இலார்சு தார்ண்டைக்குச் சோதனை என்பது கல்வி நிலையங்களில் கல்வி ஆராய்ச்சிக்காகவும் மாணவர்களின் கல்வித் திறனை அறிவதற்காவும் பயன்படுத்தப்படும் நுண்ணறிவு மதிப்பீட்டு முறை ஆகும். இலார்சு–தார்ண்டைக்குச் சோதனை (Lorge – Thoradike Test) இர்வின் இலார்சு, தார்ண்டைக்கு ஆகிய இருவராலும் அமைக்கப்பட்டது. இச்சோதனை பல மாறுதல்களுக்கு உட்பட்டு இக்காலத்தில் பல பகுதிகளைக் கொண்ட சோதனையாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சோதனையில் மூன்றாம் வகுப்பு முதல் பள்ளியிறுதி வகுப்புவரையுள்ள மாணவர்களுக்குப் பயன்படுத்தக் கூடிய எட்டுச் சோதனைப் பகுதிகள் உள்ளன. இவற்றுள் ஐந்து சொற்சோதனைகளும் மூன்று சொல்லிலாச் சோதனைகளும் அடங்கியுள்ளன. தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு நான்கு கிளைச் சோதனைகள் அடங்கிய அறிதல் திறன் சோதனை (Cognitive Abilities Test) கொடுக்கப்படுகிறது. இதில் சொல்தொகுதி, படம் பாகுபாடு செய்தல், தொடர்புக் கருத்துகள், எண்ணிக்கைக் கருத்துகள் என்றும் நான்கு கிளைச் சோதனைகள் உள்ளன. சோதனைகள் குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிக்கப்படவேண்டும். எட்டுச் சோதனைகளும் 62 நிமிடங்களில் முடிக்கப்படவேண்டும். இலார்சு–தார்ண்டைக்குச் சோதனை குறுகிய காலத்தில் பல்வேறு வகுப்பு மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் வகையில் அமைக்கபடும். எடுத்துக்காட்டாக, ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் மிக எளிதில் தவறின்றி முடித்துவிடக் கூடிய சோதனைப் பகுதிகள் அவனுக்குக் கொடுக்கப்படுவதில்லை. இதற்கு மாறாக அவனுக்குக் கடினமாக இருக்கும் பகுதிகள் கொடுக்கப்படுகின்றன. இப்பகுதிகளை அவன் எந்த அளவில் முடிக்கிறான் என்பதை அவன் வகுப்பைச் சேர்ந்த அறிவுத்திறன் மிகுந்த, சராசரி அறிவுத்திறனுடைய, பின் தங்கிய மாணவர்களின் விடைகளுக்குக் கொடுக்கப்பட்ட இச்சோதனை மதிப்பெண்களுடன், இந்த மாணவனின் விடைகளுக்கான மதிப்பெண்கள் ஒப்புநோக்கப்படுகின்றன. ஒருவேளை இந்த மாணவன் சோதனைப் பகுதியின் இந்தக் கடினமான பகுதிகளுக்கு விடையளிக்க முடியாமல் மிகக் குறைவான புள்ளிகள் பெற்றிருந்தால், இவனுக்கு முன்பு தந்ததைவிட எளிமையான அதற்கு முந்திய சோதனைப் பகுதிகள் கொடுக்கப்படுகின்றன. இம்முறையினால் பெரும்பாலும் சோதனைகளில் நிகழக்கூடிய காலம் வீணாதல் தவிர்க்கப்படுகிறது. அதாவது, பெரும்பாலான உளவியல் சோதனைகள் மிக்க எளிமையான பகுதிகளிலிருந்து தொடங்கி மிக்க கடினமான பகுதிகள் வரையில் செல்கின்றன. இவற்றில் மிக்க எளிமையானவற்றை ஒரு குறிப்பிட்ட வயதுப்பகுதியைச் சேர்ந்த அல்லது பள்ளி வகுப்பைச் சேர்ந்த எல்லா ஆட்படுநர்களும் தவறின்றிச் செய்து முழுமையான புள்ளிகளை எடுப்பர். ஆதலின், இத்தகைய சோதனைப் பகுதிகள் மிகுதியாகத் தேவையில்லை. இலார்சு தார்ண்டைக்குச் சோதனையில் இவை நுட்பமான முறையில் தவிர்க்கப்படுகின்றன.