அருணாசல புராணம்
aruṇācala purāṇam
சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய புராணமாகும்.
சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய புராணமாகும். அருணாசலம் என்பது திருவண்ணாமலையின் மறு பெயராகும். இது அருணை என்றும், ஆதி அருணாசலம் என்றும், சோதி மலை என்றும் குறிக்கப் பெறும். அருணாசலபுராணம் என்னும் இந்நூல் திருவண்ணாமலைத் தலத்தின் சிறப்புரைக்கும் நூலாகும். இந்நூலாசிரியர் சோணாட்டில் திருவெண்காட்டிற்கு அண்மையில் உள்ள ‘பூந்தாழை’ என்னும் ஊரினர். கார்காத்த வேளாண் மரபினராகிய இவர் கி.பி. 17, 18–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் எனக் கருத இடமுண்டு. இளமையில் தமிழ், வடமொழி இலக்கண இலக்கியங்களைக் கற்றுச் சிறந்து விளங்கினார். தருமபுர ஆதினத்தில் சைவ சமய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். இவர் சைவ சமயத்தில் பழுத்த ஈடுபாடு கொண்டு விளங்கியமையால் ‘சைவ கவி’ என்றும், சைவ எல்லப்ப நாவலர் என்றும் அழைக்கப்பெற்றார். நாவன்மை மிக்கு விளங்கியமையால் நாவலர் என்னும் அடைமொழி சேர்த்து வழங்கப் பெற்றார். இவர் இயற்றிய பிற நூல்கள் திருவருணைக் கலம்பகம், திருவெண்காட்டுப் புராணம், செவ்வந்திப் புராணம், திருவிரிஞ்சைப் புராணம், தீர்த்த கிரிப்புராணம், திருச்செங்காட்டங்குடிப் புராணம் முதலியன. இவர் உருவாக்கிய தல உரைப்பதோடு புராணங்கள் தலப்பெருமையினை படிப்போர்க்குப் பல படிப்பினைகளையும் அறிவிக்க வல்லவை; ஒன்பான் சுவையும் மிக்கவை. இவருடைய ‘திருவருணைக் கலம்பகம்’ கலம்பகப் பிரபந்தங்களுள் சிறந்ததாகப் புலவர்களால் கருதப்படுகிறது. “சைவத்தின் மேற் சமயம் வேறில்லை. அதில் சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்” என்று அழுத்தமாக உரைப்பதால் இவரது ஆழ்ந்த சைவ சமயப் பற்றுப் புலனாகிறது. திருவண்ணாமலையில் இறைவன் அழல் வடிவினனாக அமர்ந்துள்ளதாக இப்புராணம் கூறுகிறது. இந்நூல் திருமலைராயன் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டதெனத் தெரிகிறது.கி.கோ.
அருணாசலம், கா.,
இலங்கைத் தமிழறிஞர்களும் ஒருவர். இலங்கையின் கிழக்கு மாநிலம் மட்டக் களப்புப் பகுதியைச் சேர்ந்த மட்டு நகர் இவரது ஊராகும். இவர் பெற்றோர் காசிநாதர், சின்னப்பிள்ளை அம்மாள் ஆவர்.
இவர் வித்துவான் ச. பூபாலபிள்ளை, வித்துவான், பு.பொ. வைத்தியலிங்க தேசிகர் போன்றவர்களிடம் பாடம் கேட்டுத் தம் தமிழ்ப் புலமையையும் சமய அறிவையும் வளர்த்துக் கொண்டார்.
சைவப் பாடசாலைகளில் தலைமைத் தமிழாசிரியராய்ப் பணியாற்றிய இவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிற்றூர்தோறும் சென்று தமிழ், சமயம், சமூகம் பற்றிப் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். மட்டுநகர் மான்தீன குட்டரோக மருத்துவமனையிலும் சமயப் பணியாற்றினார்.
பன்னிரண்டு பாகங்களைக் கொண்ட ‘சைவக் களஞ்சியத்தை’ இயற்றினார். சைவசமய ஆரம்ப போதினி, சைவ சமய இளைஞர் போதினி, இந்து மாணவர் பக்திப் பாமணி மாலை, இந்து சமய மாத மகத்துவ மான்மியம், சைவ இலக்கியக் கதை மஞ்சரி, சைவ சமய சிந்தாமணி ஆகிய ஆறு பாகங்கள் வெளி வந்துள்ளன. சித்தாந்த சிரோமணி, மெய்ஞ்ஞான தீபம் அல்லது நுண்பொருள் விளக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள், சர்வ ஞானோத்தராகம சார சங்கிரகம், அருட்பாத் திரட்டும் அரும்பொருட் பாக்களும், விநாயக மகத்துவ நுட்பம், முருகன் மகத்துவ நுட்பும் ஆகிய ஆறு பாகங்களும் இன்னும் வெளியிடப் பெறவில்லை. இவை ஆறும் மதிப்புரைகள் பெறப்பெற்று அச்சிடும் நிலையில் உள்ளன.
இவர் வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளிலும், பலவேறு விழா மலர்களிலும், தமிழ், சமயம், சமூகம் தொடர்பான பல கட்டுரைகளை எழுதிச் சிறப்புப் பெற்றார்.
தேசிகமணி, சைவ மணி, சித்தாந்த சரபம் போன்ற சிறப்புப் பட்டப் பெயர்களையும் பெற்றிருந்தார்.
அருணாசலம்பிள்ளை, மு.,
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவருடைய ஊர் நெல்லை மாவட்டத்திலுள்ள இராயகிரி ஆகும். சோழிய வேளாள மரபினைச் சார்ந்தவர். முத்துப்பிள்ளை, செல்லம்மை ஆகியோர் புதல்வராக 26–3–1903-இல் தோன்றிய இவர், இளமையிலேயே இலக்கிய இலக்கணக் கல்வியினை அருணாசலக் கவிராயர் அவர்களிடம் பெற்றார். பின்னர்ப் புதுக்கோட்டையைச் சார்ந்த மேலைச்சிவபுரியில் அமைந்துள்ள கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் முறையாகத் தமிழ் பயின்று, அக்கல்லூரியிலேயே தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பண்டித மணி மு. கதிரேசச் செட்டியார் போன்ற தமிழ்ப் பெரும்புலவர்களின் அன்பாதரவில் விளங்கிய இவர் பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் தமிழ் விரிவுரையாளராகப் பதவியேற்று, ஓய்வு பெறுங்காலம் வரை தொடர்ந்து பணிபுரிந்து வந்தார். இசைத் தமிழில் நாட்டம் கொண்ட இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சார்பில் பல தமிழிசைப் பாடல்களை இயற்றியுள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கிடைத்த தமிழிசைப் பாடல்களைத் திரட்டித் தமிழ் இசைக்கலைஞர்களின் துணையொடு இசை வகுத்துப் பல தொகுதிகளாக அவை வெளிவரச் செய்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற தமிழ் மாணவர்களுக்கு, இலக்கண இலக்கியப் பாடங்களை அவர்கள் உளங்கொளக் கற்பித்துச் சிறப்புற்று விளங்கினார். அப்பல்கலைக்கழகத்தே பணிபுரிந்த காலத்தில், சென்னைப் பல்கலைக்கழகம் நடத்தும் வித்துவான் தேர்வினை 1939–ஆம் ஆண்டில் எழுதி, அதில் மாநிலத்தில் முதலாமவராகத் தேர்வு பெற்று, அதற்கான “ஐந்தாம் சார்சு அரசர் நினைவுத் தமிழ்ப் பரிசாக” (King George V Memorial Tamil Prize) ரூ 1000 பெற்றார். செந்தமிழ்ச் செல்வி, தமிழ் பொழில், ஞானசம்பந்தம் முதலிய இலக்கிய சமய இதழ்களில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். மேலைச் சிவபுரிச் செந்தமிழ்க் கல்லூரி ஆண்டு விழாவில், தமிழ்ச் சான்றோர் இவருக்கு ‘முத்தமிழ் மணி’ என்னும் சிறப்புப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர். விபுலானந்தர், சோமசுந்தர பாரதியார் கந்தசாமியார், இராகவையங்கார், வேங்கட சாமிநாட்டார், கா. சுப்பிரமணிய பிள்ளை, இரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை முதலிய தமிழ்ப் பேரறிஞர்களோடு தொடர்பு கொள்ளும் வாய்ப்பினைப் பெற்ற இவர், 1966–ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வுபெற்று மதுரையில் வாழ்ந்து வந்தார். பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவியால் இவர் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிஞராகச் சேர்த்து, தொல்காப்பிய உரைகளில் ஆய்வு புரிந்தார். இவரது ஆய்வு, தொல்காப்பிய உரைவளமாகத் திகழ்கிறது. இவர் தொல்காப்பிய அகத்திணை இயல், புறத்திணையியல் ஆகியவற்றிற்கு அவற்றின் பல்வேறு உரைகளையும் முறைப்படக் காட்டி, அவைபற்றிய தம் ஆய்வுக் கருத்தினை விளக்கியுள்ளார். அவை தொல்காப்பிய உரைவளம் என்னும் பெயரில் தனித்தனி நூல்களாக வெளி-
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 814)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jbpxq8j8/
தமிழ்“அருணாசல புராணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jbpxq8j8/APA
Oliyon Research. (2026). அருணாசல புராணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jbpxq8j8/MLA
"அருணாசல புராணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jbpxq8j8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment