காண்டர்பரித் தலைமைக் குருவாக (Archbishop) இருந்தவர்; இங்கிலாந்து திருச்சபை தூய்மை வாதிகளின் செல்வாக்கின்கீழ் வருவதைக் கடுமையாக எதிர்த்தவர். இலாடு (Laud) கி.பி. 1573–ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 7–ஆம் நாள் இரீடிங்கு (Reading) என்னும் ஊரில் பிறந்தார். ஆக்சுபோர்டில் தூய யோவான் கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் அங்கேயே கி.பி. 1593–இல் ஆய்வாளரானார். இங்கிலாந்து திருச்சபையின் சமய குருவாக இவர் கி.பி. 1601–இல் பொறுப்பேற்று ஆக்சுபோர்டிலேயே பல்லாண்டுகள் கழித்தார். தூயயோவான் கல்லூரியின் தலைவராக கி.பி. 1611–இல் பதவியேற்றார். இவர் கி.பி. 1616–இல் கிளவுசுட்டர் கோயில் குருவாகப் (Dean of Gloucester) பதவியில் அமர்ந்தபோது தூய்மைவாதத் தத்துவங்களையும் திருச்சபைச் சட்டங்களையும் மாற்றும் கொள்கைகளை எதிர்த்தார். இசுடூவர்ட்டு (Stuart) மரபின் அரசரான முதலாம் சேம்சு (James I) இவரை கி.பி. 1621 இல் புனித தாவீது ஆட்சிப் பகுதியின் குருவாக அமர்த்தினார். இவருடைய நியமனத்தைத் தூய்மைவாதிகள் எதிர்த்தனர். இலாடு கி.பி. 1622 இல் தம்மை உண்மையான ஆங்கிலத் திருச்சபையைச் சார்ந்தவர் என்று கூறிக்கொண்டார். இருப்பினும் உரோமானியக் கத்- தோலிக்கத் திருச்சபையின் தவறுகளைச் சுட்டிக் காட்ட மறுத்ததைக் கண்ட தூய்மைவாதிகள் அச்சமடைந்தனர். முதலாம் சார்லசு மன்னர் கி.பி. 1626–இல் இவரைத் தூயதாவீதிலிருந்து பாத்து (Bath), வேல்சு (Wales) திருச்சபை மாவட்டங்களுக்கு மாற்றிவிட்டார். இரண்டாண்டுகளுக்குப் பின்னர் இவரை இலண்டனுக்கு மாற்றினார். இலாடு காண்டர்பரித் தலைமைக்குருவாக கி.பி. 1633–ஆம் ஆண்டுவரை பதவியுயர்வு பெறவில்லையாயினும், ஆங்கிலத் திருச்சபை நடவடிக்கையில் இவருடைய செல்வாக்கு மிகுதியாக இருந்தது. தலைமைக் குருவாகப் பதவி பெற்றதும் பொது வழிபாட்டு நூலைப் பயன்படுத்தல், இதுவரை நிலை நாட்டப்பெற்றிருந்த திருச்சபை சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிதல் போன்றவற்றைச் செயற்படுத்தும்படி இலாடு வலியுறுத்தினார். இலாடின் நடவடிக்கைகளுக்கு அரசர் ஆதரவு நல்கியதுடன், சமய ஒறுப்பிலும் பேரார்வம் காட்டியபோது இவரைத் தூய்மைவாதிகளும் ஏனையோரும் வெறுத்தனர். அரசர்கள் வலியுறுத்திய தெய்விக உரிமைக் கொள்கையை இலாடும் பெரும்பாலான குருமாரும் ஏற்று முதலாம் சேம்சுக்கும் முதலாம் சார்லசுக்கும் ஆதரவு கொடுத்தனர். இதன் விளைவாக இங்கிலாந்து திருச்சபை வல்லாட்சியில் நாட்டம் கொண்டிருந்த முடிமன்னர்களின் கைப்பாவையாகி வருகிறது என்று இவருடைய பகைவர்கள் உறுதியாக நம்பினர். இலாடு இசுகாட்லாந்தில் தம் திருச்சபைத் திட்டத்தைச் செயற்படுத்த முயன்றபோது, கி.பி. 1637–இல் நாட்டில் பெரும் குழப்பம் தோன்றலாயிற்று. பாராளுமன்றக் கட்சியின் செல்வாக்கு மிகுதியாக வளர்ந்திருந்த கி.பி. 1640–ஆம் ஆண்டில் திருச்சபை தூக்கி ஏறியப்படும் நிலையும் உருவாகியது. பல குருமார் கைதாயினர். உயர் நீதிமன்றக் குழு அழிக்கப்பட்டது. இங்கிலாத்தில் குழப்பத்தைப் படிப்படியாக விளைவிக்கும் மாற்றங்களைத் தூய்மைவாதிகள் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினர். தலைமைக்குரு கி.பி. 1641–இல் இலண்டன் கோபுரச் (Tower) சிறையில் அடைக்கப்பெற்றார். எனினும் இவரை கி.பி. 1644–ஆம் ஆண்டுவரை விசாரணைக்கும் கொண்டுவரவில்லை. இதனிடையில் இங்கிலாந்தில் அரசருக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையே உள்நாட்டுப்போர் முண்டது. இலாடுவைத் தூக்கிலிட்டுக் கொல்லவேண்டுமெனத் தீர்ப்பு வழங்கப்பட்டதன் அடிப்படையில் கி.பி. 1645–ஆம் ஆண்டு சனவரி மாதம் 10–ஆம் நாள் இலண்டனிலுள்ள கோபுரக் குன்றுச் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.