அரசாங்க வருவாய்
aracāṅka varuvāy
ஒரு நாட்டின் வருவாய் அதன் இயற்கை வளங்கள், மொத்த உற்பத்தி, மூலதனம் ஆகியவற்றைப் பொறுத்தும், அதன் அயல்நாட்டுச் செலுத்து நிலையைப் (Balance of Payments) பொறுத்தும் அமைகிறது.
ஒரு நாட்டின் வருவாய் அதன் இயற்கை வளங்கள், மொத்த உற்பத்தி, மூலதனம் ஆகியவற்றைப் பொறுத்தும், அதன் அயல்நாட்டுச் செலுத்து நிலையைப் (Balance of Payments) பொறுத்தும் அமைகிறது. அரசாங்க வருவாய், அது திரட்டப்படும் வழிமுறைகளைக் கொண்டு ஆராயப்படும். தனிப்பட்டவருக்குக் கிடைக்கும் தனிப்பட்ட சிறப்பு நலன்களுக்காகவும் சமூக நலன்களுக்காகவும் அரசாங்கம் கையாளும் செலவினை ஈடுகட்டக் கட்டாயமாகத் தனிப்பட்டவர்களிடமிருந்து பெறும் தொகை, வரிகள் (Taxes) எனப்படும். வரிகள் சமுதாயத்தின் பொது நன்மையைக் கருதி விதிக்கப்படுகின்றன. தனிப்பட்டவருக்குச் சிறப்பு நலன் தருவதற்கென்று, வரிக்கு நிகரான பலன் எதுவும் வரிசெலுத்துவோருக்குத் தரப்படுவதில்லை. ஒரு நிருவாகத்தின் முழு அதிகாரத்தினால் விதிக்கப்பட்டுச் சட்டப்படியான கட்டாயத்தால் பெறப்படுபவையே வரிகளாகும். இதில் தனிப்பட்டவருக்கும் அரசுக்கும் எவ்வித வணிக பேரமும் இல்லை.
நிருவாக வருமானங்கள்
சமுதாய நன்மையை முதன்மையாகக் கொண்டு அரசாங்கம் செய்யும் பலவிதப் பணிகளுக்குரிய செலவினை ஈடுகட்ட, இப்பணிகளினால் நன்மைகளைப் பெறும் தனிப்பட்டவர்களால் செலுத்தப்படும் தொகை, கட்டணங்கள் (fees) எனப்படுகின்றன. குறிப்பாக, நீதிமன்றக் கட்டணங்கள், பதிவுக் கட்டணங்கள் ஆகியவை இதனுள் அடங்கும். பாதுகாப்பான ஒரு சமுதாயத்தை ஏற்படுத்துவதன் பொருட்டுச் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, சமுதாய நன்மையைப் பொது நோக்கமாகக் கொண்டு, அரசாங்கம் சில பணிகளைச் செய்கிறது. வழக்கின் பொருட்டு நீதிமன்றங்களுக்குச் செல்பவர்கள் அல்லது தங்கள் ஆவணங்களைப் பதிவு செய்து கொள்பவர்கள், இப்பணிகளின் சிறப்பு நலன்களைப் பெறுகின்றனர். அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையைத் கட்டணமாகச் செலுத்துகின்றனர்.
கட்டணம் வரியினின்று வேறுபடும். ஒரு பொதுச் சுமையின் உறுப்பே வரியாகும். ஆனால், கட்டணமோ ஒரு குறிப்பிட்ட சிறப்புச் சலுகைக்காகப் பெறப்படுகிறது. வரி விதிப்புக்கு வரி செலுத்தவோரின் செலுத்துத் திறனே அடிப்படை. மாறாகத் தனி ஒருவருக்குக் கிட்டும் சிறப்புப் பலனே கட்டணத்தின் அடிப்படை. வரியைப் பொறுத்தவரை, பலனை நேரடியாக அளவிட முடியாது. ஆனால், கட்டணத்தால் கிடைக்கும் பலனை அளவிட்டு விடலாம். வரி போலன்றிக் கட்டணம் தனிப்பட்டவருக்குக் கிடைக்கும் குறிப்பிட்டதொரு பணியின் செலவை மிஞ்சாது. ஒரு கட்டணத்திற்குரிய சில குறிப்பிட்ட பணிகளை அரசாங்கமும் திரும்பச் செய்துவிடுகிறது. ஆனால், வரிக்காக அரசாங்கம் எவ்விதச் சிறப்புப் பணியையும் நல்குவதில்லை. கட்டணம் பெறப்படும் சிறப்புப் பலனின் செலவைவிட மிகுதியாயின் அது வரியாக மாறிவிடும். மேலும் கட்டணங்கள் நிலையற்றவை.
உரிமம் (Licence) வழங்குதல் என்பது, மக்களைச் சில அலுவல்களைச் செய்துகொள்ள அனுமதிப்பதாகும். அனுமதியின்றி அவற்றைச் செய்துகொள்ள முடியாது. தானியங்கி ஊர்தி (Automobile) ஓட்டவும் ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கவும் உரிமம் தேவை. உரிமம் என்பது கட்டணங்களுடன் ஒப்பிடத்தக்கது.
தண்டங்களின் (Fines) நோக்கம் ஒரு செயலைத் தடை செய்வதாகும். ஒரு சட்டத்தையோ நெறியையோ மீறுவது தண்டத்தின் மூலம் தடுக்கப்படும். அரசாங்கச் சட்டங்களை மீறியமைக்காகத் தண்டம் விதிக்கப்படும். அது அத்துமீறலைத் தடுக்கும் ஆற்றலுடையது. இவ்வாற்றல் வெற்றியடையாத நிலையில் அடிக்கடி மக்கள் அத்துமீறிச் சென்று பணத்தைத் தண்டமாகச் செலுத்தத் தொடங்கிவிட்டால் அது வரியாக மாறிவிடும். மது அருந்தக்கூடாது என்று சட்டமியற்றிவிட்டு, அதனை மீறுபவர்களுக்குத் தண்டம் விதித்து, அதன் மூலம் மதுப்பழக்கம் ஒழிக்கப்படின், அரசாங்கத்தின் நோக்கம் வெற்றி பெறுவதாகும். தண்டத்தைப் பொருட்படுத்தாமல் குடிப்பதும் அதற்கு உடனே தண்டம் செலுத்த முன்வருவதுமான ஒரு நிலை இருப்பின் ‘தண்டம்’ செயலிழந்து சாதாரண ‘வரி’யாக மாறும் புதுமையைக் காணமுடியும்.
பறிமுதல்கள்
இவை தண்டங்களுக்கு இணையானவை. நீதி மன்றங்களில் தோன்ற மறுக்கும் நேரத்திலும் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஒரு வேலையை முடிக்காமல் இருக்கும் நேரத்திலும் பறிமுதல் (Forfeiture) செய்யப்படுகிறது.
இறையுரிமைகள்
இவை வாரிசு, மற்றும் தன்னாவணம் இன்றி இறந்தவர் செல்வங்கள் அரசாங்கத்துக்குச் சேர்வதைக் குறிக்கும்.
தனித் தீர்வைகள்
இவை பொதுநல நோக்குடன் மேற்கொள்ளப்படும் சிறப்பு வளர்ச்சிப் பணியின் செலவை ஈடுகட்ட விதிக்கப்படும் ஒரு கட்டாயத் தொகையாகும். சாலைகள், பூங்காக்கள் அமைத்தல் போன்ற பொதுத் திட்டங்கள் செயலாற்றப்படும் போது, சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் சொத்து மதிப்பு உயரும். ஆகவே, அரசாங்கம், இச்சொத்துகளின் உரிமையாளர்கள் பெறும் நன்மைக்காக ஒரு தனித் தொகையைச் செலுத்தும்படி கட்டாயப்படுத்துகிறது. தனித் தீர்வைகளுக்கு ஒரு சிறப்பான குறிக்கோள் உண்டு. அதன் சிறப்புப் பலன் அளவிடப்படக் கூடியது. தீர்வைகள் வளர் வீதத்தில் இன்றி, பெறுகிற பலன்களின் விகிதத்தில் விளங்குவது. அவை குறிப்பிட்ட வட்டார வளர்ச்சிக்காக விதிக்கப்பட்டுச் சமுதாயத்தின் நிலையான மூலதனத்தை மிகுந்திடச் செய்கின்றன. எக்குறிக்கோளுக்காக விதிக்கப்படுகிறதோ அதற்காகவே பயன்படுத்தப்படும். தனித் தீர்வைகளும் கட்டணங்களும் பணியின் அடக்கச் செலவை மிஞ்சாதவை.
பிற வகைகள்
அரசு தனக்குச் சொந்தமான நிலம், கட்டிடங்கள், காடுகள், சுரங்கங்கள் முதலியவற்றின் மூலம் வருமானம் பெறலாம். சொத்துகளை விற்பதாலும், நிலங்களிலிருந்து குத்தகை பெறுவதாலும் வருவாய் கிடைக்க வாய்ப்புண்டு.
வணிக வருவாய் அரசு நடத்தும் வணிக நிறுவனங்கள் மூலம் கிடைப்பதாகும். தனியார் துறை போல் அரசாங்கமும் தொழில் நடத்தி அதன் மூலம் ஆதாயம் பெறுகிறது. அஞ்சல் துறையும், இரயில்வேத் துறையும் நடத்தப்படுவதன் மூலம் அரசாங்கத்துக்கு வருவாய் கிடைக்கிறது; செலுத்தப்படும் தொகைக்கு ஈடான பலனையும் அளிக்கின்றன.
மேலும், சில குறிப்பிட்ட பணிகலைக் குறிப்பிட்ட முறையில் செய்வதற்கு அரசாங்கம், மற்றொரு அரசாங்கத்துக்குக் கொடைகளும் உதவிகளும் வழங்கலாம். போர்க் காலங்களில், நாட்டுப்பற்று எழுச்சி பெற்று மக்களாகவே மனமுவந்து எவ்விதக் கட்டாயமுமின்றி அரசாங்கத்துக்கு நன்கொடை அளிக்கின்றனர். ஆனால், இவை போதிய அளவில் இல்லாதிருப்பதால் இவற்றை நம்பி எந்த அரசாங்கமும் செயற்பட முடியாது. காண்க: வரிகள்.எல்.கா.ந.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 670)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kb4z39y7/
தமிழ்“அரசாங்க வருவாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kb4z39y7/APA
Oliyon Research. (2026). அரசாங்க வருவாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kb4z39y7/MLA
"அரசாங்க வருவாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kb4z39y7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment