கிரேக்கப் புராணவீரர்களுள் ஒருவன். இலேயசு என்னும் பெயர்கொண்ட தீப்சு அரசன், தன் மகன் தன்னைக் கொன்றுவிட்டுத் தாயை மணப்பான் என்று கோயில் தெய்வக்கூற்றுக் கூறியதை கேட்டதும் மகனைக் கொல்லத் திட்டமிட்டான். அடிமையொருவனிடம் மகனைக் கொடுத்துக் கொன்றுவிடுமாறு பணித்த போது, இரக்கம் கொண்ட அவ்வடிமை ஈடிப்பசைக் (Oedipus) காட்டில் விட்டுவிட்டான். ஆட்டிடையன் ஒருவன் இவனைக் கண்டெடுத்துத் தன் அரசனிடம் ஒப்படைத்தான். பாலிபசு (Polibus) என்னும் பெயரினான அவ்வரசன் கண்டெடுக்கப்பட்ட இக்குழந்தைக்கு ஈடிப்பசு என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். தெய்வமொழி முன்னர்க் கூறியதைப் போலவே ஈடிப்பசிடமும் கூறிற்று. பாலிபசே தன் தந்தையெனத் தவறாகக் கருதிய ஈடிப்பசு அவனைக் கொல்ல மனமின்றி ஊரைவிட்டு வெளியேறிப் போகும்போது வழியில் இலேயசைக் கண்டான். இருவருக்கும் மூண்ட கைகலப்பில் ஈடிப்பசு இலேயசைக் கொன்றான். ஈடிப்பசினால் தீப்சு நாடு நலமுற்றதை உணர்ந்த நாட்டு மக்கள் அவனை அரசனாக்கினர். தெய்வக் கூற்றின்படி ஈடிப்பசு தன் தாயையே மணந்துகொண்டான். உண்மை தெரிந்ததும் இவன் தாய் தற்கொலை செய்து கொண்டு மடிந்தாள். ஈடிப்பசு தன் கண்களை குத்திக்கொண்டு காட்டிற்குள் சென்று மறைந்தான். சோபாக்கிளீசு என்னும் பெரியார் இந்நிகழ்ச்சியைக் குறித்து இரு நாடகங்களை எழுதினார். தாய் தந்தையரில் ஒருவரிடம் அன்பும் மற்றவரிடம் வெறுப்பும் காட்டும் மனப்பாங்கை ஈடிப்பசு மனப்பாங்கு என்று உளவியலார் வழங்குவர்.