தமிழ் இலக்கண நூல்களுக்கமைந்துள்ள பழமையான உரைகளுள் ஒன்றாகும். இறையனார் அகப்பொருளின் அறுபது நூற்பாக்களுக்கும் அமைந்துள்ள இவ்வுரை மிகவும் விரிவானதும் தெளிவானதுமாகும். இவ்வுரையை எழுதியவர் நக்கீரராவர். இவ்வுரை தோன்றிய வரலாறு இந்நூலின் முதல் நூற்பா உரையில் கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னன் வரங்கிடந்து வேண்டிக் கொண்டதற்கு இரங்கிய சிவபெருமான் உப்பூரிகுடி கிழார் மகன் உருத்திரசன்மனைக் கொண்டு இந்நூலுக்குச் சிறந்த உரையினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அருளிச் செய்தார். உருத்திரசன்மன் ஐந்து வயதுடைய ஊமை. சங்கப் புலவர்கள் அவனை ஆசனத்தின் மீதிருத்தித் தாங்கள் கீழிருந்து ஒவ்வொருவரும் நூற்பாக்களுக்குத் தாமியற்றிய உரையினைக் கூறினர். பலர் கூறிய உரைகேட்டு வாளாவிருந்த உருத்திரசன்மன் சிலர் கூறிய உரைகேட்டுச் சிறிதே கண்ணீர் வடித்தான். நக்கீரர் பொருளுரைத்த போது பதந்தொறும் கண்ணீர் பெருக்கினான். இந்நூலிற்கமைந்த நக்கீரர் உரை மிகவும் சிறப்புடையது என்பதை உணர்த்துதற்கு இக்கதை புனையபட்டுள்ளது எனக் கொள்ளலாம். ஒவ்வொரு நூற்பாவின் உரையும் மிகவும் விரிவாக உள்ளது. ‘அன்பின் ஐந்திணைக்களவெனப்படுவது, அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள் கந்தருவ வழக்கம் என்மனார் புலவர்’ என்ற இந்நூலின் முதற் நூற்பா உரையில் உரையை நேரடியாகக் கூறுதற்கு முன்பு, ஒரு நாலுக்குப் பாயிரத்தின் இன்றியமையாமை, பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம் ஆகியவற்றின் இலக்கணம், முச்சங்க வரலாறு, களவியல் தோன்றிய வரலாறு, அந்நாலுக்கு உரை கண்ட வரலாறு, இவ்வுரை வழிவழியாகக் கூறப்பட்டு வந்த முறை, களவியல் என்றதன் காரணம், முதல், வழி, சார்பு நூல்கள் பற்றிய விளக்கம், நூல் என்றதன் பொருள் ஆகியவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. உரையின் தொடக்கங்கருதி இவ்விளக்கங்கள் முதலில் இடம் பெற்றுள்ளன எனலாம். பின்பு நூற்பாவின் உரை கூறுமிடத்து அதன் கருத்து, பதவுரை, பொழிப்புரை ஆகியன கூறப்பட்டுள்ளன. அடுத்து நூற்பாவின் ஒவ்வொரு சொல்லின் அல்லது சொற்றொடரின் விளக்கம் விரிவாகத் தரப்பட்டுள்ளது. சான்றாக, மேலே குறிப்பிட்ட முதற்நூற்பாவிற்கு அன்பு, ஐந்திணை, முதல், ௧ரு, உரிப்பொருள்கள், திணை என்பதன் பொருள், ஐந்திணைக் களவு, எண்வகை மணம் ஆகியன பற்றிய விளக்கங்கள் மிகவும் தெளிவுபட உரைக்கப்பட்டுள்ளன. இதினின்றும் இந்நூலிலுள்ள நூற்பாக்களுக்குப் பொதுவாக உரை அமைந்துள்ள போக்கினை உணரலாம். உரையாசிரியர் தம் கருத்தை நிறுவுவதற்குப் பொருந்திய இடங்களில் தொல்காப்பிய நூற்பாக்களைச் சான்றாகக் காட்டியுள்ளார். நூற்பாக்கள் கூறும் இலக்கணங்களை விளக்குதற்கு உரையாசிரியர் நற்றிணை, குறுந்தொகை போன்ற சங்க இலக்கியப் பாடல்களையும் கட்டளைக் கலித்துறைப் அமைந்த கோவைப் பாடல்களையும் மேற்கோள் செய்யுட்களாகத் தந்துள்ளார். இவற்றுள் மிகுதியாகக் கோவைப் பாடல்களே இடம் பெற்றுள்ளன. இப்பாடல்கள் ‘பாண்டிக் கோவை’யை சார்ந்தன என்று கருதப்பெறுகின்றன. நக்கீரர் வாழ்ந்த சங்க காலத்தில் கோவை நூல்கள் தோன்றவில்லை. கோவைகள் அனைத்தும் கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் அமைந்தவை, சங்க காலத்தில் இத்தகைய யாப்பமைந்த பாடல்கள் இல்லை. தொல்காப்பியத்திலும் இதற்கு இலக்கணம் இல்லை. மேலும், முதல் நூற்பா உரையில் ‘நக்கீரனாரால் உரை கண்டு குமாரசுவாமியால் கேட்கப்பட்டது என்க’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நக்கீரர் உரை செய்திருப்பின் தாமே தம் பெயரைச் கூறுவரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதனால் இது நக்கீரர் உரைதானோ என்னும் ஐயங் கொள்ளுதற்கு இடந்தருகிறது. முதலில் நக்கீரரால் செய்யப்பட்ட உரை பலகாலம் வழிவழியாக உரைக்கப்பட்டு வந்துள்ளதென்பதை முதல் நூற்பா உரை கூறுகிறது. இதனால் ஒருவர் இன்னொருவரிடமிருந்து கேட்கும் ஒவ்வொரு முறையும் உரையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, இறுதியாகக் கேட்டவர் ஏட்டில் எழுதிய காலத்தில் உரையில் கட்டளைக் கலித்துறைப் பாடல்களையும் மேற்கோள் செய்யுட்களாகத் தந்திருக்கலாம். எவ்வாறாயினும் இவ்வுரை மிகச் இறந்த உரை என்பதில் ஐயமில்லை. இறையனாரால் இயற்றப்பட்ட இவ்வுரை பல தலைமுறை வாய்மொழியாக ஆரிய மாணவ முறையில்–கற்பிக்கப் பெற்று வந்தது என்றும், இறுதியில் முசிறியாசிரியர் நீலகண்டனார் என்பவர் இதனை ஏட்டில் எழுதிவைத்தார் என்றும் தெரிகிறது, இவ்வுரை ‘யாப்பதிகாரம் வல்லார்’ என்று குறிப்பிடுவது தமிழிலக்கண மரபு வளர்ச்சியில் அமைந்துள்ள ஒரு நிலையினை உணர்த்துவதாக உள்ளது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்தினையும் தொகுத்துக் குறிப்பிடும் ‘ஐந்திலக்கண மரபு’ தோன்றுவதற்கு முன்னர், எழுத்து, சொல், பொருளொடு யாப்பும் சேர்ந்து நான்காக நின்ற நிலை இவர் காலத்தில் இருந்துள்ளது என்பது புலனாகிறது. யாப்பதிகாரம் தொல்காப்பியச் செய்யுளியல் கூறுஞ்செய்திகளையும் அதற்குப் பின்னர்த் தோன்றிய பாட்டியல் செய்திகளையும் கொண்டமைந்ததாகலாம். இவ்வுரையாசிரியர் முச்சங்க வரலாறு பற்றி விரிவாகக் கூறியுள்ளார். இச்- செய்திகளை ஏற்று, அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார வேனிற்காதை உரையில் தந்துள்ளார். இவ்வுரையாசிரியர் அந்தணர் மன்றல் வகையான பிரமம் முதலிய எட்டினையும் அவற்றிற்குரிய தமிழ்ப் பெயரொடு கூறி விளக்கியுள்ளார். அப்பெயர்கள் அறநிலை, ஒப்பு, பொருள்கோள், தெய்வம், யாழோர் கூட்டம், அரும்பொருள்வினை, இராக்கதம், பேய்நிலை என்னும் எட்டுமாகும். நூல்வகை கூறுமிடத்து ‘எதிர்நூல்’ என்னும் ஒன்றினைக் குறிப்பிட்டு, அதற்குத் ‘தன்கோள் நிற்கப் பிறர்கோள் மறுப்பது எதிர்நூல் என்ப ஒரு சாராரே’ என்று மேற்கோளும் காட்டியள்ளார். உரையின் இடையே விழாக்களைக் குறிப்பிட நேர்ந்தபோது, ‘மதுரை ஆவணி அவிட்டம், உறையூர்ப் பங்குனி உத்திரம், கருவூர் உள்ளி விழா’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன் கண் பழந்தமிழகத்தில் விளங்கிய மூவேந்தர்தம் தலைநகரங்களிலும் நடைபெற்ற சிறந்த விழாக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தம் உரையின் பலவிடங்களில் தக்க உவமைகளை மேற்கொண்டு, செய்திகளை விளக்கிச் செல்வது இவ்வுரையாசிரியரின் இயல்பாகும். தாரகை நடுவண் தண்மதி, கண்ணாடி மண்டிலத்து ஊது ஆவி, புனல் ஓடு வழிப் புற்சாய்தல், வேலேறுபடத் தேளேறு மாய்தல், குன்றம் உருண்டால் குன்றி வழியடையாகாமை ஆகியன இவர்தம் உவமைகளுள் சிலவாகும். இவர் தம் உரையில் பல வடசொற்களைக் கையாண்டுள்ளார். அவற்றுள் சில வருமாறு: ஏகதேசம், ஆசாரம், இராக்கதம், காரணிகன், பைசாசம், கலியாணம், பிராமணம். இவ்வாசிரியரின் உரைநடை எளிமையும் இனிமையுங் கொண்டு கவிதைத் தன்மையுடையதாக அமைந்துள்ளது. அதனால் இந்நூல் தமிழ் கற்பார் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து வந்துள்ளது. இதன்கண் அமைந்துள்ள வருணனைப் பகுதிகள் எதுகை மோனை எழில்மிக்கனவாய், ஓசைநலஞ்சான்ற செய்யுள் போலவே அமைந்து கற்போரை இன்புறுத்துவனவாக உள்ளன. ‘இறையனார்’ எனப்படும் நூலாசிரியர் பெயரைக் குறிப்பிடுங்கால், ‘மால்வரை புரையும் மாடக்கூடல் ஆலவாயில், பால்புரை பசுங்கதிர்க் குழவித் திங்களைக் குறுங்கண்ணியாகவுடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுள்’ என்று சுட்டியுள்ளார். ஒரு தொடரின் ஈற்றிலமைந்த முற்றினை எச்சமாக்கி, அதனையே அந்தாதியாகப் பயன்படுத்தி அடுத்த தொடரினைத் தொடங்கி எழுதிச் செல்வார். இதனை இறந்துபட்டான் எனக் கருதிக்கனன்று நோக்கினாள்; நோக்கி உண்மை கண்டாள்; கண்டாட்குக் கெடுத்துத்தேடும் நன்கலம் எடுத்துக் கொண்டாற்போலப் பெரியதோர் கழியுவகை ஆயிற்று; ஆயின உவகை ஒரு மூரல் முறுவலைத் தோற்றியது; தோற்றவே, ‘எம்பெருமான் முன்னர்ப் பெரியதோர் நாணின்மை செய்தேன்’ என ஆற்றாளாயினாள் என்னும் பகுதியால் உணரலாம். ‘பரவை அல்குல் துயிலசையப் பைம் பொற்றோடு மின்னுப்புடைப்ப, அரவ வண்டறையும் தாமரை அகவிதழ் புரையும் அஞ்செஞ் சீறடிமேல் செம்பொற் சிலம்பு அரற்ற, அன்னம் போல மென்மெல ஒதுங்கிக் காமவல்லிக் கொடியும் கற்பகக் கொழுந்தும் நடப்பதென நடந்து சென்று ..... இருந்தாள்’ என்பது இந்நூலாசிரியரின் கவிதை நலஞ்சான்ற உரைநடையினை உணர்த்துமோர் எடுத்துக்காட்டாகும். தா.ஏ.ஞா.