பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காகத் தொழிற் சாலைகளில் உண்டாக்கப் படும் நுண்ணுயிரிப் பொருள்கள், பூச்சி கொல்லிகள் (microbial insecticides) ஆகும். பூச்சிகளுக்கு ஒரு சில நுண்ணுயிரிகளால் நோய்கள் ஏற்படுகின்றன. பூசணம், பாக்டீரியா, நச்சுயிரி புரோட்டோசோவா, நூற்புழு ஆகியவை, பூச்சிகளையும், புழுக்களையும் தாக்கி நோய்களை உண்டாக்குகின்றன. பெரும்பாலும், நோய்கள் யாவும் புழு, பூச்சிகளை உடனடியாகவோ, சில நாள்களிலோ அழித்து விடுகின்றன. இதனால், பல்வேறு வகைகளில் நன்மையும், தீமையும் ஏற்படுகின்றன. நன்மை சேர்க்கும் தேனீ, பட்டுப் புழு ஆகியவற்றை நுண்ணுயிரிகள் தாக்கி அழிப்பதால், பேரிழப்பு ஏற்படுகின்றது. முசுக்கொட்டை இலையை உட்கொண்டு வாழ்ந்து, கூடு கட்டி, அந்தக் கூட்டிலுள்ள பட்டு நூலை அளிக்கும் பட்டுப் பூச்சி இனத்தை, ஒரு சில நுண்ணுயிரிகள் தாக்கிக் கொடிய நோய்களை உண்டாக்குகின்றன. பேசில்லஸ் (bacillus) என்னும் பாக்டீரியா (beauveria) என்னும் புரோட்சோவா ஃபிலெட்சரி (Fletchery) கிரேசரி (Greasserie) பாலிஹெட்ரோசிஸ் (Poly Hedrosis) என்னும் நச்சுயிரிகள் ஆகியவை பட்டுப் பூச்சிகளைத் தாக்கிப் பேரிழப்பை ஏற்படுத்துகின்றன. பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும் பல நுண்ணுயிரிகள் பற்றிய விவரங்களும் வெளிப் படுத்தப் பட்டுள்ளன. பேசில்லஸ் பொப்பிலே (Bacillus Popilliae) என்னும் பாக்டீரியா, ஜப்பான் வண்டுகளையும், பல புழுக்களையும் தாக்கும் திறனைப் பெற்றுள்ளது. இது போன்ற பாக்டீரியாவைப் பிரித்தெடுத்து, ஆய்வகங்களிலும், தொழிற்சாலைகளிலும் வளர்த்து தூரிசைட் என்னும் நுண்ணுயிரிப் பொருளைச் செடிகளில் தூவி, அச்செடிகளில் தோன்றும் புழுக்கள் அழிக்கப் படுகின்றன. இதே போலப் பாலிஹைட்ரோசிஸ் என்னும் நச்சுயிரியை வைரெக்ஸ் (Virex) என்னும் பெயரில், உழவர்களுக்குப் பயன் படுமாறு வழங்குகின்றனர். தமிழகத்தில், நிலக்கடலையைத் தாக்கும் கொடிய கம்பளிப் பூச்சியைக் கட்டுப் படுத்த, இத்தகைய நச்சுயிரியைப் பயன் படுத்தலாம். இயற்பியற் பொருள்களைக் கொண்டு செடிகளைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப் படுத்த முனைவதால், சுற்றுப் புறத் தூய்மைக் கேடு ஏற்படுவதோடு, நன்மை செய்யும் உயிரினங்களுக்கும், கேடு விளைவதாக அறிவியல் முடிவுகள் கூறுகின்றன. B.H.C, D.D.T போன்ற பூச்சி கொல்லிகளைப் பயன் படுத்துவதால், கேடு விளைவிக்கும் பூச்சிகளுக்கு மட்டுமல்லாமல், ஏனைய உயிரினங்களுக்கும் அவை தீங்கு விளைவிக்கின்றன. வீட்டைச் சுற்றித் தூவப் பயன் படும் இம்மருந்து, உணவுப் பொருள்களுடன் கலந்து, பல வகைக் கேடுகளை விளைவிக்கிறது. இப்பூச்சி கொல்லிகள் தூவப் படும் தீவனத்தை உட்கொண்ட கறவைப் பசுக்கள் வெளிப் படுத்தும் பாலிலும், பூச்சி கொல்லிகளின் நச்சுத் தன்மை காணப் படுகிறது. நிலத்தில் பயன் படுத்தும் மருந்துகள், நிலத்திலுள்ள பல நன்மை தரும் நுண்ணுயிரிகளையும் பாதிக்கின்றன. இதனால், நிலத்தின் விளைவுத் திறன் ஓரளவு குறைவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. அதே போல, மீன் வளரும் நீரில் கலந்தால், மீன்களின் வளர்ச்சி குறைந்து, நாளடைவில், அந்த நீர் மீன் வளர்ப்பதற்குத் தகுதியற்றதாகி விடுகிறது. —கா.சிவப்பிரகாசம் துணை நூல். K. Maramoroseh, Viruses, Vectors and Vegetation, Interscience Publishers, New York, 1969.