சில இயற்பியல், வேதியியல் பொருள்களால் வாயில் உருவாகும் சுவை உணர்ச்சிக்குக் காரணமானவை சுவை அரும்புகள் (taste buds) ஆகும். இவை, நாக்கின் முன் பகுதியிலும், மேல் தொண்டையின் சுவர்களிலும் அமைந்துள்ளன. அதற்குக் காரணமான நரம்பு, 9 ஆம் (நாக்கு—மேல் தொண்டை) கபால நரம்பு என்றாலும், 5ஆம் (முக்கிளை), 7ஆம் (முக) கபால நரம்புகளும் துணை புரிகின்றன. சுவை அரும்பு, உணர் செல்கள், நரம்பூட்டம் பெற்று முகிழ் வடிவத்துடன், நாக்கின் பரப்பிலுள்ள மேலணிச் செல்களினூடே பொதிந்துள்ளன. அவையே, சுவை உணர்வுக்குக் காரணமாகின்றன. பிறவி ஊனம் காரணமாகச் சிலர் சுவையை உணரவே முடியாது. 5, 7ஆம் கபால நரம்புகள் பாதிக்கப்பட்டால், நாக்கின் முன் பகுதியால் சுவையை உணர இயலாது. 9ஆம் கபால நரம்பு பாதிக்கப்பட்டால், பின் பகுதியால் சுவையை உணர இயலாது. —மு. கி, பழனியப்பன் நூலோதி. Lord Brain, Brain’s Diseases of the Nervous System, Seventh Edition, E.L.B.S and Oxford University Press, London, 1969.