சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு கொடையாளி. அம்பர் என்பது சோழ நாட்டுத் தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் உள்ள ஓர் ஊர். இதன் அருகே காவிரியின் கிளையாறுகளுள் ஒன்றாகிய அரிசிலாறு பாய்கிறது. அம்பர், நெல் வயல்களும் பூஞ்சோலைகளும் நிறைந்தது. இதன் தலைவனாக விளங்கியவன் அருவந்தை, கல்லாடனார் இவனைப் புறநானூற்றில் பாடியுள்ளார் (385). பாடாண்டிணை வாழ்த்தியலில் அமைந்த அப்பாடலில், “அடுத்த வீட்டானைப் பாடிய பாடலைக் கேட்டே, அப்பாணன் மீது அன்பு மிகக் கொண்டு அரும்பொருள் வழங்கிய அருளாளன் அருவந்தை” என்று இவனைப் போற்றியுள்ளார். திவாகர நிகண்டின் ஆசிரியர் திவாகரர் பேணிய சேந்தனைப் பற்றி அந்நூலில் 19 இடங்களில் குறிப்புகள் உள்ளன. இச்சேந்தன் அம்பர் ஊரினைச் சேர்ந்தவன் என்றும், அருவந்தை மரபில் வந்தவன் என்றும் கூறப்படுகிறான். அருவந்தைச் சேந்தன் எனப்படும் இவனைக் ‘கற்ற நாவினன், கேட்ட செவியினன், முற்றுணர்ந்த மூதறிவாளன், நாகரிக நாட்டத்தன்’ என்று திவாகரம் பாராட்டுகிறது. சங்க காலந்தொட்டே அம்பர், புலவர் பாடும் புகழ் பெற்றுத் திகழ்கிறது. அருவந்தையின் சிறப்பால் இடைக்காலத்தில் அம்பருக்கு, ‘அம்பர் அருவந்தை’ எனப்பெயர் வழங்கியமையினைத் திருப்பழனக் கல்வெட்டால் அறிதல் கூடும்.