உடல் கூற்று இயலின் படி, செவி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் படும். அவை புறச் செவி, நடுச் செவி, உட்செவி எனப் படும். நடுச் செவியை அடுத்துள்ள மாஸ்ட்டாய்டு காற்றறைகள் செவியில் ஏற்படும் தொற்றினால் பாதிக்கப் படும். நடுச் செவியும், உட்செவியும், கபாலத்துடன் இணைவதால், இங்கு ஏற்படும் தொற்றுகள் புற்றுக் கட்டிகள் ஆகியன கபாலத்தைப் பாதிக்கக் கூடும். திடீரெனத் தோன்றும் மாஸ்ட்டாய்டு அழற்சி நுண்ணுயிர் எதிர் மருந்து, வேதி மருந்துகளால் குணமாகும். தொற்று வீரியம் இருந்தாலோ, சரி வர மருத்துவம் செய்யாவிடிலோ, இத்தொற்று கபாலத்துள் குருதி மூலம் பரவும். நாட்பட்ட நடுச் செவி அழற்சியில் காற்றறைச் செல்களிலிருந்து, கபாலத்தினுள் அவ்வப்போது தொற்றுப் பரவக் கூடும். பக்கவாட்டுச் சைனஸ் குருதி உறைதல், கடின வெளிச் சீழ்க் கட்டி, மூளைத் தோல் அழற்சி, பெரு மூளைச் சீழ்க் கட்டி, சிறுமூளைச் சீழ்க் கட்டி, முகச் சோர்வாதம், கபால என்பு அழற்சி போன்றவை இதன் மூலம் ஏற்படும் உட்கபாலச் சிக்கல்களாகும். அறிகுறிகள். பாதிக்கப்பட்ட பகுதியைப் பொறுத்து நோய்க்குறிகள் மாறினாலும், தாங்க முடியாத தலைவலி, வாந்தி, பார்வையில் மாற்றம் முதலியன ஏற்படும். காதில் கீழ், காது கேட்காமை, காதுக்குப் பின்னால் வலி ஆகியன தோன்றும். மாஸ்ட்டாய்டு அழற்சியின் நோய்க் குறிகளாகிய தலைவலியோ, வாந்தியோ தொடங்கினால், மூளைப் பாதிப்பின் அறிகுறியாகக் கருதலாம். மூளைத் தோல் அழற்சியால் கழுத்தில் வலியும், கழுத்தைத் திருப்ப முடியாத நிலையும் தோன்றலாம். கழுத்தை முன், பின் வளைக்க, வேதனை கூடும். மருத்துவம். மாஸ்ட்டாய்டு பகுதியை எக்ஸ் கதிர்ப் படம் எடுத்துத் தொற்றுப் பற்றியுள்ளதா என்று கண்டு பிடிக்கலாம். காதில் உள்ள சீழில் நுண்ணுயிரி உள்ளதா என்று ஆய்வு செய்வதுடன், நுண்ணுயிர் வளர் ஆய்வில் தகுந்த நுண்ணுயிர் எதிர் மருந்தையும் கொடுக்க வேண்டும். மூளை பாதிக்கப் பட்டால். சி.டி. துழாவுதல் (CT Scan), தலை எக்ஸ் கதிர், தமனி எக்ஸ் கதிர் வரை படம், மூளைத் தண்டு வட நீர் ஆய்வு முதலியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதியைக் கண்டுணர்ந்து, மருத்துவம் அளிக்க வேண்டும். தொடக்கக் காலக் குழப்பங்கள், மருத்துவத்தில் மாறக் கூடும். சீழ்க் கட்டியை உடனே முனை மழுங்கிய உறிஞ்சும் ஊசி மூலம் வெளியேற்றி, நுண்ணுயிர் எதிர் மருந்து கொடுக்க நோய் மாறும். தொற்றுள்ள மாஸ்ட்டாய்டு காற்றறையை அறுவை மூலம் களையலாம். —மா.ஜெ. ஃபிரடெரிக் ஜோசப்