தில்லியிலிருந்து மதுரா செல்லும் சாலையில் உள்ள ஒரு மொகலாயர் காலச் சின்னமாகும். தில்லியில் உமாயூனுடைய கல்லறைக்குத் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள இது, இரண்டு முற்றங்களையும் பல சிறிய அறைகளையும் கொண்டது. நுழைவு வாயில் அதன் நடுவில் உள்ளது. கிழக்கு வாயிலின் பக்கம் சில அழிந்துபட்ட ஓவியங்கள் இருக்கின்றன. இரண்டாம் முற்றத்தில் மேல்வளைவு கொண்ட பல சிறிய அறைகள் உள்ளன. இவை மண்டி எனப்படும். இவற்றைக் கட்டியவர் பேகா பேகம் அல்லது ஆசி பேகம் (Haji Begum) ஆவர். இவர் மெக்காவிலிருந்து வரவழைக்கப் பெற்ற 300 அரபு சமய குருமார்களுக்காக இவற்றைக் கட்டினார். அரபு சராய் (Arab–Sarai) என்று இப்பழஞ் சின்னத்தைக் கூறுவது தவறான வழக்காகும் என்று பலர் கருதுகின்றனர். இக்கட்டிடம் பாரசீகப் பணியாளர்களுக்காகக் கட்டப்பட்டது என்றும், உமாயூன் கல்லறையைக் கட்டிய கைவினைஞர்களும் வேலைக்காரர்களும் தங்கிய வீடுகளாக இவை இருந்தன என்னும் சொல்லப்படுகிறது.