இராணுவ உளவியல்
irāṇuva uḷaviyal
இராணுவ உளவியல் என்பது உளவியல் விதிகளும் கோட்பாடுகளும் இராணுவத்தினருக்குப் பயன்படும் வகையினை விளக்கும் துறையாகும்.
இராணுவ உளவியல் என்பது உளவியல் விதிகளும் கோட்பாடுகளும் இராணுவத்தினருக்குப் பயன்படும் வகையினை விளக்கும் துறையாகும். இத்- துறை முதல் உலகப் போர் இரண்டாம் உலகப் போர் ஆகிய இரு பெரும் போர்களுக்குப் பின் தனிப்பட்ட ஆய்வுத்துறையாக அமைந்தது. போர்க் காலங்களிலும் போரின்றி அமைதியுடனிருக்கும் காலங்களிலும் இராணுவத்தினரின் கடமைகள் மற்றவர்களின் கடமைகளினின்றும் வேறுபட்டனவாக இருக்கின்றன. இராணுவ உளவியலாரின் செயற்பாடுகளை அறிந்து கொள்வதற்குப் பின்வரும் செய்திகள் பேருதவியாக இருக்கின்றன. 1. தீர்வு காணவேண்டிய இராணுவச் சிக்கல்கள், 2. செயற்படுத்த வேண்டிய தொழில் நுட்பங்கள், 3. இராணுவ உளவியலாரின் பணி தேவைப்படும் அமைப்புகள், 4. உளவியல் துறைப் பணியினைத் தரமுன்வரும் அமைப்புகள், 5. இத்துறையின் தொடர்பின் கொள்கைகளும் விதிகளும், 6. ஆய்வு–முன்னேற்றப் பணிகள்.
உளவியல் துறையின் நுட்பங்களும் திறன்களும் முதல் உலகப் போரில் பேருதவியாக இருந்தன. போரில் ஈடுபட வேண்டிய படையினரைத் தேர்ந்தெடுப்பதற்குத் தனிப்பட்ட உளவியல் சோதனை முறைகள் தரப்படுத்தப்பட்டன. சிக்கல்கள் நிறைந்த சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கான திறமைகள் படையின் பல்வேறு அதிகாரிகளுக்கு எந்த அளவில் தேவைப்படும், அவை அவர்களிடம் அமைந்துள்ளனவா என்பன போன்ற செய்திகளை அறிவதற்கு நிலைமைச் சோதனைகளும் ஆளுமைச் சோதனைகளும் உருவாக்கப்பட்டன. போர்க்காலப் பணி நிறுவனங்கள் என்ற பெயரில் பல அமைப்புகள் இச்சோதனைகளை ஆய்வு செய்வதில் ஈடுபட்டன. இத்தகைய ஆய்வு அமைப்புகள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதல் உலகப் போர்க் காலத்தில் தோன்றின. இந்த அமைப்புகள் புலன்காட்சி, காட்சித்திறன் படையின் தேர்வு முறை, படையினர் பயிற்சி, மனவெழுச்சிச் சமநிலை ஊக்குவிப்பு, நாட்டங்கள், மனப்பான்மைகள், மன உளைச்சல் சோதனைகள் போன்ற துறைகளை ஆய்ந்து தம் முடிவுகளை வெளியிட்டன. இராணுவத்தின் ஆல்பாச் சோதனை (Army Alba Test) என்பது, பல நாடுகளிலும் பயன்படுத்தப்படும் தரப்படுத்தப்பட்ட சோதனை ஆகும். இச்சோதனையின் முடிவுகள் போர் முடிந்தபின் 17 இலட்சம் பேர்களுக்கு அளிக்கப்பட்டுச் சோதனை முடிவுகள் ஒப்பு நோக்கப்பட்டன. இராணுவத்தில் முக்கியமான பதவிகளுக்கு அதிகாரிகளை அமர்த்தும்பொழுது அத்தகைய பதவிகளுக்கு ஏற்ற பண்புகள் இல்லாதவர்களைத் தவிர்ப்பதற்காக இச்சோதனைகள் பயன்படுத்தப்பட்டன. அதிகாரிகள் பதவிகளில் அமர்த்தப்பட்ட பின் அவர்களுக்குப் பதவி உயர்வு செய்யும் பொழுதும் இச்சோதனைகள் பயன்படுத்தப்படுதின்றன. இதற்கான தனிப்பட்ட சோதனைகளும் தரமிடும் அளவைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போர் தொடங்கியவுடன் அமெரிக்க வேலை வாய்ப்பு நிறுவனம் இராணுவ உளவியலில் பெரும் முன்னேற்றங்களை ஏற்படுத்தியது. விமானப் படையில் விமானிகள், விமானம் ஓட்டிச் சென்று பகை நாட்டினருடன் போரிட்டு பகை நாட்டில் குறிப்பிட்ட இடங்களில் குண்டுகளைப் பொழியும் பணியில் ஈடுபடும் விமான அதிகாரிகள் (Flying Officers) போன்றவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டுத் தனிப்பட்ட சோதனைகள் அமைக்கப்பட்டன. ஆயிரக் கணக்கான உளவியல் வல்லுநர்கள் இத்தகைய பணியில் ஈடுபட்டனர். விமானப்படை, கடற்படை, நிலப்படை அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவர்களுக்கு எத்தகைய பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். அப்பயிற்சிகளில் எத்தகைய திறன் வளர்க்கப்பட வேண்டும், அப்பயிற்சிகளில் எத்தகைய செயல்முறைகளையும் நுட்பங்களையும் சேர்க்க வேண்டும் என்பன போன்றவற்றை உளவியல் ஆய்வாளர்கள் முடிவு செய்தனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1942–ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு ஆய்வுக் குழு (National Defence Research Committee) ஏற்படுத்தப்பட்டது. இக்குழு பொறியியல் உளவியல் (Engineering Psychology) என்னும் துறையினருடன் இணைந்து ஆய்வுகளைச் செய்து, வான் மருத்துவத் (Acro–Medical) துறையில் உளவியலார் கண்ட முடிவுகளைச் சோதித்தது. இத்துறையின் விரிவாக இக்காலத்தில் விண்வெளி உளவியல் (Space Psychology) என்னும் துறை ஏற்பட்டுள்ளது. இத்துறையில் விண்வெளிப் பயணிகளின் (Astronauts) உள இயங்கியல் பற்றி விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
படையினரின் மனப்பான்மைகளை ஆய்ந்து அறியவும் அளவீடு செய்யவும் இராணுவ உளவியலின் ஒரு பிரிவாக இராணுவச் சமூகவியல் (Military Sociology) ஏற்படுத்தப்பட்டுள்ளது. படையில் பணி புரியும் வீரர்கள் தமக்குப் பழக்கமில்லாத தட்பவெப்ப நிலைகளிலும் சூழமைவுகளிலும் நீண்ட நாள்கள் தங்கிப் போரிட நேரும் பொழுது அவர்களுக்கு ஏற்படக்கூடிய சலிப்பு, களைப்பு, மன உளைச்சல், புலனுணர்வுச் சிக்கல்கள் போன்றவற்றை ஆய்ந்தறியும் பொருட்டு உளவழி உடலியல் துறையினரும், படையினர் முற்றிலும் புதிய சூழ்நிலைகளில் உட்கொள்ளும் மருந்துகளினால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய உடன் விளைவுகளை அறியும் பொருட்டு உளமருந்தியல் வல்லுநர்களும் அயராது உழைத்துப் பல உண்மைகளை வெளியிட்டுள்ளனர்.
இப்பொழுது இராணுவ ஆய்வு நிலையங்கள் பல நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்திய இரா- ணுவ ஆய்வினை இராணுவத்துறையே மேற்கொண்டுள்ளது. அமெரிக்க இராணுவ ஆய்வினை ஒப்பந்த முறையில் பல ஆய்வுக் கூடங்கள் நிகழ்த்துகின்றன. இவற்றுள் ஓராண்டு ஒன்றியம் (RAND Corporation), மனிதத் திறன் ஆய்வு அலுவலகம் (Human Resources Research Office), வாசிங்டனில் உள்ள அமெரிக்கப் பல்கலைக் கழகத்தைச் (American University) சேர்ந்த செயல் ஆய்வின் சிறப்பு நிறுவனம் (Speciai Operations Research Organization) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கடற்படையினர் தொடர்பான உளவியல் ஆய்வுகளை நிகழ்த்தும் பொருட்டுத் தனிப்பட்ட நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் கடற்படை ஆய்வு அலுவலகம் என்னும் துறையினரால் ஒருங்கிணைவு செய்யப்படுகின்றன. உளவழி உடலியல், உளஅளவையியல், கற்றல் உளவியல், குழுநடத்தை சமூக நிகழ்முறைகள் போன்ற துறைகளின் தொடர்பான ஆய்வுகளுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் சார்பில் இலானியர் (Lanier) என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து இராணுவ உளவியலின் சிறப்பினை ஒருவர் அறிந்து கொள்ள முடியும். மார்கன் (Morgan) 1963–ஆம் ஆண்டு வெளியிட்ட படைக்கல உருவரைக்கான மனிதப்பொறியியல் வழிகாட்டி (Human Engineering Guide to Equipment Design) என்னும் நூல், எத்தகைய படைக்கலங்கள் பயன்படுத்துவது எளிது, எத்தகைய படைக்கலங்கள் வீரர்களுக்கு உளச்சிக்கல்கள், உளமுறிவுகள், உளக்குலைவுகள், பதற்ற நிலை போன்ற கோளாறுகள் தோன்றுவதைத் தவிர்க்கும் வகையில் பயன்படுத்தப்பட முடியும் என்பன போன்ற செய்திகளை விளக்குகிறது.
இக்காலத்தில் சமூகவியலில் வல்லுநர்கள் இராணுவத்தினருடன் இணைந்து ஆய்வுகள் நிகழ்த்துகின்றனர். இராணுவ ஆய்வு நிறுவனங்கள் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் நடத்தையியல்களின் பிரிவு என்னும் பெயரில் (Division of Behavioural Science) இயங்குகின்றன. இப்பிரிவில் மானிடவியல், சமூகவியல், உளவியல் ஆகிய துறை வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர். இத்தகைய புலத்திடை அணுகுமுறை (Interdisciplinary Approach)யினால் உலகநாடுகளிடையே ஒற்றுமையும், கருத்துப் பரிமாற்றமும், அமைதியும் நிலவவழி ஏற்படும் என்று இராணுவ உளவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 73)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kmywnp2d/
தமிழ்“இராணுவ உளவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kmywnp2d/APA
Oliyon Research. (2026). இராணுவ உளவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kmywnp2d/MLA
"இராணுவ உளவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kmywnp2d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment