உயிர்கள் பல என்பதை இந்து சமயம் ஏற்றுக் கொள்கிறது என்று பொதுவாகக் கூறலாம். ஒரு சாரார் உயிர்கள் (Souls) பலவாயினும் பொருள் அளவில் பரம்பொருளுக்கு வேறானவையல்ல என்பர். ஒரு கதிரவன் பல குளங்களில் அதன் உருவங்களைக் காட்டுவது போல. எல்லா இடங்களிலும் பரந்திருக்கும் ஆகாயம் தனித்தனிக் குடங்களிலும் இருப்பதை யாவரும் அறிவர். இதே போல் ஒவ்வோர் உடலிலும் இருக்கும் பரம்பொருளை ‘உயிர்’ என்று தனிப் பெயரிட்டழைக்கின்றனர். வேறு சிலர் ‘பிரதிபிம்பம்’ என்று கூறாமல், பரம்பொருளைப் போன்று உயிர்களும் அறிவுடைய சித்துப் பொருளே என்பர். உயிர்கள் கட்டுப்பட்ட நிலையில் உள்ளன. ஆனால், பரம்பொருள் சுதந்திரமானது. இப்படியாக வாழ்க்கை அனுபவங்களில், உயிர்கள் பலவாக இருப்பதையும் அவை சித்துப் பொருளாக இருக்கும் இயல்பையும் கடைசியில் பரம்பொருளை அடைவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதையும் எல்லா இந்துக்களும் உடன்படுகின்றனர். உயிர்களுக்கு இரண்டு இயல்புகள் உள்ளன; 1. கட்டுண்ட நிலை, 2. விடுபட்ட (முக்தி பெற்ற) நிலை. உயிரின் கட்டுண்ட நிலையினைப் பலவகையாக விளக்குவர்; சிலர் அறியாமை (அவித்தை) என்பர். சிலர் திரிபு உணர்ச்சி எனக்கூறி அதனை ‘மாயை’ என்று கூறுவர். சிப்பியை (Shell) வெள்ளி என்றும் கயிற்றைப் பாம்பு என்றும் சொல்வதையே திரிபுணர்ச்சி என்பர். சிலர் மாயை என்பர். இன்னும் சிலர் ‘ஆணவம்’ என்பர். ஆயின் இன்றுள்ள நிலை கட்டுண்ட நிலை என்பதில் மாறுபட்ட கருத்துகள் இல்லை. இக்கட்டு எவ்வாறு ஏற்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. இக்கட்டு அனாதி; தொடக்கங் கூற முடியாது என்பர் சிலர். சிலர் தொடக்கத்தில் ஆன்மா கட்டில்லாமல் இருந்தது; கட்டு இடையே ஏற்பட்ட ஒன்றே என்பர். ஆயின் கட்டுண்ட நிலையை உயிர்களின் இயல்பு எனக் கூறும் வழக்கில்லை. இடையே வந்து சேர்ந்த காலத்தையும் கூறியதில்லை. எல்லா இந்துக்களும் இக்கட்டிலிலிருந்து விடுபட ‘ஞானப் பேற்றையே’ வற்புறுத்துவர். கட்டிலிருந்து விடுபட ஞானசாதனை வேண்டும் என்பதே இந்துக்களின் நம்பிக்கை. ஞானப்பேற்றின் விளைவாக ஒருவன் அடைகின்ற தெய்வானுபவமே இந்துக்களின் குறிக்கோள். இந்த அனுபவத்தை அத்துவிதம் என்பர் பலர். துவிதம் என்பர் சிலர். அத்துவிதம் என்பது இரண்டற்ற நிலை, தெய்வானுபவத்தில் நான் வேறு, தெய்வம் வேறு என்றநிலை இல்லை. இவ்வத்துவிதத்தையும் பல நிலைகளில் விளக்குவர். கேவலாத்துவிதம் என்பது அத்துவித அனுபவத்தில் ஒரு பொருளே உண்டு எனக் கூறும் கோட்பாடு. தெளிந்த ஞானம் பிறந்துவிடும்போது ‘உயிர்கள்’ என்ற பன்மை உண்மையன்று; உலகும் உண்மையன்று; இறை ஒன்றே உண்மை. எனவே, உயிர்கள் பலவாகத் தோன்றலும் பிற உலகத் தோற்றமும் உண்மையல்ல; ஞானக் குறைபாட்டால் தோன்றும் தோற்றமே என்பர். ஞானக் குறைபாட்டை மயக்க அறிவு என்றும் அவித்தை என்றும் கூறுவர். இறைவன் என்ற உண்மை வெளிப்படத் தோன்றாமலிருப்பதற்கு மாயை காரணமென்றும் அம்மாயை விலக்கப்பட முடியாதது என்றும் கூறுவர். ஞானயோகத்தால் மாயை என்ற போர்வை அகற்றப்பட்டுப் பிரமமே உண்மை என்பதைத் தெளியலாம். ஞானத்தால் உயிர்கள் பலவல்ல என்று அறியலாம். கட்டிலிருந்து விடுபட்ட ஆன்மாவும் பிரமமும் ஒன்றே என்பதாலும், கட்டிலிருந்து விடுபட ‘அகம் பிரமாஸ்மி’ என்னும் மகா வாக்கியத்தைத் தியானிப்பதாலும், இறைவனருளில் நம்பிக்கை கொண்டு பக்தி நெறியில் நிற்பவர்கள் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை; பிரமத்தை மறுத்து, ‘நானே பிரமம்’ எனக் கூறும் இவர்களை இகழ்வதுண்டு. ஆயினும், இவர்கள் கோட்பாட்டிலும் பக்திக்கு இடமுண்டு. இவர்கள் உலகியல் அளவில் கூறப்படும் ‘நான்’ என்பதும், வழிபடும் ‘ஈசுவரன்’ என்பதும் ஒன்றே எனக் கூறுவதில்லை. ‘நான்’ என்பது நிலையற்ற போதமே என்றும், நிலையான ‘நான்’ பரப்பிரமத்திற்கு வேறானதன்று என்றும் கூறி, இறுதியில் ஒரே பொருள்தான் உண்டு என்பதை வற்புறுத்துகிறார்களேயன்றி, உலகியலளவில் நான் உண்டு, ஈசுவரன் உண்டு, உலகுண்டு என்று நம்புகின்றவர்களேயாவர். இராமானுசரால் வளர்க்கப்பெற்ற வைணவக் கோட்பாட்டையே ‘விசிட்டாத்துவிதம்’ என்பர். சிவ-பரத்துவத்தை உடன்படும் சைவர்களிலும் ‘விசிட்டாத்து விதிகள்’ உண்டு என்பர். இவர்கள் கேவலாத்து விதிகள் கூறுவது போன்று இறுதியான உண்மை ஒன்றே என்று கூறினாலும், அவ்வொன்று விசேடணத்தோடு கூடியது என்பர். இக்கருத்துப்படி, பிரமத்துக்கு உயிர்கள், உலகு என இரண்டு அடைகள் உண்டு. வேறொரு வகையில் கூறுவதென்றால் பிரமத்துக்கு உலகு, உயிர்கள் என்ற இரண்டு உடல்கள் உண்டு எனலாம். இவ்வைணவ சித்தாந்தப்படி 1. அசித்து (உடல், உலகு), 2. சித்து (உயிர்), 3. ஈசுவரன் என்னும் மூன்று பொருள்களும் அழியாதவை. அடிப்படைச் சடத்திலிருந்து (மூலப்பிரகிருதி) மண், நீர் முதலிய 24 தத்துவங்கள் வளர்ந்துள்ளன என்றும், சித்து அல்லது உயிர் 25–ஆம் தத்துவம் என்றும், அசித்திலும் சித்திலும் உள்ளுறை பொருளாக ஈசுவரன் விளங்குகிறான் என்றும் கூறுவர். உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பே அசித்து, சித்து என்னும் இரண்டிற்கும் ஈசுவரனுக்கும் உள்ள தொடர்பு. இத்தொடர்பினை வற்புறுத்துவதன் வழியாக இறுதியான உண்மை ஒன்றே என்பதை இக்கோட்பாடும் ஏற்றுக் கொள்கிறது. அவ்வுண்மை இரண்டு சரீரங்களோடு கூடியது என்பதே இதற்கும் கேவலாத்துவிதத்திற்கும் உள்ள வேறுபாடு. மெய்கண்டாரால் விளக்கப்பெற்ற சைவ சித்தாந்தமும் அத்துவிதத்தை விளக்குவதே. கேவலாத்து விதிகள் பிரமம் ஒன்றே உண்மை; ஏனைய உலகும் உயிர்களும் தோற்றம் என்பர். விசிட்டாத்துவிதிகள் பிரமம் ஒன்றே உண்மை; உலகு, உயிர்கள் அவ்வுண்மையின் அவயவம் என்பர். சைவ சித்தாந்திகளோ பிரமம், உயிர்கள், உலகம் ஆகிய மூன்றும் உண்மை என்பர். இம்மூன்று பொருள்களையும் ஒத்துக் கொண்டாலும், மூன்று பொருள்களும் தன்மையில் வேறுபட்ட பொருளாகக் கொண்டாலும் தங்களுடைய கொள்கையை அத்துவிதம் என்றே கூறுவர். இறுதியான தெய்வ–அனுபவத்தில், ஆன்ம-அனுபவத்தில் ஆன்மாக்கள் தற்போதத்தை இழந்து சிவபோதத்தில் இரண்டற்று நிற்கும் என்ற பொருளிலேயே அத்துவிதத்தைக் கொள்கின்றனர். துவிதம் இறைவன், உலகு, உயிர்களை உண்மையானவை என ஏற்றுக் கொண்டாலும், இறைவன் ஒருவனே சுதந்திரமானவன் எனக் கூறும்; எல்லா நிலைகளிலும் இறைவனுக்கு உட்பட்டே உயிர்கள் இயங்குவதால், மோட்ச நிலையிலும் உயிர் இறைவனோடு இரண்டறக் கலத்தல் என்பதில்லை என்கிறது. துணை நூல் Radhakrishnan, S., Indian Philosophy, 2 Vols, George Allen and Winston Ltd, London, 1923–1927.