அருணந்திசிவாசாரியார்
aruṇanticivācāriyār
சைவசித்தாந்த சாத்திர நூல்கள் செய்த ஆசிரியர்களுள் ஒருவர்.
சைவசித்தாந்த சாத்திர நூல்கள் செய்த ஆசிரியர்களுள் ஒருவர். தமிழகத்தின் ஒரு பகுதியாகிய நடுநாட்டில் பெண்ணையாற்றின் வடகரையிலுள்ள திருத்துறையூரில் ஆதி சைவ மரபில் தோன்றியவர். கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சைவ ஒழுக்கமும் சாத்திரப் பயிற்சியும் மிகுதியாகப் பெற்ற இவர், சகலாகம பண்டிதர் என்னும் சிறப்புப் பெயர் எய்தித் தம்மையடுத்த மாணவர்களுக்குச் சித்தாந்த உபதேசம் செய்து வந்தார்.
சகலாகம பண்டிதர், சிவஞானபோதமென்னும் செந்தமிழ்ச் சாத்திர மூல நூலை இயற்றிய மெய் கண்ட தேவரின் தந்தையாராகிய அச்சுதகளப்பாளரின் குருவாக விளங்கினார். மெய்கண்ட தேவர் குருவருளும் திருவருளும் வாய்க்கப்பெற்றுத் திருவெண்ணெய் நல்லூரில் தம்மாணவர்களுக்கு முப்பொருளியல்புகளைத் தெளிவுபடுத்தி வந்தார். வயதில் இளையராகிய மெய்கண்டதேவரின் சிறப்பினைக் கேட்டு, அதனால் புலமை அழுக்காறு அடைந்த சகலாகம பண்டிதர், அவரைக் காண வந்தபோது மெய்கண்டதேவர் ஆணவத்தின் இயல்பினைத் தம் மாணவர்க்கு அறிவுறுத்தி விளக்கிக் கொண்டிருந்தார். சகலாகம பண்டிதர், அவரிடம் ஆணவத்தின் இயல்பு யாது என வினவினார். அவ்வினாவிற்கு வினாவியவரே விடையாவார் என்னும் கருத்தில், மெய்கண்ட தேவர் சகலாகம பண்டிதரைச் சுட்டிக் காட்டினார். அதனால் மெய்யுணர்வு பெற்று, அஞ்ஞானமும் ஆணவமும் அகலப்பெற்ற சகலாகம பண்டிதர் மெய்கண்டார்பால் மாணவராக அமைந்தார். மெய்கண்டார் அவருக்கு ‘அருள்நந்தி தேவர்’ என்னும் தீக்கைத் திருநாமம் சூட்டித் தாமியற்றிய சிவஞான போதத்தையும், தமக்குப் பொல்லாப் பிள்ளையார் வழங்கிய சூர்ணிகையையும் அருளிச் செய்தார். ஆசிரியராகிய மெய்கண்ட தேவரின் விருப்பப்படி அருணந்தி சிவாசாரியார், சிவஞானசித்தியார் என்னும் விரிவான சைவசித்தாந்த சாத்திர நூலை இயற்றினார். முதனூலாகிய சிவஞானபோதத்தின் வழி நூலாகத் திகழும் சிவஞானசித்தியார், சிவாகமங்களுக்கெல்லாம் ஓர் உரையாணி என்று கூறத் தகும் பெருமை பெற்றதாகும்; பரபக்கம், சுபக்கம் என்னும் இருபகுதியாக அமைந்தது. ‘பார் விரித்த நூலெல்லாம் பார்த்தற்குச் சித்தியிலே–ஓர் விருத்தப் பாதி போதும்’ என்றும், ‘சிவனுக்கு மேல் தெய்வமில்லை; சிவஞானசித்திக்கு மேல் சாத்திரமில்லை’ என்னும் அமைந்த புகழுரைகள், இந்த நூலின் பெருமையினையும் இதன் ஆசிரியராகிய அருணந்தி சிவாசாரியாரின் புகழையும் எடுத்துக்காட்டி நிற்கின்றன.
இவர் இருபா இரு பஃது என்னுமொரு நூலையும் செய்துள்ளார். இது பத்து வெண்பாவும் பத்து ஆசிரியப்பாவுமாக அமைந்து, சைவ சித்தாந்த உண்மைகளை மாணவ–ஆசிரியரின் வினா விடையாக உணர்த்தும் பாங்கில் உள்ளது. ஆசிரியரின் இவ்விரு நூல்களும் மெய்கண்டசாத்திரம் என வழங்கும் சித்தாந்த சாத்திரத்தின் பதினான்கு நூல்களுள் அடங்கி விளக்குகின்றன. அருணந்தி சிவாசாரியார் வீடுபேறெய்தியது புரட்டாசித் திங்கள் பூர நாளிலாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 811)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jv468tyz/
தமிழ்“அருணந்திசிவாசாரியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jv468tyz/APA
Oliyon Research. (2026). அருணந்திசிவாசாரியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jv468tyz/MLA
"அருணந்திசிவாசாரியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jv468tyz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment