இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சகரன்பூர் மாவட்டத்தில் உள்ள இந்துக்களின் தொன்மையான புண்ணியத்தலங்களுள் ஒன்று. கங்கை இமயமலையில் தோன்றி, அம்மலைப்பகுதி- அரித்துவாரம் களினூடே பாய்ந்து, இருடிகேசத்தின் வழியாக வந்து அரித்துவாரத்தின் சமவெளியில் நுழைகிறது. இதைப் பழங்காலத்தில் கபிலா அல்லது குபிலா என்றனர். கபிலா என்னும் இருடி வாழ்ந்தமையால் இதனைக் கபிலத்தானம் என்றும் குறிப்பிட்டனர். அரித்துவாரம் (Hardwar) என்னும் சொல் திருமாலின் வாயில் என்று பொருள்படும். இங்கு ‘அரியின் திருவடி’ என்னும் பெயர் கொண்ட குளியற் கட்டம் உள்ளது. இங்குக் ‘கும்பமேளா’ திருவிழாவின்போது கோடிக்கணக்கான இந்துக்கள் கங்கையில் நீராட வருவார்கள். கங்கையில் நீராடினால் பாவங்கள் கழியும் என்பது இந்துக்களின் மரபு வழி நம்பிக்கையாகும். இங்கு நடைபெறும் கும்பமேளா பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நிகழ்கிறது. அந்தத் திருவிழாவின்போது நாடெங்கிலுமிருந்து இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் போன்றோர் வந்து கூடுகின்றார்கள். 1981–ஆம் ஆண்டுக் கணக்குப்படி இவ்வூரின் மக்கள் தொகை 1,15,747 ஆகும்.