சிரை மூலம் சர்க்கரை மற்றும் நீர்மங்களை உடலில் ஏற்றுவது சிரை வழி உணவு ஏற்றம் (intravenous feeding) எனப்படும். இது ஓர் அவசர கால மருத்துவ முறையாகும். இம்முறையை இரண்டு வகையில் கையாளலாம். சிரையில் ஊசியைச் செலுத்தி உணவு ஏற்றுவது பெரும்பாலும் செய்யப்படுவது; எளிதானது. ஆனால், சிரை அடைப்பு ஏற்படுத்தக் கூடியது. ஊசி செலுத்திய பின், கை கால்களை அசைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அசைத்தால் ஊசியை எடுத்து விட்டுப் பிற இடத்தில் ஊசி ஏற்ற வேண்டிய நிலை ஏற்படும். இம்முறையில் வலி மிகுதியாக இருக்காது. சிரை கிடைக்காவிடில், சிரை இருக்கும் இடத்தை அறுவை மூலம் கண்டுபிடித்துச் சிரையில் பெரிய ஓட்டையைப் போட்டு, ஊசி போட்டுக் கட்டி வைப்பது பிறிதொரு முறையாகும். இம்முறையில் விடாமல் உணவு அல்லது மருந்து செலுத்த வழியுண்டு; உணவு (அதாவது சர்க்கரை நீர்) சென்று கொண்டே இருக்க வேண்டும். குருதியும் செலுத்தலாம். உடல் நிலை சீரானவுடன், சிரையைக் கட்டி விட்டு, அறுத்த இடத்தைத் தையல் போட்டு மூட வேண்டும். காரையடிச் சிறை (subclavian) மூலம் உணவு ஏற்றுவது, மிகவும் கடினமானது. பயிற்சி பெற்றவரே இதைச் செய்ய முடியும். இதற்கு நீளமான பெரிய ஊசி வேண்டும். இம்முறை இதய நோயின் அவசர காலத்திற்கும், இதயத்தின் வலப் பக்கம் உள்ள மேல் அறையுடன் நேரடித் தொடர்பு கொள்ளவும் உதவும். இம்முறையைப் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை. அவசர நிலை, அதிர்ச்சி நோய், வாந்தி பேதி அல்லது இரைப்பைக் குடல் அழற்சி (gastroenteritis) ஆகிய நிலைகளில் உணவேற்றம் தேவைப்படும். உடலில் இருந்து நீர் வாந்தியிலும், பேதியிலும் மிகுதியாக வெளிப்பட்டவுடன், நாடித் துடிப்பு, குருதி அழுத்தம் ஆகியன குறைந்து மயக்க நிலையில் வாய் வழியாக உட்கொள்ள முடியாத நிலையை அடைந்தவர்களுக்கு இம்முறை மிகவும் சிறந்தது. உடலிலிருந்து குருதி மிகுதியாக வடிந்த பின் ஏற்படுவதால் உண்டாகும். அதிர்ச்சி, பெரிய தமனிகள் அறுபட்டு விரைவில் குருதி வடிதல், பெண்களுக்குக் குழந்தை பிறந்த உடன் குருதி மிகுதியாக வடிதல், பேறு காலத்தில் நஞ்சுக் கொடியிலிருந்து குருதி வடிதல், கருச் சிதைவால் குருதி வடிதல், அறுவை செய்த பின்னோ—செய்யும் பொழுதோ குருதி வடிதல் முதலிய நிலைகளிலும் உணவேற்றம் தேவைப்படும். குருதிச் சோகையுடையவர்களுக்கு, குருதியோ, சர்க்கரை உணவோ ஏற்றப்படும். உடலில் புரதப் பொருள் குறைந்தவர்களுக்கு, மனித உடலிலிருந்து எடுக்கப்பட்ட தூய்மை செய்யப்பட்ட பிளாஸ்மா கொடுக்கவும் இம்முறை உதவும். கொழுப்புப் பொருளை மிக நுண்ணிய அளவில் கொடுக்கலாம். எத்தில் ஆல்கஹால் மிகுதியாகச் சாப்பிட்டவர்களுக்கு மாற்று மருந்தாக இம்முறை உதவும். காற்று, சிரை வழியாகச் சென்று, இதயத்தில் சேர்ந்து, குருதிக் குழாய் அடைப்பு ஏற்பட்டு உயிருக்கே தீங்கு செய்யலாம். சிரை அடைப்பு, சிரை அழற்சி, காய்ச்சல், ஒவ்வாமை, நுரையீரலில் நீர்த் தேக்கம் முதலிய நோய்கள் சிரை வழியாக ஏற்படக் கூடும். உணவு ஏற்றும் குழாயைக் கடும் வெப்பக் காற்றால் தூய்மைப்படுத்துதல், உணவுப் பொருள்கள் உள்ள புட்டி, உணவுப் பொருள் முதலியவற்றைத் தூய்மையாகத் தயாரித்தல் ஆகியவற்றால் பிற நோய்கள் வாராமல் தடுக்கலாம். —சொ. நடராசன் நூலோதி. Davidson Sir Stanley et. al., Human Nutrition and Dietetics, Seventh Edition, Churchill Livingstone, Edinburgh, 1979.