நுரையீரல், தமனித் தடுப்பு இறுக்கம்
nuraiyīral, tamaṉit taṭuppu iṟukkam
இதய வலக் கீழறையின் குருதி வெளியேற்றத் தடை ஏற்படக் காரணமாக நுரையீரல் தமனித் தடுப்பு இயக்கம் (pulmonary stenosis) அமைகிறது.
இதய வலக் கீழறையின் குருதி வெளியேற்றத் தடை ஏற்படக் காரணமாக நுரையீரல் தமனித் தடுப்பு இயக்கம் (pulmonary stenosis) அமைகிறது. இவ்விறுக்கம் வால்வின் மேலோ, கீழோ, தடுப்பு மட்டத்திலோ ஏற்படலாம்.
ரூபெல்லா என்னும் மீநுண்ணுயிரி கருவில் உள்ள குழந்தையைப் பாதித்தால், நுரையீரல் தமனிகளின் பல இடங்களில் இறுக்கம் ஏற்படலாம். மேலும், மரபு வழியாகவோ, தனிப்பட்ட முறையிலோ, இவ்வகை பல இட இறுக்கங்கள் ஏற்படலாம். தடுப்பு இறுக்கம் ஏற்பட்டுள்ள இடத்தை விட, இறுக்கத்தின் கடுமை அளவே நோயின் போக்கை அறுதியிடுகிறது. மிதமான தடுப்பு இறுக்கத்தின் கடுமை அளவே நோயின் போக்கை அறுதியிடுகிறது. மிதமான தடுப்பு இறுக்கத்தில் அறிகுறி இராது. நாளடைவில், நோயின் தீவிரத்திலும், பெரிய மாற்றங்கள் நிகழ்வதில்லை. ஆனால், கடுமையான இறுக்கத்தில், நோயாளியின் வயது முதிர்ச்சிக்கு ஏற்பக் காலப் போக்கில், நோய் கடுமையாகிறது.
நோயின் தன்மை. இந்நோய் மூச்சுத் திணறல், சோர்வு, மயக்கம், வலக் கீழறையின் திறன் குன்றல் ஆகிய அறிகுறிகளை உண்டாக்கும். அன்றாடச் செயற்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் போது, நுரையீரலுக்குச் செல்ல வேண்டிய மிகையான குருதிப் பாய்வு தடைப்படுவதால், மேற்கூறிய அறிகுறிகள் மிகையாகின்றன.
கடுமையான தடுப்பு இறுக்கம் உள்ள போது, வலக் கீழறை சுருக்க அழுத்தம், இடக் கீழறையின் சுருங்கல் அழுத்தத்தையும் விஞ்சி விடும். வலக் கீழறை உருப் பெருக்கம் அடைவதால், அதன் இணங்கு திறன் (compliance) குறைகிறது. இதனால், கீழறைகள் குருதி நிரப்புதல் (ventricular filling), இயல்பு நிலையில் நிகழ வல மேலறை கூடுதல் ஆற்றலுடன் சுருங்க வேண்டியுள்ளது. நோய் அறுதியிடலுக்கு மார்பு நடு எலும்பின் வலப் புறப் பகுதி புடைத்து இருத்தல், இதயச் சுருக்கல், உந்து முணுமுணுப்பு (systolic ejection), தொடு அதிர்வு (palphale thrill) ஆகிய அறிகுறிகள் உதவும்.
ஆய்வு. மிதமான பாதிப்பில் இதய மின் வரைபடம் இயல்பாக இருக்கலாம். சற்றுக் கடுமையான அல்லது மிகக் கடுமையான பாதிப்பில் வலக் கீழறை உருப் பெருக்கம், வல அச்சுப் பிறழ்தல் (right axis deviation) போன்ற மாற்றங்களும் இருக்கும். எக்ஸ் கதிர் மார்புப் பட ஆய்வில், மிதமான மற்றும் சற்றுக் கடுமையான பாதிப்புகளில் மாற்றங்கள் இரா. தடுப்பு இறுக்கத்திற்குப் பின், அருகிலிருக்கும் முதன்மைத் தமனி அல்லது இடப்புற நுரையீரல் தமனி விரிவுற்றுக் காணப் படலாம். மிகக் கடுமையான இறுக்கத்தில், வல மேலறையும், வலக் கீழறையும் பெருக்கமுற்றுக் காணப் படுவதுடன், நுரையீரல் நாளக் குறிகள் குறைந்துமிருக்கும்.
மருத்துவம். சற்றுக் கடுமையான, மிகக் கடுமையான தடுப்பு இறுக்கத்திற்குப் பெரும்பாலும் அறுவை மட்டுமே மருத்துவமாகும். நுரையீரல் கடைத் தமனிகளின் (peripheral arteries) பல இட குறுகல் பாதிப்பு பொதுவாக, அறுவை செய்ய இயலாத நிலையாகும். இருப்பினும், ஒரு கிளை நாளத்தில் தனித்துள்ள இறுக்கத்ததையோ, முதன்மைத் தமனி விரியும் இடத்தில் உள்ள இறுக்கத்தையோ, அறுவை மூலம் சீராக்கலாம். —சி. ஆதித்தன் துணை நூல். Maxwell M. Wintrobe (Ed.) et. al., Harrison's Principles of Internal Medicine, Seventh Edition, McGraw–Hill Kogakusha, Ltd., Tokyo, 1974.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 115)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kz7ru5kh/
தமிழ்“நுரையீரல், தமனித் தடுப்பு இறுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kz7ru5kh/APA
Oliyon Research. (2026). நுரையீரல், தமனித் தடுப்பு இறுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kz7ru5kh/MLA
"நுரையீரல், தமனித் தடுப்பு இறுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kz7ru5kh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment