சுவாசப் பாதையில் ஏற்படும் தடையால், மூச்சு விட முடியாமல் போகும் போது, சுவாசக் குழலில் துளையிட நுரையீரலுக்குக் காற்று தடையின்றிச் செல்லும். இத்துளையை ஒரு விரைவு நடவடிக்கையாகப் பல நோய் நிலைகளில் செய்ய வேண்டி வரும். தொண்டையில் ஏற்படும் தொற்றுகள், தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள், மூச்சுக் குழலின் வாய்ப் பகுதி வீக்கம், நரம்புத் தாக்கத்தால் தசை நாண் தளர்வு, மூச்சுக் குழல், தைராய்டு, உணவுக் குழல் புற்று, கழுத்தில் ஏற்படும் வெட்டுக் காயம் முதலியவை மூச்சுக் குழலைப் பாதிக்கும் போதும், நுரையீரல் நோய்களாகிய நிமோனியா, மார்பெலும்பு முறிவு, டெட்டனஸ், தலைக் காயம், சுவாசத் தளர்வால் மூச்சு விட முடியாமை, ஆழ் மயக்க நிலை, மூச்சுக் குழல் அறுவைக்கு முன்னும் சுவாசக் குழாய்த் துளை அறுவை செய்யப்படுகிறது. வெள்ளி அல்லது ரப்பராலான குழாய்களைத் துளையில் பொருத்தி, இடையிடையே உறிஞ்சு கருவியால் குழாயில் அடைப்பு ஏற்படா வண்ணம், பாதுகாக்க வேண்டும். இத்துளை வழியே ஆக்சிஜனும் கொடுக்கலாம். காற்று உலர்ந்து, மூச்சுக் குழாயைப் பாதிக்கா வண்ணம், ஈரத் துணியைக் கொண்டு, துளையை மூட வேண்டும், தொற்றைத் தவிர்க்க நுண்ணுயிர் எதிர் மருந்து கொடுக்க வேண்டும். சிக்கல்கள். மூச்சுக் குழலினுள் சளி இருந்தால், மூச்சுக் குழல் அக நோக்கி மூலம் நீக்கலாம். அறுவை மருத்துவத்தால் பரவும் திசு அடி வளிமம், மார்பினுள் வளிமம் புகுதல், அரிதாக மூச்சுக் குழல் சுருக்கம் என்பன சிக்கல்களாகும். அடுத்துள்ள தைராய்டு மற்றும் சிரைக் காயங்களால் ஏற்படும் குருதி வாரியும், இரண்டாம் குருத்தெலும்பு தவறுதலாக வெட்டப் படுவதால் ஏற்படும் மூட்டு நழுவலும், உலோகக் குழாய் மூச்சுக் குழலினுள் செல்லாமல் அடுத்துள்ள திசுக்களிடையே செல்வதும், அறுவையில் தோன்றும் சிக்கல்களாம், —மா. ஜெ. ஃபிரடெரிக் ஜோசப்