உருசியாவின் தூரக் கிழக்குப் பகுதியில் வாழும் முதுகுடிகளாவர். உடிகி (Udege) மக்கள் உடி (Ude) என்றும் உடிகேட்சி (Udegeytzy) என்றும் சொல்லப்படுவர். உருசியா பொதுவுடைமை நாடாவதற்கு முன்னர் இவர்கள் உசூரி (Ussuri), சிக்கோட்டா ஆலின் மலைப்பகுதி (Sikhota–Alin Mountain), ஒக்காட்சுக்குக் கடல் (Okhotsk Sea) முதலான பரந்த பகுதிகளைத் தம் பழைய இடமாகக் கொண்டிருந்தனர். உடிகி மக்கள் வாழ்ந்துவரும் உசூரி, அமூர் (Amur) ஆகிய பகுதிகளில் உல்ச்சி (Ulchi), ஒரோச்சி (Orochi) ஆகிய பழங்குடிகளும் குடியேறினர். உருசியாவுக்கும் சீனாவிற்கும் ஏற்பட்ட கி.பி. 1960–ஆம் ஆண்டு உடன்படிக்கையின்படி இப்பகுதி உருசியப் பேரரசுக்கு உட்பட்டதாக இணைக்கப்பட்டது. இருப்பினும், சீனா இப்பகுதியைத் தம் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப் பல எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தது. சீனாவின் ஆட்சிக் காலத்தில் நிலையான நிருவாக அமைப்பைக் கண்டிராத இவர்கள் உருசியப் பேரரசில் இணைந்த பின்பு நிலையான நிருவாக அமைப்பின் கீழ் வாழத் தொடங்கினர். உருசியப் பேரரசின் கீழ்க் கொண்டுவரப்பட்ட இவர்கள் பகுதியில் சீன வணிகர்கள் வாணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். உடிகி முதுகுடிகளின் நிலப்பகுதி வளமிக்கது; காடுகள் நிறைந்தது; ஆறுகளும் நீர்நிலைகளும் நிறைந்தது. வேட்டையாடவும் மீன்பிடிக்கவும் ஏற்றபடி இவர்கள் தங்களின் குடியிருப்புப் பகுதிகளை இடம் விட்டு இடம் மாற்றிக்கொண்டு செல்வர். நாடோடி வாழ்க்கைக்கு ஏற்ப இவர்கள் வீடுகள் அமைக்கப்படுகின்றன. கூம்பு வடிவிலுள்ள இவர்கள் வீடுகள் பிரம்புகளாலும் மரப்பட்டைகளாலும் மீன் தோலாலும் கட்டப்படுகின்றன. தென் உசூரிப்பகுதியில் வாழும் உடிகியினர் சீன மக்களின் முறையின்படி சிறிய அளவில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் வீடுகளின் அமைப்பு மாறுபட்டதாகக் காணப்படுகிறது. பொதுவாக இவர்கள் குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாகக் காணப்படுவதில்லை. மழைக் காலங்களில் பல குடும்பத்தினர் ஒரே கூரையின் கீழ்ச் சேர்ந்து வாழ்கின்றனர். உடிகியினரின் பொருளாதாரம் வேட்டையாடி உணவு சேகரிக்கும் பொருளாதாரத்தைச் சார்ந்ததாகும். காடுகளும் ஆறுகளும் நிறைந்த பகுதியில் வாழும் இவர்கள் ஆண்டு முழுவதும் இடம்விட்டு இடம்மாறி வாழ்க்கை நடத்துகின்றனர். வேட்டைத் தொழிலுக்கும் மீன்பிடித்தலுக்கும் வில்லையும் அம்பையும் பயன்படுத்தி வந்த இவர்கள் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் ஐம்பதுகளிலிருந்து துப்பாக்கிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பல பழங்குடிகள் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டுள்ளதால் வேட்டைப் பரப்பையும் மீன்பிடி பரப்பையும் ஆக்கிரமித்து வாழ்வதில் இவர்களிடையே போட்டி காணப்படுகிறது. புள்ளிமான் தோலைச் சீன வணிகர்கள் மிகுந்த விலை கொடுத்து வாங்குவதால் மான் வேட்டை இவர்களிடையே மிகுந்துள்ளது. கரடி வேட்டை இவர்களிடையே சிறப்பானதாகும். கரடியைக் கொன்ற அன்று உடிகியினர் கரடியைச் சமைக்கும் சடங்கினை மேற்கொள்கின்றனர். இச்சடங்கில் கரடியின் தலையை உண்பது உச்சக்கட்டமாகும். வேட்டைத் தளத்தில் தற்காப்புக்காக மட்டுமே சிங்கத்தைக் கொல்வர். இதைப் போன்றே பழுப்புக் கரடிக்கு மிகுந்த மதிப்பளித்துக் கொல்லாமலிருப்பர். இவர்களது துணை வருமானம் காட்டுப் பொருள்களைச் சார்ந்ததாகும். இவர்கள் கலைத் தொழிலிலும் வல்லவர்கள். மரத்தில் சிற்பங்கள் செதுக்குதல், தோலில் உருவப்படங்கள் வரைதல் முதலானவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளனர். உடிகியினரிடையே வயது வந்த பெண்கள் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுவதால் இவர்களிடையே திருமணத்தின் போது கொடுக்கப்படும் ‘மணப் பெண் பணம்’ மிகுதியாகும். உடிகி சமூகத்தில் மனைவியை மாற்றிக் கொள்ளுதலும் குழந்தைத் திருமணமும் காணப்படுகின்றன. எல்லா முதுகுடிகளையும் போன்றே உடிகியினரும் மிகுந்த அளவில் கட்டுக்கதைகள், கதைப் பாடல்கள், புராணக் கதைகள் முதலானவற்றை வழக்கில் கொண்டுள்ளனர். உடிகியினரின் அரசியலமைப்பு சிக்கலற்றது; எளிமையானது. தந்தைத் தலைமையை (Patriarchy) ஏற்றுள்ள இக்குடிகளின் மூத்த தலைவன் இவர்களிடையே எழும் சிக்கல்களைத் தீர்த்து வைக்கிறான். பழங்குடிகளுக்கிடையே அவ்வப்போது இரத்தச் சண்டைகள் மூளுகின்றன. வேட்டைத் தளம், மீன்பிடிஇடம் முதலானவற்றைக் கைப்பற்றும் போது நிகழ்கின்றன. பழங்குடிகளுக்கிடையே எழும் சண்டைகளை அப்போது நடுநிலைமை வகிக்கும் பழங்குடியினர் தீர்த்து வைக்கின்றனர். போல்சுவிக்குப் புரட்சியின் விளைவுகளை ஏற்கத் தயங்கிய இவர்களின் வாழ்க்கையமைப்புப் படிப்படியாக மாறத் தொடங்கியுள்ளது. மார்க்சிய அடிப்படையிலான சமுதாய, பொருளாதார அமைப்புகளின் தாக்கத்தினால் இவர்களின் தனித்தனியான வேட்டைப் பரப்புகளும் மீன்பிடி பரப்புகளும் பொதுமையாக்கப்பட்டன. உடிகியினர் இப்போது பெருமளவில் வேளாண்மையை மேற்கொண்டுள்ளனர்.