உடன்போக்கு
uṭaṉpōkku
அகப்பொருள் இலக்கணத்தில் இடம்பெறும் ஒரு துறையாகும்.
அகப்பொருள் இலக்கணத்தில் இடம்பெறும் ஒரு துறையாகும். உடன்போக்கு என்னும் தொடர் உடன்போக்குகை எனப் பொருள்படும். இது தலைவன் தலைவியரிடையே தோன்றிய கனவு வெளிப்படுதற்குரிய கிளவிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவி பெற்றோர் அறியாது தோழியின் உதவியால் தலைவனொடு வேற்றிடம் செல்வது உடன்போக்காகும்.
தலைவன் தலைவியரிடம் முகிழ்த்த களவுக் காதல் மணம் செய்து கொண்டு, கற்பாக மலர வேண்டும் என்பது தமிழ் மக்கள் கண்ட அகவாழ்வுக் கோட்பாடாகும். களவுமணம் கற்புமணமாக ஆவதற்கு இடையூறு தோன்றுமாயின், அதனை நீக்கித் தான் காதலித்த அத்தலைவனையே மணப்பதற்கான முயற்சியினைத் தலைவியும், அவளுக்கு உற்ற துணையாகத் தோழியும் மேற்கொள்வர். அம்முயற்சிகளுள் ஒன்று அறத்தொடு நிற்றல் எனப்படும். தலைவி, தோழி முதலியோர் முறையே அறத்தொடு நிற்றலால் தலைவன் தலைவியரிடையே உள்ள காதல் உறவினை உணர்ந்த பெற்றோர் இறுதியில் அவர்களுக்கு மணஞ்செய்விப்பர், மற்றொரு முயற்சி உடன்போக்காகும். அறத்தொடு நிற்றல் அல்லது உடன்போக்கினால் களவு கற்பாவது உறுதியாகும். களவொழுக்கத்தில் ஒழுகும் தலைவன் அதனை நீட்டிக்கவே விரும்புவான். அப்போது ஊரில் அலர் தோன்றல் போன்றவற்றை அறிந்த தோழி அவ்வாறு களவு நீட்டிப்பதனை விரும்பாமையாலும், தலைவியின் காதல் உறவினைப் பெற்றோர்க்கு உணர்த்தும் துணிபில்லாமையாலும், மேற்கொள்ளத்தக்கது உடன்போக்கே என்று முடிவு செய்து, அவர்கள் உடன்போதற்குத் துணை நிற்பாள். இந்நிலையில், உடன்போக்கு களவுக்காதலாகிய இடையூறு நீங்கிக் கற்புமணம் ஆவதற்கு இன்றியமையாத அடிப்படையாக அமைகிறது.
உடன்போக்கினைத் தொல்காப்பியம், ‘கொண்டு தலைக்கழிதல்’, ‘போகிய திறம்’ (தொல். அகத். 17, 39) என்று குறிப்பிடுகிறது. இதற்கு இளம்பூரணர், ‘தமரைப் பிரிதலாகிய உடன்போக்கு’ என்று கருத்துரைத்துள்ளார். தலைவனொடு தலைவி உடன் போகியபொழுது நற்றாய் புலம்பிக் கூறும் கூற்று வகைகளைத் தொல்காப்பியர், ‘தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி’ என்னும் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார் (தொல். அகத். 39).
‘அகப்பொருள் விளக்கம்’ என்னும் அகவிலக்கண நூலினை இயற்றிய நாற்கவிராச நம்பி தம் நூலில் உடன்போக்கினை, வரைவியலில் அமைந்த ஒரு கிளவியாகக் குறிப்பிட்டுள்ளார். உடன்போக்கு என்னும் கிளவி போக்கு அறிவுறுத்தல், போக்கு உடன்படாமை, போக்கு உடன்படுத்தல், போக்கு உடன்படுதல், போக்கல், விலக்கல், புகழ்தல், தேற்றல் என்று எட்டு வகைப்படும் (நம்பி. நூ. 181). மேலும் இது ‘பாங்கி தலைவற்கு உடன்போக்குணர்த்தல்’ முதலாகப் பதினெட்டு வகையில் விரிவுபட்டுள்ளது.
அகப்பொருள் விளக்கம் கூறும் உடன்போக்குச் செய்திகள் வருமாறு:– உடன்போக முடிவு செய்த தோழி, தலைவன்பால் உடன்போக்குச் செய்தியினைக் கூறிய அளவில் அவன் அதற்கு உடன்பட மறுப்பான். தோழி மேலும் ஏதுக்காட்டி உடன் போக்கினை வற்புறுத்தத் தலைவன் அதற்கு உடன்படுவான். பின்னர்த் தோழி அதனைத் தலைவிக்கு உணர்த்துவாள். உடன்போக்கினால் தன் நாணம் அழிவதற்கு வருந்திய தலைவியினைக் கற்பு மாட்சி கூறித் தோழி தேற்றுவாள். அதுகேட்டு உளந்தேறிய தலைவி உடன்போக்கிற்கு உடன்படுவாள். விடியற்காலையில் செல்லும் தலைவன் தலைவியைப் பாலை நில வழியே அழைத்துச் செல்லுவான். தலைவிக்கு வழியிடை வருத்தம் தோன்றாதவாறு மலர்சூட்டியும் மகிழ்ந்துரையாடியும் அழைத்துச் செல்லுவான். காதலர்களை வழியிடைக் கண்டோர் வியந்துரைப்பர். இறுதியில் தலைவன் தன்னூர் சென்றடைந்தமையினைத் தலைவிக்கு உணர்த்துவான்.
ஓர் இளம்பெண் பெற்றோரைத் துறந்து, பழகிய சூழலை மறந்து புதிய ஆடவனோடு (காதலன்) துன்புறுத்தும் பாலை வழியில் செல்ல முற்படும் உடன் போக்கினைப் பற்றியும், உடன்போன பின்னர் நற்றாய் இரங்குதல் பற்றியும் அமைந்த பாடல்கள் பயில்வோர்களின் உணர்ச்சியினைத் தூண்டுவனவாக உள்ளன. சங்க அகப்பாடல்களுள் 122 பாடல்கள் இத்துறையில் அமைந்துள்ளனவாகக் குறிப்பிட்டுள்ளனர். கயமனார் என்னும் புலவர் இயற்றிய 22 சங்கப்பாடல்களுள் 20 பாடல்கள் உடன்போக்கு, தாயிரங்கல் பற்றியனவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 814)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kkjt5mz6/
தமிழ்“உடன்போக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kkjt5mz6/APA
Oliyon Research. (2026). உடன்போக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kkjt5mz6/MLA
"உடன்போக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kkjt5mz6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment