இரெம்பிராண்டு
irempirāṇṭu
ஐரோப்பாவில் புகழ்பெற்ற ஓவியக்கலைஞர்களுள் ஒருவர்.
ஐரோப்பாவில் புகழ்பெற்ற ஓவியக்கலைஞர்களுள் ஒருவர். இவர் நெய் ஓவியக்கலை, அரிச்சித்திரக் கலை போன்ற முறைகளைத் திறம்படப் பயன்படுத்திப் புகழ்பெற்ற பல அழகிய ஓவியங்களைப் படைத்துள்ளார். இவர் 1400 சித்திரங்களையும் 600 நெய் ஓவியங்களையும் 300 அரிச்சித்திரங்களையும் வரைந்துள்ளார்.
இரெம்பிராண்டு (Rembrandt) 1606–ஆம் ஆண்டு நெதர்லாந்தில் இலீடர் (Leider) என்னும் ஊரில் பிறந்தார். 1624–ஆம் ஆண்டு ஆமிசுடர்டாமில் குடியேறிச் சேகப் வான் சுவானன்பர்கு (Jacob van Svanenburgh) என்பவரிடம் ஓவியம் பயின்றார். இவருக்கு முதன்முதலில் பெரும்புகழை ஈட்டித்தந்த ஓவியம் டாக்டர் துலிப்பின் உடற்கூற்றுப் பாடம் (The Anatomy Lesson of Dr. Tulip) என்னும் குழுச் சித்திரம் ஆகும். இதயை அடுத்துப் படைத்தலைவர் பானிங்காக்கின் நண்பர்கள் (Sortie of the company of Captain Banningcocq) என்னும் ஓவியத்தைத் தீட்டினார். ஒளிமிக்க ஓவியமாகத் தீட்டப்பட்ட இதில் எதிர்பாராத வகையில் புகை படிய நேரிட்டது. இதனால் ஓவியத்தின் வண்ணம் மங்கியது. ஆனால், இச்சித்திரம் இரவுக்காவல் (The Night Watch) என்னும் பெயரில் மிகுந்த புகழ் பெற்றது.
இரெம்பிராண்டு தம் வாழ்க்கையின் பிற்பகுதியில் வறுமையில் வாடினார். இவர் மனைவி சாகியா இறந்தபின், இவர் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக ஆயிற்று. இவருடைய கலைத் திறனுக்கு ஏற்ற புகழும் பெருமையும் இவருக்குக் கிடைக்கவில்லை. அக்காலத்தில் தச்சு (Dutch) நாட்டில் இருந்த மியுடென் சங்கம் (Muden Circle) என்னும் செல்வாக்குடையோர் சங்கத்தில் இரெம்பிராண்டு உறுப்பினராக ஆகவில்லை. அதனால் இவருக்குச் செல்வர் ஆதரவு குறைந்தது.
வரலாற்றுப் புகழ்பெற்றவர்கள், விவிலியக் காட்சிகள் ஆகியவைகள் இரெம்பிராண்டின் ஓவியங்களில் பெரும் பங்கு கொண்டன. சுய சித்திரங்களையும் இரெம்பிராண்டு தம் வாழ்க்கையின் இறுதி வரையில் தீட்டி வந்தார். முதுமைக் காலத்தில் தாம் எத்தகைய தோற்றமளித்தார் என்பதைச் சற்றும் பிறழாமல் ஓவியமாக வடித்துள்ளார். குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ச்சியடைந்த பருவங்களிலும் தம் மகன் தைடசை (Titus) ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். இவர் தம் உறவினர்களையும் பல ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். இவர் 1631–ஆம் ஆண்டு தீட்டிய ‘படிக்கும் முதியவள்’ (Old Woman Reading) என்னும் புகழ்பெற்ற ஓவியம், இவருடைய அன்னை தம் முதுமைக்காலத்தில் தலை குனிந்து விவிலியம் படித்துக் கொண்டிருந்த காட்சி ஆகும். இவருடைய ஓவியங்களுள் புகழ்பெற்றவை யூதமணப்பெண் (The Jewish Bride), ஓமர் சிலை கண்டு அரிசுடாட்டிலின் சிந்தனை (Aristotle comtemplating the Bust of Homer), நோயாளியைக் குணப்படுத்தும் இயேசு கிறித்து, மனந்திருந்திய மைந்தன் வீடு திரும்புதல் (Return of the Prodigal Son) போன்றவை ஆகும். இரெம்பிராண்டு அரிச்சித்திரம் (Etching) என்னும் ஓவிய முறையை நன்கு பயின்று, அதில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவருடைய அரிச்சித்திரங்களுள் பல உலகப் புகழ்பெற்றவை.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 249)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kqwpjnem/
தமிழ்“இரெம்பிராண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kqwpjnem/APA
Oliyon Research. (2026). இரெம்பிராண்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kqwpjnem/MLA
"இரெம்பிராண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kqwpjnem/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment