாகவும் பின்புறம் வளைந்தும், நுனி முன்புறம் நீண்டும் இருக்கும். இப்பசு பால் மிகுதியாகத் தராது.
ஆலம்பாடி பசு. பவானி, கொள்ளேகால், ஹோசூர், தருமபுரி, அதனை அடுத்துள்ள மைசூர்ப் பகுதிகளில், ஆலம்பாடி இனம் காணப்படும். இதற்கு லம்பாடி, மலை மாடு காவேரி என்னும் பெயர்களும் உண்டு.
சேலம், கோயம்புத்தூர், பெங்களுரில் மேய்ச்சல் நிலம், நதிக் கரை ஆகிய இடங்களில் இவ்வினப் பசு செழித்து வளர்கிறது. இப்பசுவும் மிகுதியாகப் பால் தராது.
காங்கேயம் பசு. தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காங்கேயம் பகுதியைச் சேர்ந்த இப்பசு, தாராபுரம், ஈரோடு, பழனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் மிகுதியாக வளர்க்கப் படுகிறது. இவ்வகைப் பசு வெள்ளை நிறமாகவும், இளங்கன்று சிவப்பாகவும் இருக்கும். இளங்கன்று ஆறு மாதத்திற்குப் பின்னர், வெள்ளையாக மாறும். இப்பசு பொதுவாகக் குறைந்த அளவு பாலையே தருகிறது. பசு 15 மாதங்களுக்குப் பிறகும், 12 மாதங்களுக்குப் பிறகும் கன்று ஈனும். எளிதில் சினைப் படாத பசுவை விவசாயத்திற்குப் பயன் படுத்துவர். பசுவின் கண்களைச் சுற்றி இருண்ட வளையங்கள் இருந்தால், அது தரம் குன்றிய பால் மாடாகும்.
ஓங்கோல் பசு. கரவாடி, கண்டகர், கருமஞ்சி, போந்தூர், நீடனூர், ஜெயவரம் ஆகிய சிற்றூர்களில் இந்த இனத்தின் சிறந்த மாடுகள் உள்ளன. பொதுவாக 3 ஆண்டுகள் 4 மாதங்களில், இப்பசு, முதல் கன்றை ஈனும். இதற்கு மிகுதியாகப் பால் தரும் திறம் உண்டு. இப்பசு, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படும் சிறப்பைக் கொண்டது. இது, ஏறத் தாழ 8 மாதம் பால் தரும் திறனுடையது. 5 ஈற்றுக்கு மேல் இது கன்று போடுவதில்லை. இவ்வினத்தின் சிவப்பு நிறப் பசு சற்றுத் தரம் குறைந்தது.
பர்கூர் பசு. பவானிப் பகுதியில், பர்கூர் மலைகளில், இந்தப் பசு உற்பத்தியாகிறது. பல தரப் பட்ட சூழல்களில், தட்ப வெப்ப நிலைகளைத் தாங்கிக் கொள்ளும் திறமுடையது. இது வெள்ளையும், சிவப்பும் கலந்த நிறத்தைப் பெற்றிருக்கும்.
உம்பளாச்சேரி பசு. இது நாகை மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள உம்பளாச்சேரி என்னும் ஊரைச் சேர்ந்தது. இப்பசு, பால் மிகுதியாகத் தராது. இதன் பால் மடி சிறியது. குட்டையான காம்புகளைப் பெற்றிருக்கிறது. ஐந்து வயது முதல், இப்பசு கன்று ஈனும்.
தட்சின் பசு. ஆந்திராவில் பத்ராசலம் பகுதிகளில், இந்த இனப் பசு காணப் படுகிறது. இப்பசு மிகுதியாகப் பால் தரும் இயல்புடையது.
திருச்செங்கோடு பசு. வட ஆர்க்காடு, திருவண்ணாமலைப் பகுதியைச் சேர்ந்த இப்பசு, பால் மிகுதியும் தராது. இதன் பொதுவான நிறம் சிவப்பு. சில பசுக்கள் வெள்ளை, சிவப்புப் நிறப் புள்ளிகளையுடைய வாலைக் கொண்டிருக்கின்றன.
புங்கனூர் குட்டைப் பசு. ஆந்திராவில் சித்தூர் வட்டத்தில் உள்ள குட்டையான இனத்சைச் சேர்ந்த இப்பசு, பெரும்பாலும் சிவப்பு நிறமாக இருக்கும். இதற்கு ஆகும் தீவனச் செலவு மிகவும் குறைவு. சிறிய அளவில் குடும்பத் தேவைக்கென வளர்க்க, இந்தப் பசு மிகவும் ஏற்றது. மேலும், இப்பசு எவரும் எளிதில் கையாள ஏற்ற வகையில், அமைதிப் பண்பு கொண்டது.
இந்தியப் பசு சாகிவால் இனப் பசு. மையப் பஞ்சாப், தெற்கு பஞ்சாப் ஆகிய இடங்களில் இவ்வினப் பசு தோன்றியது. இவ்வினத்தை, மாண்டகோமாரி இனம் என்றும் கூறுவர். இப்பசு, கனத்த கட்டைக் கால்களைப் பெற்றிருக்கிறது. குட்டையான முகம், அகன்ற நெற்றி, குட்டையான கொம்பு, பெரிய பால் மடி, நீளமான காம்பு இவை இப்பசுவின் பொதுத் தோற்றமாகும். இப்பசு, மிகுதியாகப் பால் தரும். மேல் நாட்டுப் பசுக்களுக்கு இணையாகக் கருதத் தக்க இப்பசு, மழை குறைந்த வறள் பகுதிகளுக்கு ஏற்றது.
சிந்தி இனப் பசு. இது இந்து மாகாணத்தில் மேற்குப் பகுதிகளில், பலுசிஸ்தானத்தைச் சேர்ந்த வால்பெலா பகுதிகளில் தோன்றிய இனமாகும். குட்டையான தலை, அகன்ற நெற்றி, குட்டையான கொம்புகள், நீண்ட காது, நீளமான வால், வால் நுனியில் கரிய மயிர்க் குஞ்சம், அகன்ற பெரிய மடி, நீளமான காம்பு ஆகியவை இப்பசுவின் பொதுத் தோற்றமாகும். சிந்தி இனங்கள் எந்த இனத்துடன் சேர்ந்தாலும், தனித் தன்மையை இழக்காதவை. இந்த இனங்களைப் பிரேசில், கொரியா, கியூபா ஆகிய நாடுகள் பெரிதும் விரும்பி, இறக்குமதி செய்துள்ளன. மேலும் இப்பசு, நோய் எதிர்ப்பு ஆற்றலும், அனைத்துத் தட்ப வெப்ப நிலையையும் தாங்கிச் செயல் படும் திறனும் கொண்டது.
இவ்வினப் பசு கன்று ஈன்றதும், பத்து மாதங்கள் வரை பால் தரும். மூன்று வயதிற்குப் பின், இது கன்று ஈனும். இரண்டு முறை சேர்ந்தாலும், எளிதில் சினைப் படாது. மூன்றாம் முறை சேர்ந்தாலே, சினைப் படும்.
தார்பார்க்கர் இனப் பசு. இது தார்ப் பாலைவனத்தைச் சேர்ந்த இனம். கட்ஜ், ஜோதிபுரி, ஜெய்சால்மர் பகுதிகளில் இந்த இனப் பசு மிகுந்து காணப் படுகிறது. இதை, வெள்ளைச் சிந்தி என்றும் கூறுவர். நீண்ட முகம், புடைத்த நெற்றி, அகன்ற உச்சி, மெல்லிய கொம்பு, தூய்மையான கால் அமைப்பு, சீரான குளம்பு, அகன்ற பால் மடி, நீளமான காம்பு இவை, இப்பசுகளின் பொதுத் தோற்றமாகும். மழை குறைவான வறள் பகுதிகளிலும், மணற்பாங்கான பகுதிகளிலும், வசிக்க ஏற்றது. குறைந்த தீவனத்தில் கூடுதலாகப் பால் தருதல், கண் கவரும் உடலமைப்பு ஆகியவை தார்பார்க்கர் இனப் பசுவின் சிறப்புகளாகும்.
காங்கிரீஜ் இனப் பசு. தார்பார்க்கர் மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியும், அகமதாபாத்தும், இவ்வினப் பசு மிகுந்திருக்கும் இடங்களாகும். நிமிர்ந்த நோக்கு, ஓரளவு நீண்ட உடல், குட்டையான முகம், அகலமான நெற்றி, கனத்த வளைந்த கொம்பு, அகன்ற மார்பு, இவை இப்பசுவின் பொதுத் தோற்றமாகும். கூடுதலான பால் தரும் இவ்வினப் பசுவை அமெரிக்காவில் இறக்குமதி செய்துள்ளனர்.
கீர் பசு. சிங்கங்கள் மிகுந்துள்ள கீர் காடுகளில், இவ்வினப் பசு பெரும்பான்மையாக உள்ளது. மேலும், வட மும்பை, பரோடா, மேற்கு ராஜபுதனம் போன்ற இடங்களிலும், பரந்த அளவில் காணப் படுகிறது. இப்பசு, ஆண்டுக்கு ஒரு கன்று ஈனும். பத்து மாதங்கள் வரை, தொடர்ந்து பால் தரும் இயல்புடையது. கூடுதலாகப் பால் தரும் இது, நான்கு வயதில் சினைப் படும்.
ஹரியான இனப் பசு. இது டில்லி, பஞ்சாப் பகுதியில் காணப் படுகிறது. நீண்ட முகம், குட்டையான நெற்றி, வளைந்த, மேல் நோக்கிக் காணப்படும் கொம்பு, நீண்ட உடல், சதைப் பற்றுடன் காணப் படும் உறுதி மிக்க கால், சிறப்பான குளம்பு அமைப்பு, அகன்ற பால் மடி, நீண்ட காம்பு இவை இவ்வினப் பசுவின் பொதுத் தோற்றமாகும். இது பால் உற்பத்தியில் உயர்ந்த இடம் பெற்றுள்ளது. ஹிஸ்ஸார் இனப் பசு. பஞ்சாபில் உள்ள ஹிஸ்ஸார் பகுதியில் இப்பசு வாழ்கிறது. கம்பீரத் தோற்றம், வெள்ளை நிறம், நீளமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் காதுகள் இவை ஹிஸ்ஸார் இனப் பசுவின் பொதுத் தோற்றமாகும். இவ்வினப் பசு மிகுதியாகப் பால் தராது.
ஹல்லிகார் இனப் பசு. மைசூரைச் சேர்ந்த அமிர்தமகால் நிறுவனம் உற்பத்தி செய்த முதல் இனம் ஹல்லிகார் இனப் பசுவாகும். உடலின் நிறம் சாம்பல் நிறமாகும். இரண்டு பக்கமும் புடைத்து, நடுவில் நீண்ட பள்ளம் உடைய நெற்றி, கரிய மூக்கு, வாய்ப் பகுதியில் குறுகி, நல்ல வடிவைத் தரும் முகம், மெல்லிய நீண்ட சதையுடைய கழுத்து, சிறிய குளம்பு, சாட்டை போன்ற வால், அகலமான பால் மடி இவை இவ்வினப் பசுவின் தோற்றமாகும். இதுவும் பால் மிகுதியாகத் தராது.
நாகூர் இனப் பசு. இது இந்தியாவில் ஜோத்பூரைச் சேர்ந்தது. இவ்வினப் பசு, தூய வெண்மை நிறத்துடன் இருக்கும். சிறிய தலை, தட்டையான நெற்றி, நன்கு வளர்ந்து, மேல் நோக்கி வளைந்த கொம்பு, உறுதியான கால், இவை இவ்வினப் பசுவின் பொதுத் தோற்றமாகும். பால் மிகுதியாகத் தராத இனமாக இது விளங்குகிறது.
பாச்சூர் இனப் பசு. இது பீகார் மாநிலத்தைச் சேர்ந்தது.
கிலாரி இனப் பசு. மராட்டிய மாநிலத்தில் ஹோலாப்பூர், சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த இவ்வினப் பசு, மிகுதியும் பால் தராது.
டாங்கி இனப் பசு. முந்தைய பரோடா மற்றும் மாங்க்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த அகமது நகர் மாவட்டத்தில் உள்ள அங்காலா வட்டத்திலும், கட்ஸ், தானா, நாசிக், கோலாபா ஆகிய இடங்களிலும், இவ்வினப் பசு உள்ளது. இதுவும் மிகுதியாகப் பால் தராது.
கேரிகார் இனப் பசு. உத்திரப் பிரதேச லஷ்மியூர் இனத்தைச் சேர்ந்த இப்பசுவும் குறைவாகவே பால் தரும்.
கேன்சுதா இனப் பசு. உத்திரப் பிரதேச கேன் நதிக் கரையைச் சேர்ந்த இப்பசு, ஓரளவே பால் தரும். இது கேமவரியா என்றும் குறிப்பிடப்படும்.
ராத் இனப் பசு. இராஜஸ்தானத்தை சேர்ந்த இவ்வினப் பசு, சிக்கனப் பராமரிப்புக்குப் பெயர் பெற்றது. பொதுவாக, இப்பசு குள்ளமானது. மிகுதியாகப் பால் தரும் திறன் கொண்டது.
மேவாட்டி இனப் பசு. இது இந்தியாவில், வட மதுரா மாவட்டத்தைச் சேர்ந்தது. அகன்ற நெற்றி, உறுதி மிக்க கால், நீண்ட வால் இவை, இவ்வினப் பசுவின் பொதுத் தோற்றமாகும். இது கூடுதலாகப் பால் தரும் திறன் உடையது.
கிருஷ்ணா பள்ளத்தாக்குப் பசு. ஷோலாப்பூர், மிராஜ், சங்கீலி, பெல்காம், சதாரா இவ்விடங்களில் மிகுந்து காணப் படும் இவ்வினப் பசுவின் தோற்றம் கிருஷ்ணா நதிக் கரை என்பர். சிறிய தலை, அகன்ற நெற்றி, வளைந்த கொம்பு, நீளமான கால் இவை இவ்வினப் பசுவின் பொதுத் தோற்றமாகும். இது மிகுதியாகப் பால் தரும் திறம் உடையது.
கயலோ இனப் பசு. இது மத்தியப் பிரதேச இனமாகும். வார்தா, சிந்த்வாரா போன்ற இடங்களில் காணப் படும். நீண்டமுகம், ஓரளவு வளர்ந்த கொம்பு, குட்டையான காது, குட்டையான வால் இவை, இவ்வினப் பசுவின் பொதுத் தோற்றமாகும். இது கூடுதலாகப் பால் தரும் திறன் உடையது.
டியோனி இனப் பசு. ஆந்திரப் பிரதேசத்தினைச் சேர்ந்த இவ்வினப் பசு, வடக்குப் பகுதிகளில்தான் மிகுந்து காணப் படுகிறது. இது, காண்பதற்குக் கீர் இனத்தைப் போலவே தோற்றமளிக்கும். நடுத்தர அளவுள்ள தலை, எடுப்பான நெற்றி, ஓரளவு நீளம் உடைய வளைந்து தொங்கும் காது, முன்னும் பின்னும் வளைந்த கொம்பு, அகன்ற பால் மடி, நீண்ட காம்பு இவை இவ்வினப் பசுவின் தோற்றமாகும். இது மிகுதியாகப் பால் தரக் கூடியது.
அயல் நாட்டு இனப் பசு ஜெர்சி இனப் பசு. ஜெர்சி, கேர்ன்சி ஆகியவை ஆங்கிலக் கால்வாயைச் சேர்ந்தவை. இவ்வினப் பசு ஏனைய அயல் நாட்டு இனப் பசுக்களை விடத் தூய்மையாகவும், விரைந்து மேயும் திறனுடனும் உள்ளது. பழுப்பு நிறமும், ஆழ்ந்த அன்பும் இவ்வினப் பசுவிற்கு உரித்தானவை. உலகிலேயே ஜெர்சி இனப் பசு தரும் பாலில் மட்டுமே கூடுதலாக வெண்ணெய்ச் சத்து இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர்.
இந்திய சிந்தி இனத்துடன், ஜெர்சி இனச் சேர்க்கை செய்வது பெரும் பயன் தந்துள்ளது. கன்று ஈனும் காலம், பால் தரும் காலம் ஆகியவற்றிலும், கூடுதலாகப் பால் தருவதிலும், ஆரோக்கியமான கன்று உற்பத்தியிலும் இப்பசு குறிப்பிடத் தக்கது.
ஹோஸ்டைன் ஃபிரீசியன் இனப் பசு. ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இது அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மிகுதியாகப் பரவியுள்ளது. பருமனான உடல், குட்டையான முகம், வட்டமாக வளைந்திருக்கும் சிறு கொம்பு, அகன்ற பெரிய மடியில் சிறு காம்பு இவை இவ்வினப் பசுவின் பொதுத் தோற்றமாகும்.
இப்பசுவின் நிறம் கறுப்பும், வெளுப்பும் கலந்ததாகும். பால் மிகுதியாகத் தரும் ஹோஸ்டைன் இனத்தைச் சேர்ந்த ஸ்காக்வேல், கிரேஸ்ஃபுல் ஹாட்டி வகைப் பசுக்கள் மூன்று வேளை கறந்தாலும், பால் தரும் ஆற்றல் குன்றாதவை. ஃபிரிசியன் இனத்துடன், இந்தியப் பசுக்களைச் சேர்க்கை செய்ததன் மூலம் உருவான பிராவதி இனப் பசு நாள் ஒன்றுக்கு 50 லி. பாலைத் தருகிறது.
அயர்ஷனர் இனப் பசு. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவ்வினப் பசு குட்டையான முகம், வயிற்றுடன் ஒட்டிக் காணப் படும் மடி, குட்டையான காம்பு ஆகியவற்றைக் கொண்டது. வெள்ளையும், சிவப்பும் கலந்த நிறத்தை உடையது. நடக்கும் போது, காண்பதற்கு மிக அழகாக இருக்கும். இவ்வினத்தைச் சேர்ந்த ஃபேர்டேல் பெட்டி ஜெம் என்னும் பசு ஆண்டிற்கு 15000 லி. பாலைத் தருகிறது.
பழுப்பு ஸ்விஸ் இனப் பசு. இவ்வகைப் பசு, ஸ்விஸ் நாட்டு ஆதி வாசிகளின் வரலாற்றுடன் தொடர்புடையது. ஜெர்மன், ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளில் இது பரவியுள்ளது. இவ்வினப் பசுவின் நிறம் பழுப்பு. நிறம் காரணமாகப் பழுப்பு ஸ்விஸ் எனப் படுகிறது. மேல் முதுகு, காதுகளின் உட்புறம் போன்ற இடங்களில் முடி முளைத்திருப்பது இதன் சிறப்பாகும். இவ்வினத்தைச் சேர்ந்த வீஸ்ஹில் கீப்பர்ஸ் ரேவன் என்னும் பசு மூன்று வேளை பால் தரும் திறனுடையது.
ரெட்டேஸ் இனப் பசு. 19ஆம் நூற்றாண்டில் இனச் சேர்க்கை செய்யப் பட்ட இவ்வினப் பசு, பால் தருவதற்கும், இறைச்சிக்கும் பயன் பட்டது. ஆனாலும், இது மிகுதியும் வளர்ச்சியடையாத, எங்கும் பரவலாகக் காணப் படாத இனமாக விளங்குகிறது.
உடலமைப்பு. பொதுவாக, நன்கு வளர்ச்சியுற்ற பசு சதைப் பற்றுள்ள உடலமைப்பைப் பெற்றுள்ளது. 1.5 மீ, உயரம் வரை வளர்கிறது. நன்கு வளர்ச்சியுள்ள 32 பற்களைப் பெற்றிருக்கிறது. 8 பற்கள் கீழ்த் தாடைக்கு முன்னாலும், 12 பற்கள் கீழ்த் தாடைக்குப் பின்னாலும், எஞ்சிய 12 பற்கள் மேல் தாடைக்குப் பின்னாலும் அமைந்திருக்கின்றன. பசு, கிளையில்லாத கொம்புகளைப் பெற்றிருக்கிறது. பிறக்கும் போது, இது கொம்புகளுடன் பிறப்பதில்லை. கன்று வளர, வளரக் கொம்புகள் வளரத் தொடங்குகின்றன.
செரிமான மண்டலம். பசு ஓர்அசை போடும் விலங்காகும். இதன் வயிற்றை 4 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை ரூமன், ரெடிக்குலம், ஓமேசம், அபோமேசம் ஆகும். இப்பகுதிகள் வயிற்றிலிருப்பதால், பசு விழுங்கிய உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து, மென்று அசை போட்டு, மீண்டும் விழுங்க முடிகிறது.
உணவை உண்ணும் போது, இவ்வுணவு உணவுக் குழல் மூலம் வயிற்றின் முதல் பகுதியான ரூமன் பகுதியை அடைகிறது. ரூமனும், ரெடிக் குலமும் கூடுதல் கொள்ளளவு உடைய கிடங்குப் பகுதிகளாக இருக்கின்றன. இப் பகுதியில் உணவு நன்றாகக் கலந்து, மென்மையாக மாறுகிறது. அதே சமயம், நுண்ணுயிரிகள் சிக்கலான கார்போஹைட்ரேட்டை எளிமையான கார்போ ஹைட்ரேட்டாக, அதாவது சர்க்கரை, ஸ்டார்ச்சாக மாற்றுகின்றன. இந்தச் சர்க்கரை மற்றும் ஸ்டார்ச்சிலிருந்து உயர் ஆற்றல் விலங்குகளுக்குக் கிடைக்கிறது. மேலும், நுண்ணுயிரிகள் புரதத்தையும்,பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்களையும் உருவாக்குகின்றன. திண்ம உணவு இவ்வாறு மென்மையாக மாறிய பின்னர், வயிற்றுத் தசைகளின் இயக்கத்தால், பசுவின் வாய்ப் பகுதிக்கு இவ்வுணவு செல்கிறது. பசு மீண்டும் உணவை மென்று, அசை போட்டு விழுங்குகிறது. இவ்வாறு விழுங்கப்பட்ட அசை போட்டு மென்ற உணவு, மீண்டும் ரூமனையும், ரெடிக்குலத்தையும் வந்தடைகிறது. அங்கு வேதி மாற்றம் ஏற்பட்ட பின்னர், உணவும், நீர்மமும் ஓமேசத்தை நோக்கிக் கீழிறங்கி விடும். அங்கு நீர்மம் முற்றிலுமாக உறிஞ்சப் படுகிறது. நீர் உறிஞ்சப் பட்ட உணவு பின்னர், அபோமேசத்தை அடைகிறது. அபோமேசத்தில் உள்ள வயிற்றுச் சுவர் செரிமானச் சாற்றைச் (Digestive juice) சுரக்கிறது. பின்னர் இந்தச் செரிமானச் சாறு உணவைச் செரிக்க வைக்கிறது. எனவே அபோமேசமே உண்மையான வயிறு (True stomach) எனப் படுகிறது.
பொதுத் தோற்றம். அழகான தலை, அகலமான நெற்றி, ஒளியுடன் கூடிய கண்கள், முறையாக வளர்ந்த கொம்புகள், சிறிய ஆனால் நீண்ட காதுகள் காணப் படல், காதுகளின் ஓரங்களில் முடி நிறைந்து, உட்புறம் மஞ்சளாகவும், முதுகு, தலைப் புறம் வர வரச் சரிவாகவும், முதுகெலும்பு கண்ணுக்குப் புலனாகாமலும், முன்னங்கால்களை விடத் தொடைகள் நீளமாக மெலிந்தும், கால்களில் சதைப் பற்று இராமையும், எலும்பின் அமைப்பு கண்ணுப் புலனாவதும், இரு புறமும் சரிந்திருத்தலும், வயிற்றின் சரிவு முன் புறம் புடைத்தும், பின் புறம் சூம்பியும், அடி வயிறு, பெரிய மடி அமைவதற்கு ஏற்ப அகன்றும்,பால் ஊறிய பின்னர், மடியின் அடிப் பக்கம் அகன்று, பின் பக்கம் ரப்பர் பந்து போல் உருண்டு, தோற்றம் தருவதும், தொட்டுப் பார்க்கையில், பட்டுப் போல மென்மையாகவும், மடியில் பால் நரம்புகள் நீளமாகப் பரவி, கிளைத்துக் கண்களுக்கு எளிதில் புலனாகும் விதத்தில், காம்பு, நாக்கும் சமமாக ஒழுங்காக அமைந்திருப்பதும், இக்காம்புகள் சதுர வடிவிலும், கை விரல்கள் எளிதில் பற்றிக் கொள்ளும் வகையில் வசதியாகவும், பாலைக் கறந்த பின்னர், மடி காலியான பை தொங்குவதை போலப் பரவி இருப்பதும், மடிப்புகளுடன் வெறும் தோல் போல இருப்பினும், கூடுதலாகப் பால் தரக் கூடிய பசு மாட்டிற்கு உரியவையாகும்.
உணவு முறை. பொட்டு வகை, பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, கோதுமைத் தவிடு, தோல் போன்ற சத்துணவு வகைகளையும், சோளத் தட்டை, மக்காச் சோளத் தாள், தினைத் தாள், சாமைத் தாள், ராகித் தாள், வைக்கோல் கட்டை போன்ற உலர்ந்த தீவனங்களையும், புல் வகைகளையும், பில்லிப் பயிறு, நரி பயற்றங் கொடி போன்ற கொடிப் பச்சைத் தீவன வகைகளையும், அகத்தி, அத்தி, அரசு, ஆச்சா ஆல், இலந்தை, இலவு, நெல்லி, பலா, புரசு, புன்கு, பூவரசு, மஞ்சள் கடம்பு , மந்தாரை, இலுப்பை, கருங்காலி, கருவேல், ஓதி, ஊஞ்சை, நாவல், நுணா, தூங்குமூஞ்சி, நிலப் பாலை, முருங்கை, கல்யாண முருங்கை, கொடுக்காப்புளி, வாத நாரயணன், வில்வம், விளா, வெள்வேல், வேங்கை, வேம்பு, மலையாத்தி, மலையிச்சை, மூங்கில், வாகை வகை ஆகிய மரங்களின் தழைகளையும், மாடுகள் விரும்பி உண்ணுகின்றன.
சினை மாட்டிற்கான உணவு. சினை மாட்டிற்கான உணவை எளிதில் செரிக்கும் வகையில், போதிய அளவு கொடுக்க வேண்டும். ஒரு பங்கு பருத்திக் கொட்டை, ஒரு பங்கு தவிடு, இரண்டு பங்கு புண்ணாக்கு, இரண்டு பங்கு தானியக் குறுணை, ஒரு பிடி உப்பு, உலோகச் சத்துக் கலவை ஆகியவற்றைக் கலந்து சினை மாட்டிற்குக் கொடுக்க வேண்டும்.
கோதுமைத் தவிடு கொடுத்தால் மிகவும் நல்லது. சினை மாட்டிற்குச் செரிமானக் குறைபாடு ஏற்படாதிருக்கும் படி வைக்கோல் குறைத்துப் புல் கொடி, பசுந்தழை, அகத்திக் கீரை போன்ற பசும் தீவன வகைகளைக் கொடுத்தல் நலம்.
கறவை மாட்டிற்கான உணவு. பால் மிகுதியாகப் பெறக் கறவை மாட்டிற்குப் பசும் புல், பருத்திக் கொட்டை, தேங்காய்ப் புண்ணாக்கு, எள்ளுப் புண்ணாக்கு, தவிடு, குறுணை உப்பு, உலோகச் சத்துக் கலவை, அகத்திக் கீரை இவற்றைக் கொடுத்து வர வேண்டும். கம்பங் கூழ், கேழ்வரகுக் கூழ், பூசணி, சுரைக்காய், வெள்ளரி, கிருணி , தர்ப்பூசணி ஆகியவற்றைக் கறவை மாட்டிற்குக் கொடுத்து வந்தால், கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்பத்தையும், வெக்கை நோயையும் தடுக்கலாம்.
சேர்க்கை வகை. பசுவைச் சேர்க்கை செய்யும் முறையில், ஐந்து நடைமுறைகள் உள்ளன. அவை உள் சேர்க்கை முறை, அயல் சேர்க்கை முறை, தரம் உயர்த்தும் முறை, சந்ததிச் சேர்க்கை முறை, தேர்வுச் சேர்க்கை முறை என்பன.
உள் சேர்க்கை முறை (Inbreeding), தாய்–மகன், தகப்பன்–மகள், சகோதரன்–சகோதரி போன்ற நெருங்கிய, நேர் உறவு உள்ள மாடுகளுக்குள் சேர்க்கையை ஏற்படுத்தி, இனப் பெருக்கம் செய்யும் முறை உள் சேர்க்கை முறையாகும்.
அயல் சேர்க்கை முறை (Cross breeding). ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இனங்களை, அதாவது, உள் நாட்டுப் பசுவுடன், அயல் நாட்டுப் பொலி காளையைச் சேர்த்து, இனப் பெருக்கம் செய்யும் முறையே, அயல் சேர்க்கையாகும். இச்சேர்க்கையால், சில சமயங்களில், அரிய, உயரிய சிறந்த கூடுதல் வருவாய் தரும் இனங்கள் தோன்றக் கூடும். சில சமயங்களில், பெரும் பயன் தரக் கூடிய இறைச்சி மாடுகளுக்கு உருவாக்கக் கூடும். பால் தரும் மாடுகள் உருவாகாமல் போவதும் உண்டு. உறுதியற்ற தன்மை நிலவுவதால், இம்முறை மிகுதியும் பின் பற்றப் படுவதில்லை.
தரம் உயர்த்தும் முறை (Grading up). தரம் குன்றிய பசுவை உயர் வகைப் பொலிகாளையுடன் சேர்த்து, இனம் பெருக்கும் முறைக்குத் தரம் உயர்த்தும் முறை என்று பெயர். இச்சேர்க்கையினால் பிறக்கும் கன்று, நல்ல குருதியும், கெட்ட குருதியும் சம அளவில் கொண்டிருக்கும். அவ்வாறு பிறந்த புதுச் சந்ததிகளை, அதே வகைச் சிறந்த பொலிக் காளையுடன் சேர்த்துக் கொண்டே போனால், படிப் படியாகக் கெட்ட குருதி குறைந்து, நல்ல குருதி பெருகித் தரம் உயர்ந்த இனம் உருவாகும். சந்ததிச் சேர்க்கை முறை (Live breeding). ஒரு சந்ததிக் கன்று, மற்றொரு சந்ததிக் காளையைச் சேர்க்கும் இம்முறை வழக்கத்தில் மிகுதியும் உள்ளது.
தேர்வுச் சேர்க்கை முறை. ஒரே இனத்திற்குள்ளேயே தேர்ந்தெடுக்கப்பட்ட காளையுடன், பசுவைச் சேரச் செய்யும் முறைக்குத் தேர்வுச் சேர்க்கை என்று பெயர். இச்சேர்க்கையில் பிறக்கும் கன்று, உயர்ந்த வகையாக விளங்குகிறது.
இன்று பரவலாகக் கையாளப் படும் முறை, செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்யும் (Artificial insemination) முறையாகும். இம்முறையில், காளையும், பசுவும் ஒன்றுக்கொன்று நேராகச் சேருவதில்லை. உயர்ந்த வகைக் காளை விந்தைச் சேகரித்துப் பல பசுக்களைக் கருத்தரிக்கச் செய்கிறார்கள். இதற்கெனப் பயனாகும் ஒரு கருவி மூலம் ஒரு துளி விந்தைப் பசுவின் கருப்பையில் நேராகச் செலுத்திக் கருத்தரிக்கச் செய்வர். ஒரு காளை, ஒரு பசுவைக் கருத்தரிக்கச் செய்யும் விந்தைச் சேமித்து, இம்முறையில், நூற்றுக் கணக்கான பசுக்களைக் கருத்தரிக்கச் செய்யலாம். இயற்கை முறையில், சில சமயம் பசு கருத்தரிக்காமல் போய் விடுவது பசுவை உறுதியாகக் கருத்தரிக்கச் செய்யும். பொருளாதார முறையிலும் இது சிக்கனமானது.
வெக்கை. இது ஒரு கடுமையான தொற்று நோயாகும். இது மிக விரைவில், ஏனைய பசுக்களுக்கும், பரவித் தாக்கக் கூடியது. காய்ச்சல் மிகுதியாக இருத்தல், மூக்கு, கண், வாய், ஆசன வாய் போன்ற உறுப்புகள் சிவந்திருத்தல் ஆகியன இந்நோயின் அறிகுறியாகும். நுண்ணுயிர்க் கொல்லியால், வாய்ப் பகுதியை நன்றாகக் கழுவுதல், மலச்சிக்கலைப் போக்க விளக்கெண்ணெய் தருதல், நன்கு செரிமானம் ஆகக் கஞ்சியுடன் 25 துளி கார்பாலிக் அமிலம் தருதல், நோய் வாய்ப் பட்ட மாட்டைத் தனித்து வைத்தல் இவை, இந்நோயைக் குணப் படுத்த உதவும்.
வெக்கையில் பல வகை உண்டு. அவை, அனல் பறந்த வெக்கை, அவல் வெக்கை, அழல் வெக்கை, உடல் வெக்கை, உள் வெக்கை, குடல் வெக்கை, சீத வெக்கை, குத வெக்கை, பெரு வெக்கை, வறு வெக்கை, வெப்பு வெக்கை போன்றவையாகும்.
அனல் பறந்த வெக்கை. சிறுநீர், குருதி போல் காணப் படுதல், இந்நோயின் அறிகுறியாகும். பச்சைப் பயிறு, எள், தென்னம்பாளை ஆகியவற்றைச் சம அளவில் கலந்து, அரைத்து, மோரில் கலந்து கொடுத்தால், இந்நோய் குணமாகும்.
அழல் வெக்கை. சாணத்துடன் சீதம் கலந்து வருதல் இந்நோயின் அறிகுறியாகும். வசம்பு, கவிழ் தும்பை இரண்டையும் சம அளவு எடுத்து, இடித்துச் சாறு பிழிந்து, எண்ணெய் கலந்து கொடுத்தால், இந்நோய் குணமாகும்.
உடல் வெக்கை. கருநொச்சி இலை அல்லது இலவம் இலை இரண்டினுள் ஏதேனும் ஒன்றைக் கைப்பிடி அளவு காலை, மாலை இரு வேளை கொடுத்து வந்தால், இந்நோய் குணமாகும்.
உள் வெக்கை. அசை போடாமலிருத்தல், சிறுநீர் குறைந்து வருதல், உடல் சிவந்து விடுதல், சாணம் தீய்ந்து வருதல், இவை இந்நோயின் அறிகுறியாகும். நெய், மிளகு இவற்றுடன் அகத்திப் பட்டைச் சாறு கலந்து கொடுத்தால், இந்நோய் குணமாகும்.
குடல் வெக்கை. பெரும் இரைச்சலுடன், சாணம் கழித்தல், குடல் இற்று விழுதல் ஆகியன இந்நோயின் அறிகுறியாகும். ஒரு பிடி பிரண்டை, ஒரு கொத்து மிளகாய் இரண்டையும் மை போல நன்கு அரைத்துக் காட்டாமணக்கு இலையுடன் கொடுத்தால், இந்நோய் குணமாகும்.
சீத வெக்கை. உணவில் விருப்பமின்மை, மூக்கிலிருந்து அடிக்கடி நீர் வடிதல், தலை நடுக்கம், மயிர் சிலிர்த்தல் இவை இந்நோயின் அறிகுறியாகும். கற்பூரவல்லி இலையை அரைத்து, நல்லெண்ணெயில் குழைத்துக் கொடுப்பதாலும், எள்ளை நன்கு அரைத்து, வெண்ணெயில் கலந்து, உருட்டித் தருவதாலும், இந்நோய் குணமடையும்.
சூத வெக்கை. சாணத்துடன் குருதி வருதல், சாணம் கழிசலாக வெளி வருதல், கால்கள் நிலை கொள்ளாது நடுங்கியபடி இருத்தல், உணவில் விருப்பமின்மை இவை இந்நோயின் அறிகுறியாகும்.
பெரு வெக்கை. சாணம் கெடு நாற்றமாக வீசுதல் இந்நோயின் அறிகுறியாகும். கடுக்காய், கடப்பம் பட்டை இரண்டையும் நன்றாக அரைத்து, மோரில் கலந்து கொடுத்தல், சிறிது நேரம் கழித்து நீர் தருதல் ஆகியவற்றால் இந்நோய் குணமாகும்.
வறு வெக்கை. சாணம் ஆட்டுப் புழுக்கைப் போலச் சிறு, சிறு உருண்டையாக வெளி வருதல் இந்நோயின் அறிகுறியாகும். அதிமதுரம் , சீரகம், கிராம்பு, செண்பகப் பூ. ஏலக்காய் இவற்றை அரைத்து, எலுமிச்சம் பழம், பால் கலந்து கொடுக்க, இந்நோய் குணமாகும்.
வெப்ப வெக்கை. சாணம் சீதமாகக் கழிதல், மலச் சிக்கல், வயிற்றுப் பொருமல், களைப்படைதல், உணவில் விருப்ப- மின்மை ஆகியன இந்நோய்க்கான அறிகுறியாகும். மிளகு, கடுகு, கடுக்காய், வெந்தயம், புழுங்கலரிசி போன்றவற்றை வறுத்து, பின்னர் வேக வைத்து, அதனுடன் இந்துப்புப் பொடியைக் கலந்து தர, இந்நோய் குணமாகும்.
அடைப்பான். மாடு பெருத்து இருத்தல், மிகையான காய்ச்சல், வாய், மூக்கு ஆகியவற்றில் குருதி, நீர் வடிதல், சாணத்தில் குருதி காணப் படல் ஆகியன இந்நோயின் அறிகுறியாகும். இது ஒரு கொள்ளை நோய்; ஆதலால், இந்நோயால் தாக்குண்ட மாடுகள் சில நேரங்களில், இறந்து விடுகின்றன. இறந்த மாடுகளை ஆழக் குழி வெட்டிப் புதைக்க வேண்டும். இல்லையெனில், இறந்த மாட்டினின்று வெளி வரும் நோய் நுண்ணுயிரிகள் மூலம், மற்ற மாடுகளுக்கும் இந்நோய் பரவும். மிளகாய், கருணைக் கிழங்கு, புளி இவற்றைச் சம அளவு எடுத்து, அரைத்து உருண்டையாக்கிக் கொடுக்க, இந்நோய் குணமாகும். ஆனால், அரிதாகவே பயனளிக்கும்.
மந்த அடைப்பான். வாயை அடிக்கடி கோணிக் கொண்டு திருகிக் கொள்ளுதல், சோர்ந்து காணப் படல், இவை இந்நோயின் அறிகுறியாகும். வெதுப்படையையும், ஓட்டாடையும் சேர்த்து அரைத்துப் பசும் மோரில் கலந்து கொடுக்க, இந்நோய் குணமாகும்.
உள் அடைப்பான். வாயில் நீர் ஒழுகுதல், கண்ணைப் பாதி திறந்தும், திறக்காமலும் இருத்தல், இவை இந்நோயின் அறிகுறியாகும். மிளகு, அகத்திப் பட்டை இவற்றின் சாற்றை நெய்யில் கலந்து கொடுக்க, இந்நோய் குணமாகும். மிளகாய், வெற்றிலையை இடித்து உள்ளுக்குக் கொடுக்கலாம்.
வயிற்று அடைப்பு. வயிற்றில் அளவுக்கு மீறித் தீவனம் இருந்தால், வயிறு அடைப்பு ஏற்படும். இடப் பக்க வயிறு பருத்து இருத்தல், நா வறட்சி,நாடி படப்படப்பாக இருத்தல், இந்நோயின் அறிகுறியாகும்.
நீர் அடைப்பான். மழைக்குப் பின் முளைக்கும் புல்லை அளவுக்கு மேல் தின்பதால், இந்நோய் ஏற்படுகிறது. வயிற்றில் நீர்ப் பகுதியில் வீக்கம், சிறுநீர் கழித்தலில் துன்பம், இவை இந்நோயின் அறிகுறியாகும். பேதிக்குத் தந்து விட்டு, வீங்கிய இடத்தில் ஆடாதொடை இலைச் சாற்றுடன், பெருங்காயத்தைக் கரைத்துச் சூடு செய்து பூச, இந்நோய் குணமாகும்.
மலக் கட்டு. சாணம் போடாமை, முக்கி முக்கிப் புழுக்கையாகச் சாணம் போடுதல், இவை இந்நோயின் அறிகுறியாகும். 1 கி.கி. உப்பு, சுக்குத் தூள் இரண்டையும் சுடுநீரில் கலந்து கொடுக்கச் சாணம் நன்கு கழியும்.
வாய் நோய். வாயில் எச்சில் ஒழுகுதல், நுரை, நுரையாக வருதல்,வாயில் முள், முள்ளாக இருத்தல், சரியாக உணவு உண்ணாமலிருத்தல், இவை இந்நோயின் அறிகுறியாகும். சீனாக் காரத்தை, இள வெப்ப நீரில் சேர்த்தம் கலக்கி, வாயைக் கொப்பளிக்கச் செய்து கழுவலாம். கடுக்காய், பூண்டு, திப்பிலி இவற்றை அரைத்துத் தேவையான அளவு நெய்யில் கலந்து கொடுக்க, இந்நோய் குணமாகும்.
மூக்கு நோய். ‘கர், கர்’ என்று குறட்டை விடுதல், வாயில் நீர் வடிதல், இவை இந்நோயின் அறிகுறியாகும். இதைக் காற்றாடி நோய் என்றும் கூறுவர். சுக்கு, குப்பை மேனிச் சாறு, இவற்றை அரைத்துக் கொடுக்க இந்நோய் குணமாகும்.
தலை நோய். வாயில் எச்சில் ஒழுகிக் கொண்டிருத்தல், வீங்கிய வயிறு, நிலை கொள்ளாமல் தவித்தல், இவை இந்நோயின் அறிகுறியாகும். மருப்பூண்டுச் சாறு, பெருங்காயம் இரண்டையும் தேவையான அளவு எடுத்து அரைத்து, உடல் முழுவதும் தடவினால், இந்நோய் குணமாகும். மேலும், இதைக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து உருட்டி, உள்ளுக்கும் தரலாம்.
காது நோய். காதுகளைச் சுற்றிச் சிறு சிறு கட்டிகள் இருப்பது, காதில் இருந்து நீர் கசிவது, இவை இந்நோயின் அறிகுறியாகும். கற்பூரம், துத்தம் துரிசு இவற்றைத் தூளாக்கித் தேங்காய் எண்ணெயுடன் கலந்து, சூடாக்கிப் பின்னர், காதில் சில துளிகள் இரு நாள்கள் இரு வேளை விட, இந்நோய் குணமாகும்.
வாத நோய். இந்நோயின் போது, ஊன்றி நடக்க முடியாத அளவிற்குக் கால் வீங்கி இருக்கும். உடற்சூடும், மலச்சிக்கலும் காணப் படும். மாவிலங்க இலைகளை வெள்ளாட்டு நீர் விட்டு இடித்து, ஒரு நாள் ஒன்றுக்கு 1 லி. சாறு வீதம் தொடர்ந்து மூன்று நாள்களுக்குக் கொடுத்து வர, இந்நோய் குணமாகும்.
யானை வாதம். நான்கு கால்களும் பெரிதாக வீங்கிக் காணப் படுவது இந்நோயின் அறிகுறியாகும். எருக்கம் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, அதன் சக்கையைத் துணியிற் போட்டு மூடி, வெந்நீரில் ஒற்றடம் கொடுக்க, இந்நோய் குணமாகும்.
நடுங்கு வாதம். நான்கு கால்களும் நடுங்குதல், கண்கள் களையிழந்து காணப்படல், வாயிலிருந்து நீர் வடிந்த படி இருத்தல், இவை இந்நோயின் அறிகுறியாகும். எள்ளை நன்றாக இடித்து, நீர்ப்பூலா வேரைச் சேர்த்து அரைத்துப் பசும் பாலில் கலந்து தர, இந்நோய் குணமாகும். வயிற்றுப் பூச்சி. உடல் தேறாமை, நாளடைவில் இளைப்பு, இவை இந்நோயின் அறிகுறியாகும். பழைய புளி, 6 எலுமிச்சம் பழம், ஆமணக்கு இலை இம்மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொடுக்கப் பூச்சிகள் சாணத்துடன் வெளியே வந்து விடும்.
இருமல். உச்சந்தலை சூடாக இருத்தல், மூக்கு, கண் இவற்றிலிருந்து நீர் வடிந்த படி இருத்தல், காது காய்ந்து விடல், அடிக்கடி பெருமூச்சு விடல், சுறுசுறுப்பின்மை, இவை இந்நோயின் அறிகுறியாகும். ஆளி விதை எண்ணெய் எடுத்து, அதில் நீலகிரித் தைலத்தைக் கலந்து சிறிது சூடு படுத்திக் கொடுக்க, இந்நோய் குணமாகும்.
நாவரணை. நாக்கின் கீழ்ப் புறத்தில் பச்சை நரம்போடுதல், மூக்கின் முனை பளபளப்பாக இருத்தல், உடல் இளைத்துக் காணப் படுதல், வாயிலிருந்து வழ வழ என்று நீர் வடிதல், நாக்கு தடித்துக் காணப் படல், உணவு உண்ணாமை, இவை இந்நோயின் அறிகுறியாகும். நாக்கைப் புரட்டிக் கத்தியின் மூலம் சுரண்டி, உப்பைத் தூள் செய்து, புளியில் பிசைந்து சுரண்டிய நாக்கில் தேய்த்து விட்டு, தேவையான அளவு பசும் பாலுடன் சீரகம்,வெந்தயம், ஓமம், கருப்பட்டி, வெல்லம், நல்லெண்ணெய் இவற்றை அரைத்துப் பசும் பாலிலும், நல்லெண்ணெயிலும் கலக்கி, நாள் தோறும் மூன்று வேளை மூன்று நாள்கள் தொடர்ந்து கொடுக்க, நாவரணை நீங்கிக் கால்நடை நலம் பெறும்.
மூக்கு சிவப்பு நிறமாகி,தடித்து நீர் இறக்குமானால், கடுக்காய், மஞ்சள், மிளகு, ஓமம், வெற்றிலை, கடுகு, ரோகிணி, நிம்பக் கொழுந்து இவற்றைச் சம அளவில், தேவையான அளவு எடுத்துச் சுடுநீர் விட்டு அரைத்து, உருட்டிக் காலை மாலை இரு வேளை கொடுக்கக் குணமாகும். மூக்கில் சளி, கோழை இருந்தால், குட்டட்டி, மாதுளைக் காயிலை, குங்கிலியம், உப்பு இவற்றைத் தேவையான அளவு எடுத்து அரைத்து, நசியமிடுதலின் மூலம் மருத்துவமளிக்கலாம். மூக்கில் குருதி வந்தால், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவலாம். ஆட்டுப் புழுக்கை, சீனாக்காரம் இரண்டையும் தூள் செய்து மூக்கிலிட்டு வரலாம். —செ. மரியசூசைநாதன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 420)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m4c68jfu/
தமிழ்“பசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m4c68jfu/APA
Oliyon Research. (2026). பசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m4c68jfu/MLA
"பசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m4c68jfu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment