கி.பி. 1780–இல் நிறுவப் பெற்ற இலங்கை மருத்துவக் கல்லூரியும், 1921–இல் நிறுவப் பெற்ற இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியும் சேர்ந்து உருவாயிற்று, இப்பல்கலைக் கழகம் 1942–இல் அமைக்கப்பட்டது. இலங்கையில் இருந்த நான்கு பல்கலைக் கழகங்களும் கட்டுப்பெட்டி (Kattubedde) நகரில் இருந்த ஒரு தொழில் நுட்பவியல் கல்லூரியும் 1972–ஆம் ஆண்டு இதனுடன் இணைக்கப்பட்டன. இப்பல்கலைக் கழகத்தின் பெரும்பகுதி, கண்டி நகருக்கு அருகே உள்ள பேராதினியா (Peradiniya) என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக் கழகம் அரசு நிருவாகத்திலுள்ளது. இங்குக் கீழை நாட்டுக் கல்வி, கலையியல், கல்வியியல், கால்நடை, மருத்துவம், நூலகவியல், சட்டவியல், வேளாண்மை, அறிவியல் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் ஆகிய பாடத்துறைகளில் பட்டப்படிப்பும் பட்ட மேற்படிப்பும் கற்பிக்கப்படுகின்றன. இங்கு 1973–ஆம் ஆண்டுக் கணக்கின்படி 14,000 மாணவர்கள் கல்வி பயின்றனர். காண்க: இலங்கையில் கல்வி.