இராசேந்திரன், இரண்டாம்
irācēntiraṉ, iraṇṭām
பேராதிக்க மனப்பான்மை கொண்ட பிற்காலச் சோழ வேந்தர்களுள் இரண்டாம் இராசேந்திர சோழனும் ஒருவன்.
பேராதிக்க மனப்பான்மை கொண்ட பிற்காலச் சோழ வேந்தர்களுள் இரண்டாம் இராசேந்திர சோழனும் ஒருவன். முதலாம் இராசேந்திர சோழப் பெருமன்னனின் இளைய மகனான இவன், கி.பி. 1052–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இளவரசனாக அமர்த்தப்பட்டான். இவன் கி.பி. 1054–இல் தன் அண்ணனான முதலாம் இராசாதிராச சோழனின் (கி.பி. 1018–1054) இறப்பிற்குப் பின், பரகேசரி என்னும் பட்டப் பெயருடன் சோழப் பேரரசனாக மணிமுடி சூடினான். முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன் முதலானவர்களைப் போன்று இவ்வேந்தனும் ஆதிக்கப் போர்களின் அடிப்படையில் சோழப் பேரரசை கட்டிக் காத்த பேரரசனாவான். கங்கை கொண்ட சோழபுரமே இவ்வேந்தனது ஆட்சிக் காலத்திலும் சோழரின் தலைநகரமாகத் திகழ்ந்தது.
அயல்நாட்டுக் கொள்கை
இவ்வேந்தனது மெய்க்கீர்த்திகள் ‘இரட்டபாடி ஏழரை இலக்கமுங்கொண்டு கொல்லாபுரத்துச் சயக்தம்பம் நாட்டி’, ‘திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்’, ‘திருமாது புவியெனும் பெருமாதர்’ முதலான மூன்றுவிதமான தொடக்கங்களைச் கொண்டுள்ளன. இவை இவ்வேந்தனது வெற்றிச் செயல்களைக் கூறுகின்றன.
இவனுடைய அயல்நாட்டுக் கொள்கை சோழரின் தொன்மைக் கோட்பாடான பேரரசுக்குரிய இராணுவ வளர்ச்சியைப் பேணி நின்றது. பேராதிக்க எண்ணங் கொண்ட இவ்வேந்தன் மேலைச் சாளுக்கியரையும் ஈழத்தவரையும் வென்றடக்குவதில் முனைந்து செயற்பட்டான்.
கொப்பத்துப் போர்
முதலாம் இராசாதிராசன் தன் தம்பியான இரண்டாம் இராசேந்திரனின் துணையுடன் மேலைச் சாளுக்கியரின் மீது படையெடுத்தான். கிருட்டிணா ஆற்றின் கரையில் உள்ள கொப்பத்தில் கி.பி. 1054–இல் முதலாம் சோமேசுவரன் (ஆகவமல்லன்) தலைமையிலான சாளுக்கியப் படைகளுக்கும், இராசாதிராசன் தலைமையிலான சோழர் படைகளுக்கும் கடும்போர் நிகழ்ந்தது. போரில் இராசாதிராச சோழன் கொல்லப்படவே, சோழப்படைகள் நாற்புறமும் சிதறி ஓடத் தொடங்கின. இந்நிலையில் இதனைக் கேள்வியுற்ற இரண்டாம் இராசேந்திரன் யானை மீதேறிப் போர்க்களஞ்சென்று ‘அஞ்சேல் அஞ்சேல்’ என்று தம் படைவீரர்களுக்கு வீரவுணர்ச்சியூட்டி, மீண்டும் போரில் உற்சாகத்துடன் ஈடுபடச் செய்து, சோழர்க்கு வெற்றி தேடித் தந்தான். சாளுக்கியப் படைத்தலைவர்களான சயசிங்கன், தசபன்மன், புலிமேசி, அசோகையன், ஆரையன், மொட்டையன், நன்னி நுளம்பன் என்போர் போர்க்களத்தில் மாண்டனர். ஆகவமல்லனும் மற்றப் படைத்தலைவர்களான துத்தன், வன்னியதேவன், குண்டமையன் ஆகியோர் போர்க்களத்தினின்றும் தப்பியோடினர். வெற்றி பெற்ற இராசேந்திரன் கொப்பத்துப் போர்க்களத்திலேயே சோழப் பெருமன்னனாக மணிமுடி தரித்துக் கொண்டான். இவ்வெற்றியின் நினைவாகக் கொல்லாபுரத்தில் இவ்வேந்தன் வெற்றித்தூண் ஒன்றையும் நிறுவினான். இச்செய்திகளைத் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் கல்வெட்டு விரித்துரைக்கிறது.
ஈழப்போர்
ஈழநாட்டில் சோழருக்கெதிராகத் தோன்றிய விடுதலைக் கிளர்ச்சியை ஒடுக்கப் பெரும் படை ஒன்றினை இவ்வேந்தன் கி.பி. 1058–இல் ஏவினான். சோழர் படை ஈழவிடுதலைக்குத் தலைமை தாங்கிய வீரசலாமேகன் என்ற வடஇந்திய கன்னியாகுச்சனைப் போரில் முறியடித்து, அவன் தலையையும் கொய்தது. இதனை இவ்வேந்தனது ‘வீரல் படைக் கலிங்கவர்மன் வீரசலாமேகனைக் கடகளிற்- றொடுபடக் கதிர் முடி கவித்து’ என்னும் மெய்க்கீர்த்திப் பகுதியாலும், ஈழநாட்டில், ‘சங்கிலி கனத ராவ’ என்னுமிடத்தில் காணப்படும் கல்வெட்டாலும் அறியலாம். இவ்வாறு ஈழக்கிளர்ச்சி இவ்வேந்தனால் ஒடுக்கப்பட்டது, இருப்பினும் பின்னர் விசயபாகுவின் ஆட்சிக்காலத்தில் மீண்டும் இக்கலகம் தலையெடுத்தது.
முடக்காற்றுப் போர் (கி.பி. 1060)
கொப்பத்துப் போரில் தோல்வி கண்ட ஆகவமல்லன் துவண்டுவிடவில்லை. மாறாகச் சோழரின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த தென்மைசூர்ப் பகுதியான கங்கபாடியைப் பிடித்துக்கொண்டதுடன். சோழரைப் பழிவாங்கப் பெரும்படை திரட்டிக் கொண்டிருந்தான். இதனைச் கேள்வியுற்ற இவ்வேந்தன் தன் இளவரசனான இராசமகேந்திரனையும் தன் தம்பியான இராசேந்திரனையும் துணையாகக் கொண்டு, பெரும் படையுடன் சாளுக்கியர்மீது பாய்ந்தான். கடிதுசென்ற சோழப்படை சாளுக்கியப்படைகளை முடக்காறு என்னுமிடத்தில் எதிர்த்தது. சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன், அவன் மகன் விக்கிரமாதித்தன், படைத்தலைவன் வாலதேவன், சிறப்புத் தளபதி இருகயன் ஆகியோர் சாளுக்கியரின் வெற்றிக்குக் கடும்போர் புரிந்தனர். வாலதேவன் உள்ளிட்ட படைத்தலைவர் பலர் போரில் மாண்டனர். ஆகவமல்லன், இருசயன் முதலானோர் போர்க்களத்தினின்றும் தப்பியோடினர். சோழர் வெற்றிக்கொடி நாட்டினர். இவ்விதமாக இராசேந்திரன் தன் வன்மையால் தன் மேலாதிக்கத்தை அண்டை நாடுகளில் நிலைநாட்டினான்.
உள்ளாட்சி நிருவாகம்
தன் பன்னிரண்டு ஆண்டுக் கால ஆட்சியில் பெரும் பகுதியை இவன் போர்களில் கழித்தபோதிலும், நாடாட்சியில் நாட்டம் செலுத்தவும் தவறவில்லை. ஆட்சித்திறன் கொண்ட இவன், தன் மக்களையும் உடன்பிறப்பினரையும் உறவினர்களையும் அரசப் பேராளர்களாக அமர்த்தி, அவர்களது ஒத்துழைப்புடன் ஆட்சியை நன்கு நடத்தினான். முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மண்டல ஆட்சிமுறை இவன் காலத்திலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டது. அரசக் குடும்பத்தைச் சேர்ந்த பதின்மூன்று பேர் இவனது அரசாட்சியில் பங்கு கொண்டு சில நிலப்பகுதிகளை ஆண்டுவந்ததனை மணிமங்கலம், திருமழபாடி முதலான ஊர்களில் காணப்படும் கல்வெட்டுகளால் அறியலாம். இவ்வேந்தன் இவர்களுக்குச் சில விருதுப்பெயர்களையும் வழங்கிச் சிறப்பித்துள்ளான்.
இவன் தன் உடன்பிறந்தானாகிய மும்முடிச் சோழனுக்குச் சோழ பாண்டியன் என்னும் விருதையும், மற்றொரு உடன்பிறந்தானாகிய வீரசோழனுக்குக் கரிகாலன் (பிற்காலத்திய வீரராசேந்திரன்) என்னும் விருதையும், பிறிதொரு உடன்பிறந்தானாகிய பராந்தகனுக்குச் சோழ அயோத்திராசன் என்னும் விருதையும், சிறிய தந்தையின் மகனான ஆளவந்தானுக்கு இராசாதிராசன் என்னும் விருதையும், தன் மக்களாகிய இராசேந்திரன், முடிகொண்ட சோழன், சோழகேரளன், கடாரங்கொண்ட சோழன் இரட்டபாடி கொண்டான் ஆகியோருக்குப் பல்வேறு போர்களில் ஆற்றிய வீரச் செயலைப் பாராட்டி முறையே உத்தமசோழன், விசயாலயன், சோழ சனகராசன், சுந்தர சோழன், சோழ கன்னகுச்சியராசன் முதலான விருதுகளையும் வழங்கினான். இதனைப்போன்று இவன் பேரர் இருவருக்கும் சோழவல்லபன், நிருபேந்திரசோழன் என்னும் சிறப்புப் பெயர்களையும் வழங்கினான்.
அரசியல் அதிகாரிகள்
இராசேந்திரனது ஆட்சிக் காலத்தில் அரச குடும்பத்தினரேயன்றி, அரசியல் அதிகாரிகள் பலர் நாட்டு நிருவாகத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். படைத்தலைவர் பலர் படைத்துறையிலும் அமர்த்தப்பட்டனர். இவர்களுள் சேனாபதிகள் சயமுரிநாடாள்வான், சேனாபதி அரையன் கடக்கங் கொண்ட சோழன், இராசராச அணிமுரி நாடாள்வான், பஞ்சநதி வாணனாகிய மதுராந்தகத் தமிழ்ப் பேரரையன், வேளாளக் கூத்தனாகிய செம்பியன் மூவேந்த வேளான், சேனாபதி சயங்கொண்ட சோழ பிரமாதிராசன், உதய திவாகரன் கூத்தாடியரான வீரராசேந்திர மழவராயன், வானவன் பல்லவரையன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். சோழரது மேலாண்மைக்குட்பட்டு மலையமான் நாட்டை ஆண்டு வந்த மிலாடுடையான் நரசிங்கவர்மனும் சோழரது மேலாண்மையை உயர்த்த உழைத்தான்.
அறப்பணிகள்
இவ்வேந்தனது ஆட்சிக்காலத்தில் பல கோயில்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் நிவந்தங்களும் ஈயப்பட்டன. வேளக்கூத்தன் செம்பியன் மூவேந்த வேளான் என்னும் அதிகாரி மன்னனின் ஆணைக்கு இணங்கத் திருவாரூர்க் கோயில் கருவறைக்குப் பொன்வேய்ந்ததுடன், அர்த்த சுற்று மண்டபச் சுவரையும் எழுப்பினான். இவ்வேந்தனின் சிற்றரசன் மலையமான் திருக்கோவலூரில் உள்ள திருமால் கோயிலைக் கற்றளியாக மாற்றினான். இராசேந்திரனின் தம்பியான இராசமகேந்திரன் திருவரங்கம் அரங்கநாதருக்குப் பொன்னாலும் மணியாலும் அரணை அமைத்து, கோயில் திருச்சுற்றாலை அமைத்து, இராசமகேந்திரன் வீதியமைத்துக் கோயில் திருப்பணியும் (Renovation) செய்துள்ளான்.
இவ்வேந்தன் நாடகம் முதலான கலைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தான். இவன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராசராசேச்சுர நாடகம் நடைபெற ஆண்டுதோறும் 120 கல நெல்லைக் கொடையாக வழங்கியதிலிருந்து இதனை அறியலாம்.
நீதி நிருவாகம்
இவ்வேந்தனது ஆட்சிக்காலத்தில் நடுவுநிலை தவறாமல் அனைவர்க்கும் நீதி வழங்கப்பட்டது. வரிவசூல் அதிகாரியின் கெடுபிடி தாங்கமாட்டாமல் பெண் ஒருத்தி தற்கொலை செய்துகொண்டாள். இதனால், அவ்வதிகாரிக்கு 32 காசுகள் தண்டம் விதிக்கப்பட்டது. நாடாள்வான் என்னும் அரசியல் அதிகாரி விற்படைத் தலைவன் ஒருவனைக் கொன்றதற்காக, அவன் 96 ஆடுகள் தானமளிக்குமாறு தண்டனை விதிக்கப்பட்டது. மேற்கூறப்பட்ட சான்றுகனால் அரசியல் அதிகாரிகளும் நீதித்துறையால் தண்டிக்கப்பட்டமை புலனாகும்.
குடும்பம்
இவ்வேந்தனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அரசியர் இருந்தனர். இவர்களுள் கிழானடிகள், திரைலோக்கியமுடையாள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இவனுக்கு 6 ஆண்மக்களும் மதுராந்தகி என்னும் பெண்ணும் இருந்தனர். மதுராந்தகி கீழைச்சாளுக்கிய வேந்தனான இராசராச நரேந்திரனின் மகனுக்கு மணம் செய்விக்கப்பட்டாள்.
இராசேந்திரதேவன் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் இவன் கி.பி. 1064–இல் காலமானான். இவனுடன் சோழரின் பேராதிக்க ஏகாதிபத்திய உணர்வும் மங்கியது. ம.இரா.த.
துணை நூல்கள்
Nilakanta Sastri, K.A., The Colas, University of Madras, Madras, 1984.
சதாசிவ பண்டாரத்தார், டி.வி., பிற்காலச் சோழர் வரலாறு, மூன்று தொகுதிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1974.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 59)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ksxbbtun/
தமிழ்“இராசேந்திரன், இரண்டாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ksxbbtun/APA
Oliyon Research. (2026). இராசேந்திரன், இரண்டாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ksxbbtun/MLA
"இராசேந்திரன், இரண்டாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ksxbbtun/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment