பாரதம் மொழி, இனம், மதச் சார்பற்ற நாடு (Secular State) என்று அதன் அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்துக்கள், முகமதியர்கள், கிறித்தவர்கள் ஆகிய சமயத்தினர் பாரதத்தில் உள்ள மூன்று பெரும்பான்மை வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். புத்த, சமண, சீக்கியச் சமயங்களைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களாகச் சட்டப்படி கருதப்படுகிறார்கள். ஒவ்வொரு பாரதக் குடிமகனும் தனக்குப் பிடித்த எந்தச் சமயக் கோட்பாட்டின்படியும் நடக்கலாம் என்று இந்திய அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட சமயத்தவரின் தனிப்பட்ட விவகாரங்கள் (Personal Matter) தொடர்பாகத் தனித்தனி இனமுறைச்சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், பாரதத்தில் உள்ள ‘பார்சி’ என்னும் சிறுபான்மையினருக்கும் தனி இனமுறைச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இனமுறைச் சட்டம் இலத்தீன் மொழியில் ‘Lex Personnae’ என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, இனமுறைச் சட்டம் திருமணம், வாரிசு முறை, மணவிலக்கு, மனைவி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, சட்டப்படி வயது அடையாத குழந்தைகளுக்குப் பாதுகாப்பாளரை அமர்த்துதல் போன்ற தனிப்பட்ட விவகாரங்களுக்கு மட்டுமே செல்லத்தக்கது. இந்து இனத்தவருக்கு இந்துச் சட்டம் பொருந்தும். ஆனால், குற்றவியல் போன்ற விவகாரங்களுக்கு இனவேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவான குற்றவியல் சட்டம் உள்ளது. இவற்றிற்குத் தலச் சட்டமும் பொருந்தும். சில வகை உரிமையியல்களுக்கு எல்லா இனங்களுக்கும் பொதுவான சட்டங்கள் உள்ளன. விபத்தில் ஏற்பட்ட இறப்பு, மற்றும் காயங்களுக்கு நட்ட ஈடு வழங்க வகை செய்யும் சட்டங்கள், ஒப்பந்தச் சட்டம் போன்றவை எல்லா இனத்தவருக்கும் பொதுவாகச் செல்லத்தக்கன. இத்தகைய பொதுச் சட்டங்கள் வட்டாரச் சட்டங்கள் (Local Laws) என்று குறிப்பிடப்படுகின்றன. ஏனெனில் அச்சட்டங்கள் வெளிநாடுகளில் செல்லத்தக்கனவல்ல. ஆனால், இனமுறைச் சட்டத்தை அந்த இனத்தவன் உலகில் எங்குச் சென்றாலும் உடன் கொண்டு செல்கிறான். அதாவது, வெளிநாட்டிலிருந்தாலும் அவனது தனிப்பட்ட விவகாரங்கள் (Personal Matter) தொடர்பாக அவனது இனச்சட்டம் பொருந்தும். பாரதத்தில் வாழும் எல்லா இனத்தவருக்கும் பொதுவான உரிமையியல் சட்டம் (Uniform Civil Code) உருவாவதற்குப் பாரத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்பு 44–ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய பொது உரிமையியல் சட்டம் இயற்றப்பட்டால் மேற்படி இனச்சட்டங்கள் பாரதத்தில் மறைந்து விடும். கே.கே.சு.