ஐக்கிய அமெரிக்க நாட்டின் இருபத்தெட்டாம் குடியரசுத் தலைவரும், சிறந்த குறிக்கோள்களையுடைய அமெரிக்க அரசியலறிஞரும், முதல் உலகப் போரில் அமெரிக்க நாடு சேர்தற்குக் காரணமாக இருந்தவரும், பாரிசு அமைதி மாநாட்டில் அனைத்துலகச் சங்கம் அமைக்கப்படுவதற்கு மிகுந்த ஆதரவளித்தவருமான உட்ரோ தாமசு வில்சன் (Woodrow Thomas Wilson), வெர்சினியா மாநிலத்தில் கி.பி. 1856–ஆம் ஆண்டில் சோசப்பு ரகில்சு வில்சன் என்னும் பிரசுபிட்டீரிய சமய குருவின் மகனாகப் பிறந்தார். தகப்பனாருடைய பணிந்து போகாத இயல்பு மகனிடத்திலும் காணப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த போது இவர் போரில் அழிவுக்குள்ளான சார்சியா (Georgia), தென் கரோலினா (South Corlina) முதலிய மாநிலங்களிலிருந்தார். பிற்காலத்தில் பிரின்சுடன் பல்கலைக்கழகமாக (Princeton University) வளர்ந்த கல்லூரியில் இவர் சேர்ந்து பயின்று, சொற் போர்களிலும் இலக்கியத் தொடர்பான செயல்களிலும் மாணவர் உடற்பயிற்சி நிருவாகத்திலும் பங்கு கொண்டு பட்டதாரி ஆனார். கல்லூரி மாணவராக இருந்தபோதே இவர் முக்கிய அமெரிக்க நாட்டின் கூட்டாட்சிச் சட்டமன்றத்தில் (U.S. Congress) செயற்பட்டு வருகின்ற குழுமுறையைப் பற்றி நன்கு ஆய்வு செய்து வெளியிட்ட ஒரு கட்டுரை, இவர் பிற்காலத்தில் ஓர் அரசியற் சிந்தனையாளராக வருவாரென்பதைக் உட்ரோ வில்சன் காட்டிற்று. சிறிது காலம் சட்டம் பயின்று, வழக்கறிஞராக அட்லாணடாவில் பணி செய்த பின்னர், அரசாங்க அமைப்புகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து, சான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் (Johns Hopkins University) கி.பி. 1886–ஆம் ஆண்டில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார். இவர் எழுதிய ஆராய்ச்சி நூல் அமெரிக்கச் சட்டமன்ற அரசாங்கம் (Congressional Government) என்பதாகும். சட்டமன்றக் குழுக்களின் குறைகளையும் அவற்றாலுண்டாகும் இடர்ப்பாடுகளையும் இவர் வன்மையாக இடித்துரைத்தார். சிலகாலம் இவர் பிரின்மார் கல்லூரியில் (Bryn Mawr College) வரலாற்று, அரசியல் பொருளாதாரப் பேராசிரியராகப் பணி செய்தார்; பின்னர்ப் பிரின்சுடனிலேயே பேராசிரியராகப் பணி செய்தார். அங்கு இவர் அக்கால அரசியல் கேள்விகளைப்பற்றி ஆய்வு செய்து விரிவுரைகளாற்றியும், கட்டுரைகள் வெளியிட்டும் புகழ் பெற்றார். ஆகையால், நியூசெர்சி மாநில ஆளுநர் பதவிக்கு நடந்த தேர்தலில் குடியாட்சிக் கட்சியினால் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். இப்பதவியில் இவருடைய கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றியினால் புகழ் வளரவே, 1912–ஆம் ஆண்டில் இவர் தேசிய அரசியலில் கலந்துகொண்டு, குடியாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, 1913 முதல் 1917 வரை முதல் முறையும், 1917 முதல் 1921 வரை இரண்டாம் முறையும் குடியரசுத் தலைவராகப் பணி செய்தார். வில்சனின் பணிகள் வில்சன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் சட்டமன்றத்துக்குத் தமது செய்தியை நேரிலேயே உரையாற்றித் தெரிவித்தார்; தம் நோக்கங்களைச் சட்டங்களாக ஆக்குவதற்குத் தனிப்பட்ட ஆளவை (Senate) உறுப்பினர்களையும், பேராளர் மன்ற உறுப்பினர்களையும் கண்டு பேசினார். சுங்க வரிகளைக் குறைப்பதற்கு ‘அண்டர்உட் சுங்கவரி’ (Underwood Tariff) என்னும் சட்டத்தை நிறைவேற்றினார். சுங்கவரி நிதிக்குறைவை ஈடு செய்யும் பொருட்டுக் கூட்டாட்சி வருமானவரி விதிக்கப்பட்டது. தனியார் வங்கி நிறுவனத்தின் சருவாதிகாரப் போக்கைத் தடுப்பதற்காகக் கூட்டாட்சி இருப்பு நிதிக்கழகம் (Federal Reserve Board) ஒன்று நிறுவப்பட்டது. வாணிகத்தில் போட்டி நிலைகளை உண்டாக்குதற்காகக் கூட்டாட்சி வாணிக ஆணையம் (Federal Trade Commission) நிறுவப்பட்டது. தொழிலாளர் தகராறுகளில் நீதிமன்றத் தடையாணைகள் கையாளுதலைத் தவிர்த்தும், வேலை நிறுத்தங்களையும் பொருள் புறக்கணிப்புகளையும் (Boycotts) சட்டப்படியான வழிகளாக ஆக்கியும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இவற்றால் ஒரு புதிய சமூக, பொருளாதாரச் சூழ்நிலை உருவாயிற்று. அயல்நாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரையில் வில்சன் வலுவற்ற நாடுகளுக்கெதிராக இராணுவ வலிமையைக் கையாளுதலைக் கைவிட்டு, சிறிய நாடுகளின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் கவனமான மதிப்புக் கொடுத்தார். அமெரிக்கக் குடியேற்ற நாடாகிய பிலிப்பைன்சின் மக்களைத் தன்னாட்சி பெறுதற்குத் தகுதியடையவர்களாக ஆக்கினார். பனாமாக் கால்வாய் வழியைப் பயன்படுத்தும் அமெரிக்கக் கப்பல்கள் சுங்கம் செலுத்துதலினின்றும் விலக்கு அளிக்கப் பெற்றிருந்ததை வில்சன் மறுத்து, தம் நாட்டுக் கப்பல்களும் சுங்கம் செலுத்துதல் வேண்டுமென்று விதித்தார். கரிபியக் கடல் நாடுகளில் (Carribbean Sea States) தோன்றிய கலகச் சூழ்நிலைகளை அமெரிக்க அரசாங்கம் கண்காணித்து, எய்ட்டி தீவில் (Haitti) காப்பு அரசாங்கத்தை நிறுவிற்று; சான் தொமின்கோவிலும் (San Domingo) அமெரிக்காவின் கண்காணிப்புக்கு உட்பட்ட, இராணுவ அரசாங்கம் நிறுவப்பட்டது. மெக்சிகோவில் நடைபெற்ற சருவாதிகார ஆட்சி ஆங்குள்ள அமெரிக்க வணிகர் நலனைப் பாதித்தமையால் வில்சன் அந்நாட்டு நடவடிக்கைகளைக் கண்காணித்தார். முதல் உலகப் போரில் அமெரிக்க நாட்டின் நடுவு நிலையைப் பாதுகாத்தற்கே வில்சன் முயன்றார். போரில் இரு கட்சியாருக்குமிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துகுற்கும் இவர் நடவடிக்கை எடுத்தார்; போரில் பிரிட்டனுக்குச் செல்லும் நடுவுநிலைக் கப்பல்களையும் அழிப்பதாகச் செருமனி அச்சுறுத்தியபோது, வில்சன் நடுவுநிலை உரிமைகளைச் செருமனி மதித்தல் வேண்டுமென்று வற்புறுத்தினார். பல தடவைகளில் செருமனி நடுவுநிலைக் கப்பல்களைத் தாக்கி அழித்தபோதும், கூடுமானவரை வில்சன் பொறுமையைக் கடைப்பிடித்தார். எனினும் பயணிகள், பொருள்கள் ஆகியவற்றைச் சுமந்து சென்ற கப்பல்களைச் செருமனிய நீர்மூழ்கிகள் தொடர்ந்து தாக்கவே, வேறு வழியின்றி 1917 ஏப்பிரலில் ஐக்கிய அமெரிக்க நாட்டைப் பிரிட்டன் சார்பாகப் போரிலிறங்குமாறு செய்தார். இவர் 1918 சனவரி 8–ஆம் நாள் நிலையான அமைதி உடன்படிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கும் பொருட்டுத் தம் புகழ்மிக்க பதினான்கு குறிப்புகளை வெளியிட்டு விளக்கினார். செருமனியர் 1918, அக்டோபரில் தோல்வியை எதிர் நோக்கிய சூழ்நிலையில் வில்சனின் பதினான்கு குறிப்புகளை ஏற்றுக் கொள்ளுவதாக உறுதி கூறினர். ஒரு சிலவற்றைத் தவிர மற்றவற்றைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகப் பிரிட்டனும் பிரான்சும் வாக்குறுதி அளித்தன. ஆயினும் 1918–இல் அமெரிக்க ஆளவை மன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் இவருக்கு எதிரான குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாளராக வரவே, ஆளவைமன்ற அயல் உறவுக்குழு இவர்தம் எதிரிகளையுடையதாக ஆயிற்று. எனினும், இவர் தம் குறிப்புகளுக்கு ஆதரவு தேடிப் பாரிசு அமைதி மாநாட்டுக்குச் சென்றார். இவருடைய கோட்பாடுகள் குடியேற்ற நாடுகளுக்கு விடுதலை, நண்பர்களுக்கும் பகைவருக்கும் நீதிவழங்குதல், அனைத்துலகச் சங்கத்தின் வாயிலாகப் பாதுகாப்பு முதலிய ஒன்றுக்கொன்று தொடர்பான நோக்கங்களைக் கொண்டிருந்தன. மொத்தத்தில் இவருடைய கருத்துகளை ஐரோப்பிய நாடுகள் பாராட்டினாலும், தத்தம் நோக்கத்தைப் பொறுத்து வரை அவை இவர்தம் நோக்கங்களோடு மாறுபட்டு நின்றன. அனைத்துலகச் சங்கத்தை நிறுவுதல் வேண்டுமென்றும், அது அமைதி உடன்படிக்கைகளின் பாகமாக இருத்தல் வேண்டுமென்றும் இவர் கூறிய கருத்து பாரிசு மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது; ஆனால், இதன் பொருட்டு நாடுகளின் ஆதரவைப் பெறுதற்காக இவர் அவற்றின் பொருளாதார, நிலக் தொடர்பான கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. இவர் 1919 சூன் மாதத்தில் நாடு திரும்பியதும், ஆளவை மன்றத்நின் எதிர்ப்பை வென்று, தம் திட்டத்துக்கு (அமைதி உடன்படிக்கைக்கும் சங்கத்துக்கும்) ஆதரவு தேடும் பொருட்டுப் பல கூட்டங்களில் உரையாற்றினார்; இதனால், இவருடைய உடல் நலம் கெட்டது. ஆளவை மன்றத்தில் 1920, மார்ச்சு 20–இல் நடைபெற்ற வாக்கெடுப்பில் வில்சனின் அமைதி உடன்படிக்கைக்கும் அமெரிக்கா சங்கத்தில் சேருதல் வேண்டுமென்ற தீர்மானத்துக்கும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாமற்போகவே, வில்சனால் தோற்றுவிக்கப்பட்ட சங்கத்தில் இவருடைய நாடு உறுப்பினராகாமல் ஒதுங்கிவிட்டது. வில்சனுக்கு 1919–ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இவர் 1921 மார்ச்சு மாதம் தமது பதவிக் காலம் முடிவடைந்ததும், அரசியலில் ஈடுபடாமல் அமைதியாகக் கொலம்பியா மாவட்ட வாசிங்டன் நகத்தில் வாழ்ந்து, 1924–அம் ஆண்டில் காலமானார்.