மின்னணுலியல் துறையில் சாதனங்களைச் சிறுவடிவாக்குதல் (miniaturization of equipments) என்பது மிகவும் இன்றியமையாததாகும். கருவிகளின் வடிவத்தையும், எடையையும், மின்னாற்றலையும் குறைக்க இது பயன்படும். சாதன வடிவத்தைக் குறைக்கும் போது எடை, ஆற்றல் முதலியன தாமாகவே குறையும். விண்வெளி ஆய்வுகளுக்காக அனுப்பப்படும் செயற்கைக் கோள்களில் பயன்படும். சாதனங்களின் வடிவம் சிறிதாகவும், எடை மிகக் குறைந்ததாகவும் இருக்க வேண்டும். விண்வெளியில் கிடைக்கும் மின்னாற்றல் குறைவாகவிருப்பதால் தேவையான மின்னாற்றலின் அளவையும் குறைக்க வேண்டும். பொதுவாக, திண்ம நிலைச் சாதனங்களாலும் (solid state devices), ஒருங்கிணைந்த சுற்றுகளாலும் (integrated circuits) சாதனங்களின் வடிவம் மிகவும் குறைந்துள்ளது. கேள் பொறிகள், இதயத் துடிப்பியக்கி, தொலைத் தொடர்பியல் கருவிகள், கணிப் பொறிகள், மருத்துவக் கருவிகள் முதலியவற்றிற்கு ஒருங்கிணைந்த சுற்று, வடிவத்தைக் குறைப்பதுடன், இயக்கத்திற்கு வேண்டிய மின்னாற்றலையும் குறைக்கலாம். சுற்றுகளின் செயல்படும் வேகத்திற்கும், அதன் எடைக்கும் உள்ள விகிதம் ஒரு முக்கியமான குண எண் (figure of merit) ஆகும். —சு. அர. பழனிச்சாமி நூலோதி. R. L. Peurifoy, Construction Planning, Equipment and Methods, Third Edition, Mc-Graw-Hill International Book Company, London. 1979.