இராசன், சர்.பி.டி
irācaṉ, car.pi.ṭi
பொன்னம்பல தியாகராசன் என்ற பி.டி.
பொன்னம்பல தியாகராசன் என்ற பி.டி. இராசன் மதுரை மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் உத்தமபாளையம் என்னும் ஊரில் கி.பி. 1892–இல் பிறந்தார். தந்தையார் தியாகராச பொன்னம்பல முதலியார்; தாயார் மீனாம்பாள் அம்மையார். இராசன் உடன்பிறந்த பெண்கள் இருவர். இவர் மனைவி கற்பகாம்பாள். இவருக்கு இரண்டு ஆண் மக்கள்; மூன்று பெண் மக்கள்.
இராசன் மதுரைச்சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தபின் மேற்படிப்பிற்கு 1909-இல் இங்கிலாந்து சென்றார்; அங்குக் கேம்பிரிட்சு இலீசு பள்ளியில் (Leys School) மூன்றாண்டுகள் படித்துப் பின்னர் 1912–இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்; பட்டப்பேரறிஞர் (Bar-at–Law) என்ற பட்டர் பெற்றார்.
இவ்வாறு இளம்வயதில் பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆங்கில நாட்டில் வாழ்ந்ததன் பயனாய்ப் பெற்ற அந்நாட்டுப் பழக்கவழக்கங்களை இராசனால் உடனடியாக விடமுடியவில்லை. பல் ஆண்டுகள் உறுதியுடன் முயன்று தமிழ்நாட்டுப்
இராசன், சர்.பி.டி.
பழக்க வழக்கங்களைத் தமதாக்கிக் கொண்டதும் அன்றிச் சிறந்த சமயப் பற்றாளராகவும் விளங்கினார்.
இராசன் இங்கிலாந்திலிருந்து திரும்பிய மறு ஆண்டே (1920) சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இவர் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்நாடும் ஆத்திரப்பிரதேசமும் இணைந்த சென்னை மாகாணத்தில், மிண்டோ மார்லி சீர்திருந்தப்படி நீதிக்கட்சி முதல் முதலாக 1920–இல் அமைச்சரவை அமைத்தது. அப்போது சட்டமன்ற நீதிக்கட்சிக் கொறடாவாக (Whip) இராசன் விளங்கினார். அடுத்து 1926, 1930 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் இராசனே நீதிக் கட்சியின் சார்பாக வெற்றி பெற்றுச் சட்ட சபைக்குச் சென்றார். பி. முனிசாமி நாயுடு தலைமையில் 1930–இல் அமைந்த அமைச்சரவையில் இராசன் அமைச்சராகப் பதவி வகித்தார். அன்று முதல் 1937 வரை ஏழு ஆண்டுகள் தொடர்ந்து இவர் அமைச்சராக இருந்தார். பின்னர் 1952 பொதுத் தேர்தலிலும் நீதிக்கட்சியின் சார்பில் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்வு பெற்றார்.
இரண்டாம் உலகப்போர் 1939–இல் தொடங்கியது. அப்போது ஆங்கில அரசுக்கு உதவியாக இவர் ஆற்றிய அரும்பணிகளைப் பாராட்டி இவருக்குச் ‘சர்’ (Sir) பட்டம் வழங்கப்பட்டது. ஆனால், தமிழ் மக்கள் இவருக்குத் ‘தமிழவேள்’ என்னும் பொருத்தமான பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தனர்.
இராசன் குடும்பம் வழிவழியாகத் தெய்வ பக்தி உடையது. இவர் வைணவக்கோயில், சைவக்கோயில் என்று பாகுபாடு சுருதாதவர். சென்னை வடபழனியாண்டவர் கோயில் திருப்பணியை 1928–இல் நடத்தினார். திருவாதவூர் திருக்கோயில் திருப்பணி, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருப்பணி (1963) ஆகியவற்றின் பொறுப்பை இவரே ஏற்றார். சைவ சமயத்தைக் காப்பாற்றிய மங்கையர்க்கரசிக்குப் புதிதாக ஓர் அழகிய மண்டபம் அமைத்தார். தென்காசி, திருவாலங்காடு கோயில்களுக்கும் திருப்பணி செய்து குடமுழக்கு நடத்தினார்.
இராசனின் சமயப் பணிகளில் பெரிதும் குறிப்பிடத்தக்கது 1949–இல் சபரிமலை ஐயப்பன் சிலையைத் தமிழ்நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்றதாகும்.
பாண்டித்துரைத் தேவர் 1901–இல் தோற்றுவித்த மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு 1950 முதல் இராசன் துணைத்தலைவராக இருந்தார். சங்கத்தின் பொன்விழாவை 1956–இல் மதுரையில் சிறப்பாக நடத்தினார். மதுரைத் திருக்கோயிலின் வடக்கு ஆடி வீதியில் திருவள்ளுவர் கழகம் 1941–ஆம் ஆண்டு அமைந்ததற்கும், 1963–இல் அதற்கு ஓர் அழகான மண்டபம் கட்டப் பெற்றதற்கும் இராசனே முக்கியக் காரணமாக இருந்தார்.
இராசனைப் போன்று மக்களிடம் நெருங்கிய தொடர்பு கொண்ட சான்றோர் ஒரு சிலரேயாவர். குடியரசுத் தலைவர் முதல் கூலியாள் வரை இராசன் வேற்றுமை இல்லாது பண்புடன் பழகினார். இவர் 1974–இல் காலமானார். கி.ப.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 41)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kz5spu5p/
தமிழ்“இராசன், சர்.பி.டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kz5spu5p/APA
Oliyon Research. (2026). இராசன், சர்.பி.டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kz5spu5p/MLA
"இராசன், சர்.பி.டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kz5spu5p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment