இரிச்சுமாண்டு மேரி எலன்
iriccumāṇṭu mēri elaṉ
அமெரிக்க ஐக்கிய நாட்டின் அறக்கொடை ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் வரலாற்றில் சிறப்புமிக்கவராகக் கருதப்பட்டவர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் அறக்கொடை ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் வரலாற்றில் சிறப்புமிக்கவராகக் கருதப்பட்டவர். இப்பெண்மணி வாழ்க்கைப் பின்னணி ஆய்வுக்கு முதன்முதலில் கோட்பாடுகளை வகுத்துக் கொடுத்த சிறப்புடையராவார். இவர் இல்லினாய் மாநிலத்திலுள்ள பெல்லெவில்லில் (Belleville) பிறந்தார். பால்டிமர் அறக் கொடை நிறுவனத்தில் பொருளாளராகச் சேர்ந்த இவர், தம் நிருவாகத் திறமையால் பாராட்டப் பெற்று, கி.பி. 1891–ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் பொதுச் செயலராக அமர்த்தப்பட்டார்.
இரிச்சு மாண்டு மேரி எலன் (Richmond Mary Ellen), தொரெண்டோவில் கூடிய தேசிய அறக்கட்டளைச் சீர்திருத்த மாநாட்டில் புகழ்பெற்ற ஒரு சொற்பொழிவை ஆற்றினார். இம்மாநாட்டில் தொழில் முறைச் சமூகப்பணிக் கல்விக்கெனப் பயிற்சி நிலையங்களை நிறுவ அறைகூவல் விடுத்தார். ‘ஏழைகள் நடுவில் நட்புடன் பயணம்’ என்ற புகழ்மிக்க நூலை, கி.பி. 1899–ஆம் ஆண்டு வெளியிட்டார். பின்னர், கி.பி. 1900–ஆம் ஆண்டில் இவர் பிலடெல்பியா அறக்கட்டளை ஒருங்கமைப்பு நிறுவனத்திற்குப் பொதுச் செயலாளராக அமர்த்தப்பட்டர். கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்குச் சட்டத்தின் மூலம் தீர்வுகாணல், பென்சில்வேனியக் குழந்தைகள் நல மன்றத்தை நிறுவுதல், பொதுமக்கள் அறக்கட்டளை நிறுவனத்தைத் தோற்றுவித்தல், இளங்குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஏற்படுத்துதல், வீட்டு வசதிக்கழகம் நிறுவுதல், உளம் பிறழ்ந்த பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு நிறுவனங்களின் மூலம் உதவுதல் போன்ற பலவற்றிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயற்பட்டுப் பெருமதிப்பிற்குரியவராகத் திகழ்ந்தார். மேலும் ‘புதிய நகரத்தின் நல்ல உறவினர்’ என்ற நூலை 1907–ஆம் ஆண்டில் வெளியிட்டு, அறக்கட்டளைக்கு மக்களிடத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்தினார்.
நியூயார்க்கு நகரத்தில் 1907–ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அரசல் நிதிநிறுவனத்தின் அறக்கொடைத் துறைக்கு இயக்குநராக 1909–ஆம் ஆண்டில் அமர்த்தப்பட்டார். மேலும், 1917–ஆம் ஆண்டில் புகழ் பெற்ற ‘சமூகக் குறையறிதல்’ (Social Diagnosis) என்னும் நூலையும், 1922–ஆம் ஆண்டில் வாழ்க்கைப் பின்னணி ஆய்வு என்பது என்ன? (What is Social Case Work) என்னும் நூலையும் இயற்றினார். சமூகப்பணிக்கும் குறிப்பாகத் தனியாள் சமூகப்பணிக் கல்வி வளர்ச்சிக்கும் இரிச்சுமாண்டு ஆற்றிய தொண்டு சிறப்புமிக்கதாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 173)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j9z5c5xx/
தமிழ்“இரிச்சுமாண்டு மேரி எலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j9z5c5xx/APA
Oliyon Research. (2026). இரிச்சுமாண்டு மேரி எலன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j9z5c5xx/MLA
"இரிச்சுமாண்டு மேரி எலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j9z5c5xx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment