இளந்திரையம் என்பது இறையனாரகப் பொருள் என்னும் இலக்கண நூலின் உரையால் அறியப் பெறும் தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் இக்காலத்தில் இறந்துபட்டது. அதனால் இதனைப் பற்றிய விவரம் அறியக்கூடவில்லை. நூலுக்குப் பெயர் அமையும் வகையினை விளக்குங்கால் இறையனாரகப் பொருள் உரை செய்வித்தானால் பெயர் பெற்ற நூல்களுக்கு எடுத்துக்காட்டாக இளந்திரையம், சாதவாகனம் என்னும் இருநூற் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்நூல் இளந்திரையன் என்பவனால் செய்விக்கப்பட்டதாகும் என்னும் செய்தியினை உணரமுடிகிறது. நூல்பெயர் பெறும் வகைகளுக்கு எடுத்துக்காட்டாக அவ்வுரை குறிப்பிட்டுள்ள பிறநூல்களைக் காணுங்கால், அவை இலக்கண நூலாகவோ நிகண்டு நூலாகவோ கருதப்படுகின்றன. அதனால், இளந்திரையமும் ஒரு இலக்கண நூலாகவோ நிகண்டு நூலாகவோ இருந்திருத்தல் வேண்டும். இதனை இலக்கண நூலாகக் கொள்வது பொருத்தமாகும். இந்நூலைச் செய்வித்தோனாகிய இளந்திரையன் புலவரைப் போற்றிப் பேணிய புரவலன் என்பதன்றி, வேறு ஒரு செய்தியும் அறியக் கூடவில்லை. பெரும்பாணாற்றுப்படையின் தலைவனான தொண்டைமான் இளந்திரையனும், புறநானூறு (185), நற்றிணை (94, 96, 106) ஆகிய தொகை நூல்களின் ஆசிரியர்களுள் ஒருவராகக் காணப்படும் இளந்திரையனாரும். இந்நூலின் ஆசிரியரும் ஒருவரே என்று டாக்டர். உ.வே. சாமிநாதையர் கருதியுள்ளார். இதற்குப் பெயரொப்புமை தவிர வேறு சான்றில்லை. சங்க கால இளந்திரையன் வழிவந்த ஒரு புரவலராக மன்னராக இந்நூலை இயற்றுவித்த இளந்திரையனார் இருந்திருத்தல் கூடும். இந்நூல் இறையனார் களவியலுரையின் காலத்திற்கு முற்பட்டதாகும்.