மனித இனத்தின் சமூகம், பண்பாடு, தொழில் நுட்பம் ஆகியவை தாம் சார்ந்திருக்கும் நிலச் சூழலுடன் கொண்டிருக்- கும் தொடர்புத் தன்மைகளையும், உலகின் பல பாகங்களில் பரவியுள்ள மனித இனங்கள் ஏற்றிருக்கும் வாழ்க்கைச் சூழல் அமைப்புகளையும் ஆராயும் மானிடவியல் பிரிவே இனக்குழுப் புவியியலாகும் (Ethnogeography), இப்பிரிவு ‘மனிதப் புவியியல்’ (Human Geography) ‘மானிடப் புவியியல்’ (Anthrapogeography) என்றும் வழங்கப்படுகிறது. மனிதப் பண்பாட்டையும் சமூக அமைப்பையும் அறியும் மானிடவியலார் இக்குழுப்புவியியலைச் சமூகப்புவியியல் (Social Geography), பண்பாட்டுப் புவியியல் (Cultural Geography) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். வாழ்வியலில் பல்வேறு துறைகளுக்கிடையே ஒன்றை ஒன்று சார்ந்து அவற்றின் கொள்கைகளையும் முறைகளையும் தம் துறைகளுக்கேற்ப மாற்றியமைத்து, வளர்ச்சியுறும் ஆய்வுப் பிரிவுகள், அண்மைக் காலங்களில் முகிழ்த்து வருகின்றன. அவ்வாறான பிரிவுகளுள் ஒன்றே இனக்குழுப்புவியியலாகும். மனிதன் இயற்கைத் தேர்வினாலும் சூழ்நிலையாலும் உருவாக்கப்பட்டவனாதலால், அவன் வாழ்க்கை முறைகளை அவன் வாழும் தரைச் சூழ்நிலையாலையே (Terrestrial sctting) அறியச் செருமானிய மானிடவியலாராகிய பிரீட்ரிச் இரட்சல் (Friedrich Ratzal) இப்பிரிவை உருவாக்கினார். இவர் கி.பி. 1882 இல் எழுதி வெளியிட்ட ‘மானிடப் புவியியல்’ (Anthropogeography) முதல் தொகுதியில், தாம் எடுத்துக் கொண்ட சமுகத்தினை விவரிக்குமுன். அச்சமுகத்தினரின் சூழ்நிலையை மிக விரிவாகப் பகுத்தாய்ந்து. மக்களுக்கும் மக்கள் கொண்டுள்ள வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்தும் பண்பாட்டிற்கும் விளக்கம் கண்டார். இவர் கி.பி. 1891–இல் வெளியிட்ட இரண்டாம் தொகுதியில், முதல் தொகுதியில் கையாண்ட முறையினை எதிர்மறையாகக் கையாண்டார். மனிதன் இயற்கையினைப் பயன்படுத்தும் முறைகளை விளக்கி, மனிதன் இயற்கையினால் உருவாக்கப்பட்டவன் என்பதைவிட அவன் இயற்கையை வெல்லும் திறனுடையவனாக இருக்கின்றான் என்பதே பொருத்தமுடையது எனக் கூறுகின்றார். பின்னர், இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnolgy) இனக்குழுவியல் (Ethnography) துறைகளில் தரவுகள் சேகரிப்பதில் இனக்குழுப் புவியியலின் பரப்பு, முதன்மையானதாகக் கருதப்பட்டது. தாம் ஆராயும் சமூகத்தின் புவியியலமைப்பினைப் பெற, நிலக்கிடக்கையியல் (Topography) காலநிலையியல் (Climatology) முதலான பிரிவுகளின் அறிவின் துணைக் கொண்டு ஆராய்ந்தனர். பிரீட்ரிச் இரட்சல், செருமானிய மொழியில் எழுதிய நூலின் ஆங்கில மொழியாக்கமான ‘மனிதக் குலத்தின் வரலாறு’ (History of Mankind) என்னும் நூலில் இனக்குழுப்புவியியலை அறிமுகப்படுத்தினார். இவர்தம் மாணாக்கர்களும் பிற்கால மானிடவியலாளர்களும் இப்பரப்பினை விரிவுபடுத்திப் பல்வேறு அணுகுமுறைகளைப் புகுத்தினர். சூழ்நிலையானது பண்பாட்டை மேம்பாட்டையச் செய்வதில் ஒரு நிலையான காரணியாகவோ கட்டுப்படுத்தும் காரணியாகவோ செயற்படும்; அல்லது எதிர்மறையாகச் செயற்படும். பண்பாட்டின் தலையான கூறுகளாகப் பொருளாதாரம். தொழில்நுட்பம், அரசியலமைப்பு, சமயம், கலை முதலானவற்றைக் குறிப்பிடலாம். வாழிடச் சூழ்நிலையில் அனைத்துக் காரணிகளும் ஒரே சீரான உறவினைப் பெற்றிருக்கவில்லை எடுத்துக்காட்டாக, சமய வழிபாடுகளும் கலைப் பொருள்கள் செய்வதில் கையாளும் திறனும், பொருளாதார அமைப்பு, தொழில் நுட்பம் ஆகிய அமைப்புகளைப் போல் நெருங்கிய தொடர்பினைப் பெற்றிருக்கவில்லை. சமூக, அரசியல் செயற்பாடுகள், பொருளரதார, அமைப்பையே நேரடியாகச் சார்ந்திருக்கின்றன. இருப்பினும், பல்வேறு சமூகத்தில் கலையும் சமயமும் இயற்கை அமைப்பினைப் பெரிதும் சார்ந்துள்ளமை கண்கூடு. ஆதிக்குடிகளும் பழங்குடிகளும் தம் சமய நம்பிக்கையையும் இயற்கை ஆற்றல்களையும் இயல்பிறந்த ஆற்றல்களையும் கொண்டுள்ளமையால். இயற்கையின் வாழிடச் சூழல் அமைப்புகளைப் பல பொருள்களில் கலைப் பொருள்களாகச் செய்து வழிபடுகின்றனர். இந்நிலையில் சூழ்நிலை, கட்டுப்பாட்டுக் காரணியாக அமைகிறது. இதைப் போன்றே ஒரு சமூகத்தின் தொழில் நுட்பத்திறன் மிகுந்திருப்பின், மக்களின்மீது சூழ்நிலையின் செயல்திறன் குறைவானதாக இருக்கும். சூழ்நிலையின் ஆக்கத் திறன்களை மிகுதியான அளவில் கொண்டிருக்கும் பண்பாடு, குறைவான அளவிலேயே மாற்றத்தைப் பெறும் இயல்பினது. இவ்வகையான சூழ்நிலைத் தொடர்புகள் குறித்த ஆய்வுகளைப் பிற்கால இனக்குழுப் புவியியலார் ‘பண்பாடு–சூழ்நிலை அடிப்படை உறவுகள்’ (Fundamental Culture Environment Relationship) என்னும் அணுகு முறையில் ஆராய்ந்தனர். இதன்வழி வகுத்த ‘விதிமுறை சார்ந்த சூழ்நிலைக் கொள்கை’ (Environmental Determinism) மனிதன் சூழ்நிலையோடு செயற்படும் அனைத்துச் செயற்பாட்டுச் சூழ்நிலைகளையும் விளக்குவதாகும்.