இவர் அராபிய இலாரன்சு என்றும் கூறப்படுவார். ஆக்சுபோர்டு ஏசு கல்லூரியில் பட்டப்படிப்பு மாணவராக இருந்தபோதே, இலாரன்சு ஆர்வம் மிகுந்த தொல்லியல் ஆய்வாளராக இருந்தார். இவர் சிரியா, மெசபடோமியா போன்ற பகுதிகளில் 1910 முதல் 1914 வரை அகழாய்வினை மேற்கொண்டார். இலாரன்சு (Lawrence) அராபியர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். எனவே, இவர் செட்டா (Jedda) விலுள்ள உசேன் மன்னருடன் இணைந்து, துருக்கியருக்கு எதிராகக் கலகம் நடத்த அராபியர்களின் அணி ஒன்றைத் திரட்டினார். தமாசுகசு-மெதீனா (Damascus–Medina) இருப்புப் பாதைகளின் மீது தாக்குதல் நடத்தவும், எகிப்தில் நிலைநாட்டப்பட்டிருந்த நேசநாடுகளின் தளங்களுடன் தொடர்பு கொண்ட மையங்களை வெற்றி காணவும் இவருடைய இராணுவப் படையெடுப்புகள் உதவின. இவர் 1917–18–ஆம் ஆண்டில் ஆலன்பியின் பாலசுத்தீனப் படையெடுப்புகளில் அராபியர்களை வழிநடத்திச் சென்றார். அப்படையெடுப்பு 1918–ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமாசுகசு நகரில் நிகழ்ந்தது. முதல் உலகப் போருக்குப் பின்னர் முடிவு செய்துகொள்ளப்பட்ட அமைதி உடன்படிக்கைகள் அராபியர்களின் குறிக்கோள்களுக்குத் துரோகம் செய்துவிட்டன என்பது இவர் கருத்தாகும். எனவே, பொதுமக்களின் கவனம் தம் மீது திரும்பாவண்ணம் இவர் இங்கிலாந்து ஆகாய விமானப்படையில் சேர்ந்துவிட்டார். இவர் தம் பெயரையும் டி.ஈ. சா (T.E. Shah) என்று மாற்றி வைத்துக்கொண்டார். எனினும், இது 1927–ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிதுகாலம் இவர் பீரங்கிப் படையிலும் பணிபுரிந்தார். தோர்செட்டு (Dorset) என்னும் ஊரில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் 1935–ஆம் ஆண்டு இலாரன்சு உயிரிழந்தார். அராபியர்களின் கலகம் குறித்து இவர் அறிவின் ஏழு தூண்கன் (Seven Pillars of Wisdom) என்னும் நூலை 1919–20–ஆம் ஆண்டுகளில் எழுதி முடித்தார். தனியார் பயன்பாட்டிற்காக இந்நூல் 1926–இல் வெளியிடப்பட்டது. பின்னர், இது அனைவரும் படிக்கும் வண்ணம் 1935–இல் வெளியிடப்பட்டது.